மாற்று மருத்துவங்களைப் பற்றி நிறையப் பேர் பேசுகிறார்கள். வர்ம சிகிச்சை, தொடு சிகிச்சை, காந்த சிகிச்சை என்று ஏகப்பட்ட வகைகள். அத்தனை மாற்று மருத்துவர்களும் சரியானவர்கள் என்று சொல்ல முடிவதில்லை என்பதுதான் பெரிய சிக்கல். பெங்களூரில் ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆயுர்வேத மருத்துவர். ஆங்கில மருந்தை எழுதிக் கொடுத்தார். இத்தகையவர்கள்தான் மாற்று மருத்துவத்தின் மீதான நம்பிக்கைகளைத் தகர்க்கிறார்கள். படிப்பது சித்தாவும் ஆயுர்வேதமும்; ஆனால் பரிந்துரை செய்வது ஆங்கில மருந்துகளை. அப்படியே சித்தா ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்தாலும் அவற்றில் ஸ்டீராய்டு கலக்கப்படுகின்றன என்கிறார்கள். ஓமியோபதியும் விதிவிலக்கில்லை என்றெல்லாம் கேள்விப்படும் போது திக்கென்றிருக்கிறது.
எப்படி நம்பித் தொலைவது? ஒருவேளை அதையும் இதையும் தின்று நிலைமை விபரீதமாகிவிட்டால் என்ன செய்வது? சாமானியனுக்கு ஏற்படுகிற இந்த அவநம்பிக்கைதான் நேர்மையான மாற்று மருத்துவர்களையும் கூட சந்தேகிக்கச் செய்கிறது. ‘கண்ட பக்கம் போறதுக்கு பதிலா பேசாம இங்கிலீஷ் மருந்தே சாப்பிட்டுவிடலாம்’ என்ற முடிவுக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஆரம்பத்தில் அரை மாத்திரையில் ஆரம்பித்து வருடம் ஒரு முறை மாத்திரைகளின் வீரியத்தைக் கூட்டிக் கொண்டேயிருக்கிறோம்.
சுந்தர் என்கிற ஆராய்ச்சியாளருடன் பரிச்சயமுண்டு. ஓய்வு பெற்ற ஆராய்ச்சியாளர். பெங்களூரின் ஆர்.டி.நகரில் வசிக்கிறார். எப்பொழுதாவது சந்தித்துப் பேசுவேன். உடல் பற்றியும் நோய்மை பற்றியும் அவர் பேசுகிற விஷயங்கள் ஆச்சரியமூட்டக் கூடியவை. ‘நோய் வந்துட்டாத்தானே பிரச்சினை? வராமலே தடுத்துக்க வேண்டியதுதானே?’ என்றார். பேசுவதற்கு என்ன? எப்படி வேண்டுமானாலும் பேசலாம். நோய் வராமல் தடுக்க சாத்தியமிருக்கிறதா? அதுவும் இந்தக் காலத்தில்?
யோசித்துப் பார்த்தால் நாம் எதிர்கொள்கிற பெரும்பாலான நோய்கள் நம்முடைய வாழ்வியல் முறை (Life style) சார்ந்தவைதான். சர்க்கரை, உடல் பருமன், கொழுப்பு, ரத்த அழுத்தம் என இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சகஜமாகிவிட்ட முக்கால்வாசி நோய்கள் நம்முடைய தவறுகளினால் மட்டுமே நம்மை அணுகுகின்றன. தாறுமாறான உணவுப்பழக்கம், உடலுக்கான எந்தப் பயிற்சியும் இல்லாமலிருப்பது, சீரற்ற உறக்கம், மன உளைச்சல் என நிறையக் காரணங்களைச் சொல்ல முடியும். இதையெல்லாம் சற்று மாற்றினாலே பெரும்பாலான பிரச்சினைகளைத் தடுத்துவிட முடியும் என்பதுதான் உண்மை.
