Mar 17, 2016

அம்மினியம்மாள்

எங்க பாட்டி பற்றி நிறையக் கதை சொல்வார்கள். பாட்டி என்றால் அமத்தாவுக்கு அம்மா. அம்மினியம்மாள். நான் கல்லூரியில் படித்து முடிக்கும் வரை உயிரோடு இருந்தார் என்பதால் நன்றாக ஞாபகமிருக்கிறது. என்னை மாதிரி நோஞ்சானாகவெல்லாம் இருக்க மாட்டார். செம முறுக்கம். ஜாக்கெட் அணியாத வெள்ளைச் சேலைக் கிழவி. அவருடைய கணவருக்கு மூன்றாவது மனைவி. முதல் இரண்டு மனைவிகளுக்கும் குழந்தை இல்லை. கிழவனுக்கு வயது வேறு அறுபதைத் தாண்டிவிட்டது. பார்த்தார்கள். வாரிசு இல்லாமல் போய்விடும் என்று அம்மினியம்மாளைக் கட்டி வைத்துவிட்டார்கள். அப்பொழுது அம்மினியம்மாளுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது இருக்குமாம். வயதுக்கு வந்தவுடன் வாழ்க்கைப்பட்டுவிட்டார்.

அந்தப் பாட்டனை நினைத்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. 

இருக்காதே பின்னே? எங்கள் பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் வீடுகள் வந்துவிட்டன. அத்தனையும் அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு கல்லூரிப் பெண்ணாவது இருக்கிறாள். முன்பெல்லாம் கல்லூரிப் பெண்கள் அக்கம்பக்கத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் அதீத துள்ளலுடன் இருப்பேன். அவ்வப்போது மொட்டை மாடிக்குச் சென்று கைகளை மடக்கிப் பார்த்து ‘ஏதாச்சும் கட்டி ஏறியிருக்கிறதா’ என்று பார்த்துவிட்டு இல்லையென்றால் இரண்டு மூன்று பஸ்கி தண்டால் எல்லாம் போட்டுவிட்டு தோள்பட்டையைக் கொஞ்சம் தூக்கிய மாதிரி வைத்துக் கொண்டு நடந்துவிட்டு வருவேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக வரைக்கும் கூட இப்படித்தான். எந்தப் பெண்ணும் வந்து பேசியதில்லை. நானும் பேசியதில்லை. ஆனால் நிலைமை தலைகீழாகிவிட்டது. இப்பொழுதும் உடல்வாகு அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மண்டை காட்டிக் கொடுத்துவிடுகிறது. வேணியுடன் இருந்தாலும் சரி மகியுடன் இருந்தாலும் சரி ‘அங்கிள்’ என்று கொஞ்சிவிட்டுப் போகிறார்கள். அப்படியென்ன வயதாகிவிட்டது? 1982 ஆம் ஆண்டு பிறந்தேன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முப்பதைக் கூடத் தொடவில்லை.

இளம்பெண்கள் சங்கோஜமில்லாமல் பேச ஆரம்பிக்கும் போதே நிலைமை விபரீதமாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். விபரீதம் என்றால் உடலில் கொழுப்பு சேரும். சர்க்கரை நிறையும். உப்பு படியும். மருத்துவர் சிவசங்கரிடம் பேசும் போதெல்லாம் ‘எதுக்கும் ஓட ஆரம்பிச்சுடுங்க’ என்கிறார். யாராவது சிக்கினால் கூட்டிக் கொண்டு ஓடலாம்தான். அங்கிளுடன் யார் ஓடுவார்கள்? தனியாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். வெறும் வயிற்றில் இரண்டு பூண்டை மென்று விழுங்கிவிட்டு- கொழுப்பை குறைத்துவிடுமாம்- தண்ணீரை உள்ளே ஊற்றிக் கொண்டு ஓட ஆரம்பித்தால் காணக் கண் கோடி வேண்டும். இரண்டே இரண்டு கண்களை வைத்துக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறேன். லே-அவுட்டின் ஒதுக்குப் புறமாக மரங்கள் அடர்ந்திருக்கின்றன. மீன்கொத்தி, செண்பகப் பறவை, பச்சைக் கிளிகள், மைனா என்று ஏகப்பட்ட குருவிகள். அதோடு சேர்த்து வேறு இரண்டு குருவிகள். ஒரு குருவி பேண்ட் சட்டை அணிந்திருக்கும். இன்னொரு குருவி ஜீன்ஸ் அல்லது சுடிதார் அணிந்திருக்கும். எட்டு மணிக்கு வந்து எட்டரை வரைக்கும் கொஞ்சிவிட்டுப் போகிறார்கள். முதல் நாள் வெகுவாகத் தயங்கினார்கள். அதன் பிறகு அந்தப் பெண் ‘அங்கிள்தானே’ என்று ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். கிராதகன் கூச்சமேயில்லாமல் முத்தமிடுகிறான். பார்த்தும் பார்க்காத மாதிரியும் ஓடிக் கொண்டிருப்பேன். வியர்த்துக் கொட்டிவிடுகிறது. என்ன காரணத்துக்காக வியர்க்கிறது என்று எனக்கே புரிவதில்லை. ஒரு நாள் நேரமாகக் கிளம்பி சிங்கசந்த்ரா வந்தால் உங்களுக்கும் வியர்க்க வைக்கிறேன்.

அது கிடக்கட்டும்.

