Apr 20, 2016

ஏன் ஆதரிக்கிறேன்?

கடந்த காலத்தில் சரவணனைப் பற்றி யாராவது பேசும் போதெல்லாம் ‘நல்ல மனுஷன்’ என்பார்கள். அவ்வளவுதான் எனக்கும் தெரியும். எப்பொழுதோ அவரது சொந்த ஊரான சொக்குமாரிபாளையத்து வழியாகச் செல்லும் போது கட்டியும் கட்டாமல் நிற்கும் அரைக்கட்டிடத்தைக் காட்டி ‘மேற்கொண்டு கட்ட காசு இல்லாம நிறுத்தி வெச்சிருக்காரு’ என்றார்கள். அப்பொழுதுதான் உறைத்தது அவர்கள் சொன்ன ‘நல்ல மனுஷன்’ என்ற அடைமொழிக்கான அர்த்தம். கட்டப்படாமல் நிற்கும் அந்த வீட்டை விட்டுவிட்டு சரவணன் இப்பொழுது கோபியில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். வாடகை வீட்டில் குடியிருப்பது பெரிய விஷயமில்லை- ஆனால் பதினைந்து வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய பதவிகளில் இருந்த ஒரு மனிதர் அதற்குப் பிறகும் வாடகை வீட்டில் குடியிருப்பதுதான் அதிசயம். 


உள்ளாட்சி அமைப்புகளில் காசுக்கா பஞ்சம்? 

பெரிய பேரூராட்சி ஒன்றின் தலைவரிடம் ‘பிரசிடண்ட் போஸ்ட் வேணுமா? எம்.எல்.ஏ ஆகுறீங்களா?’ என்றால் ‘எனக்கு பிரெசிடெண்ட் பதவியே போதும்’ என்று பவ்யம் காட்டுவார். அது பவ்யமில்லை. எம்.எல்.ஏ பதவியை விடவும் உள்ளாட்சி அமைப்புகளில்தான் காசு கொட்டுகிறது என்று அர்த்தம். தொட்டதெல்லாம் பொன் என்பது போல உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்த வரையிலும் கை வைக்குமிடமெல்லாம் கமிஷன். அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளில் ஐந்து வருடங்கள் ஒன்றியப் பெருந்தலைவராகவும் (Panchayat Union Chairma-Nambiyur), இன்னொரு ஐந்து வருடங்கள் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் (Panchayat Union Councillor-Gobi Assembly), அடுத்த ஐந்து வருடங்கள் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் (District Panchayat Chairman- Erode Dist) பணியாற்றியவர் சரவணன். மூன்றுமே ஒன்றை விட ஒன்று விஞ்சக் கூடிய கொழுத்த வருமானம் கொட்டக் கூடிய பதவிகள். அப்பேர்ப்பட்ட பதவிகளில் இருந்துவிட்டு வீடு கட்டக் காசு இல்லை; அப்பன் சம்பாதித்து வைத்த வறண்ட நிலத்தைத் தவிர சொத்து ஒன்றுமில்லை; சுமாரான கதர்ச்சட்டையைத் தவிர ஆடம்பர ஆடைகள் இல்லை என்று இருக்கிற மனிதனைப் பார்த்து ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?

அப்படித்தான் ஆச்சரியமாக இருக்கிறது. Brutually Honest என்பார்கள் அல்லவா? அதற்கு வாழும் உதாரணம் சரவணன். சரவணனைத்தான் கோபிச்செட்டிபாளையத்தில் காங்கிரஸ் வேட்பாளராக இறக்கியிருக்கிறார்கள். சரவணன் மாதிரியான வேட்பாளரை நிறுத்தும் போதும் தயக்கமேயில்லாமல் ஆதரிக்கத்தான் தோன்றுகிறது. நேர்மையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட எளிய மனிதர்கள் வென்று சட்டமன்றம் செல்வதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. 