யாரோ சொன்ன ஒரு விஷயம் இது- ‘நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்டளவு உணவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்தனை கிலோ அரிசி, இத்தனை கிலோ சர்க்கரை, இத்தனை கிலோ அசைவம், இத்தனை கிலோ புளி, இத்தனை கிலோ உப்பு என்று. அவற்றை முப்பது நாற்பது அல்லது வயதுக்குள்ளேயே தின்று தீர்த்துவிட்டால் இறைவனாகப் பார்த்து நோயைக் கொடுத்து உனக்குக் கொடுத்த அளவு தீர்ந்துடுச்சு..இனி இது உனக்கு இல்லை’ என்று சொல்லிவிடுவானாம். வாய்ப்புக் கிடைக்கிறதே என்பதற்காக மூன்று கோழிகளை ஒரே நாளில் தின்றுவிடுகிற ஆட்களைத் தெரியும். எவ்வளவுதான் அடுக்கி வைத்திருந்தாலும் அரை வயிறுக்கு மேல் உள்ளே தள்ளாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும். கஷ்டம்தான். ஆனால் எவையெல்லாம் கஷ்டமோ அவையெல்லாம் நன்மை விளைவிப்பவை.
காலை வேளைகளில் பெங்களூரின் சிக்னல்களில் கார்களுக்குள் அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு வாயை அள்ளிப் போடுவதைக் கவனித்திருக்கிறேன். சாப்பிடுவதற்கு நேரமில்லை என்று காரணம் சொல்வார்கள். எல்லா சாக்குப் போக்குகளுமே நாமாகச் சொல்லிக் கொள்பவைதான். எட்டு மணிக்கு எழுந்தால் நேரமில்லாமல்தான் போகும். ஆறரை மணிக்கு எழுந்தால் நிறைய நேரம் இருக்கும். அதுவே ஆறு மணிக்கு எழுந்தால் முக்கால் மணி நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்கிவிட்டு மெதுவாகக் கிளம்பி வர முடியும். எட்டு மணிக்கு எழுந்திருப்பவர்கள் ஏழு ஐம்பதுக்குக் கூட எழ மாட்டார்கள். இழுத்துப் போர்த்தி தூங்குவார்கள். இப்படி எவையெல்லாம் சுகமளிப்பவையோ அவையெல்லாம் தீமை விளைவிப்பவை.
தண்ணீர் குடிக்க நேரமில்லை. நடக்க நேரமில்லை. மனதைச் சுத்திகரிக்க நேரமில்லை என்று எதற்குமே நம்மிடம் நேரமிருப்பதில்லை. ஒரு நாளைக்கு நாற்பது நிமிடங்கள்தான் நடக்கச் சொல்கிறார்கள். தேவையில்லாமல் சேர்கிற கொழுப்பையும் சர்க்கரையும் கரைத்து வெளியேற்றை இந்த நாற்பது நிமிடங்கள் போதுமானவை. ஆனால் அதை ஒதுக்குவதுதான் நமக்கு மலையைக் குடைவது மாதிரி. ஒவ்வொரு நாளும் நாம் வீணாகக் கழிக்கிற நேரம் மட்டும் ஐந்து மணி நேரங்களாவது தேறும். நம்பிக்கையில்லையென்றால் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
முப்பது வயதைத் தாண்டியவுடன் ஒரு முழு உடல் பரிசோதனை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அதிலேயே முக்கியமான அறிகுறிகளைக் கண்டுபிடித்துவிட முடியும். சிறுநீரகச் சோதனை, ஈரல் சோதனை, மூன்று மாத சர்க்கரையளவு, கொழுப்பு அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை ஒரே ரத்த மாதிரியில் செய்துவிடுகிறார்கள். SGOTயில் வித்தியாசம் என்றால் ஈரலில் பிரச்சினை, Ceratine அளவில் வித்தியாசம் என்றால் சிறுநீரகத்தில் சிக்கல், மூன்று மாதத்தின் சராசரி சர்க்கரையளவு 6 ஐ நெருங்குகிறது என்றால் டயாப்பட்டீஸ் ஆபத்து, கொழுப்பு உடலில் சேர்ந்து கொண்டிருந்தால் இருதயத்துக்கான ஆபத்து என எல்லாவற்றையும் ஒரே முறை எடுத்துக் கொள்கிற பரிசோதனையில் பார்த்துவிட்டு அதற்கேற்ப நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டாலே பெருமளவு பிரச்சினைகளைத் தவிர்த்துவிட முடியும் என்பதுதான் சுந்தரின் வாதம்.
அவர் சொல்வது சரிதான். எண்பது வயது மனிதர் அவர். இன்னமும் வெகு ஆரோக்கியமாக இருக்கிறார்.
