Mar 16, 2016

சாதி

ஒரு சம்பவம் நடந்தால் அதன் ஈரம் காய்வதற்குள் கருத்துச் சொல்லிவிட வேண்டும். இல்லையென்றால் கை அரிக்கும். இப்பொழுது ஒரு நோய் மாதிரி ஆகிவிட்டது  எல்லோரும் கருத்துச் சொல்கிறோம். எல்லாவற்றிலும்தான் கருத்துச் சொல்கிறோம். இப்படி எதையெடுத்தாலும் கருத்துச் சொல்லி என்ன ஆகப் போகிறது என்றுதான் புரியவில்லை. ஜல்லிக்கட்டு பிரச்சினை எழுந்த போது நாட்டு மாடுகளை காப்பாற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போலத் தெரிந்தது. மூன்றே நாள்தான் பேசினோம். GAIL குழாய் பதிப்பதைப் பற்றியும் கொந்தளித்தோம். இப்பொழுது அது குறித்தெல்லாம் யார் பேசுகிறார்கள்? கூடங்குளத்திலிருந்து, திவ்யா - இளவரசன், கோகுல்ராஜ் வரைக்கும் எல்லாவற்றிலும் இப்படித்தான். இன்றைக்கு சங்கர்-கெளசல்யா விவகாரமும் அதே மாதிரிதான் ஆகப் போகிறது. ‘நீ என்ன நினைக்கிற?’ ‘நான் என்ன நினைக்கிறேன்னா...’ ‘அவன் என்ன நினைக்கிறான்?’ எல்லாம் எதற்கு?

உள்ளூரில் ஒரு சாதிப் பிரச்சினை. பையனும் பொண்ணும் வெவ்வேறு சாதி. வீட்டில் முழு எதிர்ப்பு. பேச ஆரம்பித்த போதே தடுத்துவிட்டார்கள். ‘நீ பெங்களூர் மாதிரியே நினைச்சுட்டு இங்க பேசாத தம்பி....இவ ஆசைப்படறான்னு கட்டி வெச்சுட்டு நாளைக்கு நான் ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா?’என்றார்.  அவருக்கு அது கெளரவப் பிரச்சினை. ‘இந்த நாய்களுக்கு சப்போர்ட்டா பேசறதுன்னா இனிமே நீங்க வீட்டுக்கு வர வேண்டாம்’ என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். சாதியை ஒழிப்போம் என்பதெல்லாம் வெற்றுக் கோஷம் என்று புரிந்து கொண்ட தருணம் அது. எழுதுவதற்கும், கும்பலோடு சேர்ந்து கும்மியடிப்பதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் ஊர்ப்பக்கங்களில் சாதி வெறி புரையேறிக் கிடக்கிறது. ஊரை விடுங்கள்- சாதியை ஒழிப்போம் என்று எழுதுகிற நூறு ஆட்களில் தொண்ணூறு ஆட்கள் சாதியை உள்ளூர ஆதரிப்பவர்கள்தான். தம் வீட்டில் பிற சாதி நுழைந்துவிடக் கூடாது என விரும்புகிறவர்கள்தான். 

திரும்பிய பக்கமெல்லாம் எண்ணையை ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள், உறவினர்கள் என அத்தனை திசைகளிலும் வெறியேற்றுகிறவர்கள்தான் இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்றெல்லாம் பிரிக்க வேண்டியதில்லை. இணையத்தில் சாதி வெறியை உமிழ்ந்து கொண்டிருப்பவர்களைக் கணக்கில் எடுத்தால் தெரிந்து கொள்ளலாம்-  படித்தவர்களுக்குள் எத்தனை வன்மம் இருக்கிறது என்று. ஆசாரியும், வண்ணானும், கவுண்டனும், தேவனும், செட்டியாரும், ஐயரும், நாசுவனும் சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளும் போது பெரும்பாலும் வெட்டிக் கொல்லப்படுவதில்லை. அதுவே பறையனும் சக்கிலியும் பள்ளனும் உள்ளே கால் வைக்கும் போது வெறியெடுத்து அரிவாளைத் தூக்குகிறார்கள். கவுண்டனும் தேவனும் வன்னியனும் கோரமுகத்தைக் காட்டுகிறார்கள். காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சாதி இன்றைக்கு சம்பந்தம் தேடுவதை ஆண்ட சாதி என்று பெருமையடித்துக் கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பங்காளியும், மாமன் மச்சானும் தங்களைக் கேவலமாகப் பேசிவிடுவார்கள் என்று பதறுகிறார்கள். ‘கொன்னாலும் கொல்லுவேனே தவிர சாதியை விட்டுத் தர மாட்டேன்’ என்று வறட்டு வீராப்பு பேசுவதை கெளரவமிக்க செயலாகப் பார்க்கிறார்கள்.