காங்கிரஸூக்கு வாக்களிக்கலாமா என்கிறார்கள்? கட்சியைப் பார்த்து வாக்களித்துத்தான் இருளுக்குள்ளேயே கிடக்கிறோம். எந்தக் கட்சியில் நூறு சதவீதம் நல்லவர்கள் இருக்கிறார்கள்? அல்லது எந்தக் கட்சியில் நூறு சதவீதம் கெட்டவர்கள் இருக்கிறார்கள்? 

அதிமுகவில் செங்கோட்டையன் வேட்பாளர். கடந்த முப்பதாண்டுகளாக எங்கள் தொகுதிக்கு அவர்தான் எம்.எல்.ஏ. கடந்த ஐந்தாண்டுகளில் சட்டமன்றத்தில் கேள்வியே கேட்காத உறுப்பினர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இன்றைய சூழலில் ஜெயலலிதாவுக்கு எண்ணிக்கை மட்டும்தான் முக்கியமாக இருக்கிறது. அதனால்தான் இதுவரை பற்கள் பிடுங்கப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கத்துக்கெல்லாம் வாய்ப்பளித்திருக்கிறார். ஒருவேளை வென்றாலும் கூட இவர்கள் எல்லாம் வெறும் நெம்பர்களாக மட்டும்தான் இருக்கப் போகிறார்கள். அப்படியிருக்கும் போது எந்த விதத்தில் ஆதரிக்க முடியும்? மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முனுசாமி என்பவர் நிற்கிறார். ஆனவரைக்கும் விசாரித்துப் பார்த்துவிட்டேன். முழுமையான விவரங்களை ஒருவரும் சொல்லவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பார்த்தாலும் சுயேட்சைகளிலும் குறிப்பிடத்தக்கவர் என்று யாரைப் பற்றியும் தகவல் இல்லை. இப்படி தகுதியானவர்கள் யாருமே இல்லை என்பதற்காக சரவணனை ஆதரிக்கவில்லை. தமிழகத்தின் சிறந்த வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் முதல் ஐந்து இடங்களில் நிச்சயமாக இடம்பிடிப்பார் என்கிற உறுதியுடன் தான் ஆதரிக்கிறேன். சிறந்த மனிதரொருவர் களத்தில் நிற்கும் போது தயங்காமல் தோளை நீட்டுவதுதான் ஒரு சாமானியனுக்கு அழகு. நானொரு சாமானியன்.

நல்ல வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்போம். அவர் எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தவறேதுமில்லை. சட்டமன்றத்தில் நமக்காக பேசுகிறவராக இருக்கட்டும். தனக்காக பத்து பைசாவை ஒதுக்காதவராக இருக்கட்டும். மக்களுக்கு வர வேண்டிய நிதியை திருடத் தெரியாதவராக இருக்கட்டுமே! நேர்மை ஒரு பண்பு மட்டும் போதுமா என்று கேட்கிறவர்களிடம் திருப்பிக் கேட்க ஒரு கேள்வி மட்டும்தான் இருக்கிறது. அதிகாரத்திற்கு வருபவர்களிடம் அந்த ஒரு பண்பு மட்டுமில்லையென்றால் வேறு என்னதான் இருந்தும் என்ன பயன்? 

கிடைத்ததையெல்லாம் வாரிச்சுருட்டுகிற அதிகார வர்க்கத்தில் சரவணன் மாதிரியான அரசியல்வாதிகள் விதிவிலக்குகள். இந்தக் காலத்தில் கூட இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா என ஆச்சரியப்பட வைக்கிறார். அவரை வேட்பாளராக அறிவித்தவுடன் உணர்ச்சிவசப்பட்டெல்லாம் இதை எழுதவில்லை. ‘அநேகமாக இவர்தான் வேட்பாளர்’ என்று யூகங்கள் சுற்றத் துவங்கிய தருணத்திலிருந்தே விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தொகுதி முழுக்கவுமே அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம்தான் இருக்கிறது. நம்பியூர் பகுதியில் அவர் மேற்கொண்ட வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர்த் திட்டங்கள், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களையெல்லாம் உள்ளூரிலேயே விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம் அதே சமயத்தில் அவரால் முயற்சி செய்யப்பட்டு, ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகளால் காழ்ப்புணர்வால் முடக்கி வைக்கப்பட்ட கீரிப்பள்ளம் மேம்பாட்டுத் திட்டம், வறட்சி நிவாரண நிதி முடக்கம் போன்ற பெரும் பட்டியலையும் தயாரிக்க முடிகிறது.

