கடலூர் நிகழ்ச்சிக்கு நீங்கள் அழைத்த போது ஊடகங்களிலிருந்து யாரும் வரவில்லை என்று எழுதியிருந்தீர்கள். அவர்கள் அப்படித்தான் என்று உங்களுக்கு முன்பே தெரியாதா? ஊடகங்கள் குறித்து உங்களுக்கு இப்பொழுதுதான் படிப்பினை வருகிறதா? முன்பே படிப்பினை இருக்கிறது எனில் விகடனின் டாப் 10 நம்பிக்கை மனிதர்கள் விருதை ஏன் வாங்கினீர்கள்?
-பால சுப்ரமணியன்.
விகடன் விருது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். சில நண்பர்கள் ஏற்கனவே ‘உனக்கு வாய்ப்பிருக்கு’ எனச் சொல்லியிருந்தார்கள். அதே போலத்தான் விருது அறிவிக்கப்பட்டது. இதழ் வந்தவுடன் வேலுச்சாமி வாத்தியாரும், சந்திரனும் ‘விகடன்ல பார்த்தோம்’ என்றார்கள். இரண்டே பேர்தான். மற்றபடி வேறு எந்தப் பலனுமில்லை மாறாக நஷ்டம்தான். ‘விருதை சென்னை வந்து வாங்கிக்குங்க’ என்றார்கள். மெனக்கெட்டு சென்றிருந்தேன். விழாவெல்லாம் எதுவுமில்லை. ஸ்டுடியோவில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத்தான் படம் எடுத்தார்கள். படம் தயாரான பிறகு அனுப்பி வைப்பதாகச் சொன்னார்கள். ம்ஹூம். சென்ற வாரம் கோவை மெடிக்கல் செண்டரில் இருக்கும் புத்தகக் கடையில் பார்த்த பிறகுதான் சிறப்பு இதழ் வந்திருக்கிறது என்று தெரியும். அட்டையில் சகாயத்தைத் தவிர அத்தனை பேரும் சினிமாக்காரார்கள். அப்பொழுதுதானே இதழ் விற்கும்? விலை ஐம்பது ரூபாய் வாங்கவில்லை. இன்னமும் விகடனிலிருந்து படமும் வந்து சேரவில்லை. சிறப்பு இதழும் வந்து சேரவில்லை. வெள்ளிக்கிழமையன்று அலுவலகத்தில் விடுப்பு எடுத்து பேருந்துக்கு கைச்காசை செலவழித்து சென்னை சென்று வந்ததுதான் மிச்சம்.
அதே போல நடிகர் லாரன்ஸின் ‘அறம் செய விரும்பு’ என்று சொல்லி நூறு பேரைச் சேர்த்தார்கள். நூறு பேர்களில் நானும் ஒருவன். லாரன்ஸின் ஒரு கோடி ரூபாய் நூறு லட்சங்களாகப் பிரித்து வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் சரியான நபர்களை அடையாளம் காட்டினால் அவர்களே ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவிடுவார்கள். ஒரு கோடி ரூபாய்க்காக அட்டைப்படத்தில் அவரது படத்தை போட்டிருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் அதை விளம்பரப்படுத்துவதற்காக சில பக்கங்களை ஒதுக்கியிருந்தார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு இத்தனை விளம்பரமா என்று சங்கடமாகத்தான் இருந்தது. சரி, ஒரு லட்ச ரூபாய் சரியான ஆளுக்குக் கிடைக்கட்டும் என்று எதுவும் பேசவில்லை. இப்போது அந்தத் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஆனாலும் கடந்த வாரம் கூட லாரன்ஸ்தானே அட்டைப்படத்தில்?
எல்லாமே வியாபாரம்தான்.
விகடன் மீது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றனதான். ஆனால் அதற்காக ஒரு விருது அளிக்கப்படும் போது அதைப் புறக்கணிக்க வேண்டியதில்லை என்பதுதான் என் நிலைப்பாடு. தமிழகத்தில் பத்து பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டவுடன் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அதே சமயம் விருது கொடுத்துவிட்டார்களே என்பதற்காக அதைக் கொடுத்தவர்களை எப்பொழுதும் பாராட்டிக் கொண்டிருப்பதோ அல்லது அவர்கள் குறித்தான விமர்சனங்கள் எழும் போது கமுக்கமாக இருந்துவிடுவதோதான் தவறு. அப்படியில்லாத பட்சத்தில் ஏன் விருதுகளை மறுக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?
