Jan 5, 2016

ஆறா மீன்

எங்கள் அப்பாவுக்கு விவசாய பூமி வாங்க வேண்டும் என்கிற ஆசை உண்டு. அம்மாவுக்கும்தான். ஆனால் அது சாத்தியப்படவேயில்லை. இப்பொழுதெல்லாம் தோட்டம் என்றால் ஒரு ஏக்கர் நிலம் முப்பது லட்சங்களைத் தாண்டி விட்டதாகச் சொல்கிறார்கள். வயல் என்றால் பதினைந்தைத் தாண்டிவிட்டதாம். அதுவும் பிரதான சாலையை ஒட்டியிருந்தால் கோடிக் கணக்கில்தான். எப்படியும் அளந்து கல்தானே நடப் போகிறார்கள் என்று விலையெல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடக்கிறது. 

உள்ளூரிலேயே விவசாயம் பார்க்கும் மாமனாரின் பெண்ணாகப் பார்த்துக் கட்டி வைத்திருந்தால் இந்நேரம் மண்வெட்டியைத் தூக்கியிருக்கலாம். அப்பேர்ப்பட்ட ஆட்கள் எல்லாம் ‘பையனுக்கு விவசாய பூமியிருக்கா?’ என்று கேட்டார்கள். நான்கைந்து வருடம் பொறுத்துக் கொண்டால் மாப்பிள்ளையின் மண்டை மேலேயே விவசாயம் செய்யலாம் என்று இவர்கள் சொல்லியிருக்க வேண்டும். விட்டுவிட்டார்கள். எனக்கும்தான் ஆசை. பச்சைத் துண்டை உருமாலாகக் கட்டி வாய்க்கால் தண்ணீரை வளைத்து வளைத்து தோட்டத்தில் பாய்ச்சி இல்லாத பந்தா காட்டியிருக்கலாம். நான்கு எருமைகளை வாய்க்காலில் இறக்கி வெறுக் வெறுக்கென்று தேய்த்துக் குளிப்பாட்டி அலட்டியிருக்கலாம். வெறும் ஆசையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? உள்ளங்கையில் பெரிய ரேகை நெடுக்கு வாகாக ஓட வேண்டும். அப்பொழுதுதான் நிறைவேறும்.

ஊருக்குப் போகும் போதெல்லாம் வாய்க்காலில் இறங்கி குளித்துவிட்டு மேலே ஏறுவதோடு சரி. எருமையைக் குளிப்பாட்டினால் என்ன? நம் வெட்டிப் பெருமையைக் குளிப்பாட்டினால் என்ன? எல்லாம் ஒன்றுதான் என்று நினைத்துக் கொள்வேன். 

ஞாயிற்றுக்கிழமையன்று ஐந்து மணிக்கு எழுப்பிவிட்டுவிட்டார்கள். மீன் வாங்கி வருவதற்கு நான்தான் இனாவானா. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. செல்ல முடியாது. தம்பிக்கு மீன் வாங்கத் தெரியாதாம். எனக்கு மட்டும் தெரியுமா என்ன? ‘நீ வாங்கினாத்தான் ஆறா மீன் ஆறா மீனு மாதிரி இருக்கும்’ என்று உசுப்பேற்றினார்கள். கொஞ்ச நேரம் புளகாங்கிதம் அடைந்து அதே வேகத்தில் கிளம்பிவிட்டேன். குளிர்காற்று காதுக்குள்ளேயே அடிக்கிறது. மார்கழி மாதக் குளிர்.

முந்தின நாள் இரவே வலையை வாய்க்காலில் விரித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். இரவில் மீன்கள் சிக்கியிருக்கும். விடிவதற்கு முன்பாகவே வந்து மீன்களை எடுத்துக் கூடையில் போட்டு ஆறு மணிக்கு கல்லூரி பிரிவில் வந்து நின்றால் ஏழு மணிக்கு பச் பச்சென்று விற்றுக் காலியாகிவிடும். நல்ல வருமானம். ஆறா மீன்தான் வேண்டுமென்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். பாம்பு மாதிரி நீளமாக இருக்கும். ஆறா மீன் நிலத்தோடு ஒட்டியபடியே நீந்தும். மிளகு ஆட்டி குழம்பு வைத்தாலும் சரி; புளி ஊற்றி குழம்பு வைத்தாலும் சரி- குழம்புக்கு அந்த மீன்தான் சாலப் பொருத்தம். வறுவலுக்கு ஆகாது. ஆனாலும் ஐந்து மணி என்பது அநியாயம். இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்பி நானும் கிளம்பிவிட்டேன். இருள் கூட விலகியிருக்கவில்லை. குருட்டாம்போக்கில் தடவித் தடவித்தான் செல்ல வேண்டியிருந்தது. புண்ணாக்குகார ஆயா கடையருகில் ஆளரவமே இல்லை. அங்குதான் ஆறா மீன் கிடைக்குமாம். 

