May 20, 2016

வேண்டுதல்

எஸ்.வி.சரவணன் அவர்களை முன்பு ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் பெரிய அறிமுகமில்லை. கடந்த ஆண்டில் ஆனந்த விகடனில் நூறு இளைஞர்களில் ஒருவனாக என்னைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவித்த போது அந்தப் பணத்தில் நம் ஊரில் என்ன செய்யலாம் என்று யோசித்த சமயத்தில்தான் உள்ளூர்காரர்கள் சரவணனை அணுகச் சொன்னார்கள். அப்பொழுது அவர் பதவி எதிலும் இல்லை. தமிழகத்தின் கடும் வறட்சியான பிரதேசங்கள் என்றால் எங்கள் தொகுதியில் இருக்கும் நம்பியூரையும் சொல்லலாம். அந்தப் பகுதியின் வறட்சி நிலங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்காக இந்தியாவின் நீர் காந்தி என்று அழைக்கப்படுகிற ராஜேந்திர சிங் உள்ளிட்ட வல்லுநர்களை வைத்து அலை மோதிக் கொண்டிருந்தவர்களில் சரவணனும் ஒருவர். அலைபேசியில் அழைத்த போது துளி பந்தா இல்லாமல் பேசினார். விவரங்களைச் சொன்னேன். நிறைய இடங்களில் திரிந்து தகவல்களைச் சேகரித்துப் பேசினார். ஆனால் ஆனந்தவிகடனின் அந்தத் திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. அதனால் சரவணனுடனான தொடர்பு அப்பொழுது துண்டித்துவிட்டது. ஆனால் அவரைப் பற்றிய நல்ல பிம்பம் உருவாகியிருந்தது.


2016 சட்டமன்றத் தேர்தலில் சரவணன் கோபித் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முந்தின நாள் அவரைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். பேருந்து நிலையத்துக்கு அருகில் பத்துக்கு பத்து அறையில் அமர்ந்திருந்தார். அவருடைய சில நண்பர்களும் உடனிருந்தார்கள். ‘நீங்க வேட்பாளாராக அறிவிக்கப்பட்டால் சந்தோஷம்’ என்று சொல்லிக் கை கொடுத்தேன். நம்ப முடியாமல்தான் இருக்கும்- அன்றைய தினம் கிழிந்த கதர் சட்டையைத்தான் அணிந்திருந்தார். சரவணன் ஈரோடு மாவட்டச் சேர்மேனாக இருந்த போது மட்டும் கிட்டத்தட்ட ஐநூறு கோடி ரூபாய்க்கான வேலைகளைச் செய்திருக்கிறார். ஒரு சதவீதம் கமிஷன் அடித்திருந்தாலும் கூட கிழிந்த சட்டையை அணிந்திருக்க வேண்டியிருந்திருக்காது என்றுதான் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன்.

எதிர்பார்த்தது போலவே சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் வெளிப்படையாக ஆதரித்துவிடக் கூடாது என்று எங்கெல்லாம் விசாரிக்க முடியுமோ அங்கெல்லாம் விசாரித்தேன். சரவணன் பற்றி ஒரு நண்பர் சொன்ன விஷயம்தான் வாயடைத்துப் போகச் செய்தது. பக்கத்து ஊரில் ஒரு மரணம் சம்பவித்திருக்கிறது. நண்பர் உட்பட சிலர் சரவணனை அழைத்திருக்கிறார்கள். ‘நாம பஸ்ஸுல போய்டலாம்’ என்று சரவணன் சொன்னாராம். சரவணனிடம் ஒரு கார் இருக்கிறது. இருந்தும் பேருந்தில் செல்வதற்கான காரணம் கொடுமையானது - பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தியிருக்கிறார். ஒரு காலத்தில் வசதியான குடும்பதான். கோழிப்பண்ணையெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். மாட்டுத் தீவன நிறுவனம் நடத்தியிருக்கிறார்கள். இப்பொழுது பெரிய வருமானம் இல்லை. அதனால் இந்தச் சிக்கனம். கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பிருந்தவர் அவர். பதினைந்து வருடங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருந்திருக்கிறார். இருந்தும் ஒரு வீட்டை முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. அவ்வப்போது வருகிற வருமானத்தை வைத்து ஒரு முறை கதவு வைப்பது இன்னொரு முறை ஜன்னல் வைப்பது என்று பணம் தீரும் வரைக்கும் வேலை செய்வார்களாம். பணம் தீர்ந்தவுடன் அடுத்த வருமானம் வரும் வரைக்கும் வீடு பல்லிளித்துக் கொண்டு நிற்கும். பல வருடங்களாகக் கட்டிக் கொண்டிருக்கிறார். கட்டிவிட்டார். இன்னமும் முழுமையாக முடிக்கவில்லை. இதையெல்லாம் கேள்விப்பட்டு நெகிழாமல் இருக்க முடியுமா?

