உங்களின் கல்வி குறித்த கட்டுரை பார்த்தேன்,
எனது மகன் +2 (சென்ட்ரல் போர்ட் ) எழுதி உள்ளார், தேர்ட் குருப் எடுத்து பி.பி.எ படிக்க விருப்பத்தில் உள்ளார்.
பத்தாம் வகுப்பில் 8.8 எடுத்தார். நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன், அவருக்கு பெங்களுருவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னதினால், கிரைஸ்ட் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பித்துள்ளோம். கிடைத்தால் சந்தோஷம். இல்லையெனில் வேறு நல்ல கல்லூரிகளில் வேண்டும்.
வேறு எந்தக் கல்லூரிகள் சரியானவையாக இருக்கும்?
அப்துல் நாசர்.
அன்புள்ள திரு.அப்துல் நாசர்,
வணக்கம்.
மாணவருக்கு விருப்பமும் சரியான புரிதலும் இருப்பின் கலை, அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த படிப்புகளை எடுப்பது சரியான தேர்வு. ஆனால் இத்தகைய படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் தான் எதற்காக இந்தப் படிப்பை படிக்கிறோம், படித்து முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம் உள்ளிட்டவை குறித்தான ஒரு புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
அப்படியான புரிதல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை. இரண்டு கேள்விகளைக் கேளுங்கள்.
ஏன் பிபிஏ படிக்க விரும்புகிறார் என்பது முதல் கேள்வி. அதற்கு அவரிடம் சரியான பதில் இருந்தால் விட்டுவிட்டு அடுத்த கேள்விக்குச் சென்றுவிடலாம். இல்லையென்றால் அது குறித்தான தெளிவான புரிதல் உருவாவதற்கான வழிவகைகளை நாம் செய்து தர வேண்டும். துறை சார்ந்த நல்ல கல்லூரிப் பேராசிரியரிடம் அரை மணி நேரம் பேசினால் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடித்துவிடலாம். படிப்பு குறித்து தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகும் அவர் பிபிஏதான் படிக்க வேண்டும் என விரும்பினால் படித்து முடித்துவிட்டு என்ன செய்யவிருப்பதாக உத்தேசம் என்கிற கேள்விக்கும் அவருக்கு பதில் தெரிய வேண்டும். ஒருவேளை தெளிவான பதில் இல்லையென்றால் பிபிஏ படித்தால் என்ன வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? என்னவிதமான உயர்படிப்புகளைப் படிக்கலாம் உள்ளிட்டவை குறித்தான புரிதலை உருவாக்க வேண்டியது நமது கடமை.
இது பிபிஏ படிப்புக்கு மட்டுமில்லை- கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக அது எந்தப் படிப்பாக இருந்தாலும் இந்த அடிப்படையான புரிதல் அவசியம்.
படிப்பை முடிவு செய்துவிட்டு கல்லூரியை யோசிக்கலாம்.
பெங்களூரின் கிறைஸ்ட் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த தேர்வு. ஆனால் கடும் போட்டி நிலவும். நுழைவுத் தேர்வு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். கலை அறிவியல் படிப்புகளைப் பொறுத்தவரையில் கல்லூரியில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். இத்தகைய படிப்பைப் படிக்கிற மாணவர்களுக்கு வெளியுலகம் தெரிய வேண்டியது மிக முக்கியம். மாணவர்களுக்கு உச்சபட்ச exposure அளிக்கக் கூடிய கல்லூரிகளாகத் தேர்ந்தெடுங்கள். அதுவே பாதி வெற்றி அடைந்த மாதிரிதான். லயோலா, திருச்சி செயிண்ட் ஜோசப், கோவை பிஎஸ்ஜி போன்ற பல கல்லூரிகளைப் பட்டியலிடலாம்.
வேறு ஏதேனும் குழப்பம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
அன்புடன்,
மணிகண்டன்
***
வணக்கம் திரு,மணிகண்டன்
கல்லூரி படிப்பு சம்பந்தமான சந்தேகம்
என் சொந்த ஊர் சிவகாசி. என் தங்கை மகன் +12 கம்ப்யூட்டர் சயின்ஸ் எழுதியிருக்கிறான், 10ம் வகுப்பில் 483 மார்க், வீட்டில் அவன் தம்பியுடன் சண்டையிட்டபடியும், டிவி போனை பார்த்துக்கொண்டும், ரொம்பவும் மெனக்கெடாமல் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான், +2வில் கணிதத்துக்கு மட்டும் தனிப்பயிற்சிக்குச் சென்றான். மற்றபடி பாடங்கள் எல்லாம் அவனாகப் படிப்பதுதான். பொறியியல் படிப்பு வேண்டாம் என்றான். ‘வேறு என்ன ஐடியா’ என்று கேட்டாலும் ஒன்றும் இல்லை என்கிறான்.
பொறியியல் படிப்பு என்றால் பயமா? அல்லது படிக்க சோம்பேறிதனமா? அல்லது குடும்ப நிலைமையை நினைத்து யோசிக்கிறானா என்று சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.