உண்மையிலேயே மீன் வாங்கி வருவதற்காகத்தான் அனுப்பினார்களா அல்லது ஏதாவது தண்டனைக்கு அனுப்பினார்களா என்று சந்தேகம் வந்துவிட்டது. திரும்பிச் சென்றுவிடுவதுதான் உத்தமம் என்று தோன்றியது. எதிரில் இருந்த வயலில் நெற்கதிரை அறுத்து வைக்கோல் கட்டுகளாக போட்டு வைத்திருந்தார்கள். வைக்கோல் கட்டுகளுக்கு அருகிலே வெள்ளைத் துணி கிடந்தது. ஓர் ஆள் படுத்திருக்கிறார். பாதுகாப்புக்காக அவர் இரவில் இங்கேயே தங்கியிருக்கக் கூடும். அருகில் சென்று சூதானமாக எழுப்ப வேண்டும். தூக்கக் கலக்கத்தில் என்னைத் திருட வந்தவன் என்று நினைத்து தடியை எடுத்து விளாசினாலும் விளாசிவிடுவார். வெகு தூரத்திலேயே நின்று ‘மீன்காரர் வரலீங்களா?’ என்றேன். அவரைப் பொறுத்த வரைக்கும் அது சம்பந்தமேயில்லாத கேள்விதான். ஆனாலும் அந்தக் கேள்வி மட்டும்தான் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அவர் சலனமேயில்லாமல் படுத்துக் கிடந்தார். 

‘ஏனுங்க’ என்று மீண்டுமொருமுறை அழைத்தேன். இந்த முறை குரல் சற்று உயர்ந்திருந்தது. அந்தச் சத்தம் அவரை எழுப்பிவிட்டுவிட்டது. எழுந்து கண்களைத் தேய்த்துக் கொண்டார். அவரை எழுப்பிவிட்ட பாவம் எனக்கு வந்து சேரும்.  

‘நேரத்துல வந்தா மீன் கிடைக்கும்ன்னு சொன்னாங்’

‘அதுக்குன்னு?’ ஒரு இடைவெளி விட்டு ‘இந்நேரத்துலீங்களா?’என்றார். அந்தக் கேள்வியில் அவ்வளவு நக்கல் இருந்தது. பிதுக்கா பிதுக்கென்று முழித்தேன். 

‘பல்லு வெளக்கி சலவாதிக்கு போறதுன்னா போய்ட்டு வாங்க...அவியெல்லாம் வர நேரமாகும்’ என்றார். 

‘அதெல்லாம் ஆச்சுங்க’

‘அப்படின்னா சித்தங்கூரம் இருங்க’ என்றார். காத்திருக்கச் சொல்கிறார்.

கடுங்குளிரில் வாய்க்காலில் இறங்குவதற்கு தயக்கமாகத்தான் இருக்கும். தம் கட்டி முதல் முக்குளியைப் போட்டுவிட்டால் அப்புறம் அந்தச் சுகம் வேறு எதிலும் கிடைக்காது. ஆனால் வாய்க்காலில் குளிப்பதற்கான உபகரணங்கள் எதுவும் எடுத்து வந்திருக்கவில்லை. உபகரணங்கள் என்றால் துண்டு உள்ளிட்ட இத்யாதி இத்யாதி. ஆனால் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆட்கள் யாரும் வர மாட்டார்கள். தாராளமாக உள்ளே இறங்கலாம். கற்பனைக் குதிரையைத் தறிகெட்டு ஓட விடாமல் இழுத்துப் பிடியுங்கள். மேலே சொல்லிவிடுகிறேன். முன்பெல்லாம் இந்த இடத்தில் சகட்டு மேனிக்கு குதித்திருக்கிறேன். அதே தைரியம்தான். வாய்க்காலுக்குள் நான்கு அடிதான் எட்டு வைத்தேன். காலில் ஏதோ குத்தியது. குளிரில் உடனடியாக வலி தெரியவில்லை. எதற்கும் தண்ணீருக்கு வெளியில் சென்று பார்த்துவிடலாம் என்று தோன்றியது. கரைக்கு நகர்ந்து பார்த்தால் கண்ணாடி கிழித்திருந்தது. ரத்தம் பெருக்கெடுத்திருந்தது. இனிமேல் வாய்க்காலுக்குள் இறங்குவது நல்லதில்லை. கள்ளிப்பூட்டான் இலையைக் கசக்கி விட்டு காலை நெஞ்சுக்கு மேலாக தூக்கி வைத்து அமர்ந்திருந்தால் ரத்தம் நின்றுவிடும். இல்லையென்றால் ஈரத்தின் காரணமாக கசிந்து கொண்டேயிருக்கும்.

