Dec 6, 2015

அடிப்பாவிகளா

‘அம்மிணி மறக்காம எழுப்பி விட்டுடு’ என்று சொல்லிவிட்டுப் படுத்த போது இரவு மணி எட்டே முக்கால். அந்த நேரத்தில் தூக்கம் வராது. ஆனால் இழவெடுத்த இரண்டு கண்களும் மாலை நேரமானால் மங்கலம் பாட ஆரம்பித்துவிடுகின்றன. எங்கேயாவது சென்றுவிட்டு வந்தால் போதும்- போகும் போதும் வரும் போதும் எந்தப் பிரச்சினையுமில்லை சமர்த்தாகத்தான் இருக்கின்றன. ஆனால் எனக்கே தெரியாமல் வண்டி வண்டியாகக் குப்பையைத் தேக்கி வைத்துக் கொள்கின்றன. வந்து முகத்தைக் கழுவும் வரைக்கும் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருக்கும் குப்பை தண்ணீர் பட்டவுடன் குதியாட்டம் போட ஆரம்பித்துவிடுகின்றன. சிவபெருமான் வந்து கேட்டால் கண்களைத் தோண்டிக் கொடுத்துவிட்டு அறுபத்து நான்காம் நாயன்மாராக கோவில் வரிசையில் அமர்ந்து கொள்ளலாம் என்று ஆகிவிடுகிறது.

கால் மணி நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் போதும். கண்ணாமுழிகள் உருண்டு உருண்டு குப்பையை வெளியில் கொண்டு வந்து தள்ளிவிட்ட பிறகு சரியாகிவிடுகிறது. மருத்துவர்களைக் கேட்டால் ‘நிறைய அழுங்க..சரியாப் போயிடும்’ என்றார். கண்ணீர் சுரப்பு குறைவாக இருவாக இருக்கும் போலிருக்கிறது. இதை வெளியில் சொல்ல முடியுமா? தினமும் மண்டையில் கொட்டு வைத்து காதைத் திருகி அழ வைத்துவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது. அதனால் பற்களைக் கடித்துக் கொண்டு கமுக்கமாக வைத்திருக்கிறேன்.

நேற்றும் அப்படித்தான் ஆனது. கண் உறுத்தல். ‘கண்ணை மூடிப் படுத்துக்கிறேன்’ என்றேன்.

‘நீங்க படுங்க..எழுப்பிவிடுறேன்’ என்று சொன்னதை நம்பி படுத்திருந்தேன். இந்தக் கருமாந்திரம் பிடித்த அனுஷ்காவும் நயன்தாராவும் விடுகிறார்களா? தட்டிக் கொடுத்து தூங்க வைத்துவிடுகிறார்கள். கண்களை மூடினால் கண்ணாமுழி உருள்வதெல்லாம் பூமியுருண்டை உருள்வதைப் போலவே இருக்கிறது. அதில் நான் அதிபயங்கர நடனம் ஆடுகிறேன். அதை நீங்கள் கற்பனையெல்லாம் செய்து பார்க்க வேண்டியதில்லை என்பதால் அடுத்த வரிக்குச் சென்றுவிடுங்கள். ஆட்டத்தின் நட்டநடுவில் கால் இடறி கீழே விழுந்து எழுந்து பார்த்தால் மணி பனிரெண்டரை.

‘அடிப்பாவிகளா’ என்று எழுந்து அமர்ந்தேன். அடிப்பாவி என்றால் வேணிக்கு சந்தேகம் எதுவும் வந்திருக்காது. பன்மையில் விளித்ததுதான் விவகாரமாகிவிட்டது. முகத்தை விகாரமாக வைத்துக் கொண்டு கண்களாலேயே ஒரு கேள்விக்குறியைக் காட்டினாள். 

‘லேட்டாயிடுச்சு’ என்றேன்.

எதையும் காட்டிக் கொள்ளாமல் ‘ஸாரிங்க...நானும் தூங்கிட்டேன்’ என்றாள். சோலி சுத்தம்.

