Jan 14, 2016

புத்தி

நேற்றும் ஒரு சங்கிலிப் பறிப்பு. வீதிக்கு வீதி ‘கழுத்தைப் போர்த்திக் கொள்ளுங்கள்’ ‘சங்கிலியை வீட்டில் வைத்துவிட்டு வெளியே வாருங்கள்’ என்று ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் எப்படியும் வாரம் ஒன்றிரண்டு பக்கிரிசாமிகள் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஓடுவதெல்லாம் இல்லை. பைக்தான். அந்தத் தெருவில் ஆள் நடமாட்டம் சற்று குறைவாகத்தான் இருக்கும். அந்தப் பெண்மணி நடந்து போயிருக்கிறார். எங்கேயோ நின்று பக்கிரிசாமிகள் நோட்டம் பார்த்திருக்க வேண்டும். முன்னால் இருப்பவன் முறுக்க பின்னால் இருப்பவன் கழுத்தில் கை வைத்திருக்கிறான். சுதாரித்துக் கொண்ட பெண் சங்கிலியைப் பாதுகாக்க முயல கழுத்தெல்லாம் புண்ணாகி ரத்தக் களறியில் சங்கிலியும் போய்விட்டது. எட்டு பவுன் சங்கிலியாம். குடி முழுகிவிட்டது போல அமர்ந்திருந்தார். காவல்துறையினர் வந்து போனார்கள். பெரிய இடத்திலிருந்து அழுத்தம் கொடுத்தால் எட்டு பவுனுக்கு பதிலாக ஏதாவதொரு திருடனிடமிருந்து பறித்த நான்கு அல்லது ஐந்து பவுன் சங்கிலியை கொடுத்து வழக்கை முடித்து வைப்பார்கள். மற்றவர்களிடம் ‘பார்க்கலாம்’ என்பதோடு முடித்துக் கொள்வார்கள்.

இப்பொழுதெல்லாம் இரவு ஏழு மணிக்கு எங்கள் ஏரியாவில் நடக்கும் போது கால்களைத் தயாராக வைத்துக் கொள்கிறேன். எவனாவது சங்கிலியைப் பறித்துக் கொண்டு வரும் போது பைக்கை எட்டி உதைக்க வேண்டும் என்ற நினைப்பில் சுற்றுகிறேன். இதுவரை யாரும் சிக்கவில்லை. நான் இருப்பதைத் தெரிந்து கொண்டு பயப்படுகிறார்கள் போலிருக்கிறது. எந்தச் சங்கிலி பறிப்பாளனும் சிக்கவில்லையென்றால் சிக்குகிற யாரையாவது எட்டி உதைத்து ‘திருடனைப் பிடித்துவிட்டேன்’ என கத்தலாம் என்றிருக்கிறேன். உள்ளூரில் நமக்கென்று மாலை மரியாதை வேண்டாமா?

முன்பெல்லாம் எங்கள் அம்மாவின் தாலிப் பாட்டு பெரும் பாட்டாக இருக்கும். ‘தாலியைக் கழட்டி வைக்கக் கூடாது’ என்று மருமகள்களிடம் கடுமை காட்டிக் கொண்டிருந்தார். இப்பொழுது அப்படியில்லை- ‘கழட்டி சாமி படத்துக்கு முன்னாடி வெச்சுட்டு போய்ட்டு வாங்க’ என்கிற மட்டத்துக்கு இறங்கிவிட்டார். இப்படி அவர் தாலி செண்டிமெண்ட் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் ‘ஆரம்பத்தில் நம்மூர்ல தாலியே கிடையாது..உங்களுக்குத் தெரியுமா?’ என்று பேசி அடி வாங்கத் திரிந்தேன். நானா சொன்னேன்?

