அரசியல் பேசுவதற்கு ஏதேனும் ஒரு கட்சி சார்புடையவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படியில்லையென்றால் அமைதியாக இருந்துவிடச் சொல்கிறார்கள். மீறிப்பேசினால் ‘நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருப்போம்’ ‘நமக்கெதுக்கு அரசியல் எல்லாம்?’ ‘பிழைக்கிற வழியைப் பாருங்க’- இப்படி ஏதேனும் ஒரு வசனத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. கிட்டத்தட்ட நாற்பது அல்லது ஐம்பதாண்டு காலமாக இத்தகைய மனநிலை இருந்திருக்க வேண்டும். அதற்கு முன்பிருந்தே கூட இருந்திருக்கலாம்.
பொதுவெளியில் அரசியல் பேசுவதில் என்ன தவறு?
நேற்று ஒரு தம்பியிடம் பேசிக் கொண்டிருந்த போது புலம்பினான். உள்ளூர் அரசியல்வாதியைப் பற்றி அவன் ஏதோ ஃபேஸ்புக்கில் எழுதப் போக அது பெரிய விவகாரமாகி தொலைபேசியில் அழைத்துக் கண்டபடி திட்டியிருக்கிறார்கள். வெட்டுவேன் குத்துவேன் என்கிற ரீதியிலான மிரட்டல் அது. அந்தப் பேச்சு முழுவதையும் பதிவு செய்து வைத்திருக்கிறான். கேட்கிற நமகே சற்று திகிலாகத்தான் இருக்கிறது. ‘தலைமைக்கு அனுப்பறேன்’என்றான். ‘எதுக்கு வெட்டி வம்பு...இதோட விட்டுடு’ என்று தடுக்கத் தோன்றியது. இதுதான் அரசியலைத் தவிர்க்கச் சொல்வதற்கான அடிப்படையான காரணமாக இருக்க வேண்டும். பொறுக்கிகளும், அயோக்கியர்களும், ரவுடிகளும் நிறைந்து கிடக்கும் இந்தச் சாக்கடையில் இறங்கினால் நாமும் நாறிப் போக வேண்டியதாக இருக்கும் என்றுதான் ‘இதெல்லாம் படிச்சவனுக்கு சரிப்பட்டு வராது’ என்று சொல்லியிருப்பார்கள்.
பொதுவாக நம் வாழ்க்கையின் ஒரு கட்டம் வரையிலும் ‘நாம பிறந்த மண்ணுக்கு எதையாவது செய்ய வேண்டும்’ என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் எதைச் செய்யப் போகிறோம் என்கிற தெளிவுதான் இருக்காது. எப்படிச் செய்யப் போகிறோம் என்கிற புரிதலும் இருக்காது. வாய்ப்பு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே காலம் கரைந்து கொண்டிருக்கும். திருமணம் குழந்தை குடும்பம் என்று வாழ்க்கையின் சிக்கல்களுக்குள் சிக்கிய பிறகு எவன் ஜெயிச்சா என்ன? எவன் தோத்தா என்ன என்கிற மனநிலைக்கு வந்து சேர்கிறோம். அதன் பிறகு அரசியலுக்கும் நமக்கும் சம்பந்தமேயில்லாமல் போய்விடுகிறது. இவர்கள்தான் நடுநிலை வாக்காளர்களில் பெரும்பான்மை.
ஆனால் இப்படியே இருக்க வேண்டியதில்லை. கட்சி சார்பு, தலைவர்கள் துதிபாடல், தனிநபர் வெறுப்பு ஆகியன இல்லாமல் நடத்தப்படுகிற அரசியல் உரையாடல்களுக்கான தேவைகள் நிறைய இருக்கின்றன. யார் முதல்வராகப் போகிறார் என்றுதான் கவலைப்படுகிறோமே தவிர நம் தொகுதியில் யார் எம்.எல்.ஏ ஆகப் போகிறார் என்று அலட்டிக் கொள்வதில்லை. கீழேயிருந்து அணுகத் தொடங்குவோம். நம்முடைய தொகுதியில் எத்தனை பஞ்சாயத்து யூனியன்கள் இருக்கின்றன, கிராமங்கள் எவ்வளவு, வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன? அவர்களுக்கான அடிப்படையான தேவைகள் யாவை, கடந்த காலத்தில் எதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறார்கள், எதிர்காலத்தில் ஆட்சியாளர்களிடம் எதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டும்? எதற்கெல்லாம் சாத்தியமிருக்கின்றன என்கிற புரிதலிலிருந்து நமக்கான அரசியல் தொடங்க வேண்டும். உலக அரசியல், தேசிய அரசியல், மாநில அரசியலையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம்.
