May 13, 2016

பார்வை

நேற்று காலையில்தான் ஊருக்குச் சென்றிருந்தேன். வீட்டை அடையும் போது மதியம் ஒரு மணி ஆகியிருந்தது. மாலையிலேயே பெங்களூருக்கான பேருந்தைப் பிடித்திருந்தேன். சரண்யாவுக்காக. சரண்யா குறித்து முன் அறிமுகம் எதுவுமில்லை. நண்பர் ராஜேஷ் நேற்று காலையிலேயே அழைத்து சரண்யா பற்றிச் சொன்னார். ஊரிலிருந்து உடனடியாகத் திரும்பக் கூடிய சூழல் இல்லை. ‘நாளைக்கு காலையில் போய் பார்த்துக்கிறேன் ராஜேஷ்’ என்று சொல்லியிருந்தேன். அதனால்தான் அவசரப் பயணம். பிரச்சாரம் செய்வதான திட்டத்தை விடவும் இது முக்கியமான காரியமாகத் தெரிந்தது.

சரண்யா விருத்தாச்சலத்தைச் சேர்ந்த பெண். அப்பா இல்லை. அம்மா உள்ளூரில் கூலி வேலை செய்கிறார் போலிருக்கிறது. சரண்யா பெங்களூரில் தங்கி சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். அம்மாவின் வருமானம்தான் ஒரே தூண். சரண்யாவின் தம்பி பி.ஏ முடித்துவிட்டு ஏதாவது வேலை செய்கிறேன் பெங்களூர் வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. சரண்யாவுக்கு எதிர்வீட்டில் பிரசன்னா கார்த்தி என்கிற இளைஞன் தங்கியிருக்கிறான். புதுக்கோட்டை வடக்கு வீதியைச் சார்ந்த இளைஞன். அப்பா பெயர் நாகரத்தினமாம். பெங்களூரில் ஏதோ நிறுவனத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். சரண்யா வீட்டில் இருக்கும் போது ஒலியை அதிகமாக்கி பாடல்களை அலற விடுவது என்றெல்லாம் அழிச்சாட்டியம் செய்யவும் சரண்யா வீட்டு உரிமையாளரிடம் புகார் அளித்திருக்கிறார். இதை பிரசன்னா மனதில் வைத்துக் கொண்டான். வன்மம்.

நேற்று முன்தினம் போதையில் சரண்யாவின் வீட்டுக் கதவை பிரசன்னா தட்டியிருக்கிறான். சரண்யாவின் தம்பி சங்கர் தயாள் கதவைத் திறக்கவும் ‘உங்க அக்கா கம்ளைய்ண்ட் பண்ணினா போட்டுடுவேன்னு சொல்லு’ என்றிருக்கிறான். அடுத்ததாக ‘முகத்தை அடித்துப் பேத்துடுவேன்’ என்றதும் சங்கர் ‘அடி பார்க்கலாம்’ என்றிருக்கிறான். எதையும் யோசிக்காமல் ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டான்.

சரண்யா பயந்து போனவராக வீட்டைப் பூட்டிக் கொண்டு தம்பியை அழைத்துக் கொண்டு வீட்டு உரிமையாளரின் கதவைத் தட்டியிருக்கிறார். அவரிடம் பிரச்சினையைச் சொல்லியிருக்கிறார்கள். உரிமையாளரின் மகன் மேலே சென்று பிரசன்னாவைக் கீழே அழைத்து வந்திருக்கிறார். காதில் போனை வைத்தபடியே கீழே வந்தவனிடம் உரிமையாளர் ‘வீட்டைக் காலி பண்ணிடுப்பா’ என்று சொல்லவும் ‘சரி சார்’ என்று சொல்லியபடியே செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்தவன் அதே பாக்கெட்டிலிருந்து கத்தியை உருவி சங்கரின் கண்ணிலேயே இறக்கிவிட்டான். இடது கண். ரத்தம் பெருக்கெடுக்க என்ன செய்வதென்று பதறியவர்கள் தூக்கிக் கொண்டு சின்மயா மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையிலும் கூட அலறிப் போயிருக்கிறார்கள். ‘நீங்க மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். 

நள்ளிரவில் ராஜேஷூக்குத் தகவல் வந்திருக்கிறது. அதைத்தான் என்னிடம் சொல்லியிருந்தார். 