தேர்தலில் சரவணன் வென்றால் என்ன? செங்கோட்டையன் வென்றால் என்ன? எனக்கும் என்னைப் போன்ற கட்சி சார்பற்ற மற்ற இளைஞர்களுக்கும் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது? இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரை ஆதரிக்க வேண்டிய அவசியமும் எதுவுமில்லை. அவர் பஞ்சாயத்து கவுன்சிலராகவும், சேர்மேனாகவும் இருந்த நம்பியூர் பகுதியிலிருந்துதான் பெருமளவு இளைஞர்கள் கூடினார்கள். அவரைப் பற்றி அவர்களுக்கு நிறையத் தெரிந்திருந்தது. சரவணனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு கட்சியும் சின்னமும் பொருட்டாகவே இல்லை. அவரைப் பற்றித் தெரியாதவர்கள்தான் கட்சியைக் காட்டி முகத்தைச் சுளித்தார்கள். சரவணன் பின்னால் திரண்டு நின்ற அத்தனை பேரும் இவர் வென்றால் மாற்றம் நடக்கும் என்று நம்பினார்கள். 

தேர்தல் தினத்தன்று உள்ளூர் அதிமுக பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்னை விட சற்றே வயது குறைந்த நண்பர் அவர். ‘இனியெல்லாம் யாருங்கண்ணா ஸீட் கேட்பாங்க? எல்லோராலும் இவ்வளவு செலவு பண்ண முடியுமா?’ என்றார். தேர்தல் என்றாலே பணம்தான் என்கிற மனநிலை உருவாகியிருக்கிறது. கோடிக்கணக்கில் இறைத்திருக்கிறார்கள். ஒருவேளை சரவணன் வென்றிருந்தால் இந்த அவநம்பிக்கை உடைந்திருக்கும். தேர்தலில் வெல்வதற்கு பணம் அவசியமில்லை என்று உணர்த்தியிருக்கலாம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமலேயே வெல்ல முடியும் என்று காட்டியிருக்கலாம். இத்தகைய மாற்றங்கள்தான் ஜனநாயகத்தின் ஆணி வேர். இல்லையா? 

சில நாட்களுக்கு முன்பாக சரவணனிடம் பேசிய போது ‘நாமாகவே இதைச் செய்யலாம் அதைச் செய்யலாம் என்று மேம்போக்காக முடிவு செய்ய வேண்டாம். எல்லாத் தரப்பிலிருந்தும் மொத்தமா நூறு ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவங்ககிட்ட பேசலாம்’ என்றார். ஆசிரியர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவுகளிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி தொகுதிக்கு எவையெல்லாம் அவசியமான தேவைகள் என்றும் அதில் எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெளிவான பட்டியலைத் தயாரிப்பது அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்தது. இது தவிர தொகுதிக்கான அத்தியாவசியத் திட்டங்கள் என்று தனியாக வைத்திருந்தார். இப்படியான குறுகியகால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் என அவர் யோசித்தது யாவையும் மாற்றத்திற்கான அறிகுறிகளாக இருந்தன. 