எனக்கு அத்தனை கட்சிகளும் ஒன்றுதான். சரவணனை ஆதரிப்பதாலும் மற்றொரு வேட்பாளரை எதிர்ப்பதாலும் எனக்கு எந்த லாபமுமில்லை. அதே சமயம் எந்த நட்டமுமில்லை. ஒன்றாம் தேதியானால் அமெரிக்காக்க்காரன் சம்பளத்தை வங்கிக்கணக்கில் என் சம்பளத்தைப் போட்டுவிடுகிறான். ‘யார் ஜெயித்தால் நமக்கென்ன’ என்று கதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கலாம்தான். ஆனால் ஒரு நல்ல வேட்பாளர் தேர்தலில் களமிறங்கும் போது நம்மால் முடிந்தளவு அவரைப் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். இல்லாததும் பொல்லாததையும் சொல்லி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாமல் இருப்பதை மட்டும் சொன்னாலே போதும். அதைத்தான் செய்கிறேன்.

ஆனால் ஒன்று- அரசியலும் தேர்தலும் நல்ல மனிதர்களை அவ்வளவு எளிதில் வென்றுவிட அனுமதிப்பதில்லை. சூழ்ச்சிகளும் பித்தலாட்டமும் பணமும் விளையாடும் அந்தக் களத்தில் நல்லவர்களின் தலைகள் சர்வ சாதாரணமாகக் கொய்துவிடப் படலாம். அது சரவணனுக்கும் தெரிந்திருக்கும். அதே சமயம் இன்றைய நவீன யுகம் வேறு மாதிரியானது. இருந்த இடத்திலிருந்தே வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பிரச்சாரங்கள் தூள் கிளப்புகின்றன. சரவணனுக்கான பிரச்சாரத்தை இளைஞர்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். தினமும் அவரைப் பற்றிய இரண்டு செய்திகளையாவது யாராவது உள்ளூர் நண்பர்கள் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். மருந்துக்கடைகளிலும், டீக்கடைகளிலும் மக்கள் சரவணனைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேர்தலில் தாக்கத்தை உண்டாக்குமெனில் தேர்தல் முடிவு ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கும்.

வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திருடி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கண்களுக்கு சரவணன் மாதிரியான வேட்பாளர்கள் ஆசுவாசமாகத் தெரிகிறார்கள். ஒன்றரை வருடங்கள் கவுன்சிலராக இருந்தவனெல்லாம் மாட மாளிகையில் வாழும் போது பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் வாடகை வீட்டில் குடியிருந்தபடி சுமாரான கதர் சட்டையுடன் வாக்குக் கேட்டுக் களத்தில் இறங்கும் சரவணனின் பெரும்பலமே அவருடைய நேர்மைதான். திரும்பிய பக்கமெல்லாம் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் கயவர்களுக்கு மத்தியில் நேர்மை என்ற ஒற்றைக் குணத்திற்காகவே அவரை ஆதரிக்கத் தோன்றுகிறது. தொகுதியில் யாரிடம் பேசினாலும் அதைத்தான் சொல்கிறார்கள். ‘சரவணன் நல்ல மனுஷனப்பா’ என்று. இந்தக் காலத்தில் இப்படியொரு பெயரைச் சம்பாதித்து வைத்திருப்பதே பாதி வெற்றிதான். இளைஞர்களும் நடுநிலையாளர்களும் சரவணனை ஆதரிக்கிறார்கள். மக்களிடம் பேசும் போது இதைத் தெளிவாக உணர முடிகிறது.

சரவணனிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். வசதி இல்லாமல் இருக்கலாம். அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். அவை அவசியமுமில்லை. இத்தகைய நேர்மையான மனிதர் ஒருவர் நிற்கும் தொகுதியில் வாக்களிப்பதே சந்தோஷமாக இருக்கிறது. 

