நேற்று கடலூரில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோவொரு வகையில் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. தீபாவளியன்று அடித்துச் சென்ற மழை ஓய்ந்த பிறகு வருகிற முதல் பண்டிகை பொங்கல். ‘தீவாளியன்னைக்கு ரோட்டாண்டதான் சார் நின்னுட்டு இருந்தோம்’ என்றவர்கள்தான் அதிகம். அப்பொழுது மழை கொஞ்சம் கொஞ்சமாக தரையை மறைத்துக் கொண்டிருந்தது. நெய்வேலியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரானது பண்ருட்டி, நடுவீரப்பட்டு, கடலூர் என எல்லாப்பக்கமும் நிரவிக் கொண்டிருந்தது. கடலூர் மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அவை. பயத்திலும் அதிர்ச்சியிலும் தீபாவளி நமுத்துப் போயிருந்தது.
மக்கள் சற்றே மழையை மறந்து பொங்கலைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஏரிகளில் மாட்டு வண்டிகளையும் மாடுகளையும் நிறுத்தி கழுவிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரத்தில் வண்டியைப் பூட்டிக் கொண்டு திருவிழாவுக்குச் செல்வதாகச் சொன்னார்கள். ஆற்றங்கரையோரம் கும்பல் கும்பலாக அமர்ந்திருந்தார்கள். அய்யனார்களுக்கு படையல் போட்டிருந்தார்கள். ‘கடலூர் மீள்கிறது’ என நினைத்துக் கொண்டேன்.
நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ‘மச்சா பாண்டியில கூட லீவாடா?’ என்று பதறிய இளவட்டங்களைப் பார்க்க முடிந்தது. அங்கேயும் கிடைப்பதில்லை என்றார்கள். ஆங்காங்கே கறுப்புச் சந்தைகளில் மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தன. விற்பனை இலக்கு வைத்து டாஸ்மாக்கில் வியாபாரம் செய்யும் தமிழக அரசு கள்ளுண்ணாமை எழுதிய திருவள்ளுவருக்கு செய்யும் உச்சபட்ச மரியாதை இது. அவரது தினத்தில் விடுமுறை அளிக்கிறார்கள். அந்த அளவில் அவர் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் குடித்துப் பழகிய வாய் சும்மா இருக்குமா? எப்படியாவது வாங்கிக் குடித்துவிடுகிறார்கள்.
கிராமங்களில் சுற்றியலைந்துவிட்டு கடலூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது ‘வானமாதேவிகிட்ட ஒரு விபத்து’ என்று உடன் பயணித்துக் கொண்டிருந்த நண்பருக்கு செய்தி வந்தது. விபத்து பற்றிய வேறு தகவல்கள் எதுவுமில்லை. ஆனால் கோர விபத்து என்று சொல்லியிருந்தார்கள். ‘அந்த வழியாத்தான் போறோம்’ என்றார். மனதுக்குள் படபடப்பாக இருந்தது. வானமாதேவியை நெருங்கும் போது ஒரு ஐம்பது வயது மனிதர் சாலையில் நின்று அழுது கொண்டிருப்பதைப் பார்த்தோம். விபத்தில் அவருடைய வீட்டைச் சார்ந்தவர்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நினைப்பு ஓடியது.
விபத்து நிகழ்ந்து இடத்தருகில் பெருங்கூட்டம் நின்றிருந்தது. காவல்துறையினர் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
விபத்து நிகழ்ந்து இடத்தருகில் பெருங்கூட்டம் நின்றிருந்தது. காவல்துறையினர் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கார் புளியமரத்தில் மோதி நிலைகுலைந்திருந்தது. நிலைகுலைந்திருந்தது என்ற சொல்லுக்கான முழுமையான அர்த்தம் அது. அதன் மேற்பக்கம் பிய்ந்து வந்திருந்தது. எனக்கு கைகள் சற்று நடுங்கத் தொடங்கியிருந்தன. மகிழ்வுந்தை ட்ராக்டர் வைத்து கட்டியிழுப்பதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அதன் சக்கரங்கள் உருவமிழந்து போயிருந்ததால் வண்டி நகரவேயில்லை.
