Apr 14, 2016

சாபம்

சித்திரை முதல் தேதி, தை ஒன்று, பிறந்தநாள் மாதிரியான நல்ல நாட்களில் எழுந்தவுடன் மனதுக்குப் பிடித்தவர்களின் முகத்தில் விழித்து நாள் முழுவதும் அடுத்தவர்களிடம் திட்டு வாங்காமல் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவேன். ஆனால் இன்று அப்படி அமையவில்லை. தினந்தோறும் அழைத்து பிரச்சினை செய்து கொண்டிருந்த செக்யூரிட்டி கணேசன் அழைத்தார். அறக்கட்டளையின் நோக்கத்திலிருந்து எல்லாவற்றையும் சந்தேகித்தவர் கடைசியில் ‘எனக்கு வந்த நிலை உனக்கும் வரும்’ என்று சாபத்தோடு முடித்தார். 


அலுவலக நேரம், எங்கேயாவது பயணத்தில் இருக்கும் தருணம், இரவு பத்து மணிக்குப் பிறகு என எப்பொழுது அழைத்தாலும் அவருடன் பேச வேண்டும் என எதிர்பார்ப்பது அவரது தவறில்லை. ஆனால் எனக்கு சாத்தியமில்லையே! பதின்மூன்றாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார், தனியார் கல்லூரியில் சேர்த்து பையனைப் படிக்க வைக்கிறார் வெறும் மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு எதற்காக இவ்வளவு பிரச்சினைகளைச் செய்கிறார் என்று புரியவேயில்லை. கூலித் தொழிலாளியும், இல்லாதவர்களும் கூட ஐந்தாயிரம் ரூபாய் வரைக்கும் புரட்டிவிடுகிறார்கள். ஆனால் இத்தகைய மனிதர்களின் நோக்கம் சந்தேகிக்கச் செய்கிறது.

‘நான் விசாரிக்க வேண்டும்’ என்று சொன்னால் ‘எப்படி விசாரிப்பீங்க?’ என்கிறார். மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் பெரிய தொகையில்லை. ஆனால் எதைப் பற்றியும் யோசனை செய்யாமல் கொடுக்க முடியாதல்லவா? விசாரிக்காமல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனிதர்களுக்கு எப்படி உதவ முடியும்? 

தவறு என் மீதும் இருக்கக் கூடும். நிறையப் பேருக்கு சரியான பதில் சொல்ல முடிவதில்லைதான். ஆனால் முடிந்தவரை எல்லாருக்கும் தகவல் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். இந்தப் பிரச்சினையை இங்கே எழுதுவதும் கூட கணேசனைத் தவறானவராகச் சித்தரிப்பதற்காகவோ, ‘எவ்வளவு பிரச்சினைகளைத் தாங்கிக் கொண்டு இந்தச் சமூகத்தை ரட்சிக்கிறேன் பாருங்கள்’ என்று என்னைப் புனித ஆத்மாவாக்கிக் கொள்வதற்காகவோ இல்லை. எழுத வேண்டுமா என்று கூடத் தோன்றியது.

ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கியே தீர வேண்டும். பயனாளிகளை அறிமுகப்படுத்தி வைக்கும் போது தயவு செய்து ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியுமென்றால் மட்டுமே அறிமுகப்படுத்தி வையுங்கள். தொடர்ந்து வாசித்து பின் தொடர்கிறவர்களுக்கு அறக்கட்டளை எப்படிச் செயல்படுகிறது என்று தெரியும். அதன் செயல்பாடுகள் பற்றித் புரிந்திருக்கும். அதனால்தான் யாராவது பேச ஆரம்பிக்கும் போதே ‘பயனாளிக்கும் எனக்குமிடையில் கடைசி வரைக்கும் நீங்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்தால் அடுத்து யோசிக்கலாம்’ என்று சொல்லிவிடுகிறேன். ஆனால் யாராவது சில மனிதர்கள் பயனாளிகளிடம் நேரடியாக எனது எண்ணைக் கொடுத்து ‘நீயே பேசிக்க’ என்று கழண்டு கொள்ளும் போதுதான் இத்தகைய பிரச்சினைகள் வந்து சேர்கின்றன. இத்தகைய கழண்டு கொள்ளும் மனிதர்கள்தான் பிரச்சினைகளின் மூலகாரணம். பயனாளிகளுக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும், நல்லது செய்துவிட்ட திருப்தியும் இருக்க வேண்டும், ஆனால் எந்த ரிஸ்க்கும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றால் எப்படி? 

