Mar 16, 2016

சுமை

சிவரஞ்சனிக்கு இருபத்தெட்டு வயதுதான் ஆகிறது. எம்.டெக் முடித்துவிட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அருண் சந்தித்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு. காதல் மலர்ந்திருக்கிறது. அடுத்த இரண்டாண்டுகளில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு சிவரஞ்சனி வேலையை விட்டுவிட்டார். ஆனால் திருமணத்திற்கான கடன், கல்விக் கடன் என்றெல்லாம் பொருளாதாரச் சிக்கல்கள் விஸ்வரூபம் எடுக்க அருண் வேறு வாய்ப்புகளைத் தேடியிருக்கிறார். அப்படித்தான் சீனாவில் வேலை கிடைத்திருக்கிறது. நல்ல சம்பளம். ஒன்றிரண்டு வருடங்களில் நாடு திரும்பிவிடலாம் என்கிற எண்ணத்தில் விமானம் ஏறியிருக்கிறார். 

அருண் சீனா சென்ற மூன்றாவது மாதத்திலேயே பேரிடி இறங்கியிருக்கிறது. சிவரஞ்சனிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்துவிட்டு ரத்தத்தில் புற்று என்று சொல்லியிருக்கிறார்கள். High risk acute lymphoblastic leukemia. எல்லோருமே பதறிப் போயிருக்கிறார்கள். அருண் உடைந்து நொறுங்கியிருக்கிறார். ‘லீவ் கொடுத்தீங்கன்னா போய்ட்டு வந்துடுறேன்’ என்று சீனக்காரர்களிடம் கேட்ட போது ‘மூணு மாசம் கூட ஆகலை..வேணும்ன்னா ராஜினாமா செஞ்சுடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். கையில் காசு இல்லை. அடைக்கப்படாத கடன்கள் இருக்கின்றன. மனைவிக்கு பெரும் நோய் வந்திருக்கிறது. ஊரிலும் வேறு வேலையுமில்லை. ஆனால் மனைவியையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால் வேறு வழியில்லை. வேலையை விட்டுவிட்டு அருண் நாடு திரும்பிவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிவரஞ்சனிக்கு வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள். கீமோதெரபி. ஏழெட்டு சுழற்சி இந்தச் சிகிச்சையைக் கொடுத்திருக்கிறார்கள். மிகக் கொடூரமான சிகிச்சை போலிருக்கிறது. நகங்கள் கறுப்பேறி, முடி உதிர்ந்திருக்கிறது. கீமோ முடிந்த பிறகு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். எப்படியும் முப்பத்தைந்து லட்ச ரூபாய் செலவு பிடிக்கக் கூடிய சிகிச்சை. எவ்வளவு பெரிய துக்கம் இது? திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக பூர்த்தியடையவில்லை. ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. மனைவிக்கு புற்று நோய். வருமானம் ஒரு பைசா இல்லை. இனிவரும் காலகட்டத்தில் சிகிச்சைக்கு குறைந்தது முப்பத்தைந்து லட்ச ரூபாய் தேவை.

இருந்ததையெல்லாம் விற்றுவிட்டார்கள். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று வரிசையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அருண் சார்பில் அழகேசன் பேசினார். அழகேசன்தான் சலிக்காமல் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார். விவரங்களை வாங்கி தகவல்களை சரிபார்த்த பிறகு அருணை அழைத்துப் பேசினேன். வாழ்க்கையின் பெரும் துக்கத்தைச் சுமந்து கொண்டு வெகு இயல்பாகப் பேசுகிற மனிதர் அவர். ‘எப்படியாவது சமாளித்துவிடலாம்’ என்கிற நேர்மறை எண்ணம் கொண்டவர். வேலூரிலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து இத்தனை நாட்களாக கீமோதெரபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிகிச்சை முடிந்துவிட்டது. இனி அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள்.

கீமோதெரபியின் காரணமாக சிவரஞ்சனியின் உடல் நைந்து போயிருக்கிறது. உடம்பைத் தேற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ‘அது ஒண்ணும் பிரச்சினையில்லை...ரெடி ஆகிடலாம்’ என்று தைரியமூட்டி கேரளா அழைத்துச் சென்றிருக்கிறார். சமீபத்தில் அருணிடம் பேச முடிந்தது. கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள். 

‘சிவரஞ்சனி எப்படி இருக்காங்க?’ என்றேன்.

‘சரி ஆகிடும் சார்...22 ஆம் தேதிதான் எலும்பு மஜ்ஜை கொடுக்கிறவர் உறுதி செய்வாராம்..அதுக்கு அப்புறம் ஆபரேஷன்னு சொல்லியிருக்காங்க’ என்றார். கேரளா செலவு தனிச் செலவு. மனிதர் எப்படிச் சமாளிக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. ‘என்ன சார் பண்ணுறது? சமாளித்துத்தானே ஆகணும்’ என்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பெரும் செலவின் சிறு துளி. இன்னமும் தேவைப்படுகிறதா என்றெல்லாம் அவர் சொல்லவில்லை ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று மட்டும்தான் சொன்னார். 

‘இன்னும் தேவைப்பட்டால் சொல்லுங்க...முடிஞ்சளவுக்கு உதவுறோம்’ என்று சொல்லியிருக்கிறேன். அதற்கும் ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்றார்.

நோய்மையும் சுமைகளும் மனிதனைப் பந்தாடுகின்றன. அத்தகைய மனிதர்களிடம் ஆறுதலாகச் சொல்வது ஒன்றைத்தான் - ‘இந்தப் பிரச்சினையை இவன் தாங்குவான்’ என்றுதான் அந்தப் பிரச்சினை நம்மிடம் வந்திருக்கிறது. உலகில் எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அதைவிடப் பெரிய பிரச்சினை ஆயிரம் உண்டு. அதைவிடச் சிறிய பிரச்சினையும் ஆயிரம் உண்டு. அதனால் முடங்கிப் போக வேண்டியதில்லை. Hope-நம்பிக்கை- அதை மட்டும் விட்டுவிடவே கூடாது. அது அருணிடம் நிறையவே இருக்கிறது. 

ஆயிரம் கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய அருண்- சிவரஞ்சனியைக் காட்டிலும் அந்த பச்சிளம் குழந்தைக்காகவாவது சிவரஞ்சனி பிழைத்து வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். குழந்தையை நினைத்தால் கண்ணீர் வந்துவிடும் போலிருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஆதரவாக சிவரஞ்சனி வாழ வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நீங்களும் ஒரு முறை பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.