இத்தகைய தகுதிகளால்தான் சரவணனை இளைஞர்கள் நேசித்தார்கள். உணர்வுப்பூர்வமாக அவருடன் பின்னியிருந்தார்கள். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அவர் தேர்தல் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதாகக் கேள்விப்பட்டு அழைத்தேன். வேறு யாரோ ஒருவர்தான் அலைபேசியை எடுத்தார். எடுத்தவர் ‘அழுதுட்டு இருந்தாரு...இப்போத்தான் கிளம்பிப் போறாரு’ என்றார். தோல்விக்காக அழுகிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர் அழுததற்கான காரணம் அதுவன்று. நாகரணை என்ற ஊரில் சரவணனுக்காகத் தேர்தல் பணியாற்றிய இளைஞன் ஒருவன் தேர்தல் முடிவுகளில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். அதைக் கேள்விப்பட்டுத்தான் அழுதிருக்கிறார். மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. தலைவராக உருவெடுக்காத ஒரு வேட்பாளரின் தோல்விக்காக உயிரைக் கொடுக்குமளவுக்கு இளைஞன் ஒருவனின் அன்பைச் சேகரித்து வைத்திருக்கிறார். வெறும் பணத்துக்காக மட்டுமே தேர்தல் வேலை நடைபெறுகிற இந்தக் காலத்தில் உள்ளூர் இளைஞர்கள் சரவணனுடன் எப்படி மனம் ஒன்றியிருந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக இதைச் சொல்கிறேன். தேர்தல் பணியாற்றிய யாரை அலைபேசியில் அழைத்தாலும் அழுகிறார்கள். தாங்களே தோற்றுப் போனது போல அரற்றுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு இவர்களிடம் பேசவே வேண்டியதில்லை என்று அமைதியாகிவிட்டேன்.

கட்சி, இனம் என்கிற சார்புகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் சரவணன் மிகச் சிறந்த வேட்பாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவரது நேர்மை, எளிமை குறித்து யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. தேர்தல் சமயத்தில் வதந்திகளைக் கிளப்பியவர்கள் கூட தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். ஒருவேளை சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அவர் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுப்பார் என்ற உறுதியான நம்பிக்கையில்தான் இளைஞர்கள் பாடுபட்டார்கள். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. அவருக்கு கோபி மக்கள் வாய்ப்பை வழங்கவில்லை. இனி இத்தகையதொரு நல்ல மனிதருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. அப்படியொரு வாய்ப்புக் கிடைத்து இத்தனை இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடுவார்களா என்றும் தெரியவில்லை. கை தவறிய வாய்ப்பு கை தவறியதுதான்.

தோல்விக்கான காரணங்கள் என்று நிறையச் சொல்ல முடியும். ஆனால் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

அரசியலைப் பொறுத்தவரை சரி தவறு என்று எதுவுமேயில்லை. கருணையற்ற வேட்டைக்காடு இது. வெற்றியா தோல்வியா என்பது மட்டும்தான் கேள்வி. வென்றுவிட வேண்டும். தோற்றுவிட்ட பிறகு அப்படி வென்றிருக்கலாம் இப்படி வென்றிருக்கலாம் என்று பேசுவதில் அர்த்தமேயில்லை. தனிப்பட்ட முறையில் இந்தத் தோல்வி பற்றி எனக்கு பெரிய வருத்தமில்லை. செங்கோட்டையனும் அணுகக் கூடிய மனிதர்தான். கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் என்பதையெல்லாம் கையில் தொடாத அரசியல்வாதி அவர். உள்ளூரில் செல்வாக்கு மிக்க மனிதர். கடந்த தேர்தலில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளில் வென்றார். அத்தகைய மனிதருடன் போராடிய சரவணனுக்கு இது கெளரவமான தோல்வி. இந்த முறை வித்தியாசம் பதினோராயிரம் வாக்குகள்தான்.

தோற்றால் தொலைகிறது. இரண்டொரு நாட்களில் அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் தேர்தல் செலவுகளுக்கு என்று கடன் வாங்கி செலவு செய்த சரவணன் இப்பொழுது கடனாளியாகி இருக்கக் கூடாது என்றுதான் கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன். வெற்றியும் தோல்வியும் தேர்தலில் சகஜம். ஆனால் சரவணன் மாதிரியான நல்ல மனிதர்கள் கடன்காரர்களாகி குடும்பத்தைத் தவிக்க விட்டு விடக் கூடாது என்று உள்ளூர விரும்புகிறேன்.

14 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

தேர்தலில், மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய ஆசைப்பட்டு, சேர்த்த பணத்தையெல்லாம் செலவழித்து தோற்றவர்களின் பட்டியல் நீள்கிறது.