அலுவலகத்தில் அனுமதி வாங்கிவிட்டு இன்று மதியத்திலிருந்தே சரண்யாவுடனும் சங்கர்தயாளுடனும்தான் இருந்தேன். அந்தப் பெண்ணுடன் யாருமே இல்லை. இப்பொழுது சங்கரின் நண்பர் ஒருவர் வந்து சேர்ந்திருக்கிறார். சரண்யா மூன்று நாட்களாக அழுது அழுது தொண்டையில் ரத்தம் கசிய பேச முடியாமல் அமர்ந்திருந்தார். ஏழாவது மாடியில் அறை ஒதுக்கியிருந்தார்கள். மருந்து வாங்கவும், மாத்திரை வாங்கவும் என தனி ஒருவளாக அங்கேயும் இங்கேயும் ஓடி கால்கள் வீங்க நடக்க முடியாமல் நடந்து கொண்டிருக்கிறார்.

‘என்னாச்சு?’ என்று கேட்ட போதே உடைந்து அழத் தொடங்கிவிட்டார். இடது கண்ணின் நரம்புகள் கத்தரிக்கப்பட்டு கருவிழி கிழிந்து பார்வை முழுமையாகப் போய்விட்டது. அம்மா விருத்தாச்சலத்தில் இருக்கிறார். அவரிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். சங்கரால் வலியின் காரணமாக எதுவும் பேச முடிவதில்லை. சரண்யாவை பார்த்தவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது. அழுதுவிடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் ‘ஆனது ஆச்சு தைரியமா இருங்க...எதுவானாலும் பார்த்துக்கலாம்’ என்றேன். அது அவரைச் சமாதானம் ஆக்கவில்லை. 

‘எப்படியோ புரட்டி பதினைந்தாயிரம் கட்டியிருக்கேன் சார்..இன்னமும் எவ்வளவு ஆகும்ன்னு தெரியலை’என்றார். அவரை நடக்க வைக்க வேண்டாம் எனத் தோன்றியது. அமரச் சொல்லிவிட்டு காசாளரிடம் சென்று விசாரித்த போது இன்னமும் எண்பத்து நான்காயிரம் கட்ட வேண்டும் என்றார். திக்கென்றிருந்தது. சரண்யாவிடம் வந்து ‘கையில் எவ்வளவு இருக்கு’ என்றேன். சொற்பத் தொகையைச் சொன்னார். மணிப்பால் மருத்துவமனையின் பெரும்செலவுகளைச் சமாளிக்க முடியாது என்பதால் தமிழகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தார். அவரது கைவசம் இருக்கும் தொகை அழைத்துச் செல்வதற்கும் தமிழக மருத்துவமனையின் ஆரம்ப கட்ட செலவுகளுக்குமே சரியாக இருக்கும். இதுவரைக்கும் யாருக்குமே மொத்த பில் தொகையையும் அறக்கட்டளையின் நிதியிலிருந்து கொடுத்ததில்லை. ‘உங்களால் புரட்ட முடிந்த அதிகபட்ச தொகையைப் புரட்டி விட்டு என்னிடம் வாங்க’ என்றுதான் சொல்லியிருக்கிறேன். சரண்யாவிடம் அதைச் சொல்ல மனம் வரவில்லை. அப்படிச் சொன்னாலும் அவரால் முடியாது.

‘எவ்வளவு ஆச்சு சார்?’ என்றார். சொன்னேன். அதிர்ச்சியானார். 

மருத்துவமனையில் சமூக சேவைக்கென்று ஒரு அலுவலரை வைத்திருக்கிறார்கள். பேசிய பிறகு ஏழாயிரம் ரூபாயைக் குறைத்தார்கள். அதற்கு மேல் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லை. எழுபத்தேழாயிரம் ரூபாய்க்கு காசோலை எழுதிக் கொடுத்தேன். சற்றே பெரிய தொகைதான். ஆனால் அந்தப் பெண்ணையும் கண்கள் வீங்கிப் படுத்திருக்கும் சங்கரையும் பார்க்கச் சகிக்கவில்லை. மூன்று நாட்களாகக் குளிக்கக் கூட வழியில்லாமல் கசங்கிக் கிடக்கிறாள். சட்டை முழுவதும் ரத்தக் கறை.

