Jan 6, 2016

ஞயம்பட வரை

ப்ரத்லிபி மற்றும் அகம் மின்னிதழ் இணைந்து ஒரு கட்டுரைப் போட்டியை நடத்துகிறார்கள். ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?’ என்பதுதான் தலைப்பு. 1500 முதல் 2500 வார்த்தைகளுக்குள் கட்டுரை இருக்க வேண்டுமாம். யுனிகோட் அல்லது MS Word வடிவத்தில் tamil@pratlipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் பரிசு பதினைந்தாயிரம் ரூபாய். இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய். மூன்றாம் பரிசு ஐந்தாயிரம் ரூபாய். கட்டுரையை ஜனவரி 14 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இன்னமும் பத்து நாட்கள் கூட இல்லை. ஆனால் எழுதிவிட முடியும். 

எப்படி கட்டுரை எழுதுவது என்பது குறித்து திரு. வைத்தியநாதன் என்ற தமிழாசிரியர் சொன்ன சில விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கின்றன. 

தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்ட பிறகு கட்டுரையில் என்னவெல்லாம் எழுதப் போகிறோம் என்பதை மனதிலேயே ஓட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம்தான் கட்டுரையில் இருக்கப் போகிறது என்ற முடிவுக்கு வரும் வரைக்கும் எழுத ஆரம்பிக்கவே வேண்டியதில்லை. அப்படி முழுமையாக யோசிக்காமல் எழுத ஆரம்பிக்கிற காரணத்தினால்தான் கால் கட்டுரை, அரைக் கட்டுரை, முக்கால் கட்டுரை என்று எழுதி திருப்தியில்லாமல் கைவிடுகிறோம். மனதுக்குள் கட்டுரையின் முழு வடிவமும் இறுதியாகும் வரைக்கும் காத்திருக்கலாம். தவறில்லை. இறுதி செய்த பிறகு வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் எழுதி விட வேண்டும்.

இரண்டாவது முக்கியமான விஷயம்- வடிவமும் தனித்துவமும்.

முன்னுரை, பொருளுரை, முடிவுரை என்பதெல்லாம் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்காக எழுதுகிற வடிவ முறை. போட்டிகளுக்கு அல்லது அடுத்தவர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக எழுதும் போது இத்தகைய பழைய வடிவ முறைகளை தூக்கியடித்து விட வேண்டும். கட்டுரையின் முதல் பத்தியிலேயே உள்ளுக்குள் சரக்கு இருக்கிறது என்ற நினைப்பை உருவாக்கிவிட வேண்டும். தூண்டில் வைத்து எழுதப்படும் முதல் பத்திதான் மொத்தக் கட்டுரைக்குமான அஸ்திவாரம். அந்தத் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும் வாசகரை இறுதி வரி வரைக்கும் இழுத்துச் சென்றுவிட வேண்டும்.

உதாரணமாக தாய்மொழிக்கு நாம் என்ன முக்கியத்துவம் தருகிறோம் என்கிற கேள்விக்கான பதில் கிட்டத்தட்ட அத்தனை பேருக்குமே தெரிந்ததுதான். எல்லோராலும் சொல்லிவிட முடியும். ஆனால் எப்படி வித்தியாசமாகச் சொல்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. அந்தத் தனித்துவம்தான் நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டும். அதற்குத்தான் நம்முடைய அதிகபட்சமான மெனக்கெடல் இருக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம்- கட்டுரை எழுதும் போது நம்முடைய அறிவை எல்லாம் காட்ட வேண்டிய அவசியமில்லை. குறிப்புகள் எடுத்து தயார் செய்த பிறகு நமக்கு என்ன தெரியுமோ அதை நேர்மையாக எழுதினாலே போதும். அதே போல எழுதும் போது ‘பேனாவை எடுத்து மோட்டுவளையைப் பார்த்தபடி படு சீரியஸாக எழுதுகிற ஆளாக்கும்’ என்கிற நினைப்பில் படு தீவிரமாக சிரிப்பே வராமல் எழுத வேண்டியதில்லை. சிரிக்க வைக்கலாம். அழ வைக்கலாம். கோபப்பட வைக்கலாம். உணர்ச்சி வசப்பட வைக்கலாம். எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் போட்டு அடித்து டம்ளரில் ஊற்றியும் கொடுக்கலாம். ஆனால் அத்தனையும் அளவோடும் அபத்தமில்லாமலும் இருக்க வேண்டும். அவ்வளவுதான். 

