Jan 4, 2016

முடிச்சு

கோகுல் சமீபத்தில் பெங்களூரில் பிரபலமடைந்த பெயர். கேரளத்துக் குட்டன். பெங்களூர்வாசி. படிக்கிற காலத்தில் தான் காதலித்த பெண்ணை அடைய வேண்டும் என்பதற்காக கட்டிய மனைவியைக் கொன்றுவிட்டு தனது முன்னாள் காதலியின் கணவனுக்கு தீவிரவாதிப் பட்டம் கட்டி கழுவிலேற்ற சில சதி வேலைகளைச் செய்த போது சிக்கிக் கொண்டான்.

வேலையில்லாத மூளை என்பது பிசாசு வாழும் வீடு என்பார்கள். கண்டதையும் யோசித்து இல்லாததையும் பொல்லாததையும் செய்யத் தொடங்கிவிடும். ஆனால் கோகுலுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. வேலை இருந்து கொண்டேதான் இருந்தது. சாப்ட்வேர் இஞ்சினியர். நல்ல சம்பளம். நல்ல மரியாதை. இருந்தாலும் கண்டதையெல்லாம் யோசித்து பிசாசாக மாறியிருக்கிறான். 

சாதியைக் காட்டி பருவக் காதலைப் பிரித்து வேறொரு பெண்ணைப் பார்த்துத் பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்த பிறகு புது மனைவியை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றுவிட்டான். ஆரம்பத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் புயலும் சுனாமியும் சேர்ந்து அடித்தது. ஃபேஸ்புக் வழியாக இவன் தனது பழைய காதலியைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க அவனது மனைவி டெல்லியிலேயே இன்னொருவனுடன் தொடர்பை உருவாக்கிக் கொண்டாள். குழந்தையொன்று பிறந்த பிறகும் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. ஆயிரத்தெட்டு சண்டைகளுக்குப் பிறகு பெங்களூருக்குச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்து வந்துவிட்டார்கள். 

வந்தவன் கில்லாடித்தனமாக சில வேலைகளைச் செய்தான். அதில் முதல் வேலையாக தனது முன்னாள் காதலியிருக்கும் அபார்ட்மெண்டிலேயே ஒரு வீட்டைப் பிடித்துவிட்டான். பயங்கர திருப்தி அவனுக்கு. ஆனால் அவனது மனைவிக்குத்தான் டெல்லியை விட்டு வந்துவிட்டோமே என்கிற கவலை. திரும்பச் சென்றுவிடலாம் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறாள். அப்பொழுதிருந்தே கோகுலின் குறுக்குப் புத்தி வேலை செய்யத் தொடங்கிவிட்டது. தனது மனைவி மீது ‘கெட்டவள்’ என்கிற முத்திரையைக் குத்திவிட்டால் பெரும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துவிடலாம் என முடிவு செய்தவன் இன்னொரு பெயரில் மெயில் ஐடி உருவாக்கி அவளுடன் பேசத் தொடங்கியிருக்கிறான். எதிர்முனையில் பேசுவது தன்னுடைய கணவன் என்பதை அறிந்து கொள்ளாத அவளும் தனது கள்ளக்காதல்களை உளறிக் கொட்டிக் கிளறி மூடினாள். 

‘உனக்கொரு உபாயம் இருக்கிறது’ என்றவன் அவளுக்கு ஒரு ஜோதிடரை அறிமுகப்படுத்தி வைப்பதாகச் சொல்லி ஜோதிடர் ஒருவரின் பெயரில் இன்னொரு ஐடியைத் தொடங்கி மீண்டும் அவளோடு பேசத் தொடங்கினான். அதே கதையை அவள் மீண்டும் கொட்டினாள். அதுவரைக்கும் பொறுமை காத்தவன் அதன்பிறகு அவளுக்கு எதிரான தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கினான். அவளோடு நடத்திய சாட்களை சேகரித்து வைத்தான். ‘ஒரு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகிவிடும். அந்தப் பூஜைக்காக நீயும் உன் காதலனும் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்றை அனுப்பு’ என்று இவன் கேட்கவும் ஜோதிடரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவளாய் டெல்லிக்கு விமானம் ஏறினாள். அங்கே தனது காதலனுடன் சேர்ந்து விடுதி ஒன்றில் தங்கி நிர்வாணப்படங்களை எடுத்து சாமியாருக்கு அனுப்பி வைத்தாள்- சாமியார் பெயரில் இருந்த கோகுலுக்கு. தரவுகள் தயார். கோகுல் இவற்றையெல்லாம் தன்னுடைய மாமனாருக்கு அனுப்பி வைத்தான். தங்களுடைய மருமகன் நல்லவன் என்றும் தன்னுடைய மகள்தான் தான்தோன்றியாகத் திரிவதாக மாமனார் வீட்டில் நம்பினார்கள்.