சரவணன் பற்றிய தகவலை எனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்புவேன். ஏனெனில் இவரைப் போன்றவர்கள் ஜெயிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் மீதான சாமானிய மனிதனின் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்யும்.

என் தொகுதியின் நல்ல வேட்பாளரை நான் அடையாளம் காட்டுகிறேன். உங்கள் தொகுதியின் நல்ல வேட்பாளரை நீங்கள் அடையாளம் காட்டுங்கள். மற்றவற்றை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வா.மணிகண்டன்

25 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

அருமையான விளக்கம்,ஆனால் இவர் எளிமையாக இருக்கிறார் என்பதை மட்டுமே அழுத்தமாக சொல்கிறது இக்கட்டுரை, இவர் செய்த செயல்கள் திறமைகள் போன்றவற்றையும் அடுத்து வரும் பதிவுகளில் விளக்கினால் மக்களிடத்தில் எளிதாக புரியவைக்க முடியும் என்பது என் கருத்து.

நன்றி.!

venkat said...

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு, உங்களின் நீண்ட கட்டுரையைப் பார்த்ததும் உங்களின் மெனக்கடல் புரிகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும், உங்களின் பின்புல ஆராய்ச்சி மனப்பான்மை தெரிகிறது. வாழ்த்துக்கள். சரவணன் போன்றவர்கள் ஜெயிப்பதாலோ, தோற்பதாலோ எந்த மாற்றமும் இருக்காது என்பது யதார்த்தம். இந்த அரசியலமைப்பே எண்ணிகையின் அடிப்படையில் அமைவது. ஒரே ஒரு சரவணனுக்காக, கட்டு மரத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர அவசியம் இல்லை. ஒரே ஒரு கேள்வி. இந்த மாதிரி நல்லவர்கள், ஏன் ஒரு கட்சி என்கிற எல்லைக்குள் இருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்ட இன அழிப்பிற்கு பிறகும், காங்கிரசையோ, தி மு க வையோ யாரும் ஒரு கட்சியாகவே பார்ப்பது கிடையாது. மைனாரிட்டியான நல்லவர்கள், சட்டமன்றம் செல்வதால் எந்த பயனும் இல்லை. இவர்கள் நேர்மையினால், என்ன பயன்? இவர்கள் சார்ந்துள்ள கட்சியின் தலைமைகளின் ஊழல்களை எப்படி சகித்துக் கொள்வது? நமக்கு தேவை. நல்ல வலிமையான தலைமை. நேர்மையான அரசாங்கம். அது எல்லாருடைய மனசாட்சிக்கும் தெரியும்.

Anonymous said...

இவர் தன் கட்சி சார்பாக இன அழிவுக்கு மன்னிப்பு
கேட்பாரா? திரு மணிகண்டன் அவர்களின் ரத்தத்திலும்
மூளையிலும் எவ்வளவு தூரம் திமுக கட்சி பற்று
ஊறியிருந்தால் காங்கிரஸ் வேட்பாளருக்கு நல்லவர்
என்று வக்காலத்து வாங்குவார்?

Unknown said...

வாழ்த்துகள்..நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.

ADMIN said...

வேட்பாளர் சரவணனனை பற்றிய விளக்கங்கள் சிலாகிக்க வைக்கிறது. திரு. வெங்கட் குறிப்பிடுவது போல தலைமை சரியில்லாத ஆட்சியில் சரவணன் போன்றவர்களால் நினைத்ததை சாதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அது பிறகு கவனிக்கபட வேண்டிய ஒன்று. தற்போதைக்கு நல்ல வேட்பாளர் யார் என அறிந்து அவருக்கு ஓட்டு போடுவதுதான் நம்மால் முடிந்த ஒன்று. அந்த வகையில் உங்களுடைய கருத்துகளும், விளக்கங்களும் ஏற்புடையதுதான். நல்ல வேட்பாளரை கண்டறிந்து, கட்சி பேதம் பார்க்காமல் நமக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது தற்போதைய கடமை.