பலவாறு முயற்சித்தும், எந்த சப்ஜெக்ட்டில் ஆர்வம் என்று கேட்டால் எல்லா பிள்ளைகளையும் போல கம்ப்யூட்டர் என்றுதான் சொல்கிறான். கணிதம் அவனுக்கு எளிமையாக இருக்கிறது என்று நம்புகிறான். மிக இலகுவாக குறைந்த முயற்சியிலேயே நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடிய திறமை பெற்றவனை கலைக்கல்லூரியில் சேர்ப்பதா என்று ஒரு தயக்கம் எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.
அவனின் திறமையை எப்படி கண்டறிவது? கற்பூரம்போல பட்டென்று பற்றிக் கொள்ளகூடிய அளவிற்கு அவனுக்கு எந்தப் பாடப்பிரிவு இருக்கும்? அவனுக்குள் இருக்கும் வேறு திறமைகள் என்ன அந்தப்பாடப்பிரிவுக்கு என்ன எதிர்காலம்? எந்ததெந்த துறைகளில் மற்றும் எந்தெந்த ஊர்களில் இருக்கிறது என்பதை பற்றி கொஞ்சம் ஆலோசனை வழங்கவும். அவனை நேரிடையாக கவுன்சிலிங் செய்யவும் தயாராக இருக்கிறேன்,
உங்கள் பதிலுக்காக-
இப்படிக்கு 1993லேயே டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு உள்ளூரில் ஏதோ ஒரு வேலைபார்த்துக்கொண்டு இப்போது கம்ப்யூட்டர் டிடிபி வைத்து திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் ஒரு சுமாரான அறிவாளி, 1988 10ம் வகுப்பில் நான் 403, இப்போது புரிந்திருக்கும் நான் எதற்காக என் தங்கை மகனுக்கா இப்படி பரபரப்பாக ஆலோசனை கேட்கிறேன் என்று.
ஆர்.டி.முருகன்
அன்புள்ள திரு.முருகன்,
இந்தக் கேள்வி மிகப் பரந்துபட்டது. நூற்றுக்கணக்கான பதில்களை உள்ளடக்கிய கேள்வி இது.
ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்- இந்தக் காலத்து பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பொருட்படுத்த வேண்டாம். அதிசயிக்கத்தக்க மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் கூட பனிரெண்டாம் வகுப்பில் கவாத்து அடிப்பது நடக்கிறது. அதனால் மதிப்பெண் வரும் வரைக்கும் காத்திருங்கள். மதிப்பெண்கள் குறைந்துவிடக் கூடும் என்கிற பயத்தில் கூட பொறியியல் படிப்பு வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. நான் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தேன் என்ற அடிப்படையில்தான் இதைச் சொல்கிறேன்.
பொறியியல் படிப்பு வேண்டாம் என்று சொன்னால் நிச்சயமாக மகிழ்ச்சியடையலாம். ஆனால் பொறியியல் வேண்டாம் என்கிற பட்சத்தில் வேறு என்ன படிக்க விரும்புகிறார்? கம்யூட்டரில் ஆர்வம் என்றால் பிசிஏவா அல்லது பி.எஸ்ஸி கம்யூட்டர் சயின்ஸா? எந்தக் கல்லூரியில் படிக்க விரும்புகிறார் உள்ளிட்ட கேள்விகளுக்கு அவரிடம் பதிலைக் கண்டுபிடியுங்கள். ஓரளவுக்குத் தெளிவான பதிலைச் சொன்னால் அவர் குறிப்பிடும் கல்லூரியின் வசதிகள் குறித்து விசாரித்து வையுங்கள். எந்தவிதமான புரிதலுமில்லாமல் ‘நான் கம்யூட்டர் படிக்கிறேன்..ஆனா காலேஜெல்லாம் தெரியாது’ என்று சொன்னால் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். அந்தக் குழப்பத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பொறுமையாக விவாதியுங்கள். வெவ்வேறு படிப்புகளைப் பற்றியும் அவற்றின் வேலை வாய்ப்புகள் பற்றியும் திறந்த மனதுடன் பேசுங்கள். ‘இதைத்தான் இவன் படிக்க வேண்டும்’ என்ற முன்முடிவு எதுவுமில்லாமல் விவாதம் இருக்கட்டும். ஒருவேளை சரியான முடிவுக்கு வர முடியவில்லை என்றால் நான் அவரிடம் பேசுகிறேன்.
மற்றபடி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சிறு அறிவுரை- பொறியியல் படித்தவனெல்லாம் உருப்பட்டுவிடுவதுமில்லை. கலைக்கல்லூரியில் படித்தவனெல்லாம் காணாமல் போய்விடுவதுமில்லை. கல்லூரி, படிப்பு, குறிப்பாக மாணவரின் திறமை என எல்லாமும் சேர்ந்ததுதான் ஒரு மாணவரின் எதிர்காலம். படிப்பு மட்டுமே வெற்றியாளர்களை உருவாக்கிவிடுவதாக இருந்தால் சில கல்லூரிகள் மட்டும்தான் நிரம்பும். அப்படியெல்லாம் எதுவுமில்லை. சரியான படிப்பு, நல்ல கல்லூரி, சேர்க்கைக்குப் பிறகு மாணவர் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்களில் கவனம் செலுத்துவது- இவையெல்லாம்தான் முக்கியம். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மாணவர் பொறியியல் படிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டால் பினாத்த வேண்டியதில்லை.
சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களில் மாலை நேரத்தில் அழையுங்கள். விரிவாகப் பேசலாம்.
அன்புடன்,
மணிகண்டன்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment