Jan 2, 2016

மரம்

எப்பொழுதெல்லாம் பூமலூர் வருகிறேனோ அப்பொழுதெல்லாம் யோகா, தியானம், சுகி சிவம், வேதாத்ரி மகரிஷி என்பதான புத்தகம் ஒன்றை வாசித்து முடித்துவிடுவேன். இங்கு வேறு உபாயம் எதுவுமில்லை. இந்த ஊரில் நண்பர்கள் என்று யாருமில்லை. எவ்வளவு நேரம்தான் மாமனாரிடம் ‘ஊர்ல மழை பெஞ்சுதுங்களா?’ என்று கேட்டுக் கொண்டேயிருப்பது. மழை பெய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். அது எனக்குத் தெரியும் என்பது அவருக்கும் தெரியும். இருந்தாலும் பேசுவதற்கு ஏதாவது சமாச்சாரம் வேண்டுமல்லவா? திணறுவதைவிட ஒரு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து ஓரமாக அமர்ந்து கொண்டால் சிரமம் இல்லை. அவரே இத்தகைய புத்தகங்களை வாங்கி வைத்திருப்பார். இது குறித்தான மேற்பட்ட ரகசியங்களை இன்னொரு நாள் தனியாகச் சொல்கிறேன். இப்பொழுது அக்கம் பக்கத்தில் நிலைமை சுமூகமாக இல்லை.


இந்த முறை புத்தகம் எதுவும் சிக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் அண்ணாந்து பார்த்தபடியே நேரத்தை ஓட்டுவதெனத் தெரியாமல் ஊருக்குள் ஒரு நடை சென்று வந்த போது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. நான்கு மயில்கள் கண்களுக்குத் தட்டுப்பட்டன. எசகுபிசகாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உண்மையான மயில்களைத்தான் சொல்கிறேன். அதைவிடச் சந்தோஷம்- திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறார்கள். வெற்றி என்ற அமைப்பினர் மாவட்டம் முழுக்கவும் ஒன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார்கள். திட்டத்துக்கு ‘வனத்துக்குள் திருப்பூர்’ என்று பெயர். மரம் நடுகிறோம் என்று யாராவது சொல்லும் போது மிகச் சிறந்த திட்டமாகத்தான் தெரியும். ஆனால் அதிகபட்ச சொதப்பலை இந்த வேலையில்தான் செய்ய முடியும். மரம் நடுவது என்பது பெரிய காரியமேயில்லை. வனத்துறையில் கேட்டால் மரக் கன்றுகளைக் கொடுத்துவிடுவார்கள். இல்லையென்றாலும் கூட ஈஷா போன்ற அமைப்பில் ஒரு மரக் கன்று ஐந்து ரூபாய் என்கிற விலையில் வாங்கிவிடலாம். குழி தோண்டி நட்டுவதும் கூட சுலபம்தான். புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்தான் என்றொரு சொலவடையுண்டு. திட்டத்தை அறிவித்தவுடன் சேர்கிற தன்னார்வலர்கள் பற்களைக் கடித்துக் கொண்டு கடப்பாரையில் குத்தி குழியைத் தோண்டிவிடுவார்கள்.

அதன் பிறகான பராமரிப்புதான் மிக கடினமான காரியம். வெள்ளாடு மேய்க்கிறவர்கள் செடியை வளைத்து வாய்க்கு வாகாக கொடுப்பார்கள். செடிகளைச் சுற்றிலும் நட்டு வைத்த தடுப்பு மூங்கில்களை யாராவது உருவி எடுத்துச் செல்வார்கள். ஒருவேளை தடுப்பை இரும்பில் செய்து வைத்தால் யாராவது ஒரு புனிதரின் டாஸ்மாக் தீர்த்தவாரிக்கு உதவக் கூடும். இவற்றையெல்லாம் தம் கட்டி சமாளிக்க வேண்டும். அப்படியே சமாளித்துச் செடிகளை அந்நியர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டாலும் கூட நட்ட செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது என்பது அதைவிடச் சிரமம். 

அனுபவஸ்தர்களைக் கேட்டால் இதையெல்லாம் சொல்வார்கள்.

மரம் நடுகிறோம் என்று சொன்னவுடன் அறிவுரைகளை அள்ளிக் கொட்டுவதற்கு வரிசையில் நிற்பார்கள். இந்தச் செடியை நட்டு வையுங்கள்; அந்தச் செடியை நட்டு வையுங்கள் என்பதில் ஆரம்பித்து ‘மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக நட்டு வைத்தால் அந்த ஈரத்திலேயே செடிகள் பிழைத்துக் கொள்ளும்’ என்பது வரை அள்ளிவிடுவார்கள். ஆனால் அதெல்லாம் நடைமுறையில் அவ்வளவு சரியாக அமைவதில்லை. குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தண்ணீர் ஊற்றியே தீர வேண்டும். நூறு செடிகளை நட்டு வைத்தாலும் கூட வாரம் இரண்டு முறை என்கிற கணக்கில் தண்ணீர் ஊற்றுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

மரம் நடுகிற திட்டத்தை குறை சொல்வதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. மரம் நடுவது நல்ல செயல்தான். ஆனால் அதைச் சரியாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்கிறவர்களைப் பார்த்தால் தாராளமாக கால்களைத் தொட்டுக் கும்பிட்டுவிடலாம். 