Anonymous said...

இவருக்கும் ஐயா செங்கோட்டையனுக்கும் வித்யாசமில்லை.
செங்கோட்டையன் மட்டும் என்ன பெரிய சொகுசு
வாழ்கை வாழ்கிறார்? தன் உழைப்பு செல்வாக்கு
முழுவதுமே கட்சிக்காக அர்பணிக்கிறார்.
கட்சியைவிட்டு வெளியேறி சேவை செய்திருந்தால்
கூட நாட்டுக்கு ஏதாவது நன்மை நடந்திருக்கும்.
சரவணன் ,செங்கோட்டையன் எல்லாம் ஒரே
குட்டையில் ஊறிய மட்டைகள். அதாவது கட்சி
பைத்தியங்கள். நாளையே தமிழர்கள் அனைவரையும்
கொல்ல வேண்டும் என இவர்கள் சார்ந்த கட்சி
தலைமைகள் சொன்னால் அதற்கும் தலையாட்டுவார்கள்.
இவருக்கு மணிகண்டன் ஆதரவு. ஏற்கனவே ஒரு
கட்டுரையில் ஒருவர் மணிகண்டனை பார்த்து
ஆள் திமுக காரர் போல் தெரிகிறது என்று சொன்னதாக
மணிகண்டனே குறிப்பிட்டிருக்கிறார். அப்படி சொன்னவர்
மிகுந்த உளவியல் நிபுணராக இருக்க வேண்டும்.
ஏனென்றால் திரு.மணிகண்டனுக்கே தெரியாமல்
அவருக்குள் ஒளிந்திருக்கும் திமுககாரனை அவர்
கண்டுபிடித்திருக்கிறார்.

மதவெறி, ஜாதிவெறியை விட ஆபத்தானது கட்சி வெறி.
இந்திய ஜனநாயகத்தைை பிடித்திருக்கும் நோய்.
ஏனெனில் தற்பொதைய ஜனநாயக காலத்தில்
மதம் ஜாதிகளுக்கெல்லாம் அதிகார வலு இல்லை.
கட்சிகளுக்கு அது இருக்கிறது.
மணிகண்டன் போன்ற மெத்த படித்தவர்களாலேயே
அந்த ஹிப்னாடிச நிலையிலிருந்து வெளிவர
முடியவில்லை என்றால் கட்சி பற்று என்ற ஆபத்தை
அனைவரும் உணரவேண்டும்.

Unknown said...

1. Nambiyur union is one of most drought hit areas in TN. Most of the villages have local borewells and community water tanks now. This was done by Saravanan when he was the Panchayat Union Chairman during early 2000s.
2. Generally collectors or any government officials do not not specify a particular brand in the tenders or in their speech. But Saravanan had demonstrated the merits of buying a little costlier pump set motor brand Texmo and its long term benefits in terms of savings on maintenance and operational costs. The then Erode district Collector ordered that all the bore well motors should be Texmo brand and he mentioned that in a public meeting in Malayapalayam. I am sure any farmer would vouch for Texmo than any other brand of motors during 2000s.
3. He would travel to Chennai to meet the Rural Development secretary every year and ensure the funding for Nambiyur union area is done on priority. Never once the funds were returned underutilized. He would carry cases of files to show why these villages would need water, sanitation and concrete roads. He had a good rapport with then IAS secretary. I reckon the same IAS officer is back in the same department.
4. He was prevented from becoming the union chairman for the second term. DMK and ADMK formed an alliance in Nambiyur Union and an ADMK counsellor became the Union Chairman and the following term was given to DMK. I don't think this happened elsewhere and any time in TN politics.
5. When the coconut trees in his farm were dying due to drought in circa 2010, Saravanan was running pillar to post in Chennai Secretariat to meet the Rural Development and Pachayatraj Secretary to get funding for the bore wells and integrated water pipelines in Erode district. This was when he was the District Panchayat Chairman. He once said, the only big town where we don't drinking water problem in our district is Gobi, all other towns and taluks are facing severe shortage.
6. He declined to be the Party District President in Congress in 2000s. Reason being, he cannot afford to spend from his pocket for such a big crowd.
7. I read an article in Vikatan.com last week that EVKS got Gobi constituency to help KAS become an MLA again. Wildest imagination of the reporter and could not be farther from truth. I know his name was in the consideration for the last 1 year or so.
8. He bought his car on loan, a Ford Ecosport. He said he could only afford that and not the big SUVs.
9. He had helped several poor students to get education loan. I was one among them. I can proudly say, if not for him, I wouldn't have completed my studies.