காவல்துறை அதிகாரி ஒருவரிடம் ‘என்னாச்சு சார்?’ என்றேன். ஒன்பது பேர் வந்திருக்கிறார்கள். ஸ்விப்ட் காரில் ஒன்பது பேர் பயணித்திருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சியான செய்திதான். படுவேகத்தில் வந்து புளியமரத்தில் மோதியிருக்கிறது. ஏழு பேர் அதே இடத்திலேயே இறந்து போனார்கள். இரண்டு பேர்கள் மட்டும் தப்பித்திருக்கிறார்கள். ஒருவரை ஆம்புலன்ஸூக்குத் தூக்கி வருவதற்குள்ளாக உயிர் பிரிந்துவிட்டது. ஒருவரை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரி ஒருவரிடம் ‘என்னாச்சு சார்?’ என்றேன். ஒன்பது பேர் வந்திருக்கிறார்கள். ஸ்விப்ட் காரில் ஒன்பது பேர் பயணித்திருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சியான செய்திதான். படுவேகத்தில் வந்து புளியமரத்தில் மோதியிருக்கிறது. ஏழு பேர் அதே இடத்திலேயே இறந்து போனார்கள். இரண்டு பேர்கள் மட்டும் தப்பித்திருக்கிறார்கள். ஒருவரை ஆம்புலன்ஸூக்குத் தூக்கி வருவதற்குள்ளாக உயிர் பிரிந்துவிட்டது. ஒருவரை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
‘குடிச்சிருந்தாங்களா?’ என்றேன்.
‘நூத்தி நாப்பதுக்கு மேல வந்திருக்கானுக சார்....செம ஸ்பீடு....குடிச்சிருக்க மாட்டானுவளா?’ என்றார்.
அந்த இடமே ரத்த சகதியாகிக் கிடந்தது. காருக்குள் மூளைகள் சிதறிக் கிடந்தன. அத்தனை பேரும் மாணவர்கள். திருவிழாவுக்காக கடலூர்க்காரப் பையனின் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். வெளியில் கிளம்புவதற்கு முன்பாக ஒன்பது பேரில் இரண்டு பேர் மட்டும் புதுச்சேரி சென்று திரும்பியிருக்கிறார்கள். அதுதான் பிரச்னையின் அடிநாதம். எப்படியோ இரண்டு மூன்று பாட்டில்களைத் தேற்றியிருக்கக் கூடும். ஏறிய போதை வேகத்தைக் கூட்டியிருக்கிறது. உள்ளே போதை, வெளியில் உச்சபட்ச அலறலில் பாடல். நண்பர்களின் களியாட்டமும் கும்மாளமும் வண்டி ஓட்டுபவனை மதி மறக்கச் செய்திருக்கிறது. மரண வேகத்தில் மோதியிருக்கிறான். அந்த இடத்தில் ஒரு இளநீர்காரர் மிதிவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்திருக்கிறார். அவருக்கு நல்ல நேரம். மதிய உணவை முடிப்பதற்காக தூக்குப் போசியில் இருந்த சோற்றை எடுத்துச் சென்று அருகில் இருந்த நிழற்குடையில் அமர்ந்திருக்கிறார். அவர் கண் முன்னாலேயே சைக்கிள் மீது மோதி நசுக்கியிருக்கிறார்கள். அதிர்ச்சியிலேயே அவர் மயங்கி விட்டதாகச் சொன்னார்கள்.
ஒரே வினாடிதான். எட்டு குடும்பங்களில் இருள் கவிந்துவிட்டது. இறந்து போனவர்களில் சிலரது குடும்பத்தினர் வந்து சேர்ந்திருந்தார்கள். சிதைந்து கிடந்த தங்களின் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கதறினார்கள். நொறுங்கிக் கிடந்த கார் அதிமுக பிரமுகருடையது போலிருந்தது. முன்பக்கமாக வைத்திருந்த முதல்வரின் படம் மட்டும் அப்படியே கிடந்தது. ‘ஜி.ஹெச்சுக்குப் போங்க..போஸ்ட்மார்ட்டம் ஆரம்பிக்கிறதா சொன்னாங்க’ என்று குடும்பத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அழுதபடியே அந்த இடத்தை விட்டு விலகிக் கொண்டிருந்தார்கள்.
நாங்களும் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினோம். ரத்தமும் மூளைச் சிதறல்களும் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தன. யாரைக் குற்றம் சொல்வது? வேகமாக ஓட்டினார்கள் என்பதற்காக அந்த விடலைகளையா? மகிழ்வுந்து சாவியைக் கொடுத்து அனுப்பி வைத்த பெற்றவர்களையா? வீதிக்கு வீதி பிராந்திக்கடையைத் திறந்து ஊற்றிக் கொடுத்து குஞ்சு குளுவான்கள் எல்லாம் குடித்துப் பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகும் அரசாங்கத்தையா? யாரை நோக்கி விரல் நீட்ட முடியும்?