‘வர்றப்போ பார்த்துக்கலாம்’ என்கிற மனநிலைதான் இந்தத் தலைமுறையின் ஆகப்பெரிய சாபம். வந்த பிறகு ‘மாத்திரைகளிலேயே சரி செய்துவிட முடியும்’ என நம்புவது அதனை விடப் பெரிய சாபம். இப்பொழுது எல்லா நோய்களையும் கண்டுபிடித்துவிட முடியும். எல்லாவற்றுக்கும் வசதி வந்துவிட்டது. ஆனால் முக்கால்வாசி நோய்களை கட்டுப்படுத்த மட்டும்தான் முடிகிறதே தவிர பரிபூரணமாக குணப்படுத்த முடிவதில்லை. வாழ்க்கையின் இறுதி நாள் வரைக்கும் உடல் எந்திரத்தை இயக்க மாத்திரையைப் போட வேண்டியிருக்கிறது.
‘தண்ணீரைத் தவிர வேறு எதுவுமே நம்முடலில் துளியாவது நச்சை விட்டுவிட்டுத்தான் செல்கின்றன. பால் குடித்தாலும் கூட துளி உடலில் தங்கும். தண்ணீர் மட்டும்தான் உடலைச் சுத்தம் செய்து கொண்டேயிருக்கிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கறீங்க?’ என்று அவர் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் திணறினேன். அவர் ஒரு நாளைக்கு நான்கைந்து லிட்டர் தண்ணீராவது குடிக்கிறார். மூன்று வேளையும் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். பசிக்கும் போது மட்டும்தான் உண்கிறார். தேவையான நேரம் உறங்கி சரியான நேரத்தில் எழுகிறார். இஞ்சி, பூண்டு, மிளகு உள்ளிட்ட இயற்கையான மருத்துவ குணமுடைய பொருட்களை தொடர்ந்து உடலில் சேர்த்துக் கொண்டேயிருக்கிறார். உடல் அவர் சொல்படி கேட்கிறது.
‘என் உடலில் எந்தப் பிரச்சினையுமில்லை’ என்று நம்புவதுதான் உலகின் மிகப்பெரிய மூட நம்பிக்கை. எல்லோருடைய உடலிலும் ஏதாவதொரு பிரச்சினை இருக்கும். அது தவறேயில்லை. ஆனால் அது பற்றிய தெளிவானதொரு புரிதல் வேண்டும். ‘இந்தப் பிரச்சினைக்கு இதையெல்லாம் நாம் செய்ய வேண்டும்’ என்கிற தெளிவு வேண்டும். படிப்பது, வேலைக்குச் செல்வது, சம்பாதிப்பது, சொத்து சேர்ப்பது என பிற அத்தனை காரியங்களும் இரண்டாம்பட்சம்தான். உடலை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல் எவ்வளவுதான் சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம்?
5 எதிர் சப்தங்கள்:
//‘என் உடலில் எந்தப் பிரச்சினையுமில்லை’ என்று நம்புவதுதான் உலகின் மிகப்பெரிய மூட நம்பிக்கை. //மணி இதேப் போல தனக்கும் தான் உடலில் பிரச்சனையிருக்கிறது.அனைத்தையும் மருந்தால் மட்டுமே தீர்க்கலாம் என்று நம்புவர்கள் நம்மிடம் இருக்கின்றனர்.
தொலஞ்சு போன கமெண்டு பொட்டி சாவி திரும்ப கெடச்சுட்டா.
சந்தோசம்.
THANK YOU VERY MUCH.
IT IS SO NICE OF YOU. RESPONDING POSITIVELY TO OTHER'S REQUESTS ITSELF IS A HEALTHY HABIT.
GOD WILL BLESS YOU AND YOUR FAMILY WITH GOOD HEALTH AND ALL THAT IS BEST IN LIFE.
M.NAGESWARAN.
intha post ku comment anuppura option illana mail anuppidalam nu nenachen. thappichittinga. Well said mani sir. Prevention is better than cure. And, I always follow that.
நோய்க்கான காரணி என்பது இரத்தம் கெடுவதால் நிகழ்கிறது என்கிறார் இவர்.இதற்காக சில வழிமுறைகளைப் பின்பற்றவெண்டும் என்று சொல்கிறார்.அதைப் பின்பற்றி வாழ்க்கைமுறை மாறிய பலரை நான் நேரடியாகப் பார்த்து இருக்கிறேன்.அவரது வலைதளம் கீழே உள்ள சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.பார்த்துப் பயன் பெறவும்.அடுத்தவரிடமும் பகிரவும்.
http://anatomictherapy.org/tindex.php
Post a Comment