கணேசன் ஒருவர் மட்டுமில்லை- நிறையப் பேரிடம் வசை வாங்கியிருக்கிறேன். சிலர் ஒன்றிரண்டு முறை கேட்டுப் பார்ப்பார்கள். உடனடியாக பதில் சொல்லாமல் விட்டிருப்பேன். அதன் பிறகு கேட்கவே மாட்டார்கள். அடுத்தவர்களிடம் தவறாகச் சொல்லியிருப்பார்கள். கணேசனைப் போன்ற சிலர் இப்படி நேரடியாகத் திட்டுகிறார்கள்.

இத்தகைய எளிய சாமானிய மனிதர்களுக்கு அறக்கட்டளைக்கான வருமானம் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது என்று எதுவுமே தெரிவதில்லை. ஏதோ தகிடுதத்தத்துக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். இத்தகைய மனிதர்களை நேரடியாக எதிர்கொள்வதற்குத்தான் பயமாக இருக்கிறது. இன்னமும் நாட்கள் செல்லச் செல்ல எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று புரியவில்லை. அம்மா சொல்லுவார். ‘பொதுக்காரியங்களைத் தொடங்கும் போது சாபம் வாங்காமல் செய்ய வேண்டும். ஆனால் அது சாத்தியமேயில்லை. பெரும் குடும்பங்கள் கூட சிதைந்து போனது இத்தகைய சாபங்களால்தான்’ என்று. அப்பொழுது சாபம் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது சற்று விரல்கள் நடுங்குகின்றன. கடவுளிடம் திரும்பத் திரும்ப பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஆயிரம் பிரச்சினைகள். வாழ்க்கையே இப்பொழுதுதான் தொடங்குகிறது. இத்தகைய குருட்டுவாக்கான சாபத்தை எதிர்கொள்ளும் போது குடும்பம், குழந்தை என்று எல்லாவற்றையும் பற்றி மனம் குதப்பிக் கொள்கிறது. இத்தகைய வேலைகளைச் செய்யும் போது இதெல்லாம் சகஜம்தான் என்றாலும் வருடத்தின் நல்ல நாளில் இத்தகைய சொற்களை ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. இதுவரையிலும் யாரிடமும் இப்படியெல்லாம் வெளிப்படையாக சாபத்தை வாங்கியதில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.  அவர் சொன்ன அதே கடவுள் மீது எனக்கும் நம்பிக்கையிருக்கிறது. அவர் பார்த்துக் கொள்ளட்டும். வேறு என்ன சொல்வது?

23 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

Don't worry Anna. You have written your emotional fear. See many people would use it to extract money. Never care stick to the policy. God bless you and your family 😊

Unknown said...

விடுங்க மணி. கேட்டபோதெல்லாம் பணம் கொடுக்கலைன்னு விடுற சாபம் எல்லாம் என்னைக்கும் பலிக்காது.
நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம். பிறகு எல்லாம் அவன் செயல்.

மகேஸ் said...

எப்பொழுதும் உதவி வாங்குபவர் கை கீழேயும், கொடுப்பவர் கை மேலையும் இருக்க வேண்டும். இது மாறும் போது சிக்கல் வருகிறது.

இது நாங்கள் உங்களுக்கு/அறக்கட்டளைக்குக் கொடுக்கும் போதும் பொருந்தும். நீங்கள் பணிவுடன் இருபதே உங்களின் வெற்றிக்குக் காரணம்.

இது போன்ற நிகழ்வுகளை மறந்து, சிறப்பாகச் செயல்படுங்கள்.

SNP said...

Hi Mani, Felt bad reading this. There are only few who volunteer to contribute to good causes, like you have been doing with energy and enthusiasm, thanklessly. I suggest you publish one number and a restricted time frame in a day for all to contact. You can be available only then and in other times people can leave you a message.

Pray you continue the good work. Wishing you and your loved ones a happy new year!

viswa said...

காந்தியை நினைவு கொள்ளுங்கள் எப்போதும் வராத தெம்பும் தைரியமும் ஊக்கமும் தானாக வரும் அவர் படாத கஷ்டங்களா நாம் படுகிறோம்?

Naazar - Madukkur said...

