வெகு நாட்களுக்கு முன்பு சிவா வீட்டுக்கு வந்திருந்தார். சிவ சுப்ரமணியன். பேசிக் கொண்டிருந்த போது ‘நிசப்தத்துக்கு ஒரு App செஞ்சு தரட்டுமா?’ என்றார். ஏற்கனவே இரண்டு மூன்று பேர் இப்படிக் கேட்டிருக்கிறார்கள். உற்சாகமாக தலையை ஆட்டியிருக்கிறேன். ஆனால் நகரவே நகராது. வேணி கூடத்தான் இதைச் சொல்லியிருந்தாள். ஒன்றிரண்டு முறை கேட்டுப் பார்த்தேன். ‘சாப்பாடு செய்யறேன்..ஆபிஸ் போறேன்..உங்க பையனுக்கு பாடம் சொல்லித் தர்றேன்....அப்புறம் எப்படிங்க நேரம் இருக்கும்?’ என்று கேட்ட பிறகு கேட்பதை நிறுத்திக் கொண்டேன்.
கடந்த வாரத்தில் திடீரென்று சிவா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இப்பொழுது ஜெர்மனியில் இருக்கிறாராம். நிறைய நேரம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. App ஒன்றைத் தயார் செய்துவிட்டார். ஆண்ட்ராய்ட் அலைபேசிகளுக்கான செயலி இது. தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். ஏழெட்டுப் பேர்களிடம் பந்தாவும் காட்டிவிட்டேன். இன்னமும் இதை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அ, ஆ, இ, ஈ கூடத் தெரியாது.
‘வேற யாராச்சும் ஹெல்ப் பண்ணுறாங்களான்னு கேளுங்க’ என்றார் சிவா.
‘வேற யாராச்சும் ஹெல்ப் பண்ணுறீங்களா?’ - இதோ கேட்டுவிட்டேன்.
நிசப்தம் செயலியை மேம்படுத்த விரும்பினால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வையுங்கள் (மின்னஞ்சல்: vengaishiva@gmail.com). செய்து கொடுத்தால் நீங்களும் உங்கள் குடும்பமும் நான்கைந்து தலைமுறைக்கு நன்றாக இருக்கட்டும் என்று சாமி கும்பிட்டுக் கொள்கிறேன். ஆனால் சாமி கும்பிடுவதிலும் கூட சில அபாயங்கள் இருக்கின்றன.
பெரிய இடத்து விவகாரம் இது - ஊரே அம்மாவுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த சமயத்தில் மிஸ்டர் பணிவு மட்டும் ஒவ்வொரு கோவிலிலும் தன் பெயரில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாராம். அதை யாரோ மோப்பம் பிடித்து போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகே உளவுத்துறையை விட்டு ஏகப்பட்ட விவரங்கள் தோண்டப்பட்டிருக்கிறது. இந்தத் தோண்டுதல் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டதாகவும் அதை உணராமல் ஆடிக் கொண்டிருந்ததால் மொத்தமாக பொடனியிலேயே சாத்தி அமர வைத்திருக்கிறார்கள். ‘எனக்கு அந்தப் பதவி வேண்டும் இந்த நாற்காலி வேண்டும்’ என்று பேராசை வைத்தால்தான் கடவுளர்கள் கைவிட்டுவிடுவார்கள்.‘அவங்க நல்லா இருக்கட்டும்’ என்று அடுத்தவர்களுக்காக பிரார்த்தித்தால் கைவிட மாட்டார்கள்.
நமக்கு எதுக்குய்யா வம்பு?
செயலியைத் தரவிறக்கம் செய்யலாம். எப்படி இருக்கிறது என்று சொல்லலாம். மேம்படுத்தித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு நாறடித்தும் தரலாம் அல்லது உண்மையாகவே மேம்படுத்தித் தரலாம். ஏதாவது சலசலப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும். கிணற்றில் போட்ட கல் மாதிரி கிடக்கும் வரைதான் எதுவுமே மொக்கை. சலனம் இருந்து கொண்டேயிருந்தால் சுவாரசியமாகத்தான் இருக்கும்.
‘போயும் போயும் செவ்வாய்க்கிழமையன்று வெளியிடுகிறீர்களா?’ என்று அபசகுணமாக ஒருவர் கேட்டார்.
‘லட்சக்கணக்கில் டவுன்லோட் ஆகும் பார்’ என்று வெற்றுப் படம் ஓட்டிவிட்டேன். நான்கைந்து பேராவது தரவிறக்கம் செய்து மானத்தைக் காப்பாற்றுங்கள். நாளை நமதே! நாளண்ணிக்கும் நமதே!
தரவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு: நிசப்தம் செயலி
பாராட்டுவதாக இருந்தால் சிவாவுக்கும் எனக்கும் மின்னஞ்சல் அனுப்பவும். ‘அவனுக்கெல்லாம் App ஒரு கேடா? எதுக்கு செஞ்சு கொடுத்த? ஓவரா ஆடுவான் பாரு’ என்று கண்டபடி திட்ட விரும்பினால் சிவாவை மட்டும் தொடர்பு கொண்டு திட்டித் தீர்க்கவும்.