பூமலூரில் ஒரு புது ட்ராக்டரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நடப்பட்ட ஆயிரம் கன்றுகளை பராமரிப்பதற்காக அந்த ட்ராக்டரையும் கொடுத்திருக்கிறார்கள். வாயைப் பிளந்துவிட்டேன். ஒரு பின்னலாடை நிறுவனம் நன்கொடையாக வழங்கியிருப்பதாகச் சொன்னார்கள். ‘செடியெல்லாம் வளர்ந்த பிறகு திருப்பிக் கொடுத்துடணுமா?’ என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். வாயைப் பிளக்காமல் என்ன செய்வது? எப்படியும் ஒரு ட்ராக்டர் விலை ஐந்து லட்சம் ஆகுமா? தோட்டத்தில் நீரை நிரப்பி செடிகளுக்கு வாரம் இரண்டு முறை தண்ணீர் ஊற்றுகிறார்கள். தண்ணீர் ஊற்றுகிற ஆட்களுக்கான கூலியை உள்ளூர்வாசிகள் கொடுத்துவிடுகிறார்கள். பெரும்பாலான செடிகள் தப்பித்துவிட்டன. இன்னும் ஆறு மாதங்களில் முக்கால்வாசி செடிகள் தப்பித்துவிடக் கூடும்.

இந்த மாவட்டத்தில் தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகம். செடிகள் வாங்குவதிலிருந்து ட்ராக்டர் வழங்குவது வரைக்கும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு வருடங்களில் ஒன்றரை லட்சம் மரங்களை நடுவது என்ற இலக்குடன் ஆகஸ்ட் மாதத்தில்தான் திட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். நான்கு மாதங்களிலேயே நினைத்ததை அடைந்துவிட்டார்கள். நிறைவு விழாவும் கொண்டாடிவிட்டார்கள். இனிமேலும் நடப் போகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது நட்டிருக்கும் ஒன்றரை லட்சம் செடிகளில் ஐம்பதாயிரம் செடிகள் மரங்களாக உருவெடுத்தாலும் கூட அற்புதமான விஷயம். செய்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. 

மரம் நடுவதைப் போன்ற எளிமையான காரியமும் இல்லை. அவற்றைப் பராமரிப்பதைப் போன்ற சிரமமான காரியமும் இல்லை. 

மரம் நடுவதைப் பற்றிச் சொன்னவுடன் ஒரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் ஊரில் அரசு சார்பில் மரம் நடும் விழா நடத்தினார்கள். குழியெல்லாம் தோண்டி தயாராக இருந்தார்கள். முக்கியப் பிரமுகர் வந்தவுடன் மரங்களை நட்டார்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். அந்த மு.பி கிளம்பியவுடன் அவருக்கு பின்னாலேயே நட்ட மரக்கன்றுகளை சில கைத்தடிகள் பிடுங்கியெடுத்துச் சென்றார்கள். அடுத்த ஊரில் மரக்கன்றுகள் பற்றாக்குறை என்பதால் இதே செடிகளை அங்கேயும் நடப் போவதாகச் சொன்னார்கள். எந்த இடம், மு.பி யார். என்ன தேதி என்பது வரைக்கும் சொல்ல முடியும். தேர்தல் முடியட்டும். யார் ஜெயிக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

7 எதிர் சப்தங்கள்:

Jaikumar said...

முன்னோர் காலத்தில் உங்கள் புத்தகத்தை உங்கள் மாமனார் படித்ததாக ஏழுதியுள்ளீர்கள்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அப்போது கூட திருப்பூரில் மிக அற்புதமான வலைப்பூ எழுத்தாளர்கள் பற்றி துளியும் சொல்ல மாட்டீர்கள் .

Vaa.Manikandan said...

கிருஷ்ண மூர்த்தி, இந்தக் கட்டுரையில் எதற்கு Bloggers பற்றி பேச வேண்டும்? இப்படி பேசினால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். நாம் பேசுகிற விஷயங்கள் மிகக் குறைவு. பேசாத விஷயங்கள்தான் எப்பொழுதுமே நிறைய இருக்கும்.

திருச்சிற்றம்பலம் நிவாஸ் said...

கரெக்ட் தான் சார் ... இங்க மரம் வைக்க தான் நிறைய ஆர்வம் காட்டுறாங்க ... அதை பராமரிக்க ஆர்வம் காட்டுவதில்லை... ஆயிரம் இரண்டாயிரம் வேண்டாம் வருடத்துக்கு ஒரு பத்து மரத்தை ஒழுங்கா வளர்த்தால் போதும் ... :)

அப்புறம் சில கடந்த வாரம் தான் உங்க பேஜ் எனக்கு அறிமுகம் ஆனது .. தினமும் படித்து வருகிறான் ... தினமும் எழுதுவதை படித்து விட்டு நான்கு ஐந்து பழையவற்றையும் வாசித்து விடுகிறேன் ... நன்றாக இருக்கிறது .. தினமும் எப்படி எழுதுறிங்க ன்னு தெரியல ... உங்க கடின உழைப்புக்கு ஒரு சல்யுட்... :)

Siva said...

Mani Anna tat tractor idea is nice. I guess soon u will plan a similar good planting idea to our blog readers..

Vinoth Subramanian said...

let election get over. I will ask you this question... who is that culprit?

”தளிர் சுரேஷ்” said...

பூமலூரில் மரம் நடும் அந்த பின்னலாடை நிறுவனத்திற்கும் ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள்!