அளவோடு இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? கட்டுரையின் முதல் draft தயாரானவுடன் சிறு இடைவெளி கொடுத்து மனதை திசை மாற்றிவிட வேண்டும். அந்தச் சமயத்தில் கட்டுரையைப் பற்றி நினைக்கவே கூடாது. பிறகு மீண்டும் அமர்ந்து சரி பார்க்கத் தொடங்கும் போது நிறைய மாறுதல்களைச் செய்யத் தோன்றும். நமக்குத் திருப்தி வரும் வரைக்கும் கட்டுரையைச் செம்மைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு எழுத்துக்கும் நாம்தான் கறாரான விமர்சகராக இருக்க வேண்டும். திருப்தியில்லையென்றால் தயவு தாட்சண்யமே இல்லாமல் மீண்டும் மீண்டும் திருத்தலாம். ஒவ்வொரு முறையும் நாம் எழுதியது ட்யூன் ஆகிக் கொண்டேயிருப்பதை உணர முடியும்.

எழுத்து என்பதே பயிற்சியினால் வருவதுதான். அதுவொன்றும் அடையவே முடியாத புதிர் சுரங்கமெல்லாம் இல்லை. ஆனால் ‘எழுத்து என்பது சாதாரணக் காரியமில்லை’ என்று நம்மவர்கள் புருடாவிட்டு அதை அதிபயங்கரமாக புனிதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. எழுத்தாளன் என்பவன் கடவுளும் இல்லை புண்ணாக்கும் இல்லை. அவர்களிடம்தான் அத்தனை கச்சடாவும் நிரம்பிக் கிடக்கின்றன. தமக்கு கீழாக இருக்கும் வரைக்கும் மதிப்பார்கள். தன்னைவிட சற்றே மேலெழும்புகிறான் என்று தெரிந்தால் கருணையேயில்லாமல் நசுக்க முயற்சிக்கிற எழுத்தாளர்கள்தான் இங்கு அதிகம். அவர்களைப் பார்த்து இம்மியளவும் பயப்பட வேண்டியதில்லை. 

தொடர்ந்து முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் எழுத முடியும். வாசிப்பும், கொஞ்சம் பொறுமையும் அவசியம். அவ்வளவுதான். அதே சமயம் ‘நாம் முழுமையாகக் கற்றுக் கொண்டு எழுத ஆரம்பிக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தால் எந்தக் காலத்திலும் எழுதவே ஆரம்பிக்க மாட்டோம். தெரிந்ததை எழுத வேண்டியதுதான். தவறு இருக்கத்தான் செய்யும். இருக்கட்டும். போகப் போக சரி செய்து கொள்ளலாம். ஆரம்பத்தில் திணறிக் கொண்டிருக்கும் போது யாராவது நக்கலடிப்பார்கள். அந்தப் பக்கமாகச் சென்று கெக்கபிக்கே என்று சிரிப்பார்கள். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் இடித்துக் காட்டுவார்கள். நேர்மையான விமர்சனம் என்றால் திருத்திக் கொள்ளலாம். வயிற்றெரிச்சலில் விமர்சிக்கிறார்கள் என்று தெரிந்தால் கண்டுகொள்ளவே வேண்டியதில்லை. நம்முடைய பாதை நமக்கானது. அடித்து நொறுக்கியபடி சென்று கொண்டேயிருக்கலாம். 