People like him should win, irrespective of the party or symbol. Today's political scenario is such that the hype and focus is always around the wealthy candidates and not the honest ones.

Regards,
Selvakumar

Logi said...

ஏன் நாம் தமிழர், பா ம க, சுயாட்சி வேட்பாளர்களை பற்றி சிந்திக்கவில்லை? மாற்றம் வேண்டுமென்றால் மாற்று சக்திகளையும் ஆராயா வேண்டுமல்லவா...

Krishnamoorthy said...

தங்களது யதார்த்தமான,நடுநடுநிலையான பதிவிற்கு சிலரது பின்னூட்டங்களை
பார்த்தால் சலிப்பாக இருக்கிறது.
தங்களது பணி மேலும் சிறக்கட்டும்.

Anonymous said...

Yes there is another point that proves Manikandan is still in the hypnotize state to support DMK, I remember that he is the first person wrote an article about MK Stalin's "Namakku Name" journey and he praised him a lot in it.

சேக்காளி said...

//என் தொகுதியின் நல்ல வேட்பாளரை நான் அடையாளம் காட்டுகிறேன். உங்கள் தொகுதியின் நல்ல வேட்பாளரை நீங்கள் அடையாளம் காட்டுங்கள். மற்றவற்றை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்//

Ramesh L said...

எனக்கு இது மிக மிக முட்டாள்தனமான வாதமாக படுகிறது. வேட்பாளர் நல்லவர் என்பதால் கட்சி சார்பில்லாமல் வோட்டு போடுவது என்பது சரியல்ல. இவர் வென்று நல்லது செயகிறார் என்றே வைத்து கொள்ளுங்கள். BIG PICTURE பாருங்கள். ஒரு இத்தாலி காரி நாட்டை ஆளுவதற்கு துணை போவது போல அல்லவா இருக்கும். நாட்டை அந்த காட்சியை சேர்ந்தாவர் கொள்ளை அடிப்பதை இவரால் தடுக்க முடியுமா... அந்த கிராமம் வேண்டுமானால் முன்னேற்றம் அடையலாம் கொஞ்சம். பதிலுக்கு பெரிய மிக பெரிய ஆபதுக்கல்லவா நாம் வித்திடுகிறோம் . கொஞ்சம் சிந்தியுங்கள் ...இப்படிப்பட்ட நல்லவருக்கு அந்த மாதிரி கட்சியில் என்ன வேலை.

kailash said...

நல்ல வேட்பாளர்கள் இல்லை என்ன செய்வது எனக் குறை கூறுவது ! நல்ல வேட்பாளர்கள் வந்தால் இவர் ஒருவரால் மட்டும் என்ன கிழிக்க முடியும் என்று கூறுவது ! இவர் திறமையானவர் என்று அவரின் பணிகளைச் சொன்னால் இவர் கட்சி சரி இல்லை என்பது ! சரவணன் , சிவசங்கர் , ஆளூர் ஷா நவாஸ் , ஜோதிமணி ( அவருக்கு சீட்டு கிடைக்கவில்லை ) , வசந்தி தேவி போன்ற முகங்கள் சட்ட சபையில் இருக்கும் பொழுது தான் சிறிது அளவேனும் மாற்றம் வரும் . இவரை போன்றவர்களை நாம் ஆதரிக்காவிட்டால் அதே கழிசடைகள் தான் மிஞ்சும் , இது ஏன் ஒரு துவக்கமாக இருக்க கூடாது .