தற்கொலை வரைக்கும் சென்று மீண்டு வந்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த வேட்பாளர் ஒருவரின் குடும்பம் நேற்று இருந்த நிலையை பார்த்த பிறகு, இதுபோன்ற கொடுமையான சூழல் யாருக்கும் வரக்கூடாது என நினைத்தேன். தற்போதைய நிலைமையில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம்தான்.

வெற்றித் தோல்வி இயல்பானதுதான். ஆனால் துரோகங்களால் வெற்றி பறிக்கப்படும்பொழுது அதை மனம் ஏற்றுக்கொள்வதில்லை.

அனுபவமின்மையும், அளவுக்கு அதிகமான நம்பிக்கையும் எப்படியும் நம்ம ஊர் மக்கள் நம்மைதான் தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்து போனது. உழைப்பால் உயர்ந்த அவர் தான் சார்ந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தார். தற்பொழுது நடுத்தெருவுக்கு வந்து நிற்கிறார்.

இதில் இன்னொரு மோசமான கொடுமை என்னவென்றால், அவரிடமிருந்து தொகுதி தேர்தல் செலவுக்கென கட்சிக்காரர்கள் லகரங்களை அள்ளிச் சென்று இருக்கிறார்கள். வாங்கியதோடு சரி. களப்பணி ஆற்ற தவறி விட்டார்கள். களப்பணி ஆற்றுவதாக அவரை நம்பவைத்து இருக்கிறார்கள். கடைசி ஒரு ரூபாய் வரைக்கும் அவரிடம் இருந்து உறிஞ்சி எடுத்துவிட்டார்கள். (இதற்காகவே கட்சியில் சில கூட்டங்கள் இருக்கிறதாம். விசாரித்து பிறகு தெரிந்துகொண்டேன்.

தேர்தல்தான் இவர்கள் பணம் சம்பாதிக்க காத்திருக்கும் திருவிழா. கட்சியில் இருப்பார்கள். கட்சிப் பணி ஆற்றுவதாக கூறி, வேட்பாளர்கள், அவர்களைச் சார்ந்தவர்களிடம் பணம் பறிப்பார்கள். முழுமையாக எதையும் செய்யாமல், அந்த பணத்தை அவர்களே எடுத்துக்கொள்வார்கள். கட்சயில் இருக்கிறார்களே... களப்பணி ஆற்றி வாக்குகளை சேகரித்து, நம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்பி இருக்கும் வேட்பாளர்களுக்கு கடைசியில் வேட்டு வைப்பார்களாம். எதிர் அணியினரிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு, கட்சி பணியை செய்யாமல், கடமையை செய்ய மறந்து விடுவார்களாம். தேர்தல் முடிந்த பிறகு இவர்களிடம் குறிப்பிட்டளவு பணம் சேர்ந்துவிடுமாம். ஐந்தாண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சதிச்செயல்களை செய்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களும் உண்டாம்.)

சுருக்கமாக சொல்வதென்றால் அரசியலுக்கு புதியவர் என்பதால் அவரிடம் உள்ள பணத்தை எல்லாவற்றையும் கட்சி பணியாற்ற என்று சொல்லி கொள்ளை அடித்துவிட்டார்கள்.

வாங்கியவர்கள்தான் உண்மையாக வேலை செய்தார்களா என்றால் இல்லை. கட்சி உறுப்பினர்கள் அனைவருகே ஓட்டு அளித்திருந்தாலே கணிசமான ஓட்டு விழுந்திருக்கும். அதுவும் இல்லை.

அவரின் தற்போதைய வருத்தமே இதுதான்.செலவழிந்த பணம் கூட போகட்டும். கட்சிக் காரர்கள் அவரிடமிருந்து கொள்ளையடித்த பணம் கூட போய்த் தொலையட்டும். குறிப்பிட்ட அளவிற்காவது ஓட்டுக்கள் விழுந்திருந்தால் கூட மனதை தேற்றிக்கொள்ளலாம். அதுவும் இல்லை என்கிறார்.

காலம் காலமாய் கொள்ளையடிப்பவன் செலவழித்து, இழப்பது பெரிய சோகம் அல்ல..உழைப்பால் உயர்ந்து, அதை முழுவதும் தேர்தலுக்காகவே செலவிட்டு, ஓட்டாண்டி ஆகி நடுத்தெருவில் குடும்பம் நிற்பதுதான் சோகத்திலும் சோகம்...!

