Jan 5, 2016

அரக்கன்

ஏகப்பட்ட விஷயங்களை பேச்சிலும் எழுத்திலுமாக மட்டுமே நிறுத்திக் கொள்கிறோம். நிறுத்தி உரித்துப் பார்த்தால் நம்மில் முக்கால்வாசிப் பேரின் லட்சணம் பல்லிளித்துவிடும். கடந்த வெள்ளிக்கிழமை வரைக்கும் ஆனந்த விகடன் பெங்களூரில் கிடைக்கவில்லை. ஊருக்குச் சென்றுவிட்டேன். அப்பா ஒரு பிரதி வாங்கி வைத்திருந்தார். மகனின் படம் வந்திருக்கிறது என்கிற பரவசத்தில் வீதியில் போகிற வருகிறவர்களிடமெல்லாம் காட்டியிருப்பார் போலிருக்கிறது. கசங்கி கந்தலாகிக் கிடந்தது. கை படாத ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று கடைக்குச் சென்றால் பாலித்தீன் பையில் அடைத்துக் கொடுக்கிறார்கள். 40 மைக்ரான் பாலித்தீன் பை என்று எழுதியிருந்தார்கள். இதழைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இயலுமிடங்களிலெல்லாம் ப்ளாஸ்டிக் உபயோகத்தை குறைத்துவிட வேண்டும் என்பதைக் கொள்கையளவில் பின்பற்றுகிறேன். நம்மால் முடிந்த காரியம் அதுதான்.

விகடன் மட்டுமில்லை- உயிர்மை, காலச்சுவடு, கணையாழி என்று கிட்டத்தட்ட அத்தனை பத்திரிக்கைகளும் ஒவ்வொரு மாதமும் இதழ்களை ப்ளாஸ்டிக் பைகளில் போட்டுத்தான் தபாலில் அனுப்புகிறார்கள். இதழ்களின் சந்தாவை ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இனி ப்ளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு தபாலில் வரும் எந்த இதழின் சந்தாவையும் புதுப்பித்துக் கொள்ளப் போவதில்லை. ஒருவன் புதுப்பிக்கவில்லை என்றால் அவர்களுக்கு பெரிய நட்டம் எதுவும் ஆகாது என்று தெரியும். ஆனால் குறைந்தபட்சமாக பாலித்தீன் குப்பையின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைக்கலாம் அல்லவா? இந்தக் காரணத்துக்காகத்தான் புதுப்பிக்கப் போவதில்லை என்று ஆயிரம் பேர் அறிவித்தாலும் கூட  வீரியத்தைப் புரிந்து கொள்வார்கள். 

தெரிந்தோ தெரியாமலோ நமது சூழலை பாழடித்துக் கொண்டிருக்கிறோம். தெரியாமல்- என்ற சொல்லை பயன்படுத்த முடியாது. தெரிந்தேதான் பாழடிக்கிறோம். ஆனால் நம்மிடையே ஒரு சாவகாசம் புழங்குகிறது. ‘நாம் ஒருத்தர் ஒழுங்காக இருந்தால் போதுமா’ என்று நினைத்துக் கொள்கிறோம். அப்படியில்லை. நம்மிடமிருந்துதான் மாற்றம் தொடங்க வேண்டும். ஊரையும் உலகையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதுகில் ஒரு வண்டி அழுக்கைக் கட்டிக் கொண்டு அடுத்தவர்களின் முதுகைப் பார்ப்பது போலத்தான். ஜீன்ஸ் பேண்ட் எவ்வளவு நீரை வீணடிக்கிறது என்பதைக் கூட யோசிக்காமல் ஜீன்ஸூம் ரீபோக் ஷூவும் அணிந்து கொண்டிருப்பவன் தன்னை சூழலியலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலைமைதான் இங்கே இருக்கிறது. 

