Mar 17, 2016

வாக்கு

தேர்தலுக்குத் தேர்தல் புதுப்புது சங்கங்களும் அரசியல் இயக்கங்களும் உருவாவது போலவே இளைஞர்களும் ‘மாற்று அரசியல்’ என்ற பெயரில் களத்தில் இறங்குவார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு எல்லாவிதத்திலும் செகளரியமான வேலையில் இருந்தபடியே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என விரும்புகிறவர்கள். எப்படியும் பதினைந்து நாட்கள் அலுவலகத்தில் விடுப்புக் கொடுத்துவிடுவார்கள் என்றும் அந்த பதினைந்து நாட்களில் தேர்தல் வேலைகளைச் செய்யப் போவதாகச் சொல்வதைக் கேட்கும் போது சிரிப்பு வந்துவிடும். எந்தப் அரசியல் கட்சியின் பின்புலமுமில்லாமல் தேர்தல் களம் காண விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தீவிரமான களப்பணியாற்றியிருக்க வேண்டும். மக்களிடம் ஓரளவுக்கேனும் பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் கூட அதிகபட்சமாக ஆயிரத்து ஐநூறு வாக்குகளிலிருந்து இரண்டாயிரம் வாக்குகளைத்தான் பெற முடியும். 

இதை எதிர்மறையான சிந்தனையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் நிதர்சனம். காசுக்கும் இலவசத்துக்குமிடையில் இதுவே பெரிய எண்ணிக்கைதான். இந்தச் சொற்ப வாக்குகளைப் பெறுவதற்காக செய்கிற களப்பணிதான் அடுத்தடுத்த தேர்தலுக்கான அனுபவங்கள். அதிலிருந்துதான் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டும். முதல் தேர்தல் என்பது நாம் உருவாக்குகிற சலனம்தான். அதில் தொடர்ச்சி இருக்க வேண்டும். அப்படியிருப்பின் அடுத்தடுத்த தேர்தல்களில் நமக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளலாம். அப்படியானதொரு நோக்கத்தில்தான் இளைஞர் குழுக்களும் மாற்று அரசியல் இயக்கங்களும் முதல் தேர்தலைச் சந்திக்க வேண்டும். 

பிரச்சினை என்னவென்றால்- பார்ட் டைம்மில் தேர்தல் களத்திற்கு வருகிற தொண்ணூறு சதவிகிதம் பேர் அந்த ஒரு தேர்தலோடு வேலை, குடும்பம், புள்ளைகுட்டிகளைப் பார்க்க போய்விடுகிறார்கள். 

சினிமாவுக்கான முயற்சிகளைச் செய்து கொண்டே ‘சாப்பாட்டுக்காக வேறொரு வேலை செய்தபடியே வாய்ப்புகளைத் தேடுகிறேன்’ என்று சொல்கிறவர்களில் முக்கால்வாசிப்பேர் தாங்கள் செய்து கொண்டிருக்கிற வேலையிலேயே ஒட்டிக் கொள்வார்கள். சினிமாவை காலப்போக்கில் விட்டுவிடுவார்கள். பேசினால் ‘அந்தக் கனவு அப்படியேதான் இருக்கிறது’ என்பார்கள். அதே போல, வேறொரு வேலையில் இருந்தபடியே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிறவர்களில் முக்கால்வாசிப் பேர் ‘இந்த வேலையே போதும்’ என்று போட்டித் தேர்வுக்கான முஸ்தீபுகளைக் கைவிட்டுவிடுவார்கள். தேர்தல் களமும் இப்படியானதுதான். இன்னொரு வேலையைப் பார்த்துக் கொண்டு ‘ஆனா பார்க்கலாம் ஆகாட்டியும் பிரச்சினையில்லை’ என்கிற மனநிலையில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் களத்தில் இறங்கினால் எந்தவிதத்திலும் பலனளிக்காது. மேற்சொன்ன அத்தனை பேரும் தங்களுடைய நோக்கத்தில் தோல்வியடைவதற்கான காரணம் ‘அர்பணிப்பு இல்லாமை’. இது இல்லாவிட்டால் இன்னொன்று என்கிற சாவகாசமான மனநிலை பெரிய பலனைக் கொடுப்பதில்லை.

வேலையை விட்டுவிடச் சொல்லவில்லை. ஆனால் முழுமையாக இறங்க வேண்டும். வெறி வேண்டும். சரியாகக் குறி வைத்துத் துல்லியமாக அடிக்க வேண்டும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி. அர்பணிப்பு மட்டுமே நம்மை வெற்றிக்கு அருகில் கொண்டு போய் நிறுத்தும்.