விடிந்தும் விடியாமலும் அச்சிறுபாக்கம் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தேன். அவர்கள் தயாராக இருப்பார்கள். அவர்களிடம் மட்டுமில்லை- நிவாரணப்பணிகளைச் செய்பவர்கள் எல்லோரிடமும் சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் சிரமத்தில் இருக்கிறார்கள் என்பது சரிதான். ஆனால் அதற்காக நிவாரணப்பணிகளைச் செய்யும் போது நம் மனதை அழுத்துவதற்கு எதையும் அனுமதித்து விடக் கூடாது. அப்படி அழுத்த விட்டுவிட்டால் அடுத்த வேலையில் நம்முடைய ஆர்வம் குறைந்துவிடும். மனதை லேசாக வைத்துக் கொள்வது மிக முக்கியம். அந்த லேசு எந்தவிதத்திலும் நம் நேர்த்தியைச் சிதைத்துவிடாமல் பார்த்துக் கொண்டால் போதும்.

அவசர அவசரமாக எழுந்து- சொன்னால் வெட்கக் கேடு- முகத்தைக் கூட கழுவவில்லை. பேருந்தில் பக்கத்தில் அமரப் போகிறவன் கடந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தானோ? காசோலைப் புத்தகம் பையில் இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டேன். கதவைத் திறக்கும் போது பல் துலக்கியை மறந்துவிட்டது ஞாபகம் வந்தது. எப்படியும் வேப்பங்குச்சி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிருந்தது. அதுவுமில்லையென்றால் ஆட்காட்டி விரல் கனவேலை செய்யும். வெளியில் வந்த பிறகுதான் பைக்குள் துண்டு, சீப்பு எதுவுமில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. துண்டு கூட பிரச்சினையில்லை. சட்டையைத் திருப்பி துவட்டிக் கொள்ளலாம். என் ஆறடிக் கூந்தலுக்கு சீப்பு அவசியம் அல்லவா? நட்டுக் கொண்டிருக்கும் நான்கு முடியை அடக்கி வைப்பதற்கு நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்.

எப்படியோ வீட்டை விட்டு வெளியில் வந்தாகிவிட்டது. சட்டைப்பைக்குள் ஐநூறு ரூபாய் இருந்தது. அது போதும். சமாளித்துக் கொள்ளலாம்.

நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பெங்களூரில் பெண்கள் மட்டுமில்லை- ஆண்கள் நடப்பதே கூட பெரும் சிரமம்தான். நாய்கள் வகை தொகையில்லாமல் பெருகிக் கிடக்கின்றன. கவனித்திருக்கிறீர்களா? கையை வீசியபடி நடந்தால் வீரியம் குறைவாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டிருந்தால் அவ்வளவுதான். நாம் எதையோ ஒளித்து வைத்திருப்பது போல நினைத்துக் கொண்டு பற்களைக் கெஞ்சியபடி குரைத்து அட்டகாசம் செய்யும்.  ‘அடேய் நாய்களா என்னை விடுங்கடா’ என்று கெஞ்சிக் கூத்தாடி மிரட்டி விரட்டி தப்பித்து வந்தால் இரண்டு ஆடவர்கள் ஒரு பைக்கை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்றுதான் எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் யாரோ இரண்டு பேர் ஒரு பெண்ணின் கழுத்துச் சங்கிலியை பறித்துச் சென்றிருந்தார்கள். அடங்கொக்கமக்கா என்றாகிவிட்டது. வழியை மறித்தால் வலது கையால் ஒருவனது மூக்கிலும் இடது கையால் இன்னொருவனது அடிவயிற்றிலும் குத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். டபுள் ஷாட். குத்துகிற குத்தில் இரண்டு பேரும் தெறித்து ஓடுவார்கள் என்று தெரியும். அவர்கள் ஓடிய பிறகு அஜீத்தைப் போல முகத்தை வைத்துக் கொண்டு தெறிக்கவிடலாமா என்று வசனம் பேசுவதுதான் அடுத்த திட்டம். என்னுடைய திட்டம் அநேகமாக அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். பயந்தாங்கொள்ளிகள். என் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. அவர்கள் திரும்பிப் பார்க்காதது தெரிந்ததும் எனது நடையே மாறிவிட்டது. ஹீரோயிச படங்களின் பின்ணனி இசை என் காதில் மட்டும் கேட்டது. 

சரி விடுங்கள். எல்லாவற்றையும் சொன்னால் ‘இவனுக்குள் இத்தனை அஜீத்தும் விஜய்யும் இருக்கிறார்களா’ என்று உங்களுக்கு பொறாமையாக இருக்கக் கூடும்.