உள்ளூர் அரசியல் பற்றிய அறிவுப்பூர்வமான புரிதல் இருந்தாலே பாதிக் கிணறைத் தாண்டிய மாதிரிதான். அறிவுப்பூர்வமான புரிதலுக்கும் ஆதாயப்பூர்வமான புரிதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆதாயப்பூர்வமாக அரசியலை அணுகுகிறவன் கட்சியின் மேல்மட்டத்தில் யாரைப் பிடிக்கலாம் என்று அலைவான். அவனுக்குத் தொகுதியின் எல்லை கூடத் தெரிந்திருக்காது. அதுவே சமூக அறிவுப்பூர்வமாக அரசியலை அணுகுகிறவன் கீழ்மட்டத்திலிருந்துதான் தனது புரிதலையே தொடங்குவான். ‘நாம் பிறந்த ஊருக்கு எதைச் செய்யலாம்’ என்று யோசிக்கிறவர்கள் செய்ய வேண்டியது இரண்டாவது புரிதலைத்தான். அப்படி அணுகத் தொடங்கினால் சின்னமும் கட்சியும் பொருட்டாகவே இருக்காது. ‘இந்த ஆளு ஜெயிச்சா நம் ஊருக்குத் தேவையானதை செய்வாரா’ என்று மட்டும்தான் பார்க்கத் தோன்றும். நம் தொகுதி குறித்தான நீண்டகாலப் பார்வை வைத்திருக்கிறாரா என்றுதான் யோசிக்கத் தோன்றும். வேட்பாளர்கள் கொடுக்கும் அத்தனை வாக்குறுதிகளிலும் உள்ள சாத்தியங்களை அலசத் தோன்றும். இந்தத் தொகுதியை சிங்கப்பூராக்குவேன் என்று வாக்குறுதியை அள்ளி வீசுவது எளிது. ஆனால் அது சாத்தியமா என்பது உள்ளுரைப் பற்றி புரிந்தவனால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். இந்த புரிதலின் தொடக்கத்திலிருந்துதான் நமக்கான அரசியல் ஆரம்பமாகிறது. அத்தகைய அரசியல் தொடக்கத்திற்கான சரியான தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம், அலைபேசி உள்ளிட்ட நவீன வசதிகள் நம்மிடையே இருக்கின்றன. ஆரோக்கியமான அரசியல் விவாதங்களையும் தெளிவான புரிதல்களையும் நம்மால் உருவாக்க முடியும்.
அரசியல் விவாதங்களை நம்மால் ஒருபோதும் கட்சிக்காரனிடம் செய்ய முடியாது. அது தேவையுமில்லை. அவர்களுக்கு கருணாநிதி ஜெயிக்க வேண்டும். ஜெயலலிதா ஜெயிக்க வேண்டும். விஜயகாந்த் ஜெயிக்க வேண்டும். அதைத் தாண்டி யோசிக்கவே மாட்டார்கள். என்ன பேசினாலும் சண்டைக்கு வருவார்கள். அவர்களைப் பொருட்படுத்தவே தேவையில்லை அல்லது தவிர்த்துவிடலாம். ஆனால் அரசியல் என்றாலே வேப்பங்காய் என்கிறவர்களை உள்ளே இழுக்க வேண்டும். இங்கு எல்லோருக்குமே அரசியலில் ஒரு நிலைப்பாடு உள்ளூர இருக்கும். அதை வெளிப்படுத்தத் தயங்குவார்கள். அவர்கள் பேச வேண்டும். நீங்களும் நானும்தான் நம்முடைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறவர்கள். நாம் பேசாததால்தான் கட்சிக்காரன் பேசுகிறான். அதனால்தான் காலங்காலமாக அரசியல் சாக்கடையாகவே இருக்கிறது.