நண்பர் ஜெயராஜின் வீட்டில் முகம் கழுவும் க்ரீம் ஒன்றைக் கொடுத்தார். இதுவரையிலும் அத்தகைய க்ரீம்களைப் பயன்படுத்தியதில்லை. முகம் சுத்தமாகிவிட்டது போல இருந்தது. இனிமேல் வீட்டிலும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எழாமல் இல்லை. தினந்தோறும் அலுவலகத்துக்கு சல்மான் துல்கர் மாதிரி செல்லலாம் என்ற கற்பனை கூட சிறகடித்துக் கொண்டிருந்தது. யதேச்சையாக ஒரு செய்தி கண்ணில்பட்டு சிறகை முறித்துப் போட்டுவிட்டது.  மிகச் சமீபத்தில் அமெரிக்காவில் மைக்ரோபீட்ஸைத் தடை செய்து ஒபாமா கையெழுத்திட்டிருக்கிறார். இந்த மைக்ரோபீட்ஸ்தான் முகம் கழுவும் க்ரீம்களில் நிறைந்திருக்கின்றன. அது குறித்தான விவரங்களைத் துழாவிப் பார்த்தால் திக்கென்றிருக்கிறது. முகம் கழுவும் க்ரீம்களிலும், க்ளோஸ்-அப், கோல்கேட் உள்ளிட்ட பற்பசைகளிலும் இருக்கும் சிறு சிறு நிறமிகள் இவைதான். தொட்டால் சொர சொரவென்று இருக்கக் காரணமும் அவைதான். மைக்ரோபீட்ஸ் நீரில் கரைவதில்லை. அப்படியே சாக்கடைகளிலும் கால்வாய்களிலும் கலந்து அவற்றை மாசுபடுத்துகின்றன. நீர் வாழ் உயிரினங்களை சாகடிக்கின்றன. இப்பொழுதுதான் அமெரிக்காவில் தடை செய்திருக்கிறார்கள். இந்தியாவில் தடை செய்வதற்கு இன்னமும் பல வருடங்கள் ஆகக் கூடும். 

அரசாங்கம் தடை செய்கிறதோ இல்லையோ, இத்தகைய பொருட்களை பயன்படுத்துவது குறித்து தனிமனிதர்களாகிய நாம் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து முடிவெடுக்கலாம். எவை எவை சூழலுக்கு கெடுதல்களை உருவாக்குகின்றன என்பது ஆளும் வர்க்கத்திற்கு நன்றாகவே தெரியும். அவர்கள் நினைத்தால் ஏகப்பட்ட விஷயங்களை ஒழுங்குபடுத்த முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். இந்தியாவை சுத்திகரிப்போம் என்று வாய் கிழிய பேசுவார்களே தவிர மோடியும் சரி; ராகுலும் சரி- ரிலையன்ஸ் மாதிரியான பெரும் முதலாளிகளிடம் எந்தவிதத்திலும் வாலை ஆட்ட மாட்டார்கள். சீவக்கட்டையைத் தூக்கி நின்றபடி போஸ் கொடுப்பதோடு அவர்களின் வேலை முடிந்துவிடுகிறது. இந்தியா சுத்தமாகிவிடுமா?

மருத்துவப் பயன்பாடுகள் மாதிரியான அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்தான் இந்தியாவில் ப்ளாஸ்டிக் இறக்குமதி செய்யப்பட வேண்டும் அல்லது தயாரிக்கப்பட வேண்டும் என்று ஒரேயொரு உத்தரவில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும். ஆனால் ‘அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன’ என்று ஏதாவது சாக்குப்போக்குதான் சொல்வார்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் கவாத்து அடிக்கும் மளிகைக்கடைக்காரர்களிடம் மல்லுக்கு நிற்பார்கள். அதிகார வர்க்கம் எப்பொழுதுமே அப்படித்தான். பணம் படைத்தவனிடம் கூழைக் கும்பிடு போடும். இல்லாதவனை ஏறி மிதிக்கும்.

தொலையட்டும்.

தனிமனிதர்கள் நினைத்தால் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவேனும் சூழலியலுக்கு எதிரான பொருட்களைத் தவிர்க்க முடியும். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வரை துணிக்கடைகளில் மஞ்சள்பைகளைத்தான் கொடுத்தார்கள். மளிகைக்கடைகளில் காகிதங்களில்தான் பொட்டலங்கள் கட்டினார்கள். கறிக்கடைகளில் இலைகளில்தான் கறிகளைக் கட்டினார்கள். இப்பொழுதுதானே எல்லாம் மாறியிருக்கிறது? செளகரியம், பார்க்க அழகாக இருக்கிறது, பணம் மிச்சம், வேலை சுலபம் ஆகிய சில்லரைத்தனமான காரணங்களுக்காகத்தான் நிலத்தையும் நீரையும் நாம் நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதையெல்லாம் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவே மாட்டோம்.