நள்ளிரவு என்பதால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. ஓசூர், கிருஷ்ணகிரி செல்கிற எந்த வண்டி முதலில் வருகிறதோ அதில் ஏறிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். கிருஷ்ணகிரி வரைக்கும் செல்லும் பேருந்துதான் முதலில் வந்தது. அங்கே போய் அச்சிறுபாக்கம் செல்வதற்கு தோதான பாதையை விசாரித்துக் கொள்ளலாம். அச்சிறுபாக்கம் மேல் மருவத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிறது என்று தெரியும். அதற்கு மேல் எந்த விவரமும் அவசியப்படவில்லை. எந்த ஊர் வழியாகச் சென்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலையில் இருந்தேன். அத்தனையும் தமிழ்நாடுதானே? தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக அத்தனை பாதைகளிலும் பயணித்துவிட வேண்டும். 

சொகுசாக இருக்கிறது என்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளிலேயே பயணித்துக் கொண்டிருந்தால் என்ன அனுபவம் கிடைக்கும்? ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வர்ணம் உண்டு. ஒரு வாசனை உண்டு. ஒரு வடிவம் உண்டு. அதையெல்லாம் பார்ப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் சரிப்பட்டு வராது. குண்டும் குழியுமான, குறுகலான சாலைகள்தான் சரி. வயது இருக்கும் போதே பயண அனுபவங்களைச் சேகரித்துவிட வேண்டும். மழைக்காலத்துக்காக எறும்புகள் தானியம் சேகரிப்பது போலத்தான். மூட்டு தேய்ந்த பிறகும் முதுகுவலி வந்த பிறகும் இதெல்லாம் சாத்தியமேயில்லை. முந்திரிக்காட்டு விவசாயிகளை தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் பார்த்துவிட முடிவதில்லை. மேச்சேரி வெள்ளாடு வளர்ப்பவர்கள் தமிழகம் முழுவதும் இருப்பதில்லை. மாமரத் தோப்புடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவர்களைத் ஒவ்வொரு ஊரிலும் பார்க்க முடியாது. இவர்களையெல்லாம் சந்திப்பதற்காகவே அலையலாம். 

ஒவ்வொரு பயணமும் ஒரு பாடம். இந்தப் பாடங்கள் நம்முடைய எழுத்திலும் பேச்சிலும் நேரடியாக வெளிப்பட வேண்டிய அவசியமில்லை. அனுபவங்கள்தானே மனிதனை வார்த்தெடுக்கின்றன? நாம் நெருங்கிப் பார்க்கிற ஒவ்வொரு ஊரும் நம்மைத் தட்டியும் நெகிழ்த்தியும் உருமாற்றியும் நமக்கென ஒரு உருவத்தை உருவாக்கின்றன. அந்த தட்டுதலுக்கும் உருமாற்றத்திற்காகவும் எவ்வளவு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்த நாடும் மக்களும் உனக்கு என்ன கொடுக்கிறார்கள் என்று யார் கேட்டாலும் ‘அனுபவத்தை’ என்று தயங்காமல் சொல்லலாம். அதைவிடப் பெரிதாக வேறு எதை அவர்கள் தந்துவிட முடியும்? நாம் எதைச் சம்பாதித்துவிட முடியும்?

கிருஷ்ணகிரியை அடைந்த போது மணி இரண்டேகால். திருவண்ணாமலை வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்து வந்து நின்றது. தனியார் பேருந்து. டிக்கெட் எதுவுமில்லை. ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு ஏற்றிக் கொண்டார்கள். ஒவ்வொரு இருக்கைக்கும் ஒரு ஆள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கடைசி வரிசைக்கு முந்தின வரிசையில் அமர்ந்தேன். பூஜை படத்தின் இறுதிக் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. படத்தையும் ஸ்ருதிஹாசனையும் பார்க்காமல் விட்டுவிட்ட அங்கலாய்ப்பு உச்சந்தலையில் சுர்ரென்றிருந்தது. ஆனால் ஆண்டவன் கைவிடுவதில்லை. அடுத்ததாக வேறொரு படம். பேருந்தில் கொட்டக் கொட்ட விழித்து படம் பார்த்து புண்ணியம் சேர்த்துக் கொண்ட ஒரே பாக்கியவான் ஆனேன். அந்தப் படத்தைப் பற்றி எழுதினால் வாய் மேலேயே அடிப்பார்கள் என்பதால் திருவண்ணாமலையை நினைத்து ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

1 எதிர் சப்தங்கள்:

Geetha said...

பயணங்கள்.....பலதரப்பட்ட அனுபவங்களை தருகிறது....உண்மைதான்