எல்லோருக்குமே பங்கிருக்கிறது. குடிப்பதைக் கொண்டாட்டம் என்று சொல்பவர்களை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது. உங்களுக்கு கொண்டாட்டம் என்றால் அதை உங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் குடி என்பதைக் கொண்டாட்டம் என்று ஏன் பிரஸ்தாபிக்கிறீர்கள்? அடுத்த தலைமுறை அதை அப்படியே நம்புகிறது. பின்பற்றுகிறது. இப்படிப் பேசிப் பேசியே குடிப்பதை பெருமைக்குரிய விஷயமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். குடிப்பது குறித்து கிஞ்சித்தும் அவமானப்படாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. குடித்த பிறகு சமூகத்தின் முன்பாக தலைகுனிவது என்கிற நிலையெல்லாம் இப்பொழுது இல்லை. குடித்துப் பழகியவர்கள் தங்களின் எல்லாக் கொண்டாட்டத்திலும் மதுவை அங்கமாக்குகிறார்கள். அதிகபட்சமாகக் குடிக்கிறார்கள். நிலை இழக்கிறார்கள். வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழிக்கிறார்கள். அல்லது ஒட்டுமொத்தமாக முடித்துக் கொள்கிறார்கள்.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வருடத்தில் திருவள்ளுவர் தினத்துக்கும், காந்தி ஜெயந்திக்கும் மட்டும் கடையை மூடுவதனால் எந்த அர்த்தமும் இல்லை. சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏதேனும் ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தாக வேண்டும்.
இரவில் விழுப்புரத்தில் பேருந்து ஏறினேன். அது கர்நாடக அரசுப் பேருந்து. நடத்துநர் எல்லோருக்கும் பயணச்சீட்டு வழங்கிவிட்டு ஒருவரை மட்டும் எழுப்ப இயலாமல் திணறிக் கொண்டிருந்தார். முழு போதையில் கிடந்தார் அந்த மனிதர். முப்பது வயதுக்குள்தான் இருக்கும். கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தேன். நடத்துநர் முகத்தில் தெளித்து ‘எல்லி ஓக பேக்கு?’ என்று கேட்டார். ‘தாம்பரம்’ என்றார். விசிலை ஊதி நடுவழியில் நிறுத்தினார். அது ஒரு சிறிய பேருந்து நிறுத்தம். இறங்கி வேறு பேருந்து பிடித்து விழுப்புரம் செல்லச் சொன்னார். அவனுக்கு அது புரிந்ததா என்று தெரியவில்லை. இறங்கினான். அது எந்த இடம் என்றெல்லாம் தெரியவில்லை. மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பத்துக்கு எந்தவிதமான கெட்ட செய்தியும் போகக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொள்வதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?
9 எதிர் சப்தங்கள்:
//எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்//
என்னதான் எவ்வளவு தான் சொன்னாலும் யார் கேட்கப் போறாங்க? சசிபெருமாளை உருவாக்கிய ஒரு அணியின் உண்மையான சேவகனாக இதை சொல்கிறேன்.
https://dawnpages.wordpress.com/2016/01/17/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/
ஒரு எழுத்தாளர் தான் குடித்து சீரழிந்து போனதல்லாமல், அதை ஒரு கொண்டாட்டமாக எழுத்தில் வடித்து தனது வாசகர்களையும் குடிகாரனாக்கினார். இப்போது நகை முரணாகி குடியை நிறுத்திவிட்டு ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எந்த பேருந்தில் ஏறினாலும் ஏதேனும் ஒரு குடிகாரனை காணமுடியும் போல, சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரை வரும் பேருந்தில் ஏறிய நான் திருச்சியில் தனது மூன்று வயது மகனுடன் இறங்க வேண்டிய ஒருவர் போதையில் இறங்காமல், திருச்சியை தாண்டி பைபாஸில் எங்கேயோ தள்ளாடியபடியே இறக்கிவிடப்பட்டார். அவரும் அந்த குழந்தையையும் நினைத்தாலே பயமாக இருக்கிறது.
தற்போதைய தகவிலின் படி அந்த விபத்தில் ஒன்பது பேரும் இறந்துவிட்டனர்.
