Jan 4, 2016

ஆவணம்

கல்வி மற்றும் மருத்துவ உதவி கோரி வரும் கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. உதவி கோருபவர்களிடம் பேசி அவர்களின் தேவைகளைப் பற்றி விசாரிப்பது சிரமமில்லை. ஆனால் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது. யார் அழைத்தார்கள், என்ன உதவி கோரி அழைத்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் குழம்பச் செய்கின்றன. வேறு சிலரிடம் தேவையான மேலதிகத் தகவல்களைக் கேட்டு ‘மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள்’ என்றால் பலர் திரும்ப அழைப்பதில்லை. ஏதோவொரு உதவி கேட்டார்கள் என்ற ஞாபகம் இருக்கும். ஆனால் அவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை சேமிக்காமல் விட்டிருப்பேன்.

இப்படி பாதியில் கைவிடப்படும் கோரிக்கைகள் குற்றவுணர்ச்சியை உருவாக்குகின்றன. சரியாக பதில் சொல்லாமல் விட்டுவிட்டோமோ என்று வருத்தமடையைச் செய்கின்றன. தொடர்பு கொண்டவர்கள் என்னைப் பற்றித் தவறாக நினைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதே போலத்தான் மின்னஞ்சல்களும். எல்லாவற்றையும் ஒரு முறை வாசித்துவிடுகிறேன். சில விஷயங்களை உறுதிப்படுத்திக் கொண்டு பதில் அனுப்பலாம் என்று பதில் அனுப்பாமல் விட்டுவிடும் போது அந்த மின்னஞ்சல் வெகு கீழாகச் சென்றிருக்கும். பிறகு தவறிப் போய்விடுகிறது. 

இதையெல்லாம் வேண்டுமென்றே செய்வதில்லை என்றாலும் தவறு தவறுதான். ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டால் அதிகபட்ச சிரத்தையை அதில் காட்ட வேண்டும். எல்லாவற்றையும் மனதில் நிறுத்திச் செய்வது சாத்தியமில்லை என்கிற ஒரு நிலைமை ஏற்படும் போது வேறு ஏதேனும் உபாயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது. 

வருகிற கோரிக்கைகளை சரியாக ஆவணப்படுத்தி அது குறித்து அதன் அப்போதைய நிகழ்நிலை (Status) குறித்து தொடர்ந்து பதிவேற்றம் செய்துவிடலாம். கூகிள் ஆவணத்தின் (Docs) வழியாக இது செய்யப்படும். பயனாளரின் பெயர், என்ன கோரிக்கை வந்திருக்கிறது, யார் ஒருங்கிணைக்கிறார்கள், எவ்வளவு தொகை தேவைப்படுகிறது, தற்போதைய நிலை என்ன உள்ளிட்டவை குறித்து பதிவு செய்துவிடலாம். இது பொதுவெளியில் இருக்குமெனில் யார் வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ள முடியும்.

அறக்கட்டளைக்கு எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்ற விவரத்தை வெளியிடுவது மட்டும் போதாது. என்னவிதமான உதவிகள் கோரி கோரிக்கைகள் வருகின்றன, அந்தக் கோரிக்கைகளின் தற்போதைய நிலை என்ன, ஒருவேளை நிராகரிக்கப்பட்டால் எதனால் நிராகரிக்கப்படுகிறது என்பதையும் வெளியிடுவதுதான் சரியாக இருக்கும். அதுதான் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொடுக்கும். அதற்கான ஆவணப்படுத்துதால் இது. புது வருடத்திலிருந்து தொடங்கப்பட்டிருக்கும் உருப்படியான செயல்.

ஆவணத்தை இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறேன். இந்தத் தருணத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபது கோரிக்கைகள் பரிசீலனையில் இருக்கின்றன. எல்லாவற்றையும் அப்டேட் செய்து கொண்டேயிருக்கிறேன். வார இறுதிக்குள் பட்டியல் ஓரளவு முழுமையடைந்துவிடும். இனி வருகிற ஒவ்வொரு கோரிக்கையையும் ஆவணத்தில் பதிவு செய்துவிடப்படும்.