எல்லாம் தனக்கு சாதகமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கோகுல் முதல் விக்கெட்டை வீழ்த்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அதே சாமியாரின் ஐடியிலிருந்து ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தான். அன்றைய தினம் பூஜை நடப்பதாகவும் அதற்காக அவள் போதையில் இருக்க வேண்டும் என்று அந்த மின்னஞ்சல் நீண்டிருந்தது. சாமியார் சொல்லுக்கு மறுப்பில்லை என்பதால் அவளும் போதையை ஏற்றிக் கொண்டாள். அதுவரையிலும் பொறுமையாக இருந்த கோகுல் இரவு இரண்டு மணிக்கு மேலாக ஒரு விநாயகர் சிலையை எடுத்து தனது மனைவியின் மண்டையில் வீசிவிட்டான் கோகுல். அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு- அவள் முழுமையாகச் சாகும் வரை காத்திருந்தவன் அதன் பிறகு போலீஸ், மாமனார் என்று எல்லோருக்கும் தகவல் அனுப்பியிருக்கிறான். போதையை ஏற்றிக் கொண்டு மேசை மீது ஏறியவள் விழுந்து செத்துவிட்டதாகச் சொன்ன இவன் கதையை காவல்துறையினர் நம்பினார்களோ இல்லையோ இவனுடைய மாமனார் நம்பினார். மாமனாரே நம்புவதால் காவல்துறையும் மர்மச்சாவு என்பதோடு வழக்கை முடித்து வைத்திருந்தது. 

அடுத்த விக்கெட்டுக்கு குறி வைத்தபோதுதான் சிக்கிக் கொண்டான். காதலியின் கணவன் ஜோஸப்தான் அடுத்த விக்கெட். அவனையும் முடித்துவிட்டால் தனது பழைய காதலியைத் திருமணம் செய்து கொள்வதற்கு வேறு எந்தத் தடையும் இருக்காது என்று நம்பினான். முஸ்தீபுகளை ஆரம்பித்தான்.

இந்தக் காலத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் செல்போன்தான் காட்டிக் கொடுக்கிறது. எவ்வளவுதான் அறிவுப்பூர்வமாக செயல்பட்டாலும் சிக்க வைத்துவிடுகிறது. கோகுலுக்கும் அப்படித்தான் நடந்தது. தனது மனைவி இறந்துவிட்டதால் ‘சோகமாக’ இருக்கும் கோகுலை அவனுடைய காதலியும் அவளது கணவன் ஜோஸப்பும் பார்த்துக் கொண்டார்கள். கோகுலின் குழந்தையை அவர்களே பராமரிக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய வீட்டுச் சாவி இவன் கையிலும் ஒன்று இருக்கும். அவர்களது படுக்கயறை வரைக்கும் செல்லும் உரிமையை கோகுல் பெற்றிருந்தான். அவனாகத் திருடினானா அல்லது காதலியே எடுத்துக் கொடுத்தாளா என்பது இன்னமும் தெரியவில்லை ஆனால் ஜோஸப்பின் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைத் திருடி அதை நகலெடுத்து ஜோஸப்பின் பெயரில் சிம் கார்டு ஒன்றை வாங்கியிருந்தான். இதனிடையே ஜோஸப்பின் பெயரில் போலி ஐடிக்களையும் தொடங்கி வைத்திருந்தான். அந்தப் போலி ஐடிக்களில் ஐஎஸ் தீவிரவாதிகளைப் பற்றி புகழ்ந்து எழுதியிருந்தான். இப்படியான அதிபயங்கர சதிகளை வேறு யாருக்குமே தெரியாமல் நிறைவேற்றத் தொடங்கியிருந்தான். அவனுடைய பொறியியல் படிப்பும், சாப்ட்வேர் மூளையும் ஒரு அப்பாவியை தீவிரவாதி என்ற வலைக்குள் விழச் செய்வதற்கான அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு கணினிக்கும் ஐபி அட்ரஸ் என்று இருக்கும். அந்த ஐபி அட்ரஸை வைத்து எந்தக் கணினியிலிருந்து தகவல் வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். பொதுவாக திருட்டு வேலையைச் செய்பவர்கள் ப்ரவுசிங் செண்டர்களுக்குச் செல்வது இதற்குத்தான். பலரும் வந்து செல்லும் இடம் என்பதால் நாம் தில்லாலங்கடி வேலையைச் செய்துவிட்டு வந்தாலும் ஆளைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். கொஞ்சம்தான் கடினமே தவிர கண்டுபிடிக்க முடியாத கம்ப சூத்திரம் எல்லாம் இல்லை. வளைத்துவிடுவார்கள். அதுவே செல்போனிலிருந்து தகவல் வந்தால் ஆளைக் கண்டுபிடிப்பது இன்னமும் எளிது. எந்த நேரத்தில் எந்த இடத்திலிருந்து செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது என்பது வரை தோண்டி துருவி எடுத்துவிடலாம். கோகுல் ஜோஸப்பைச் சிக்க வைப்பதற்காக கம்யூட்டரையும் பயன்படுத்தியிருந்தான் செல்போனையும் பயன்படுத்தியிருந்தான். 