எங்கள் தொகுதியை எடுத்துக் கொண்டால் கூட ஒரு நகராட்சி, ஆறு பேரூராட்சிகள், முப்பத்தாறு ஊராட்சிகள் இருக்கின்றன. இதில் ஒரே பேரூராட்சியில் நான்கைந்து ஊர்கள் இருக்க வாய்ப்புண்டு. இரண்டு அல்லது மூன்று கிராமங்கள் இணைந்து ஒரே ஊராட்சியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படிப் பார்த்தால் ஒரு சட்டமன்றத் தொகுதியில் எப்படியும் நூறு ஊர்களாகவது தேறும். ஓர் ஊருக்கு ஒரு நாள் பரப்புரை என்று ஒதுக்கினால் கூட குறைந்தபட்சம் நூறு நாட்கள் வேண்டும். கும்பிடு போட்டுவிட்டு வந்தால் வாக்களிப்பார்களா? பேச வேண்டும். நம்முடைய நோக்கங்களைப் புரிய வைக்க வேண்டும். இப்படியாகத் தொகுதியை முழுமையாகச் சுற்றி வர வேண்டுமானால் மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்புறம் எப்படி பதினைந்து நாள் பிரச்சாரம் வேலைக்கு ஆகும்?

ஒவ்வொரு ஊரிலும் நமக்கு வேலை செய்து கொடுக்க ஒன்றிரண்டு பேர்களாவது தேவைப்படுவார்கள். அவர்கள் நம்மை நம்ப வேண்டும். நாம் திட்டமிடுவதை அவர்கள் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஊரில் இருக்கும் வாக்காளர்களின் விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் தமக்கான இலக்கு எத்தனை வாக்குகள் என்பதைக் கணித்து வைத்திருக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட ‘வேண்டும்’கள் இருக்கின்றன.

தோராயமாக இரண்டு லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியில் ஒன்றரை லட்சம் வாக்குகள் பதிவானால் அதில் ஐந்தாயிரம் வாக்குகளை இலக்காக வைத்தால் போதும். ஒவ்வொரு ஊரிலும் ஐம்பது வாக்குகள். பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் இருக்கும். ஒரு ஊருக்கு ஐம்பது பேரைக் கவர வேண்டுமானால் எவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டும் என இறங்கி வேலை செய்து பார்த்தால்தான் தெரியும். ‘இவர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள். அதனால் எனக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டால் அந்தப் பக்கமாக போய் ‘இவன் மட்டும் யோக்கியமாமா’ என்று கமுக்கமாகச் சிரித்துவிட்டு போவார்கள். சரியான கொள்கைகள், மக்களைக் கவரும் பேச்சு, திட்டமிடல், வேலை செய்வதற்கான அணி, தேர்தல் வரைக்குமான முழுமையான அர்ப்பணிப்பு என அத்தனையும் சேர்ந்தால் மட்டுமே துளியாவது அசைத்துப் பார்க்கலாம். 

சமீபத்தில் இளைஞர் கூட்டமைப்பு என்ற குழு பற்றிக் கேள்விப்பட நேர்ந்தது. தங்களது இணையப்பக்கத்தில் ‘நாங்கள் யாரையும் முன்னிறுத்தவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். அது நல்ல விஷயம்தான். ஆனால் குறைந்தபட்சம் ஐந்தாறு பேர்களாவது முகத்தைக் காட்ட வேண்டும். முகத்துக்கான மதிப்பு இருக்கிறது. Face Value. ஒருவன் நம்மை நம்ப வேண்டுமானால் முதலில் நம் முகத்தைக் காட்ட வேண்டும். பொதுவெளியில் செயல்படும் போது யாரெல்லாம் பின்னணியில் இருக்கிறார்கள்? நாளை ஏதேனும் தவறு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்கிற அளவிலாவது நம்மை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும். இவர்களது தளத்தில் அது இல்லை. இந்தக் குழுவினரின் நோக்கம் சரியானதாக இருக்கலாம். ஆனால் இன்னமும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது.

சரியான நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படுகிறவர்கள் தங்களது நோக்கத்திற்கும் உழைப்புக்கும் ஏற்ற இடத்தை ஒரு நாள் அடைந்தே தீருவார்கள். இந்த இளைஞர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள். 

கோபிச்செட்டிபாளையத்தில் இந்த இளைஞர் கூட்டமைப்பு சார்பில் காளீஸ்வரன் போட்டியிடுவார் போலிருக்கிறது. அழைத்துப் பேசினார். என்னுடைய பழைய நண்பர். தேர்தல் களத்தைக் காண்பது நல்ல விஷயம்தான் என்று சொல்லிவிட்டு மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். ‘தேர்தல் வேலை செய்து கொடுக்க முடியுமா?’ என்றார். பிரச்சாரம் என்றெல்லாம் களத்தில் இறங்கினால் எங்கள் வீட்டிலேயே வாக்களிக்க மாட்டார்கள் என்று புரிந்து வைத்திருக்கிறேன். நிசப்தம், ஃபேஸ்புக், அறக்கட்டளை என்பதெல்லாம் வேறு. தேர்தல் என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. ‘திமுக சார்பில் குமணனை நிறுத்தினால் அவருக்கு வாக்களிப்பேன். இல்லையென்றால் உனக்கு வாக்களிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன். அதற்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் நீக்கப்படாமல் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்!