‘ரெண்டு பேரையும் கொன்னுடுங்க’ என்று காசு கொடுக்கிற அப்பனை நினைத்தால் அலறுகிறது. அதுவும் கொங்கு நாட்டை நினைத்தால் இன்னமும் திகிலாக இருக்கிறது. ‘எங்க ஊர் மாதிரி மரியாதை கொடுக்கிற ஊர் வேற இல்லீங்..தெரியுங்களா?’ என்று வாய் நுரைக்க பேசுகிறவர்கள்தான் நொய்யலிலும் பவானியிலும் அமராவதியிலும் ரத்தத்தை நுரைக்க விடுகிறார்கள். பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளனைச் சாகடித்துவிட்டு புளகாங்கிதம் அடைகிறார்கள். கோகுல்ராஜைக் கொன்ற யுவராஜை நாயகன் ஆக்கினார்கள். இன்றைக்கு சங்கரைக் கொன்றவர்களை சாதியைக் காக்க வந்த காவலர்கள் ஆக்குகிறார்கள். 

தனிப்பட்ட முறையில் காதலுக்கு எதிரி நான். பதினாறு வயதில் குடும்பத்தை விட்டு விலகிவிடுகிற மேற்கத்திய கலாச்சாரத்துக்கு காதல் முற்றாகப் பொருந்திப் போகக் கூடும். முப்பது வயதானாலும் குடும்பத்தோடு ஒட்டி உறவாடுகிற, பெற்றவர்களுடன் உணர்வு ரீதியில் வெகு தீவிரமாகப் பிணைந்திருக்கிற நம் வாழ்க்கை முறையில் ‘என் புள்ளைக்கு நான் திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்கிற மனநிலை கொண்டவர்களின் பிள்ளைகளாகப் பிறந்துவிட்டு காதல் என்கிற ஆயுதத்தை எடுப்பது ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்குகிறது. பெற்றவர்களை மீறிச் செய்கிற செயல்களில் அவர்களுடன் ஈகோ மோதல்களைத் தவிர்க்க முடிவதில்லை. சில குடும்பங்களில் விதிவிலக்குகள் இருக்கலாமே தவிர பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் நிலைமை. இந்தப் புள்ளியிலிருந்துதான் தீர்வுகளுக்கான ஆலோசனைகளைத் தொடங்க வேண்டியிருக்கிறது.

ஆனால் ஆலோசனைகளும் விவாதங்களும் இரண்டாம்பட்சம். அவை நீண்ட கால நோக்கிலானவை. உடனடியாகச் செய்ய வேண்டியது இந்த ஆணவக் கொலைகளைத் தடுக்க வேண்டியதுதான். பெற்ற பிள்ளையாக இருந்தாலும் அரிவாளை எடுத்து வீசுகிற உரிமை உனக்கு இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக புரிய வைக்க வேண்டும். அரசாங்கம் முன்வந்து இத்தகைய சம்பவங்களில் கடுமையான தண்டனைகளைக் கொடுப்பதில் தவறே இல்லை. நான்கு பேர்கள் சிக்கியிருக்கிறார்கள். இந்நேரம் அவர்களிடம் விவரங்களைப் பெற்றுவிட்டு காரியத்தை முடித்திருக்க வேண்டும். மரண தண்டனை கூடாது, யாரையும் கொல்லுகிற உரிமை நமக்கில்லை என்றெல்லாம் பேசியிருக்கிறேன். ஆனால் இந்தக் கொலைச் சம்பவத்தில் அப்படி நினைக்க முடியவில்லை. வெட்டிக் கொல்கிற வீடியோ இருக்கிறது. வெட்டியவர்களின் படங்கள் தெளிவாக இருக்கின்றன. எவ்வளவு சாவாதானமாக வெட்டிவிட்டு பைக்கில் ஏறிச் செல்கிறார்கள்? அவ்வளவு நெஞ்சழுத்தம் மிக்க வெறியர்களிடம் மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும் என்பது அபத்தமாக இருக்கிறது. இவர்களிடம் அரசாங்கம் காட்டுகிற கடுமையில் அடுத்தவனுக்கு பயம் வர வேண்டும். ஒரு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்றால் பதினைந்தாவது நாளில் ஜாமீனில் வந்துவிடலாம் என்று நம்புகிறார்கள். அரிவாளைத் தூக்குகிறார்கள்.

அரசாங்கம் வெகு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் நடவடிக்கை என்றெல்லாம் நம்பவில்லை. தேவமார்களின் வாக்குகளும், கவுண்டமார்களின் வாக்குகளும், வன்னியர்களின் வாக்குகளும் அவர்களுக்கு மிக முக்கியமானவை. எந்தவிதத்திலும் சிதைந்துவிடக் கூடாது என்பார்கள். மயிலிறகு வைத்துத் தடவிக் கொடுப்பார்கள். அவ்வளவுதான் அதிகபட்சமாக நடக்கும். ஆறு மாதம் கழித்து வேறு எங்கேயாவது இன்னொரு சங்கரும் கவுசல்யாவும் திருமணம் செய்வார்கள். அவர்களையும் யாராவது வெட்டிக் கொல்வார்கள் அல்லது தண்டவாளத்தில் வீசுவார்கள். நாம் மீண்டுமொருமுறை சாதி ஒழிக என்று எழுதுவோம். வெள்ளிக்கிழமை இன்னொரு படம் வெளியாகும். அதோடு மறந்து போவோம். 

சாதி ஒழிக!