படித்தோம், வேலைக்குச் செல்கிறோம், சம்பாதிக்கிறோம்- அவ்வளவுதானா? அவரவர் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு களத்தில் இறங்க வேண்டியதில்லை. வேகாத வெயிலில் துண்டு நோட்டீஸ் விநியோகம் செய்ய வேண்டியதில்லை. மைக் பிடித்துக் கத்த வேண்டியதில்லை. தேர்தலில் நிற்க வேண்டியதில்லை. ஆனால் நம் அத்தனை பேராலும் பங்களிப்பைச் செலுத்த முடியும். தலைவன், சின்னம், கட்சி என எல்லாவற்றையும் ஒதுக்கி வைப்போம். நம் தொகுதியில் யார் நல்ல வேட்பாளர் என்று மட்டும் பார்க்கலாம். அவர் எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரைப் பற்றி பரவலாகப் பேசலாம். நம் ஒவ்வொருவருக்கும் பத்து நண்பர்களாவது உண்டு. இந்தப் பத்து பேர்களிடம் பேசினால் போதும். ‘இவர் ஜெயிப்பாரா அவர் ஜெயிப்பாரா’ என்று பேச வேண்டியதில்லை. ‘இவர் தகுதியானவரா அவர் தகுதியானவரா’ என்று மட்டும் பேசலாம். ஜெயிக்கிற வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்கிற சிந்தனையிலிருந்து தானாக விடுபடுவோம். நல்ல வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்ற சிந்தனைக்கு வந்து சேர்வோம். இப்படித்தான் அலை உருவாகிறது. இரண்டு மூன்று தேர்தல்களில் இந்தச் சிந்தனை தொடர்ந்து இருந்தால் போதும். எதிர்காலத்தில் கட்சிகள் பயப்படுவார்கள். தேர்தலில் யாரை நிறுத்தினாலும் காசு கொடுத்து வாக்கு வாங்கிவிடலாம் என்ற கேவலத்தைக் கைவிடுவார்கள். தானாக நல்ல வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்குவார்கள். அதுதான் உண்மையான மாற்றம்.
எதுவுமே ஆரம்பத்தில் ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றுதான் தோன்றும். ஆனால் மாற்றம் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதுவும் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். என் தொகுதியின் நல்ல வேட்பாளரைப் பற்றி நான் பேசுகிறேன். உங்கள் தொகுதியின் நல்ல வேட்பாளரைப் பற்றி நீங்கள் பேசுங்கள். நாம்தான் இந்த ஜனநாயகத்தின் தூண்கள். நாம் மட்டும்தான்!
7 எதிர் சப்தங்கள்:
இந்த பதிவை முதல்தடவையாக வோட்டு போடும் இளைஞர்களுக்கு எடுத்து சொன்னாலே போதும் வருங்காலத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும்
I totally agree with you mani. But now my concern is in my hosur i believe none is good.
Also if i found a good person his party is not good.I am doubting that if the good person elected his party will aloow him to do better???
தெளிவா விளங்கற மாதிரி சொல்லியிருக்கீங்க... வேட்பாளர் எந்த கட்சின்னு பார்க்காம, எப்படிப்படவர்ன்னு பார்த்தாலே நமக்கு (மக்களுக்கு) வெற்றிதான். !
cant agree more.
கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை வலியுறுத்தி நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன் சமீபத்தில். அருமையான அவசியமான பதிவு.
http://wp.me/pOsug-8X
மணி canditate நல்லவர் ஆகவே இருக்கட்டும் அவரால் அவரது கட்சியின் கட்டுப்பாட்டை மீர முடியுமா?அம்மா கட்சி உறுப்பினர்களைத்ான் பாக்கிறோமே
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது.,
தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் செலவு செய்ய உச்ச வரம்பாக 28 லட்சம் நிர்ணயத்து உள்ளது. எவரும் இதற்க்கு குறைவாக செலவழிக்க போவது இல்லை. MLA இக்கு மாத சம்பளம் Rs. 55,000 (அணைத்து சலுகைகள் உட்பட), 5 ஆண்டுகளில் 38 லட்சம். ஆண்டுக்கு 1 லட்சம் வருமானத்துக்கு எதுக்கு இவ்வளவு செலவு செய்யவேண்டும்.
அரசியல் என்பது பெருவணிகம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதில் எந்த வியாபாரியை தேர்தெடுப்பது .,
Post a Comment