ஜீவ கரிகாலன் அழைத்து சூழலியல் சார்ந்து ஒரு கட்டுரையை கணையாழிக்கு அனுப்பச் சொன்னார். அவர் கணையாழியின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. தங்கள் அளவில் சிந்திக்காத எந்தப் பத்திரிக்கைக்கும் சூழலியல் சார்ந்த கட்டுரைகளை பிரசுரிக்க யோக்கியதை கிடையாது. இதைச் சொன்னால் பத்திரிக்கைகளுக்கு எரிச்சல் வரத்தான் செய்யும். ஆனால் பத்திரிக்கைகள் குறைந்தபட்ச முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை.

ப்ளாஸ்டிக் பைகளில் இதழ்களை அனுப்பிவிட்டு உள்ளுக்குள் ‘ப்ளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என்று கட்டுரை வெளியிடுவது முரணாக இல்லையா? சூழலியல் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் விகடனுக்கும் கூட இது பற்றிய புரிதல் இருக்காதா? தபாலில் அனுப்புவதாக இருந்தால் கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கடைகளில் வைத்து விற்கும் ஒவ்வொரு இதழையும் ப்ளாஸ்டிக் பைகளில் போட வேண்டிய அவசியம் என்ன? விகடன் அடைத்துத் தரப்படும் ப்ளாஸ்டிக் பையைத் தயாரிப்பவர்கள் ரிலையன்ஸ் பேக்கேஜிங் லிமிடெட். இந்தியாவில் ப்ளாஸ்டிக்கை அதிக அளவில் தயாரிக்கக் கூடிய நிறுவனங்களில் ஒன்று. விகடன் எப்படியும் மூன்று லட்சம் பிரதிகளுக்கு குறைவில்லாமல் விற்குமா? ஒரே வாரத்தில் மூன்று லட்சம் ப்ளாஸ்டிக் பைகளை மண்ணில் சேர்க்கிறார்கள். அந்தப் ப்ளாஸ்டிக் பை வேறு ஏதேனும் காரியத்துக்காக பயன்படுகிறதா என்றால் அதுவுமில்லை. பிரித்தவுடன் நிலத்தில்தான் வீசுவார்கள்.

நாற்பது மைக்ரான் ப்ளாஸ்டிக்கில்தான் கொடுக்கிறோம்; ஐம்பது மைக்ரான் ப்ளாஸ்டிக்கில்தான் கொடுக்கிறோம் என்பதெல்லாம் சால்ஜாப்புகள்தான். எவ்வளவு மைக்ரானாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ப்ளாஸ்டிக் ப்ளாஸ்டிக்தான். அவ்வளவு சீக்கிரம் மக்கப் போவதில்லை. இதழை அழகாகக் கொடுக்கிறோம்/பத்திரமாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்துக் கொடுத்துவிட்டு சூழலியல் கட்டுரைகளை பிரசுரிப்பது எந்தவிதத்திலும் பொருத்தமானது இல்லை. சென்ற வாரத்தில்தான் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் பெயரைச் சேர்த்திருக்கிறார்கள். ஒரே வாரத்தில் விமர்சித்துப் பேசுவது சரியில்லைதான். ஆனால் மனதில் பட்டதைப் பேசி விடலாம். தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். இனிமேல் ப்ளாஸ்டிக்கை பயன்படுத்தப் போவதில்லை என்று வெகு சிலராவது முடிவு செய்தால் கூட நல்லதுதானே? 

15 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

ஆனந்த விகடன் ஒவ்வொரு இதழையும் ப்ளாஸ்டிக் பைகளில் போடுவதில்லை.
அந்த வார இதழுடன் ஏதேனும் இலவச இணைப்பு இருப்பினால் மட்டும் , அதையும் சரி என்று வாதிடவில்லை!
இது ஆனந்த விகடனுக்கான சின்ன வக்காளத்து மட்டுமே.

Senthil said...

ஜீன்ஸ் பான்ட் - சூழளியாலரின் விருப்ப உடையாக இருக்க பின் வரும் காரணங்களை அடுக்கலாம்
1. குறைந்தது 10 முறை உடுத்திய பின்னரே துவைக்க வேண்டியிருக்கும்
2. தேய்க்க வேண்டிய அவசியமில்லாததால் மின்சார உபயோகம் குறைகிறது.
3. தற்போதைய துவைக்கும் இயந்திரங்கள் எல்லா வகையான துணிகளுக்கும் ஒரே அளவிலான தண்ணிரை தான் செலவிடுகிறது.