சங்க இலக்கியங்களிலிருந்து வரிசையாகத் தேடிக் கொண்டு வந்தால் திருமணத்தில் தாலி அணிகிற குறிப்பு பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கந்தபுராணத்தில்தான் முதன் முதலாக இடம் பெறுகிறது. அதிலும் கூட சிவபெருமானுக்கும்- உமையாளுக்குமான திருமணத்தில் தாலி பற்றி கச்சியப்ப சிவாச்சாரியார் எதுவும் குறிப்பிடவில்லை. அதே கந்த புராணத்தில் முருகன் - தெய்வானை திருமணத்தில்தான் தாலி இடம் பெறுகிறது. ஆக பனிரெண்டாம் நூற்றாண்டு வரைக்கும் தமிழகத்தில் நடைபெற்ற திருமணச் சடங்குகளில் தாலி என்ற வஸ்து இல்லை. அதற்கு முன்பான சங்க இலக்கியங்களில் தாலி இடம் பெறுகிறதுதான். ஆனால் பெண்கள் கழுத்தில் அணிகிற தாலி என்ற பொருளில் இல்லை- புலிப்பல் அணிந்து சிறுவர்கள் அணிந்து கொள்வது கூட தாலிதான். இதையெல்லாம் வீட்டில் சொல்லலாம். ‘இவனுக்கு என்னவோ தெரியுது’ என்று நம்புவார்கள். வெளியில் சொல்ல முடியுமா? மொத்துதான் விழும். ‘நீ ஆல் இன் ஆல் அழகுராஜாவா?’ என்பார்கள். ‘யார் சொன்னா?’ என்று கேட்பார்கள். 

சங்க இலக்கியத்திலிருந்து கந்தபுராணம் வரைக்கும் கரைத்து குடித்திருக்கிறேன் என்று சொன்னால் மட்டும் நம்பவா போகிறீர்கள்? உண்மையைச் சொல்லிவிடுகிறேன். 

பழைய புத்தகக் கட்டையில் சட்டையில்லாத ஒரு புத்தகம் கிடைத்தது. முன்னட்டையும் இல்லை பின்னட்டையும் இல்லை. கிட்டத்தட்ட அம்மணக்கட்டை. யார் எழுதியது என்றெல்லாம் தெரியவில்லை. புறநானூற்றில் என்ன சொல்கிறார்கள் என்று ஆரம்பித்து ஆறேழு பக்கத்துக்கு எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார் புண்ணியவான். அடுத்து அகநானூறு. அப்படியே சிலப்பதிகாரம், மணிமேகலை என்றெல்லாம் ஊர் சுற்றிவிட்டு வந்து கந்த புராணத்தில் நிற்கிறார். இந்த மாதிரியான புத்தகங்கள்தான் தேவை. தீவிர இலக்கியவாதிகள் கட்டுரைகள் எழுதும் போது ‘சார்த்தரின் எக்ஸிஸ்டென்ஷியலும் பூக்கோவின் பின் கட்டமைப்பியலும் நேரெதிரில் சந்திக்கும் புள்ளியிலிருந்து இந்தக் கவிதையைப் பார்க்கிறேன்’ என்று எழுதுவார்கள். Name dropping techniques. படிக்கிறவன் மிரண்டு போவான். அதே நினைப்பில்தான் நானும் இந்த அம்மணக்கட்டை புத்தகத்தை எடுத்து சட்டைக்குள் செருகிக் கொண்டேன். முத்தொள்ளாயிரம், பரிமேலழகர் என்று அவ்வப்போது அடித்துவிடலாம் என்பதுதான் திட்டம்.

பெங்களூரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் கிருஷ்ணகிரி தாண்டி ஒரு மோட்டலில் நிற்கும். அங்கே ஒரு புத்தகக் கடை இருக்கிறது. ஜலபுல ஜல், பக்கத்து வீட்டு பத்மா மாதிரியான புத்தகங்களுக்குள் அவ்வப்போது இப்படியான புத்தகங்களும் சிக்கும். ‘இதுவும் அப்படியான புத்தகமாக இருக்கும்’ என்று புரட்டாமல் விட்டுவிட்டுப் போனால் நஷ்டம் நமக்குத்தான். இந்த ஒரு காரணத்தைச் சாக்காக வைத்து முடிந்தவரைக்கும் ஏழெட்டு புத்தகங்களை புரட்டி வாசித்து இலக்கிய தாகத்தை தீர்த்துக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது.  ஒவ்வொரு வார இறுதியிலும் ஏதாவது ஊருக்குக் கிளம்புவது சங்கடமாக இல்லையா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். பேருந்தில் ஏறி உறங்கி அதிகாலையில் சேர வேண்டிய ஊரில் இறங்கி வேலையை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்தால் அடுத்த முறை பேருந்து ஏறுவதற்கே சலிப்பாகத்தான் இருக்கும். ஏதாவது தில்லாலங்கடி வேலைகளைச் செய்து பயணத்தை சுவாரசியமாக்கிக் கொண்டால் எப்படி சலிக்கும்? இந்த வாரம் கடலூர் செல்ல வேண்டிய வேலை இருக்கிறது. ‘ஒரேயொரு நாள் போய்ட்டு வந்துடுறேன்’ என்று சொல்லி வீட்டில் அனுமதி வாங்கியிருக்கிறேன். இன்னமும் எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்கிற முடிவைச் செய்யவில்லை. போகும் போது பார்த்துக் கொள்ளலாம். 