IT IS NOT ONLY 'KUDY'. SPEED AND FALSE FRIEND'S AND THEIR SARCAUSTIC COMMMENTS
ARE ALSO RESPONSIBLE,
SOMETIME BACK WE TRAVELLED TO TRICHY FROM CHENNAI (320 KMS) IN MY SON'S 'VERNA' CAR AND REACHED IN 6 1/2 TO 7 HOURS.
MY SON STARTED COMPLAINING HIS FRIENDS ARE JOKING BY ASKING 'DID YOU COME BY WALK?' AND WANTED TO TRAVEL FAST ON RETURN.
THEN I ADVISED HIM 'LIFE IS NOT A RACE TO BE WON IN A CAR'.
THERE IS NO CREDIT IN PRESSING THE ACCELERATOR WHICH ANY BODY CAN DO.
REAL THRILL/ACHIEVEMENT CONSISTS IN HUMAN ACHEVIEMENTS LIKE 'HUSSAIN BOLT'/DRAVID/VISWANATHAN ANAND ETC.
RIDING A MACHINE DESIGNED/INVENTED BY SOMEONE ELSE AT FULL SPEED IS NO CREDIT TO YOU.
A TRUE FRIEND WILL ONLY BE INTERESTED IN YOUR WELFARE AND WILL NOT JOKE ON SUCH THINGS. IGNORE SUCH COMMENTS.
IF YOU DONT LIKE. IWILL EMPLOY A DRIVER.
I STILL DO NOTKNOW IF MY SON GOT CONVINCED, BUT HE DROVE BACK ALSO SLOWLY.
MY VIEW IS IN 'LOVE', 'KUDY' ''CUTTING CLASSES' AND 'OVER SPEEDING' IT IS SO CALLED FRIEND'S WHO ARE THE REAL CULPRITS.
'USUPPI VITTE OLICHIRUVANGA'
M.NAGESWARAN.
If anyone wants to celebrate today then immediately they end up in bar . Its not only alcohol and also the lack of road sense among our society . No one has patience to wait for a second even in signals . If some one says to you i drove car in this speed or i drove properly even after drink slap them in from of every one . By driving rashly they not only risk their lives but endangering the lives of unknown persons in road . I would have felt bad if the shop keeper has been hit due to the atrocities of these youths , think the trauma of tender coconut shop keeper.
குடி குடியை கெடுத்துவிட்டது. இப்படி எத்தனை குடி கெட்டாலும், குடிப்பழக்கத்திலிருந்து மீள மாட்டார்கள் குடிமகன்கள். கேட்டால் குடிப்பதற்கு வியாக்யானம் வேறு பேசுவார்கள். அதிலுள்ள தீமைகள் தெரிந்தும் கூட...!
I am more concerned about the coconut vendor's cycle. Who will give relief for his loss?
குடி என்பது கொண்டாட்டமே...அதை பிரஸ்தாபிப்பதுதான் தவறா...?
எது தவறு என்றால்...குடி தவறு, அது நம் சமூக வழக்கத்துக்கு மாறானது என்று சொல்லி சொல்லியே இளைய சமூகத்தை வளர்க்கிறோமே தவிர...எப்போதாவது குடியை எவ்வாறு அணுக வேண்டும்....குடித்தால் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? அதன் தீமைகள் என்ன...இவை எல்லாவற்றையையும் விளக்குகிறோமா?
தன்னிச்சையாக முடிவு எடுக்க விடாமல்...முடிவுகள் அவர்கள் மேல் திணிப்பதாலேதான்...குடித்தல் மறைக்க படுகிறது...குடித்தபின் செய்யகூடாத விஷயங்கள் செய்யப்படுகிறது...
இந்த சமூகத்தில் எல்லாரும் குற்றம் சாற்றபடவேண்டியவர்களே...
போக்குவரத்து விதிமுறைகளை லஞ்சதுக்காக காற்றில் பறக்க விடும் அரசு இயந்திரம்...
நல்லது எது கெட்டது எது என்று விளக்க இயலாத பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்...சமூக ஊடகங்கள்...எல்லாரும் தான்...
அந்த 9 உயிர்களையும் பெற்றெடுத்த தாயின் வயிறு எப்படி பற்றி எரியும்?
அவர்கள் குடித்திருந்தார்கள் என்பது யூகமே..... உறுதி படாத தகவல்களை வைத்து ஏன் மரியதைகுறைவு செய்ய வேண்டும்? அதிவேகம், முறையான பயிற்சி இல்லாமல் ஒட்டுதல், ஒரே காரில் 9 பேர் இவற்றை மட்டும் சுட்டி காட்டி இருக்கலாம்.
Post a Comment