மனதார மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்களுக்கு இதுபோன்ற கொடுமையான சூழல்கள் உருவாவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்டது போல, தேர்தல் என்பது ஒரு வேட்டைக்காடு தான். அதில் ஈவு இரக்கமோ, மனித நேயமோ துளியும் எதிர்பார்க்க முடியாது.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

சரவணன் வெற்றி பெற்று இருக்கிறார் மணிசார்.அவ மேல் வைத்த நம்பிக்கை வெற்றி பெற்று இருக்கிறது .அந்த வித்தியாசம் பதினோராயிரமும் மாற்றத்தை இன்னும் அறிவளவில் ஏற்றிக்கொள்ளாத மனிதர்களின் சிறு குறைபாடு. மாறுவார்கள் .மெல்ல,மெல்ல மாறிய மாற்றம்தான் அதிக நாளாக வாழ்கிறது .

ஆனால் தோல்வியை பொறுத்துக்கொள்ளாத அந்த தோழனின் மரணம் தாங்கிக் கொள்ள முடியாத சோகம் .அந்த தோழனின் கனவு சரவணனுக்கு வெகு விரைவில் ஒரு நல்ல இடத்தை மக்கள் பணியாற்ற தரும் என நம்புவோம்

சரவணன் ஆறுதல் பெற வேண்டும் .இறையருள் துணை புரியட்டும் .வாழ்க வளமுடன் .

”தளிர் சுரேஷ்” said...

சரவணனை பற்றி உங்கள் கட்டுரைகள் வாயிலாகத்தான் அறிந்தேன்! அவர் ஜெயித்திருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்துவிட்டது. இந்த தேர்தல் அவரை கடனாளியாக ஆக்கி இருப்பின் அந்த கடனுக்கு கோபி வாக்காளர்கள் அனைவருமே கடன்பட்டவர்கள்தான்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பொதுவான நன்மைகளை செய்வதைவிட தனிப்பட்ட நன்மைகள் செய்வதையே மக்கள் விரும்புகிறார்கள்.ஊருக்கு சாலை போட்டுத் தந்தார் என்பதை விட ஒவ்வொரு வீட்டு கல்யாணத்துக்கும் மொய் எழுதினார்' என்பதே மக்கள் விரும்புவது

சேக்காளி said...

//அவருக்கு கோபி மக்கள் வாய்ப்பை வழங்கவில்லை//
எல்லோரும் நம்மைப் போல் சிந்திப்பதில்லை என்பதை தலையில் கொ(கு)ட்டி சொல்லிக் குடுத்திருக்கிறார்கள்.

Unknown said...

சரவணன் உட்பட அனைத்து காங்கிரஸ்
வேட்பாளர்களும் தோற்க வேண்டும் என
மனதாற விரும்பினேன்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்
என்ற கருத்து கணிப்பை கேட்டு
இரன்டு நாட்களாக தூக்கம் இல்லை.
இப்பொழுதுதான் நிம்மதி.

Murugan R.D. said...

உண்மையில் காங்கிரஸ் எல்லா தொகுதிகளிலும் மண்ணை கவ்வ வேண்டும் என்பதே என் போன்ற சராசரி உணர்வாளர்களின் எண்ணம், நீங்கள் சரவணனைப் பற்றி எழுதியபோது எனக்கு தோன்றிய ஆச்சரியம் என்னவென்றால் இவரைப்‌போன்றவர்கள் ஏன் காங்கிரஸ் கட்சியில் இதுநாள் வரைக்கும் இருந்தார்கள் என்பதே, நல்லவனாக இருப்பது முக்கியமே அதேஅளவு நல்ல சூடு சொரணை உள்ள உணர்வளானனாகவும் இருப்பது அதைவிட முக்கியம், இது கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரசை வெற்றிபெற வைத்த என் ஜாதி தறுதலை மக்களுக்கும் சேர்த்தே சொல்லிக்கொள்வதான், மற்றபடி அந்த தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் முட்டாள்தனத்தால் அந்த குடும்பம் எவ்வளவு ‌தூரம் வேதனையில் ஆழ்ந்திருக்கும் என்பதை நினைத்தால் கவலையாக உள்ளது, தற்கொலை முட்டாள்தனமானது,

Muthu said...