ஆனால் ஒன்று- ஊடகங்களை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் போது நமக்கான இடம் அழிக்கப்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உண்மையிலேயே எனக்கு அது பற்றிய எந்தக் கவலையுமில்லை. நம் மீது வெளிச்சம் விழும் போது சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் வெளிச்சம் விழாத போது கவலைப்படுவதற்கும் ஒன்றுமில்லை. நம்முடைய உழைப்பு நமக்கான உயரத்தை நிர்ணயம் செய்யும். அதுதான் நிரந்தரமான உயரம். ஊடக வெளிச்சம், பிரபலங்களின் பாராட்டு வார்த்தைகள் என்பவையெல்லாம் அப்போதைக்கு கவனிக்கப்படலாமே தவிர காலப்போக்கில் காணாமல் போய்விடும். அதனால் ஊடக ஆதரவுக்காக குழைவது, பிரபலங்களிடம் வழிவது என எந்தவிதத்திலும் கீழே இறங்காமல் நம்முடைய வேலைகளைச் செய்து கொண்டேயிருக்கலாம். எது குறித்தும் கவலைப்படாமல் மனதுக்குள் தோன்றுவதை வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கலாம்.
விகடன் மீது மட்டும் விமர்சனங்கள் இல்லை- பெரும்பாலான ஊடகங்களும் அப்படித்தான். அவர்களுக்கு ஏதேனுமொருவிதத்தில் அனுகூலமிருக்க வேண்டும். இல்லையென்றால் கண்டுகொள்வதில்லை.
நிறைய ஊடக நண்பர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைத்து அறக்கட்டளை மூலமாக உதவ முடியுமா என்று கேட்கிற ஊடகவியலாளர்களும் அதிகமாகியிருக்கிறார்கள். அறக்கட்டளை பற்றி இவர்களுக்குத் தெரியும் என்பதால்தான் கடலூர் நிகழ்ச்சி குறித்தான விவரங்களை அனுப்பி வைத்திருந்தேன். நிகழ்ச்சியில் பொருட்களை பயனாளிகளுக்குக் கொடுத்து முடிக்க எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும். ஒரு மணி நேரம் கழித்து நாற்பது அல்லது ஐம்பது பேர் வெளியிலிருந்து வந்து பொருட்களைத் தூக்கினால் என்ன செய்ய முடியும்? அரங்கில் இரண்டே இரண்டு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். ஊடகவியலாளர்கள் இருந்தால் நமக்கு ஆதரவாக இருக்கும் என்பதால் அனுப்பிய கோரிக்கை அது. யாருமே பதில் அனுப்பவில்லை. அதுதான் சலிப்பாக இருந்தது. இதே நிகழ்ச்சியை யாராவது சினிமாக்காரர் நடத்தியிருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பார்களா?
விளம்பரம் செய்யச் சொல்லவில்லை. அடுத்த நாள் செய்தி எதுவும் கூட பிரசுரம் செய்ய வேண்டாம். உடனிருப்பது ஒரு தார்மீக பலம். ‘Press இருக்காங்க’ என்கிற தைரியம். அந்தக் கோரிக்கையை அவர்கள் அப்படி எடுத்திருக்கலாம். காரியம் என்றால் தொடர்புக்கு வருவதும் ஓர் உதவி என்றால் ஊமையாகிவிடுவதும் என்ன அர்த்தம்?
சரி விடுங்கள்.
இவர்களை எதிர்காலத்தில் நம்ப வேண்டியதில்லை எனத் தோன்றியது. பார்த்தால் சிரித்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். பொதுக்காரியமே என்றாலும் கூட அவர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. இதைத்தான் படிப்பினை என்று குறிப்பிட்டிருந்தேன்.
5 எதிர் சப்தங்கள்:
"நம்மால் இயன்றது"
ல் வந்த அங்கலாய்ப்பு
//தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைத்து அறக்கட்டளை மூலமாக உதவ முடியுமா என்று கேட்கிற ஊடகவியலாளர்களும் அதிகமாகியிருக்கிறார்கள்//
இவர்களுக்கானது.
//காரியம் என்றால் தொடர்புக்கு வருவதும் ஓர் உதவி என்றால் ஊமையாகிவிடுவதும் என்ன அர்த்தம்//
நீங்க தமிழ்நாட்டுல இருக்குறீங்க ன்னு அர்த்தம் சென்ட்ராயன்.
//இதே நிகழ்ச்சியை யாராவது சினிமாக்காரர் நடத்தியிருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பார்களா?//
அதுக்காக ஒங்கள கதாநாயகனாகவும் ஒங்களுக்கு புடிச்ச நயன்தாராவை கதாநாயகியாகவும் வச்சு சினிமா ல்லாம் எடுக்க முடியாது மணி.
[ மணிகண்டன் - உதவும் கரங்கள் - அறக்கட்டளை - பயனாளிகள் ] - அருமையான பயணம். தொடருங்கள். மற்றபடி ஊடக வியாபாரங்களில் சிக்கி விடாதீர்கள்! ஏனெனில் இது வர்த்தக உலகம். காசு பணம் துட்டு Money Money !
Media and Politics both are same, I do not see the big difference, then only they can survive longer. If the media is surviving for 60 years, there cannot maintain their honesty and supporting the people!!
Post a Comment