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தனது காதலியின் காரில் ஏறிக் கொண்ட கோகுல், பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி அனுப்பியி வைத்தான். காவல்துறையும் விமான நிலையமும் பதறத் தொடங்கின. கிளம்புவதாக இருந்த விமானங்கள் தாமதிக்கப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் என்று அல்லோலப்பட்டு அலசி முடித்த பிறகு குண்டு எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அது புரளி என்று தெரிந்தவுடன் செய்தி அனுப்பியது யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான எத்தனிப்புகளைக் காவல்துறை எடுத்தது. ஜோசப்பின் பெயரில் சிம் கார்டு இருக்கிறது. அதனால் முதலில் ஜோசப் வளைக்கப்பட்டார். அதன் வழியாக அவரது மனைவியும் வளைக்கப்பட்டாள். நிலைமை விபரீதமாகிக் கொண்டிருந்தது. எப்படியும் ஜோசப்பால் இனி தப்பிக்க முடியாது என்று கோகுல் நம்பத் தொடங்கினான். காவல்துறையின் கிடுக்கிப்பிடியில் ஜோசப்பும் அவனது மனைவியும் விழி பிதுங்கிப் போனார்கள். செய்தி அனுப்பப்பட்ட அந்த செல்போன் அவளுடைய காருக்குள் கிடந்தது. செய்தி அனுப்பப்பட்ட தினமான ஞாயிறன்று அவளோடு கோகுல் அந்தக் காரில் பயணித்திருக்கிறான் என்று தெரியவந்தது. இதையெல்லாம் அவள் ஒப்பித்துவிட்டாள். கோகுலை அமுக்கினார்கள். சோலி சுத்தம். ஒவ்வொரு தகவலாக வெளியில் வரத் தொடங்கியது. அவனது பழைய காதல், மனைவிக்கு இன்னொருவனுடன் இருந்த கள்ளக்காதல், அவளது தரவுகளைச் சேகரித்தது, அதன் பிறகு ஜோதிடர் வேடம் பூண்டது, அவளை அடித்துக் கொன்றது என அத்தனையையும் ஒத்துக் கொண்டான்.

அம்மா இறந்து போனாள். அப்பன் இனி எந்தக் காலத்தில் சிறையிலிருந்து வெளியில் வருவான் என்று தெரியாது. அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. தன்னுடைய மனைவி பற்றி இனி என்னென்ன சந்தேகங்கள் ஜோசப்புக்கு வரும் என்று நினைத்துப் பார்த்தால் நமக்கு கண்கள் இருண்டு போகின்றன. மிக அழகான வாழ்க்கை அமைந்திருந்த குடும்பங்கள் அவை. செல்போனையும், ஈமெயிலையும், ஃபேஸ்புக்கையும் வைத்து பிய்த்து எறிந்துவிட்டான். வாழ்க்கை அத்தனை பேருக்கும் எளிமையானதாகத்தான் இருக்கிறது. இயற்கையாகவே அதில் சிக்கல்கள் விழுகின்றன. பெரும்பாலான சிக்கல்கள் தானாக அவிழ்ந்துவிடக் கூடியவை. மீதமிருக்கும் சிக்கல்களை நாசூக்காக அவிழ்த்தபடியே முன்னேறிக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டேயிருக்கிறது.  மாறாக பதற்றத்திலும் அவசரத்திலும் அதன் மீது மேலும் மேலும் முடிச்சுகளைப் போடுபவர்கள் வழியில்லாத வனாந்தரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அது திரும்ப மீளவே முடியாத பாதைகளற்ற வனாந்திரமாக சிலருக்கு மாறிவிடுகிறது. கோகுல் அப்படிச் சிக்கிக் கொண்டவன்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்)

2 எதிர் சப்தங்கள்:

VIJO said...

Intha sambavatha aerkanavae eluthi irukinga. why again??

Vaa.Manikandan said...

ஏற்கனவே எழுதியதுதான். ஆனால் வேறொரு வடிவத்தில் இருக்கும். குமுதம் ரிப்போர்ட்டரின் தொடருக்காக வேறு மாதிரி எழுதிய கட்டுரை இது. ரிப்போர்ட்டரில் வெளியான அத்தனை கட்டுரைகளையும் நிசப்தத்தில் பதிவு செய்து வைப்பதற்காக பிரசுரம் செய்து வைத்திருக்கிறேன். வரலாறு முக்கியம் இல்லையா அமைச்சரே? :)