அப்புறம் ஈழம் , இன அழிப்பு என்று கூறுபவர்களுக்கு உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை உண்டு என்றால் உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வி கேளுங்கள் நான் ஒரு முறையேனும் தமிழ்நாட்டில் இருக்கும் அகதி முகாமுக்கு சென்று அந்த மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறேனா .

They suffer a lot than the people in Sri Lankan refugee camps , if you have time go and visit them once in gummidipoondi or chengalpat camp once and help them .If we have a good candidate let us support him

சேக்காளி said...

அரசும் அரசியலும் ஒற்றை அழுத்து அல்லது தேய்ப்பில் மாற்றி விடக் கூடிய தொடுபேசிதிரைசெல்பேசிகளிலுள்ள செயலிகளல்ல.சரவணனை வேண்டாமென்பவர்கள் NATO தவிர்த்த அவருக்கான மாற்றையும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்கட்டும்.

Anonymous said...

அட விடுங்க சார்....யாருக்கு ஓட்டுப் போட்டாலும் ஒன்னும் ஆவறதில்ல...இன்னும் ஒரு 100 வருஷத்துல எல்லாம் முடிஞ்சு போகும்..! டயனோசர்கள் எல்லாம் எப்படி அழிஞ்சுதோ அதே போலத் தான்! அதனால...மக்களே ஒட்டுப் போட்டாலும் ஒன்னுதான் ...போடா விட்டாலும் ஒன்னுதான்.. வாழ்ந்தாலும் சந்தோசம்... செத்தாலும் சந்தோசம்..அதாங்க நேர்மறை சிந்தனை!

Vaa.Manikandan said...

திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டில் நான் இருப்பதாகச் சொல்கிறவர்களுக்கு....

திமுக மீண்டும் ஆட்சியமைக்கக் கூடாது என்றுதான் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்குத் தயக்கம் எதுவுமில்லை. என்னுடைய நிலைப்பாடு கட்சியை விட வேட்பாளர் முக்கியம் என்பதில்தான் இருக்கிறது. கோபித் தொகுதியில்காங்கிரஸ் வேட்பாளரான சரவணனை ஆதரிக்கும் நான் எங்கள் பக்கத்து தொகுதியான பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுந்தரத்தை விரும்புகிறேன். அவரைப் பற்றி தகவல்களைச் சேர்த்து ஒரு கட்டுரை எழுத விரும்புகிறேன். எனக்கு கட்சியும் சின்னமும் முக்கியமேயில்லை- நல்ல வேட்பாளர் வெல்ல வேண்டும். 234 தொகுதிகளிலும் நல்ல வேட்பாளரை கண்டுபிடிப்பது என்னால் சாத்தியமேயில்லாத காரியம். அக்கம்பக்கத்து தொகுதிகளில் மட்டும்தான் இதைச் செய்ய முடியும். அவரவர் தொகுதியில் அவரவர் இதை முன்னெடுக்கட்டும் என்றுதான் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு அது மட்டும்தான் நோக்கம். மீண்டும் மீண்டும் முத்திரை குத்த முயற்சிக்காதீர்கள். ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தைப் பாராட்டி எழுதிய அடுத்த சில நாட்களில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்ட நாடகம் என்று எழுதியிருக்கிறேன். நிசப்தத்திலேயே இருக்கிறது. ஒன்றை வாசித்துவிட்டு மற்றொன்றை விட்டுவிட்டு முத்திரை குத்துவதைப் போன்ற அபத்தம் எதுவும் இல்லை. நன்றி.

Jaypon , Canada said...

Anna,

Wonderful reply to all negative comments. Superb.

Arun said...

ஊழலும் எதிர்மறை சிந்தனைகளும் புரையோடிப்போன ஜென்மங்கள் நாம்...

கொலை, கொள்ளை பண்ணும் வேட்பாளர்களையும், MLAக்களையும் , மந்திரிகளையும் பார்த்து எந்த கேள்வியையும் கேட்க துப்பு இல்லாத நம்மால் மட்டுமே நல்லவர் என்று அடையாளம் காட்டப்படும் ஒருவரை பார்த்து அவரிடம் இருக்கும் குறைகள் என்ன என்று பட்டியலிடும் குறுக்கு புத்தி உண்டு....