இன்று அலுவலகத்தின் ஹெச்.ஆர் அழைத்து ‘நீங்க ப்லாக் எழுதுவீங்களாமே..லின்க் கொடுங்க’ என்று கேட்டார். பொய் சொல்லவில்லை- நிஜமாகத்தான் கேட்டார். தயங்கியபடிதான் கொடுத்தேன். எப்படியும் இன்று படித்துவிடுவார். அதனால் கந்தபுராணத்திலிருந்து ஏதாவது ஒரு செய்யுளை எழுதி நல்லவனாகக் காட்டிக் கொள்ளலாம் என்றுதான் இந்த பத்தியை எழுத ஆரம்பித்தேன். பக்கத்து வீட்டு பத்மாவில் வந்து முடிகிறது. த்தூ. நல்ல புத்தியாக இருந்தால்தானே நல்லபடியாக எழுத முடியும்?

5 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

// எவனாவது சங்கிலியைப் பறித்துக் கொண்டு வரும் போது பைக்கை எட்டி உதைக்க வேண்டும் என்ற நினைப்பில் சுற்றுகிறேன்.// நீங்க நெனச்சதுக்கெ பாதி திருடங்கக் காணாமப் பொயிருப்பாங்க சார். கலத்துல எரங்கினா அப்புரம் போலிச்காரங்களுக்கெல்லாம் வேலையில்லாமப் போயிரும். முடிவ மாத்திக்கோங்க please?

சேக்காளி said...

ரானா : எடேய் சதுரங்கா! பெங்களூருல ஒரு வேல(லை)இருக்கு. ரெண்டு பேரும் போய்ட்டு மறுநாளே திரும்பிருவோம் வாடே.
#சதுரங்கன் :என்னது பெங்களூருக்கா. நா(ன்) வரல பெரிசு.
ரானா :ஏம்டே பெங்களூரு ன்ன ஒடனே இப்பிடி பயப்படுற?
#சதுரங்கன் : "எந்தச் சங்கிலி பறிப்பாளனும் சிக்கவில்லையென்றால் சிக்குகிற யாரையாவது எட்டி உதைத்து ‘திருடனைப் பிடித்துவிட்டேன்’ என கத்தலாம் என்றிருக்கிறேன்" ன்னு வா மணிகண்டன் அறிவிச்சிருக்காரே அதை படிக்கலயா நீரு.

MURUGAN RD said...

தீவிர இலக்கியவாதிகள் கட்டுரைகள் எழுதும் போது ‘சார்த்தரின் எக்ஸிஸ்டென்ஷியலும் பூக்கோவின் பின் கட்டமைப்பியலும் நேரெதிரில் சந்திக்கும் புள்ளியிலிருந்து இந்தக் கவிதையைப் பார்க்கிறேன்’

இதே மாதிரிதான் கவிதைகள்னு சொல்லப்படுற பல சில வரி கட்டுரைகளும் எங்களைப்போன்ற சாதாரண சாமான்யர்களை அய்யய்ய்ய ம்மன்னு தலைய பிச்சிக்க வச்சிக்கும், இப்படிப்பட்ட எழுத்து திறமை மிக்கவர்களை ஏலியன்களாகவே பார்க்க தோன்றுகிறது, டாக்டர்களின் கிறுக்கலான கையெழுத்தை கூட படித்துவிடாலம் ஆனா இப்படிப்பட்ட எழுதது நடைகளை படிக்கவே முடியாது,

thiru said...

//நான் இருப்பதைத் தெரிந்து கொண்டு பயப்படுகிறார்கள் போலிருக்கிறது. எந்தச் சங்கிலி பறிப்பாளனும்//

Punch...!!!

Nizar said...

ஒவ்வொரு வார இறுதியிலும் ஏதாவது ஊருக்குக் கிளம்புவது சங்கடமாக இல்லையா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். பேருந்தில் ஏறி உறங்கி அதிகாலையில் சேர வேண்டிய ஊரில் இறங்கி வேலையை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்தால் அடுத்த முறை பேருந்து ஏறுவதற்கே சலிப்பாகத்தான் இருக்கும். ஏதாவது தில்லாலங்கடி வேலைகளைச் செய்து பயணத்தை சுவாரசியமாக்கிக் கொண்டால் எப்படி சலிக்கும்?