மாறுங்கள் ஜீன்ஸிற்கு...

Pandiaraj Jebarathinam said...

முதல் பக்கத்தில் பெண்ணியம் பேசிவிட்டு, நடுப்பக்கத்தில் புடவையை அவிழ்த்து விட்டிருப்பார்கள்.

நல்ல கட்டுரை

சேக்காளி said...

@senthil //தற்போதைய துவைக்கும் இயந்திரங்கள் எல்லா வகையான துணிகளுக்கும் ஒரே அளவிலான தண்ணிரை தான் செலவிடுகிறது//
கட்டுரையில் ஜீன்ஸ் துணி உற்பத்திக்காக ஆகும் தண்ணீரை பற்றித்தான் மணி குறிப்பிட்டிருப்பார் என நினைக்கிறேன்.

சேக்காளி said...

அட உடுங்கய்யா. பிளாஸ்டிக்கை முக்கி சாப்புடுறா மா(தி)ரி சைனாக்காரன் ஏதாவது ஒரு ஜாம் ஐ கண்டு பிடித்து யாவரத்த ஆரம்பிப்பான். அப்ப பிளாட்டிக் பெரச்னை முடிவுக்கு வந்துரும்.இல்லேன்னா ஆன்ட்ராய்ட் டுல ஏதாவது ஆப்ஸ் வரும். அப்ப பாத்துக்கலாம்.
அடுத்த மொதல்வரு கலைஞரா இல்ல ஸ்டாலினா ன்னு போட்டி அறிவிச்சு வலைத்தளத்து டிராபிக்க எகிற வையுங்க பாஸ்.

நாச்சியப்பன் said...

நல்ல பதிவு.

அ) 3R அதாவது Reduce - Reuse - Recycle என்பதை பள்ளிக்குழந்தைகளின் தாரக மந்திரமாக்க வேண்டும்.

ஆ) ஜீன்ஸ் துணி மட்டுமல்ல. அசைவ உணவு வகைகள் நீர் மேலாண்மைக்கு உலகில் மிகப்பெரிய சவால். சைவ உணவு வகைகளை உட்கொண்டு அசைவ வகைகளை அறவே தவிர்ப்பதன் மூலம் நீரைப் பாதுகாக்கலாம். பார்க்க: http://www.theguardian.com/environment/2010/jun/02/un-report-meat-free-diet

SIV said...

1. மளிகை கடையில் துணிப்பை கொண்டு பொருட்கள் வாங்குதல்.
2. குப்பைகளை குப்பை தொட்டியில் போடுதல்
3. மொபைல், டிவி போன்ற electronic பொருட்களை முடிந்தவரை ரிபேர் செய்து பயன்படுத்துதல்.
4. ஹோட்டல் பார்சல் வாங்கும் போது சாம்பார் பிடிக்க பாத்திரங்கள் கொண்டு செல்லுதல்.
5. தண்ணீர் சிக்கனம்
6. போது போக்குவரத்து பயன்படுத்துதல்
இவையெல்லாம் யாருடைய சார்பும் இல்லாமல் நம்மால் செய்ய முடியும் சூழியல் நடவடிக்கைகள்

Anonymous said...

Vikatan year book rs125
Manamakal rs99
Pasumai dairy rs100
Avalkitchan rs60
Ithukkellam cover illa ;ana ocla kitaicha time pass attaikkukooda cover poduvanga

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கடைக்காரர் பொருட்களை பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுக்கும்போது வேண்டாம் என்று சொல்கிறார்களோ அவர்கள்தான் மண உறுதி மிக்கவர்கள் என்று சொல்லலாம். காபிப் பொடிக் கடையில் பிளாஸ்டிக் பை வேண்டாம் என்று சொல்வேன். என்னை விநோதமாகப் பார்ப்பார் கடைக்காரர்.

Anonymous said...