சரி இவருக்கு மாற்று யாரவது சொல்ல முடியுமா என்று கேட்டால் ....தம் ஜாதியையோ இல்லை ஊரை சேர்ந்தவரையோ காண்பிப்போம்...அவர் மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து கேஸ் இருக்கே என சொன்னால்...யாருதாங்க தப்பு பண்ணல என்று..சால்ஜாப்பு சொல்லும் மக்கள் தான் நாம்...

In an american drama called House of Cards, Kevin Spacey who acts as a power broker says We get what we deserve!

Anonymous said...

Dear Manikandan, I feel that your thoughts are on the right direction. I can understand from the reader's responses that most of us believe, change cannot be done by individuals, which is alarming and sad state. Bagyaraj did this once when he floated his own party by supporting the individuals in a by-election. But he was laughed at. If we want the money and muscle to go out of our electrol system then this is the way to go about. When people do, the parties follow the same. After all the parties, party workers or the party leaders are not from Mars.

How many here raising the issue of war on Tamils came to the streets to protest. Or as one rightly asked about visiting the camps. Two days of protests and blocking the national highways in Bangalore made the union govt to speed up the reversal of PF amendments. Govts are willing to accept people's right demands. I seriously felt that the amendment should be reversed only to the non -IT companies, and you know why I say this, is another topic to discuss. :)-

Unknown said...

இன்றைய அரசியல் சூழலில் நமக்கு தேவைப்படுவது சுத்தமான கூர்மையான கத்தி.
திமுக - துருப்பிடித்த கத்தி
அதிமுக - துருப்பிடித்த மொன்னைக்கத்தி
மற்றவை - அட்டைக்கத்தி

Unknown said...

Dear Manikandan,

I am confused. Karuna is saying people have to think that he is the candidate in all 234 constituency. If I follow (your) logic, he is the first person to be defeated.In this case we have to defeat all of the 234 candidates, I am little confused.

Unknown said...

Dear Manikandan,

I feel Who ever commented on your page are your long time readers. Only thing is most of them don't like DMK.Otherwise all of us know your writing skills and we love you for that. So no point in responding to our comments when your are coming up with DMK Sarbu postings. Atleast you are so good you want to justify your "Nadunilai". There is one internet mafia gang in Face Book, everyday they will show support and propaganda DMK in public page, but they don't have the capacity to tackle "ethirmarai" arguments, either they block or wont allow to post anything, the only good person in that group is Vi.Mu. So we know very well that you are not that gene.

Otherwise we like and follow every bit of your writing, please keep the ggo work going.

Anonymous said...

திமுகவே வெல்ல கூடாது எனும் நீங்கள்
திமுகவை விட கொடிய இன எதிரியாகிய
காங்கிரசை ஆதரிப்பது ஏன்.
நீங்கள் கை சின்னத்திற்கு வாக்கு
செலுத்தினால் அது சோனியாவையும்
இனப்படுகொலையையும் ஆதரிப்பதாகதானே
அர்த்தம். உலகம் அப்படி தானே புரிந்து கொள்ளும்.
இனப்படுகொலையை கடந்து செல்ல வேண்டும்
நம் ஊர் வழக்கில் பொலி பொலினு போயரலாமுனு
சொல்ரீங்களா.
எனக்கு புரிய வில்லை. தயவு செய்து விளக்கவும்.

tamil said...

அவ்வளவு நல்லவர் எப்படி காங்கிரசு கட்சியில் இருக்கிறார்

ஏர் முனை said...

கட்சியைப் பார்க்காமல் வேட்பாளரைப் பார்த்து பரிந்துரை செய்வது நல்லதுதான்.. அப்படியாயின் பாஜக, கொமதேக காட்சிகளில் இருக்கும் நல்ல வேட்பாளர்களை அடையாளம் காட்டலாமே?