// சரவணன் உட்பட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் தோற்க வேண்டும் என மனதாற விரும்பினேன். //

பெயருக்கேற்ற மாமனிதர் அல்லவா, வேறெப்படி விரும்புவீர்கள் !

Muthu said...

// நல்லவனாக இருப்பது முக்கியமே அதேஅளவு நல்ல சூடு சொரணை உள்ள உணர்வளானனாகவும் இருப்பது அதைவிட முக்கியம் //

ப்ப்பா என்ன ஒரு பரிபக்குவம் ! சிந்தனைத்தெளிவு !!

Muthu said...

எந்த ஒரு பெரும் அதிருப்தி அலையும் ஆளுங்கட்சி மீது வீசாத போதும், பெரும் பணப்பாய்ச்சலை எதிர்கொண்டு இந்தளவு வாக்குகளை வாங்கியதே பெரிய விஷயம்தான். நமது ஜனநாயகம் இன்னும் வயதுக்கே வரவில்லை - வர விடவில்லை என்பதுதான் உண்மை - என்பதால் இப்படிப்பட்ட சோகங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான், வேறு வழியில்லை. கட்சி அபிமானத்தையெல்லாம் விட்டுவிட்டு, வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டிய தேவையின்மையை உணர்ந்து, சரியான பிரதிநிதியைத்தான் தேர்வு செய்வேன் என்ற தெளிவும் உறுதியும் நமது மக்களுக்கு வர பிரார்த்தித்துக்கொள்ளலாம்.

Murugan R.D. said...

நன்றி முத்து அவர்களே, உங்கள் ஆதங்கம் புரிகிறது,
அதே அளவுக்கு என் போன்ற சராசரி மனிதர்களின் ஆதங்கத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் போன்ற தேசியகட்சிகளின் செயல்பாடுகள் தமிழ்நாட்டின் நலனைப்பொறுத்தவரையில் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை நீங்கள் கொஞ்சம் நன்றாக யோசித்து ஆராய்ந்து பாருங்கள், தமிழனின் தலையில் மண்ணைஅள்ளிப்போடுவதில் இந்த தேசிய வியாதிகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை, மற்றமாநிலங்களில் உள்ள தேசியகட்சியினர் அவர்களின் மாநிலத்திற்காக மாநிலக்கட்சிகள் போல போராடும் போது இங்கிருக்கம் எந்த தேசியகட்சியாவது அப்படி போராட்டம் நடத்தியதுண்டா? ஏன் குறைந்தபட்சம் அறிக்கையாவது விட்டதுண்டா? கம்யூனிஸ்ட்கள் முல்லைபெரியாறுக்காக குரல் கொடுத்தார்களா? கூடங்குளத்தை எதிர்த்தார்களா? பாஜ ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு மத்தியில் சென்று ஆதரவு கேட்டார்களா? கெயில் எரியாவு குழாய் பதிப்பிற்கு இந்த மூன்று தேசியகட்சிகளில் ஒன்றாவது குரல்கொடுத்ததுண்டா? பிறகு எப்படி தேசியகட்சிகளின் மீதான் பார்வையும் அதில் உள்வர்கள் மீதான நல்அபிப்ராயமும் என்னைப்போன்றவர்களுக்கு ஏற்படும் என்பதை யோசியுங்கள்,

செந்தில்குமார் said...

சரவணன் அவர்களின் உறவினர் ஒருவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார், ’50 லட்சத்திற்கும் மேலே கடன் இருக்கும் போல என்று’’

Vaa.Manikandan said...

ஆமாம் செந்தில்! ஞாயிற்றுக்கிழமை ஊருக்குச் சென்றிருந்த போது சரவணனிடம் பேசினேன். எவ்வளவு கடன் என்று தெரியவில்லை. ஆனால் கடன் ஆகியிருப்பதாகச் சொன்னார். நிறையப் பேசினார். எல்லாவற்றையும் எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். என்னதான் எழுதினாலும் முருகன் மாதிரியானவர்களும் நல்லசாமி மாதிரியானவர்களும் புரிந்து கொள்ளப் போவதில்லை. அவர் பேசியவையெல்லாம் எனக்குள்ளேயே இருக்கட்டும்!

kkkk said...

