May 11, 2016

மார்ச், ஏப்ரல் - 2016

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக்கணக்கு விவரம் இது-






மே 11, 2016 கணக்குப்படி ரூ. 27,07,537.39 (இருபத்தேழு லட்சத்து ஏழாயிரத்து ஐநூற்று முப்பத்து ஏழு ரூபாய்) வங்கிக் கணக்கில் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் எழுபத்து நான்கு பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

வரிசை எண் 02:
வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் சிவரஞ்சனியின் புற்று நோய் சிகிச்சைக்கானது. சிகிச்சை தோல்வியில் முடிந்தது. சிவரஞ்சனி இறந்துவிட்டார் இப்பொழுது உயிரோடு இல்லை. தனது கணவரையும் குழந்தையையும் கைவிட்டுவிட்டார். 

வரிசை எண் 04:
ராமலிங்கம் என்பவருக்கு வழங்கப்பட்ட காசோலையானது முதற்கட்ட வெள்ள நிவாரண உதவிக்காக உள்ளூர் லாரி வாடகையாக வழங்கப்பட்டது. 

ANANDKUMAR T V CENTRE, ANANDAKUMARAGENCIES, R M S PAATHIRA MAALIGAI, VIRTUAL GALAXY - ஆகியவை கடலூர் வெள்ள நிவாரண உதவிப் பொருட்கள் வாங்கிய கடைகளுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள்

வரிசை எண் 15:
குமரகுரு என்பவர் மாட்டு வியாபாரி. அவர் மூலமாகவே கடலூர் மக்களுக்கு வழங்கப்பட்ட மாடுகள் வாங்கப்பட்டன. அவருக்கு இரண்டு கட்டங்களாக காசோலை வழங்கப்பட்டது.

வரிசை எண் 18:
கடலூர் Mano Agencies நிறுவனத்தின் வழியாக விவசாயத்தில் பயன்படும் Sprayer, துளையிடும் எந்திரங்கள், அரைவை எந்திரங்கள், வெட்டு எந்திரங்கள், வெல்டிங் எந்திரங்கள் உட்பட மொத்தம் 103 எந்திரங்கள் ரூ.5,42,825 க்கு வாங்கப்படவிருக்கிறது. பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் ஏன் விவரம் வரவில்லை என்று தெரியவில்லை. 

RAVI RADIOS AND COOKER H, SUGANTHI MALIGAI, CUDDALORE CYCLE STORES, SREE RAJU STORES, BALAJI ENTERPRISES,  CUDDALORE AGS  என்ற பெயரில் வழங்கப்பட்ட காசோலைகள் கடலூர் நிவாரண உதவிகளுக்கான பொருட்கள் வாங்கப்பட்ட கடைகளுக்கு வழங்கப்பட்ட காசோலைகள்.

வரிசை எண் 48, 49:
நாமக்கல்லைச் சேர்ந்த மதன் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர். அவருடைய தந்தை நாமக்கல்லில் தினக்கூலி. மதன் எம்.ஈ படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு அவரால் கட்ட முடியாமல் விடப்பட்ட தொகை மற்றும் அடுத்த ஆண்டுக்கான தொகை இரண்டுக்கும் காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வருடம் மதன் படிப்பை முடித்துவிடுவார்.

வரிசை எண் 54:
கோவையைச் சேர்ந்த ரூபி என்ற பெண்ணின் கணவர் விபத்தில் இறந்துவிட்டார். இப்பொழுது அந்தப் பெண் நிறை மாத கர்ப்பிணி. துணைக்கு யாருமில்லை. அவருடைய அடுத்த ஆறு மாதச் செலவுகளுக்காக மளிகைச் சாமான்களை வாங்கிக் கொடுத்தோம். அந்தப் பொருட்கள் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸிலிருந்து வாங்கப்பட்டது. அதற்கான காசோலை இது.