பிரசன்னாவின் மாமா அழைத்துப் பேசியிருக்கிறார். ‘கேஸை வாபஸ் வாங்கிக்குங்க...பணம் தர்றேன்’ என்று சொன்னாராம். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சரி என்று சொல்லியிருக்கிறார்கள். பிறகு ‘இப்போ பத்தாயிரம்தான் தர முடியும்’ என்றிருக்கிறார். ஒரு இளைஞனின் பார்வையைத் தொலைத்துவிட்டு வெறும் பத்தாயிரம் என்று பேரம் பேசுவது எவ்வளவு பெரிய திமிர்த்தனம்? இவர்கள் தயங்கவும் ‘கோர்ட்டில் பார்த்துக்கிறோம்’ என்று சொல்லிவிட்டார். 

உலகம் எவ்வளவு குரூரமானதாக இருக்கிறது! சிறகு ஒடிந்த சிட்டுக் குருவிகளைப் போல அந்தப் பெண்ணும் பையனும் மருத்துவமனையில் கிடக்கிறார்கள். அவன் பார்வையைப் பறித்துவிட்டு மனசாட்சியையும் மூட்டை கட்டிவிட்டு ஏதோ மளிகைக்கடை பேரம் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சில பெங்களூர் நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். இந்தப் பெண்ணுக்கும் பையனுக்கும் சட்ட ரீதியாக எப்படி உதவுவது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஏதாவதொரு உதவியைச் செய்தாக வேண்டும். ஒருவனின் பார்வையைப் பறித்தவன் எந்த நியாயத்தைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு மேலாக பத்தாயிரம் ரூபாய்தான் விலை என்று பேரம் பேசுவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? பிரசன்னா கார்த்தியின் நிழற்படங்கள் இருக்கின்றன. ஆனால் இங்கு வெளியிட வேண்டுமா எனத் தெரியவில்லை.

எந்தப் பெண்ணையும் அக்கா தங்கை என்று அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிட மாட்டேன். அந்த செண்டிமெண்ட்டில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இந்தப் பெண்ணை அப்படிச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ‘யாருமில்லைன்னு நினைக்க வேண்டாம்...அண்ணன் மாதிரி நினைச்சுக்கங்க..தைரியமா இருந்து அவனைப் பார்த்துக்குங்க..என்னவானாலும் சமாளிச்சுக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறேன். பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் அழுது கொண்டேயிருக்கும் ஆதரவற்ற ஒரு இளம்பெண்ணிடம் வேறு என்ன சொல்ல முடியும்?

9 எதிர் சப்தங்கள்:

kamalakkannan said...

பிரசன்னா போன்ற அரக்கர்கள் மிக கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டிய சமூக கிருமிகள்

சேக்காளி said...

//அண்ணன் மாதிரி நினைச்சுக்கங்க//
சொல்வது எளிது. ஆனால் அண்ணனாய் இருப்பது கடினம்.தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம். அண்ணனாய் பொறுப்புகளை சுமப்பது.உடன் பிறந்த சகோதரிகள் இல்லையல்லவா.சுமந்து பாருங்கள். அதொரு சுகமான சுமைதான்.

Vinoth Subramanian said...

Won't he get his vision back? We can say we can do many things without vision. We can say everything is possible. but, life, is really difficult without eye-sight. Kindly help him get vision back. please up load that criminal's photo. avanai ellam intha pavam sagara varaikkum thorathum mani sir.

moe said...

Lawyer friends can help us understand the possibilities.
what's the max sentence?
how much compensation is possible?

பாலு said...

பீப் மகனையும் அவன் மாமாப் பயலையும் ரெண்டு கண்ணையும் நோண்டிரணும்.

Dev said...

Dear Manikandan,

Sent a mail. Pl refer.


Thanks,
Dev

Sekar M said...

Friends,

I have been trying to transfer money to Nisaptham trust bank account through money transfer services from USA. but most of money transfer services says we wont make transaction for Trust bank account. can you guys give me some suggestion about how do i make this ?

Unknown said...

please up load that criminal's photo

Sarvan said...

மணிகண்டன் இந்த விஷயத்தில் ஏதாவது தீர்வு ஏற்பட்டதா ??