பட்டியல் இணைப்பில் இருக்கிறது.
                                                                 ***

வெள்ள நிவாரணப் பணியில் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து தெளிவு இருக்கிறது.  ஏற்கனவே அறிவித்திருந்தது போல கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகளைச் செய்யவிருக்கிறோம். உதாரணமாக தையல் வேலை செய்து கொண்டிருந்தவராக இருப்பின் அவருக்கு தையல் எந்திரம் வாங்குவது, மீனவர்களுக்கு மீன் வலை வாங்குதல்- இப்படியான உதவிகள். இந்த உதவியை மட்டும்தான் செய்யப் போகிறோம் என்று வரையறை எதுவுமில்லை. ஆனால் செய்கிற உதவி அவர்களுக்கு பயன்படுகிற உதவியாக இருக்க வேண்டும். 

நிறையப் பேரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இது சற்றே சிரமமான காரியம். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனாலும் செய்துவிடலாம். சரியான குடும்பங்களைக் கண்டறியும் வேலையை ஏற்கனவே ஆரம்பித்திருக்கிறோம். ஒரே கட்டமாக அத்தனை குடும்பங்களுக்கும் உதவப் போவதில்லை. ஒரு கட்டத்தில் ஐந்து அல்லது பத்து குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து உதவிவிட்டு அடுத்தடுத்த கட்டங்களாகச் செய்யலாம். இத்தகைய உதவிப் பணிகளின் போது தவறு நிகழவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் மெதுவாகவே அடிகளை எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஏதேனும் தவறுகள் நிகழுமாயின் அவற்றை அடுத்தடுத்த கட்டங்களில் சரி செய்துவிடுவது எளிதாக இருக்கும்.

குடும்பங்களை அடையாளம் காணும் பணிக்கு புத்தாண்டு விடுமுறை முடிந்து வருகிற சில கல்லூரி மாணவர்களையும் பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறோம். அடுத்த வாரத்தில் இது குறித்து மேலும் விரிவாக எழுத முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது.

                                                             ***

ரசீது அனுப்புவதற்காக நன்கொடையாளரின் முகவரி, PAN அட்டை எண் போன்றவற்றைக் கேட்டிருந்தேன். மிகச் சொற்பமான நன்கொடையாளர்கள் மட்டுமே விவரங்களை அனுப்பியிருக்கிறார்கள். வருட இறுதியில் வருமான வரித்துறையில் தாக்கல் செய்யும் போது அனானிமஸாக வந்த நன்கொடைகளுக்கு அறக்கட்டளை வரி கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வரியாகவே பெருந்தொகை போய்விடும் வாய்ப்பிருக்கிறது. அதனால் முடிந்தவரைக்கும் விவரங்களை அனுப்பி வையுங்கள். விவரங்களை அனுப்பியவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக ரசீதுகளை அனுப்பி வைத்துவிடுகிறேன்.

2 எதிர் சப்தங்கள்:

www.rasanai.blogspot.com said...

dear mani

someone in the earlier old articles has suggested "google spreadsheet" idea which was widely used during chennai floods and the tabulation helps a lot to understand what is happening and as you said, this kind of transparency for the needy cause makes nisaptham activities more credential.keep it up.

whenever i am sending money for our main activities, i will definitely quote my PAN. visited suresh home in person, they will inform me the required amount today(monday), so will let you know by mail "attachments".

do it at your own pace with proper planning and swift execution. we are always backing nisaptham. cheers.

anbudan
sundar g chennai

Unknown said...


I am wondering about the plan of tabulation of requests made/sponsored. You are moving on to perfection to more perfection. In this regard, I would like to make a request for a small correction, which has occurred, because of your heavy work pressure, I believe. In the Serial No.2 about the date, it is mentioned as 15.12.2016 instead of 15.12.2015 (for Master Raghuram), I think, which can be edited. I think the Column No. 2 is date of receipt of the letter or may the date of letter of origination.

with the hope that u will not feel otherwise

with regards

Sathyamurthy M.