அம்மினியம்மாள் பாட்டி திருடனை எல்லாம் விரட்டிப் பிடித்த கதைகள் வெகு சுவாரஸியமானவை. அந்தக் காலத்து திருடர்கள் பெரும்பாலும் களத்து மேட்டிலிருந்து ராகி, சோளம், மிளகாயைத்தான் திருடுவார்கள். அதற்கே கட்டி வைத்து வெளுத்துவிடுவார்கள். அம்மினியம்மாளுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த குடிகள் இரண்டு பேரும் வெட்டியாகத்தானே இருக்கிறார்கள் என்று குழந்தைகளை அவர்களிடம் விட்டுவிட்டு கிழவனை அழைத்துக் கொண்டு களத்து மேட்டுக்குச் சென்றுவிடுவாராம். எப்பொழுதும் ரொமான்ஸ் மோடிலேயே இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்படியொரு நாள் சென்றிருந்த போது திருடன் வந்துவிட்டான். மிளகாயை மொடா வைத்து வழித்துக் கொண்டிருப்பதை அம்மினியம்மாள் பார்த்துவிட்டார். வழிக்கும் வரைக்கும் வழிக்கட்டும் என்று விட்டுப் பிடித்தவர் ஒரு கட்டம் வந்தவுடன் ‘அட நொள்ளிவாயன் பையா’ என்று கத்திக் கொண்டு ஓடி வரவும் தூங்கிக் கொண்டிருந்த கிழவன்  தன்னைத்தான் திட்டுகிறாளோ என்று பயந்தடித்து எழுந்து கோவணம் கீழே விழுவது கூடத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாராம். 

‘கோமணத்தைக் கட்டுய்யா...ஏதாச்சும் கவ்விட்டு போய்டப் போகுது’ என்று கத்திக் கொண்டு ஓடியவர் திருடனை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார். அவன் ‘சாமி சாமி உட்டுறுங்க’ என்று கதறியிருக்கிறான். ‘வக்காரோலி...என்ர காட்டுலேயே திருடுறியா?’ என்று இழுத்துச் சென்று கதர் கடை மரத்தில் கட்டி வைத்து வெளுப்பிவிட்டார். வெளுப்பியதோடு நில்லாமல் விடிய வரைக்கும் கட்டி வைத்து காவலுக்கு அமர்ந்துவிட்டாராம். விடிகிற வரைக்கும் திருடனும் பாட்டியும் பேசிக் கொண்டேயிருந்தார்களாம். அந்தக் காலத்துக் கடலை. அடுத்த நாள் காலையில் சத்தியமங்கலத்திலிருந்து இரண்டு காவலர்கள் வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ‘நீங்க போங்க..நான் பழைய சோறு குடிச்சுட்டு மத்தியானமா வர்றேன்’ என்று சொல்லிவிட்டு மதியத்துக்கு மேலாக அம்மினியம்மாள் சென்ற போது திருடனைக் காணவில்லை. விட்டுவிட்டார்கள். அது அம்மினியம்மாளுக்கு படு கோபம். காசை வாங்கிவிட்டு விட்டுவிட்டார்கள் என்று கண்டபடி திட்டிவிட்டு வந்திருக்கிறார். இது நடந்து நாற்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும். 

தனது இறுதிக் காலத்தில் அம்மினியம்மாள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். நினைவு தப்பியிருந்தது. பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருந்த போது ‘திருட்டு வப்பானோளி பசங்க...அவனை தப்பிக்க உட்டுட்டாங்க’ என்று அந்தப் போலீஸ்காரர்களைத் திரும்பத் திரும்பத் திட்டிக் கொண்டிருந்தார். சுற்றிலும் நின்றவர்களுக்கு அவ்வளவு சிரிப்பு. ‘அதெல்லாம் கேஸ் போட்டாச்சு...புடிச்சுடுவாங்க’ என்று சொன்னால் ‘என்னையை கோர்ட்டுக்கு கூப்பிடுவாங்க...சீலைய வெள்ளாவிக்கு போட்டு வாங்கி வைங்க’ என்பார். 

அந்தக் காலத்தில் திருட்டும் கைதும் தப்பித்தலும் கூட அவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறது.

கர்நாடகத்தில் கலபுரகி என்ற ஊரில் இருந்த ஒரு தோட்டத்தில் நாற்பது வருடங்களுக்கு முன்பாக எலுமிச்சம் பழங்களை ஒருவர் திருடிச் சென்றுவிட்டார். அப்பொழுது அதன் மதிப்பு முநூறு ரூபாய். வழக்கு பதிவு செய்து வழக்கம் போல கிடப்பில் போட்டுவிட்டார்கள். கடந்த மாதத்தில் திடீரென்று யாரோ ஒரு அதிகாரிக்கு ஞானோதயம் வந்து பழைய வழக்குகளை தூசி தட்டியிருக்கிறார்கள். திருடியவனுக்கே கூட மறந்திருக்கும். திருட்டுக் கொடுத்தவன் உயிரோடு இருக்கிறானா என்று தெரியவில்லை. ஆனால் போலீஸார் வளைத்துப்பிடித்துவிட்டார்கள். அறுபது வயதுத் திருடனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அந்த முநூறு ரூபாயை பறிமுதல் செய்வார்களா அல்லது அந்த எலுமிச்சம் பழங்களையே பறிமுதல் செய்வார்களா என்று தெரியவில்லை. 

அந்த உயரதிகாரியை சத்தியமங்கலத்துக்கு வரவழைத்து அம்மினியம்மாளின் வழக்கைத் தூசி தட்டச் சொல்ல வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். திருடனைப் பிடித்தால் இன்னும் கொஞ்சம் கதைகள் சிக்கக் கூடும்.