அறக்கட்டளை நடத்துவதில் எவ்வளவோ சிக்கல்கள் வரும், அதை நீங்கள் சமாளித்து செய்கின்றீர்கள் எனெபது தெரியும், ஆனால் இது புது விதமாக மன உளைச்சளை கொடுக்கக்கூடியதாய் உள்ளது,
இவற்றை பொருட்படுத்த வேண்டாம், வழக்கம் போல் உற்சாகத்துடன் செயல்பட வேண்டுகிறேன்.

Unknown said...

இந்த செக்யூரிட்டி கணேசன் என்பவர் ஒரு டகால்டி என நினைக்கிறன். உண்மையான உதவி கேட்கும் எந்த ஒரு நல்ல உள்ளங்களும் இப்படி பேச மாட்டார்கள். அதே போல் நல்ல உள்ளங்கள் எப்போதும் சாபம் விடாது. அந்த வகையில் பார்க்கப்போனால் அவர் ஒரு டுபாக்கூர் கணேசன்., வேண்டுமென்றே உணர்சிகளை சீண்டி பார்க்கும் ஒரு சீக்காளி. வேறு ஒருவர் துணையுடன் கூட செய்யலாம். ஆனால் ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள் ! விட்ட சாபமெல்லாம் பலிக்குமென்றால் இந்நேரம் உலகின் மக்கள் தொகையில் இந்நேரம் பாதி குறைந்திருக்கும். ஒரு யோசனை சொல்லுகிறேன். உங்க நெம்பருக்கு ரீ சார்ஜ் செய்து விட்டு ஒன்றிரண்டு மணி நேரம் கணேசனை அழைத்து மொக்கை போடுங்க. வேறு யாரையாவது வைத்தேனும் செய்யலாம். மனிதர் திரும்ப உங்களை நினைத்து கூட பார்க்க மாட்டார். முள்ளை முள்ளாலும் எடுக்கலாம்.

kailash said...

Readers who recommend or share about Nispatham to others for getting help should atleast act as bridge till everything gets settled , this will help mani to properly manage things instead of pulling him or making him upset for some time . This is the real help we can do for Mani who takes care of all work . Reader should stay till the end , Mani cant be in a position to give all details to receivers who wont know anything about the activities of nispatham, its the readers who has to explain the process to them and get it clarified from Mani.When you dont get money it makes the people upset but for that reason people should not scold the good hearted soul

Anonymous said...

Do not worry so much about these people. You receive more blessings than the other way. You cannot show anyone in this world, who is liked by all. You cannot please everyone. May God bless you, your family and everyone around you!

Muthu P.E said...

Dear Brother,
Don't worry about the curse, when your intentions are not bad. These are the people who only think about their benefits. We wish you all the best and this new year will bring you more happiness from your dedicated services for the poor people. You should remember it will not be possible to be good to everyone in this world. Our best wishes to you and your family.

jas said...

Mani,

If you do not take a firm stand and say 'NO' to such people right now, you will get into trouble sooner or later. If people perceive you as a soft person, then they will use all tactics to get money out of you by becoming nuisance creators. I am unable to understand why you are still accepting calls from this security Ganesan.

common man said...

ஒன்று மட்டும் நிச்சயம், நம்மை இப்படி தொந்தரவு செய்கிறாரே வெறும் 3500தானே நம் கைக்காசையாவது கொடுத்து இந்த தொல்லையில் இருந்து தப்பித்து விடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள், முதலில் குறைவாக தான் கேட்பார்கள் அதுதான் இவர்கள் சாமர்த்தியமே, ஒருமுறை கொடுத்து பழக்கிவிட்டீர்களானால் வேறுவேறு முறைகளில் தொடர்ந்து நச்சரித்து கொண்டே இருப்பார்கள்.

Unknown said...

விடுங்க மணி இந்த மாதிரி மனிதர்களின் சாபமெல்லாம் ஒன்றும் செய்துவிடது பணம் கொடுக்கவில்லை என்று சாபம் விட்டு அது பலிததல் நாட்டில் பாங்க் manager, finance owner vattikadai sait என்று யாரும் இருக்க முடியாது .

Surya said...

Mani, post his mobile number. Naan pesaren antha periavaridam

ADMIN said...

எதிர்பார்த்து கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அதீத எதிர்பார்ப்புடன் இருக்கையில், கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதில் இப்படி ஏதேனும் செய்தே தீருவார்கள். உண்மை நிலை அறிந்து உதவும் குணத்தை மட்டும் கடைசி வரைக்கும் விட்டு விடாதீர்கள். நிலைபல அறிந்து நிஜமாய் தேவைபடுபவர் யாரென உணர்வதே பெரும்பாடு. அதை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். தொடருங்கள்..! நீங்களாவே எந்த பழி பாவமும் செய்யவில்லை... அவர்களாகவே செய்து விட்டதாக நினைத்தால் அதற்கு நீங்கள் பொறுப்பில்லை. உள் மன சொல்படி உண்மையாய் நடந்துகொள்ளுங்கள். ஒருவருக்கும் அஞ்ச தேவையில்லை. !