அந்த வைக்கோல் கட்டு காவல்காரர் வந்தார். நான் கோக்குமாக்காக அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு ‘வக்காரோலிங்க குடிச்சுட்டு பாட்டிலை வாய்க்காலுக்குள்ள ஒடச்சு உட்டுட்டு போய்டுறாங்க’ என்றார். அந்த இடம் அப்படியான இடம். நாவல் பழ மரங்களின் கீழாக பரந்த நிழல் விரிந்திருக்கிறது. செகளரியமாக அமர்ந்து குடிக்கிறார்கள். இந்தப் பக்கம் வாய்க்கால் அந்தப் பக்கம் வயல். அற்புதமான இடம். போதை தலைக்கேறும் போது திமிரில் பாட்டிலை உள்ளேயே வீசுகிறார்கள். என்னைப் போன்ற மாங்காய்கள் விடிந்தும் விடியாமலும் ரத்தக் காயம் பார்க்கிறார்கள். தன்னந்தனியாக அமர்ந்து பீப் வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தேன். வைக்கோல்காரர் சலவாதிக்குப் போய்விட்டார் போலிருந்தது. ஆளைக் காணவில்லை.

பொழுது புலரத் தொடங்கியிருந்தது. மீன்காரர் வந்தார். வலையைப் பிரித்தார். பெரிய ஆறா மீன்களாக சிக்கியிருந்தன. 

‘எவ்வளவுங்க?’ என்றேன்.

‘கிலோ ஐநூறு’.

இல்லாத போராட்டமெல்லாம் செய்து முந்நூற்றைம்பதுக்கு வாங்கி வந்தேன். உள்ளே நுழைந்ததும் ‘ஏமாத்திட்டானுங்க...இருநூறுன்னா சரி’ என்றார் அப்பா. எப்பவுமே இப்படித்தான். அதிசயமாகத்தான் வேலை செய்வேன். அப்படியே ஏதாவது வேலையைச் செய்தால் வாங்கியும் கட்டிக் கொள்கிறேன். நல்ல ஜோதிடரைப் பிடித்து பிறந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்து என் ராசியைப் பார்க்கச் சொல்ல வேண்டும்.

அம்மா சர்வசாதாரணமாக ‘மீனைக் கழுவிக் கொடு’ என்றார். ஆறா மீனைக் கழுவுவதைப் போன்ற கொடுமை எதுவுமில்லை. மீனின் மேற்பக்கத்தில் இருக்கும் முட்கள் கிழித்துவிடும். இதற்கும் அதே பல்லவிதான். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. தம்பிக்கு கழுவத் தெரியாது. காலை மட்டும் கிழித்தால் போதாது அல்லவா? அடுத்தபடியாக கைக்கு குறி வைக்கப்பட்டுவிட்டது. இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் மட்டும்தான் ‘உன் வாயையும் சேர்த்து கிழிக்க வேண்டும்’ என்று சொல்ல மாட்டீர்கள். மற்றவர்களிடம் புலம்பினால் அப்படித்தான் சொல்கிறார்கள். மற்றவர்கள் என்றால் மற்றவர்கள்தான். ம்க்கும்.

5 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

அடுத்த முறையில் இருந்து எதாச்சும் வாங்க சொன்னாங்கனா, நீங்க சைவம் நு சொல்லிடுங்க சார். சாப்பிடும்போது வேனும்னா கட்சி மாரிக்கலாம்.

திருச்சிற்றம்பலம் நிவாஸ் said...

நல்ல இருக்கிறது ...
சுற்றுலா செல்லும் இடத்தில் இப்படி தான் குடிகாரர்கள் குடித்து விட்டு பாட்டிலை காட்டில் உடைத்து விட்டு போய் விடுகிறார்கள் அவை அப்பாவி விலங்கினங்களை காவு வாங்குகிறது...

சேக்காளி said...

//நீங்கள் மட்டும்தான் ‘உன் வாயையும் சேர்த்து கிழிக்க வேண்டும்’ என்று சொல்ல மாட்டீர்கள்.//
ஆமாய்யா விடிய காலமே எந்திரிச்சு போயி மீனை வாங்கிட்டு வந்து அதை கழுவி குடுத்து பின்(பு)ன மீன் கொழம்பை சாப்புட உடாம வாயை கிழிச்சா பாவம் சும்மா உடாது.

Siva said...

Nanru

K Siva said...

Naren... "அப்பாவி விலங்கினங்களை" nu sonnathu yaara...??? ha..ha.. just kidding..