கடனில் சிக்கித் தவிக்கும் செங்கோட்டையன்? -அதிரும் ஈரோடு அ.தி.மு.க

கொங்கு மண்டலத்தையே ஒருகாலத்தில் அதிர வைத்துக் கொண்டிருந்த செங்கோட்டையன், இப்போது மவுனமாகிவிட்டார். ' தேர்தலை எதிர்கொள்ள பணமில்லாமல் கடன் வாங்கித்தான் செலவு செய்தார்' என புலம்புகின்றனர் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நேரடி குட்-புக்கில் இடம் பெற்றிருந்தவர் செங்கோட்டையன். தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்லும் இடங்களில், முக்கிய பாயிண்டுகளில் இரட்டை இலை சின்னம் பொறித்த அட்டையைக் கையில் தாங்கிக் கொண்டு நிற்பார். அவர் எந்த இடத்தில் நிற்கிறாரோ, அந்த இடத்தில்தான் ஜெயலலிதா பேசுவார். அந்தளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக வலம் வந்தவருக்கு, கடந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே குடும்பத்தால் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, கார்டன் வட்டாரத்தில் இருந்து தனித்துவிடப்பட்டார். இருப்பினும், கட்சி நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதை அவர் தவிர்க்கவில்லை. இந்தத் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா.

"அவர் அமைச்சராக கொடிகட்டிப் பறந்த காலம் என்பது 91 முதல் 96-ம் ஆண்டு வரையில் மட்டும்தான். முதல்வரின் வெறிபிடித்த பக்தனாகவே இருந்தார் என்பது அம்மாவுக்கும் தெரியும். 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அண்ணனுக்கு வேளாண்மைத் துறையை ஒதுக்கினார். அதுவும் சில மாதங்கள்தான். குடும்பப் பிரச்னையைக் காரணம் காட்டி ஒதுக்கி வைத்துவிட்டார் அம்மா. இதற்கு முழுக் காரணமும் தம்பிதுரைதான். அம்மாவின் குட்-புக்கில் அண்ணன் இருப்பதை அவர் விரும்பவில்லை. சொல்லப் போனால் 96-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிதாக எந்தப் பதவியிலும் அவர் இல்லை. இந்தமுறை வேட்பாளராக அறிவித்தபோது, 'செலவுக்கு என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தார். பாரம்பரிய சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் வீடு, நிலங்களாக உள்ளன. செலவு செய்வதற்கு பணமாக எதுவும் இல்லை. நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரியும் நல்லமுறையில் இயங்கவில்லை. அந்தக் கல்லூரியும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது.

இந்தமுறை வேட்பாளராக அம்மா அறிவித்தபோது, பதற்றத்தில்தான் இருந்தார் அண்ணன். ' தொண்டர்களுக்கு எதாவது செய்தாக வேண்டும்' என்பதுதான் அவருடைய கவலையாக இருந்தது. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் அனைவரிடமும் பத்து லட்சம், இருபது லட்சம் என கடன் வாங்கித்தான் செலவு செய்தார். அவருடைய குடும்ப சொத்துக்களை உறவுக்காரர்கள் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவருக்கென்று நிலங்களும் வீடும்தான் உள்ளது. ரொக்கமாக பணம் எதுவும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் பாரம்பரிய நிலங்கள் சிலவற்றையும் விற்றுவிட்டார். இதை வெளியில் சொன்னால் நம்ப மாட்டார்கள். பெரும் கடன் சுமையோடு தூக்கமில்லாமல் தவித்து வருகிறார். இந்தமுறை அம்மா கைவிட மாட்டார் என நம்பிக்கையோடு இருக்கிறார்" என்கின்றனர்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில், 'செங்கோட்டையன் வருகிறார்' என்றாலே கொங்கு மண்டல கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அலறல் இருக்கும். அந்தளவுக்கு பவர் பாலிடிக்ஸால் கோலோச்சிக் கொண்டிருந்தவர், இப்போது கார்டனின் கண்பார்வைக்காக காத்துக் கிடக்கிறார்.

--Vikatan
http://www.vikatan.com/news/tamilnadu/64564-senkottaiyan-under-credit-pressure-says-cadres.art