எழுதுகிற ஆர்வமிருந்து எழுதுவதற்கான தயக்கத்துடன் யாரேனும் இருந்தால் இந்தப் போட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரை எதுவுமே எழுதாதவர்களுக்கு ஏதேனும் டிப்ஸ் தேவைப்பட்டால் மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். நான் ஒன்றும் பழம் தின்று கொட்டை போட்டவனில்லைதான் என்றாலும் என் அரை மண்டைக்குத் தெரிந்தவற்றை வஞ்சகமில்லாமல் சொல்லித் தருகிறேன்.

9 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

கட்டுரை எப்படி எழுதுவது என்பதை பற்றிய அழகான நல்ல கட்டுரை.

திருச்சிற்றம்பலம் நிவாஸ் said...

எனக்கும் எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை ... இங்கே சொல்லி இருக்கும் விசயங்கள் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது ... நானும் நிச்சயம் எழுதுகிறேன்... நன்றி சார் ...

சேக்காளி said...

// இதுவரை எதுவுமே எழுதாதவர்களுக்கு ஏதேனும் டிப்ஸ் தேவைப்பட்டால் மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும்.//
நான் மின்னஞ்சல் ல அனுப்பி நீங்க மின்னாத அஞ்சல் ல பதில் அனுப்பி எல்லாம் சரிப்படாது.இதுவரை நான் எழுதியிருக்கும் பின்னூட்டங்களை(comment) வைத்து எனக்கு எழுத வருமா இல்லை வராதா ன்னு இங்குனகுள்ளேயே சொல்லிருங்க.

ADMIN said...

கட்டுரை மிக அருமை. மிக எளிமையாய், அனைவருக்கும் புரியும்படி எழுதியிருக்கிறீர்கள். புதியதாய் எழுதுபவர்களுக்கு/ எழுத நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

///எழுத்து என்பதே பயிற்சியினால் வருவதுதான். அதுவொன்றும் அடையவே முடியாத புதிர் சுரங்கமெல்லாம் இல்லை. ஆனால் ‘எழுத்து என்பது சாதாரணக் காரியமில்லை’ என்று நம்மவர்கள் புருடாவிட்டு அதை அதிபயங்கரமாக புனிதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. எழுத்தாளன் என்பவன் கடவுளும் இல்லை புண்ணாக்கும் இல்லை. அவர்களிடம்தான் அத்தனை கச்சடாவும் நிரம்பிக் கிடக்கின்றன. தமக்கு கீழாக இருக்கும் வரைக்கும் மதிப்பார்கள். தன்னைவிட சற்றே மேலெழும்புகிறான் என்று தெரிந்தால் கருணையேயில்லாமல் நசுக்க முயற்சிக்கிற எழுத்தாளர்கள்தான் இங்கு அதிகம். அவர்களைப் பார்த்து இம்மியளவும் பயப்பட வேண்டியதில்லை. ///

எழுத்தாளர்களும் மனிதர்கள்தானே..அவர்களுக்குள்ளும் போட்டி, பொறாமை இன்னபிற அவயங்கள் இருக்கத்தானே செய்யும்? நீங்கள் குறிப்பிட்டதுபோல சில எழுத்தாளர்கள் வளரும் எழுத்தாளர்களை பாராட்டுவதும் இல்லை.... உற்சாகப்படுத்துவதும் இல்லை..!


Anonymous said...

சேக்காளி நீங்கள் உலக
புகழ்பெற்ற எழுத்தாளர் நித்தி

Anonymous said...

சேக்காளி... உங்களுக்கு வராது ஆனா வரும்!!!

சேக்காளி said...

அவரு எழுதுனதுனாலயா ஒலக புகழை அடைஞ்சாரு? பேருல்லாதவரே?

சேக்காளி said...

//சேக்காளி... உங்களுக்கு வராது ஆனா வரும்!!!//
1 மற்றும் 2 ஐ தானே சொல்லுறீங்க.

சீனிவாசன் said...

புதிதாய் எழுத வருபவர்களுக்கு அல்லது எழுதலாம் என நினைப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். எழுத்தாளர்களை பற்றிய தங்களது கருத்து முற்றிலும் உண்மை. சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள்.