Anonymous said...

don't worry Mani, Ethum kadanthu pogum !@@

Anonymous said...

I felt bad when someone behave like this. please bear with that to help for the deserved people.

Thanks
Subramanian V

சேக்காளி said...

Blogger Selvakumar Natarajan said...
அதே

போத்தி said...

சாபங்கள் பலிக்க, ஒருவருக்கு மனதில் சக்தி வேண்டும். அது, (கடும்) தவத்தினால் கிடைப்பது. சாபம் இடுவதால், சாபத்தின் ஆழத்தை பொருத்து, அனைத்து சக்திகளும் வீணாகிவிடும். அதனால்தான், தவம் செய்பவர்களின் முதல் படியே, ஆசைகளை வெறுப்பது, கோவத்தை அடக்குவது போன்றவை. அந்த கனேசனின் சாபத்திற்க்கு எந்த சக்தியும் இல்லை. மேலும் விவரங்கள், மின்னஞ்சலில்.

போத்தி said...

// Surya said...

Mani, post his mobile number. Naan pesaren antha periavaridam //

Good idea too. If he contacts you and discourages you again, let us make the police to call him.

பாலு said...

எல்லாரும் ஈசியா அட்வைஸ் பண்ணிட்டுப் போயிரலாம். ஆனால் நாளைக்கு வீட்டில் ஏதாவது பிரச்சினை வரும் போது 'இதுவா இருக்குமோ, அதுவா இருக்குமோ'ன்னு நினைப்பு வரும். அப்போது இந்த அறக்கட்டளை நடத்துவதே முடியாத காரியம் ஆகிவிடும். மணிகண்டன் சாரை நான் அறிந்த வரையில், தேசத்துக்கு அடுத்தபடி குடும்பத்தை நேசிப்பவர். கணேசன் மாதிரியான ஆட்களை நானும் நிறைய சந்தித்திருக்கிறேன். என் பணியைச் செய்யும் போது, சிலர் இட்ட சாபங்கள், நான் மரணப் படுக்கையில் இருக்கும் போதும் என் காதுகளில் ஒலிக்குமோ என்ற பயம் எனக்கு உள்ளூர உண்டு.

Unknown said...

அண்ணா வணக்கம்,நீங்கள் சிலரது சாபங்களை பற்றி பேசுகின்றீர்கள்.உங்கள் மீது நம்பிக்கை கொண்ட நல் உள்ளங்கள் நிறைய இருக்கிறார்களே.அவர்களது நம்பிக்கை,அவர்களால் உதவ முடியாததை உங்கள் மூலம் செய்கிறார்கள்.உங்கள் மூலம் நல் உள்ளங்கள் மகிழ்கிறார்கள்.அவர்களது அந்தரங்க மகிழ்ச்சியே உங்களுக்கான வாழ்த்து. வாழ்த்துக்கள் முன் சாபங்கள் நிற்காது அண்ணா.

இப்போது சொல்லுங்கள்,உங்கள் மீது வாழ்த்துக்கள் அதிகமா,சாபங்கள் அதிகமா.எதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும் எதற்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும் என அரியாதவரா தாங்கள்.

இதுவும் கடந்து போகும்.வாழ்த்துக்கள் அண்ணா

Arun said...

பொதுவா நான் பழகுற மக்கள்ட்ட சொல்றதுண்டு...எல்லார்கிட்டையும் நல்ல பேர் எடுக்க நினைக்கிறது பொதுவா நடைமுறைக்கு ஒத்து வரதில்லைன்னு....

நீங்க ஏன் அவர் போன் பண்ணினா எடுக்கிறீங்க? அந்த ஐயா எப்படியாவது காசு கறக்க பாக்குறாரு...நம்பர் பிளாக் பண்ணிட்டு போய்கிட்டே இருங்க...அத விட்டுட்டு...

அதோட இல்லாம கெட்ட எண்ணம் புடிச்சவங்க சாபம் எல்லாம் பலிக்காது...சூரியன பாத்து நாய் குரைக்கிற மாதிரிதான்....