Jan 17, 2016

முடிவுகள்

தங்களுக்குப் பிடித்தமான நாவல் பற்றிய குறிப்புகளைக் அனுப்பி வைக்கச் சொல்லி அறிவிக்கப்பட்டிருந்தது. பத்து குறிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குறிப்புகளை அனுப்பியவர்களுக்கு மூன்றாம் நதி நாவலின் பிரதி ஒன்று வழங்கப்படுவதுதான் திட்டம். நம்முடைய விளம்பர உத்திகளில் இதுவும் ஒன்று. செய்கிற விளம்பரத்தை உருப்படியாகச் செய்வோம் என்றுதான் மற்றவர்களையும் பங்கேற்கச் செய்வது. 

ஏதாவதொரு விதத்தில் ‘மூன்றாம் நதி’ என்ற பெயரை பரவலாக்கினால்தான் பதிப்பாளர்கள் மதிப்பார்கள். சென்னையில் இப்பொழுது நடைபெற்று வரும் பொங்கல் புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புத்தகக் கடையை ஜீவகரிகாலன் தான் பார்த்துக் கொள்கிறார். வருகிறவர்களில் சிலர் ‘மூன்றாம் நதி எப்போ வரும்?’ என்று கேட்டதாகச் சொன்னார். ‘சக்ஸஸ்’ என்று நினைத்துக் கொண்டேன். கதகளி, கெத்து என்று முரட்டு முகபாவனை எதுவும் காட்டாமல் ரஜினி முருகன் மாதிரி காமெடி செய்தே கலெக்‌ஷன் பார்த்துவிட வேண்டும். எனக்கு அதுதான் சரியாகவும் வரும், அப்பொழுதுதான் ‘யோவ் ராயல்டி கொடுங்கய்யா’ என்று சட்டையைப் பிடித்துக் கேட்கலாம்.  இப்படியெல்லாம் ஏதாவது செய்து ஆயிரம் ஐநூறு வந்தாலாவது வீட்டில் பந்தா காட்டலாம். ம்ஹூம். எழுத்து வழியாக பத்து பைசா வருவதில்லை. 

சரி போகட்டும்.

பெறப்பட்ட விமர்சனக் குறிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து குறிப்புகள் இவை. வாசகர்கள்தான் நீதிபதிகள். வந்திருந்த வாக்குகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வெற்றி பெற்ற குறிப்புகளை எழுதியவர்களுக்கு மூன்றாம் நதி நாவல் வெளியானவுடன் தலா ஒரு பிரதி தூதஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுவிடும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தில் வழக்கமாக நடத்தப்படும் புத்தகக் கண்காட்சி மழையின் காரணமாக மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் நாவலின் வேலையை ஓரம் கட்டி வைத்திருந்தேன். அறக்கட்டளை வேலைகள் மட்டும் காரணமில்லை- ஒரு மாதம் இடைவெளி கொடுத்து வாசித்துப் பார்த்தால் ஏதேனும் திருத்தங்கள் கண்ணில்படும். இன்று காலையிலிருந்து திரும்பவும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த மாத இறுதிக்குள் அத்தனை வேலைகளையும் முடித்து பதிப்பாளரிடம் கையில் கொடுத்துவிடுவதுதான் திட்டம்.

ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்து போட்டி நடத்தச் சொன்ன சரவணபாபுவுக்கு நன்றி. மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் வந்திருக்கிறது. மருத்துவர் வெங்கட் இரண்டாயிரமும் பாண்டியராஜன் இரண்டாயிரமும் வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுதே ஐம்பது பிரதிகள் விற்ற மாதிரிதான் கணக்கு. தாராளமாக ஜீவகரிகாலனின் சட்டையைப் பிடித்துவிட வேண்டியதுதான். வந்திருக்கும் தொகையை வைத்து இன்னமும் நான்கு ஜாலிப் போட்டிகளை நடத்தலாம். இவர்களின் அன்புக்கு நன்றி.

முதல் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.  பத்து பேருக்கும் வாழ்த்துக்கள். வாக்களித்து சிறந்த குறிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவிய அனைவருக்கும் ஸ்பெஷல் நன்றி.


1. பாப்பிலான் - ரா.கி.ரங்கராஜன்
(விமர்சனக் குறிப்பை எழுதியவர்: எழிலனின் தந்தை சிவக்குமரன்)
2. கருவாச்சி காவியம் - வைரமுத்து
(பிரகாஷ்)
3. பட்டத்து யானை- வேல.ராமமூர்த்தி
(சபரி நாதன்)
4. இரவு- ஜெயமோகன்
த.ரிஷி
5. ரண்டாம்மூலம் - எம்.டி வாசுவேதன் நாயர்
(கவிப்பிரியா)
6. இடைவெளி- சம்பத்
(சரளா)
7. மிளிர்கல் - இரா.முருகவேள்
(பிரபு)
8. காடோடி- நக்கீரன்
(சித்ரா. ஜி)
9. குருத்தோலை- செல்லமுத்து குப்புசாமி
  (மணி பிரபு)
10. கன்னி- பிரான்சிஸ் கிருபா
(ராம்குமார்)

1 எதிர் சப்தங்கள்:

ilavalhariharan said...

ஒபீனியன் போல் நடத்தி அதோட ரிஸல்ட வெளியிட்டு மாட்டிக்கப்போறீங்களோஙகற பயமார்க்க் மணி...பாத்து சூதானமா நடந்துகுவீங்களாம்.....