YOUR 'NERMAI'IS SIMPLY GREAT.
IT SHOWS YOU ARE INDIFFERENT TO REWARDS/ RECOGNITION.
HYPOCRICY OF 'ANANDAVIKATAN' IS WELL KNOWN.IN ONE ISSUE THEY WILL AND JOKE,CRITISISE 'KALAIGNER'.NEXT ISSUE THEY WILL CARRY HIS PICTURE IN THE COVER.THE SAME IS FOR VIJAYAKANTH.
MANY EXAMPLES CAN BE DRAWN FROM THEIR ARTICLES.
THEY TALK ABOUT 'KALVI KOLLAAI'.BUT THEIR'S IS 'PATTRIKAI KOLLAI'.
ONE 'ANANDA VIKATAN' HAS BECOME9(NINE) VIKATANS COSTING THE READER MORE THAN RS.200/ PER MONTH.
ADD TO THIS NINE TIMES ADVERTISEMENT REVENUE. IS THIS NOT 'KOLLAI'?
IN MANY ISSUES OF ANCILLARY VIKATANS THEY ARE NOT ABLE TO FILL PAGES.
THEN HOW WE GET 'MORAL' RIGHT TO QUESTION OTHERS.
THEY WRITE TOLERNCE/LACK OF 'SAKKIPPUTHANMAI' AS TODAYS PROBLEMS.
THEN HOW THEY JUSTIFY THEIR ACTION TOWARDS 'MADHAN'.
HOW THEY ARE DIFFERENT FROM JEYALALITHA.
M.NAGESWARAN.

பொன்.முத்துக்குமார் said...

// இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வரை துணிக்கடைகளில் மஞ்சள்பைகளைத்தான் கொடுத்தார்கள். மளிகைக்கடைகளில் காகிதங்களில்தான் பொட்டலங்கள் கட்டினார்கள். கறிக்கடைகளில் இலைகளில்தான் கறிகளைக் கட்டினார்கள். //

”மஞ்சப்பை” என்று எவ்வளவு இழிவுபடுத்தினார்கள் சினிமாவிலும் ஊடகங்களிலும் ! சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மஞ்சள் துணிப்பை இழிவு, இயற்கையை சீரழிக்கும் தூக்குப்பைகளும் வண்ணவண்ண வழுவழு ப்ளாஸ்டிக் பைகளும் பயன்படுத்துவது நாகரிகம்.

”ஏழே நாளில் சிகப்பழகு” என்று நமது தோலின் இயற்கையான கருமை / பழுப்பு நிறத்தை இழிவு என்று தாழ்வுணர்ச்சி கொள்ள நிர்ப்பந்தப்படுத்தி கல்லா கட்டி, அவர்களுக்கு நடைபாவாடை விரித்தவர்களாயிற்றே.

ஆஹா, நாமல்லவா படித்தவர்கள்.

Ram said...

பிலாஸ்டிக் பற்றி எழுதிய இதே நாளில் மீன் பிடித்து, சமைத்தல் பற்றிய விலாவரியான பதிவையும் எழுதியது என்னவொரு முரண்.

மணி அண்ணே, அசைவம் பிலாஸ்டிக்-க்கு நிகராக சூழ்நிலைக்கு கேடு விளைவிப்பதே. நீங்கள் வீகன் ஆவதையும், பின் அறிவுரை சொல்ல பொருத்தமான (முழு) தகுதியுடன் பிலாஸ்டிக் உபயோகத்தைப் பற்றி பதிவிடுவதையும், அதைகண்டு உலகம் நாணிக் கோணி பிலாஸ்டிக் உபயோகத்தை குறைப்பதையும் காண ஆவலோடு காத்திருக்கிறேன். :-)

- சுப இராமநாதன்

Anonymous said...

I DID NOT WANT TO WRITE AGAIN.
BUT THE LEVEL OF HYPOCRICY IS SO MUCH THAT ICAN NOT KEEP QUIET.
IT IS ' KU. SIVARAMAN'S' ARTICLES THAT FIGHT FOR NATURAL FOODS/THANIYANGAL ETC.
MANY TIMES HE HAS WRITTEN AGAINST MULTI-NATIONAL FOOD PRODUCTS AND THEIR CHEATING THE COMMON PUBLIC BY FALSE CLAIMS.
THIS TIME 'ANANDA VIKATAN'S' இலவச இணைப்பு' WAS A 'COMPLAN' SATCHE PTOMISING EXTRA GROWTH
WHICH IS NOT MEDICALLY POSSIBLE.
YOU DRAW YOUR OWN JUDGEMENT.
M.NAGESWARAN.

Mahalingam said...

They are using plastic cover because of rain session? or all session?.

krish said...

internet ல subscribe பண்ணா இன்னமும் அதிகமா சுற்றுசூழலை பாதுகாக்கலாம்.செலவும் கம்மி