வரிசை எண் 56:
மதுரையைச் சேர்ந்த ஷ்யாம்முக்கு திடீரென்று இடுப்புக்குக் கீழாகச் செயல்படுவதில்லை. பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்த அவருக்கு அம்மாவைத் தவிர வேறு துணை யாருமில்லை. அவருக்கான பிசியோதெரபி சிகிச்சைக்காக காசோலை வழங்கப்பட்டது.

வரிசை எண் 31, 60:
குழந்தை வைபவ் கிருஷ்ணாவுக்காக நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை. மாதம் ஒன்று வீதம் தலா இரண்டாயிரம் ரூபாய்க்கு பனிரெண்டு காசோலைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த உதவியானது ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. மே மாதத்திலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்கு உதவித் தொகை வழங்கக் கோரியிருக்கிறார்கள். பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

ஒரு தகவலைத் திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது-

வெள்ள நிவாரண உதவிகள் தவிர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காக மட்டுமே அறக்கட்டளைக்கு வரும் நிதி பயன்படுத்தப்படுகிறது. வேறு எதற்காகவும் இந்த நிதி எடுக்கப்படுவதில்லை.  Bank statement ஐ கவனித்தால் இது புரியும்.

பயனாளிகள் குறித்தான விசாரணை, அவர்களை நேரில் சென்று பார்த்து வருவதற்கு ஆகக் கூடிய செலவு, காசோலைகள் அனுப்புவதற்கு ஆகக் கூடிய தூதஞ்சல்(கூரியர்) செலவு போன்றவை என்னுடைய பணத்திலிருந்துதான் செய்யப்படுகிறது. அறக்கட்டளைக்கு மற்றவர்கள் நிதி வழங்குகிறாரக்ள். என்னுடைய பங்களிப்பாக நேரத்தையும், இந்தச் சிறு சிறு செலவுகளையும் செய்கிறேன்.

நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இவையெல்லாம் தெரிந்த விஷயம்தான் என்றாலும்- சென்னை வெள்ளம், தேர்தல் உள்ளிட்ட பரபரப்புகளின் காரணமாக புதிதாக கவனிக்கத் தொடங்கியவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும் என்பதற்காக அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

அறக்கட்டளையின் ஒவ்வொரு மாத வரவு செலவுக் கணக்கும் நிசப்தம்.காம் தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. வரவு செலவு பற்றிய ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருப்பின் தயங்காமல் தொடர்பு கொள்ளவும். வெளிப்படைத் தன்மைதான் அறக்கட்டளையின் ஒரே பலம். அதனால் ஒற்றை ரூபாய் குறித்துச் சந்தேகம் இருப்பினும் என்னிடமே கேட்டுவிடலாம். பதிலை பொதுவெளியில் சொல்கிறேன். மடியில் கனமில்லாத வரைக்கும்தான் வழியில் பயமில்லாமல் பயணிக்க முடியும்!

vaamanikandan@gmail.com

2 எதிர் சப்தங்கள்:

ABELIA said...

வெளிப்படைத்தன்மைதான் உங்களது வெற்றிப் பாதைக்கான வெளிச்சம். தொடர்ந்து பல நற்பணிகள் ஆற்றிட இறைவன் உங்களுக்கு அருளட்டும்..!
நல்ல மனிதர்கள் பிறப்பதில்லை...
உருவாக்கப்படுகிறார்கள்...!
உங்களை இப்படி உருவாக்கிய ஜீவ ஆத்மாக்கள் நூறாண்டு காலம் வாழ்க...!

Rajkumar said...

புற்றுநோய் இப்பொழுதெல்லாம் நிறைய பேருக்கு வருகிறது. அதற்கு காரணம், புற்றுநோய் மூலகாரணியான carcinogens, நமது சுற்றுச்சூழல்களிலும், நாம் பயன்படுத்தும் பல வீட்டு உபயோக பொருட்களிலும் அதிகரித்ததே காரணம். மக்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை.