Dec 6, 2015

அடேயப்பா

நிவாரணப்பணிகளுக்குத் தேவையான பொருட்களை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கும் வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பெரும்பாலான பொருட்களுக்கான தொகை வழங்கப்பட்டுவிட்டன. அச்சிறுபாக்கம் மதுராந்தகம் செங்கல்பட்டு என நாள் முழுவதும் அலைந்து திரிந்தோம். எல்லாவற்றையும் நிரப்புவதற்கான கோணிப்பை விற்பனையாளர் ‘ஆட்டோ சார்ஜ் என்னுது’ என்று சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். திரும்பிய பக்கமெல்லாம் நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள். இங்கு பத்துக்கும் அதிகமானவர்கள் இந்த நிவாரணப்பணிக்காக தங்களது சொந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு நாள் முழுவதுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது வீடுகளிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. எனக்குப் பிரச்சினையில்லை. வீட்டை விட்டு இங்கே வந்து தனிக்கட்டையாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இவர்களது வீடுகள் அருகிலேயே இருக்கின்றன. வீட்டில் இருப்பவர்கள் இவர்களது அருகாமையை எதிர்பார்க்கிறார்கள். இவர்களையெல்லாம் சிரமப்படுத்துகிறோமோ என்று வருத்தமாக இருக்கிறது. ஆனால் உற்சாமாகச் சுற்றுகிறார்கள். சந்தோஷமாகவும் இருக்கிறது.

இப்பொழுது சில பொருட்களைக் கொண்டு வந்து மழை மலை மாதா கோவிலில் அடுக்கியிருக்கிறோம். இன்னமும் சில பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்குள் ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு சஞ்சலம். மழை மலை மாதா கோவில் நிர்வாகத்தினர் ஒதுக்கித் தந்திருக்கும் இடம் போதாது போலிருக்கிறது. இடத்தை மாற்றிவிட முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உள்ளூர் நண்பர்கள் வேறொரு பள்ளிக் கூடத்தின் நிர்வாகத்தினரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அந்தப் பள்ளியில் அனுமதி வாங்கியிருக்கிறார்கள்தான். இருந்தாலும் முறைப்படி அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டு அத்தனை பொருட்களையும் அங்கு இடம் மாற்றவிருக்கிறார்கள். பொருட்களைப் பிரித்து அடுக்கும் பணியை அங்கு வைத்துத்தான் ஆரம்பிக்கவிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நினைத்தது போல இது லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. அரிசி மட்டும் ஐந்தாயிரம் கிலோ. கிட்டத்தட்ட இருநூறு மூட்டைகள். பாதி அறையை அடைத்துக் கொள்ளும் போலிருக்கிறது. பருப்பு ஆயிரம் கிலோ. உப்பு பல மூட்டைகளாக இருக்கிறது. எண்ணெய் பெட்டிகளும் அப்படித்தான். சாம்பார், ரசப்பொடி உள்ளிட்ட பொடிகளை செங்கல்பட்டிலிருந்து காரின் பின்பக்கத்தில் வைத்து எடுத்து வந்துவிடலாம் என்று நினைத்தோம். அது மட்டும் பதினாறு மூட்டைகள் ஆகிறது. விக்கித்துப் போய்விட்டது. டாட்டா ஏஸ் வண்டியைப் பிடித்து செங்கல்பட்டில் இருந்து அனுப்பி வைத்திருக்கிறோம்.

நிறையக் கடைகளில் அற்புதமாக உதவுகிறார்கள். ஒரேயொரு கசந்த அனுபவத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையுமில்லை. அந்தக் கசந்த அனுபவத்தை இன்னொரு நாள் விரிவாகப் பேசிக் கொள்ளலாம்.  ‘நீங்க பேசி இடத்தை முடிவு செய்வதற்குள் ஒரு அப்டேட் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நண்பர்கள் இன்னமும் மழை மலை மாதா கோவிலில்தான் இருக்கிறார்கள். இன்னமும் அரிசிக்காரருக்கு மட்டும் காசோலை வழங்கவில்லை. இன்றிரவு எப்பொழுது வேலை முடியும் என்று தெரியவில்லை. எல்லா வேலைகளையும் முடித்த பிறகு நான் பெங்களூர் கிளம்புகிறேன். செவ்வாய்க்கிழமையன்று திரும்பி வர வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். அலைச்சல்தான். பார்த்துக் கொள்ளலாம்.

நாளையிலிருந்து அச்சிறுப்பாக்கத்தில் வைத்து நண்பர்கள் நிவாரணப் பொருட்களை அடுக்குகிறார்கள். இன்னமும் ஏகப்பட்ட ஆட்களின் உதவி தேவைப்படும் போலிருக்கிறது. பள்ளி மாணவர்களை மட்டும் வைத்துக் கொண்டு முழுமையாகச் செய்ய முடியாது. பொருட்களின் குவியலைப் பார்த்த பிறகுதான் இதை உணர முடிகிறது. அச்சிறுபாக்கத்திற்கு வந்து இந்தப் பணியில் உதவ விரும்புகிற நண்பர்கள் ஜெயராஜிடம் தொடர்பு கொள்ளவும். +91 9788135011. அவர்தான் ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்கிறார். ஒருவேளை தேவையான ஆர்வலர்கள் கிடைக்கவில்லையென்றால் இங்கு சில பெண் பணியாளர்களை அமர்த்திக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். அதுதான் சரியாக இருக்கும். கூலி கொடுத்துவிடலாம். பத்து லட்ச ரூபாய்க்கான பொருட்கள் என்பது சாதாரணம் இல்லை. 


அத்தனை பொருட்களையும் நேரில் பார்த்த பிறகு மெலிதாக விரல்கள் நடுங்குகின்றன. பெரும் வேலையை எடுத்திருக்கிறோம் என்ற நடுக்கம் அது. இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. ஆயிரம் குடும்பங்களுக்கான உணவுப் பொருட்களை வழங்குவது என்பது நினைத்த அளவுக்கு எளிதான காரியமில்லை. ஆனாலும் செய்துவிடலாம். இவ்வளவு நண்பர்கள் மெனக்கெட்டு உழைக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது நம்பிக்கையாக இருக்கிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. அதைப் பிடித்துக் கொண்டுதானே அத்தனை உயிர்களும் தம் கட்டிக் கொண்டிருக்கின்றன?!

8 எதிர் சப்தங்கள்:

Unknown said...

மிக சிறந்த பணி! ஒரு நாட்டின் முதல்வர் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஆயிரம் குடும்பங்களின் சந்தோசத்தை நினைத்து பார்த்தால், இன்னும் உற்சாகம் பிறக்கும். வாழ்த்துக்கள் தோழர்களே!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

Unknown said...

💪💪💪💪👍

Mohan Prasad Govindaraj said...

மணிகண்டன் அவர்களே, மிக சிறந்த முறையில் இந்த நிவாரண பணிகளை செய்து வருகிறீர்கள். கடந்த இரண்டு நாட்களில் இவ்வளவு ஏற்பாடுகள் செய்து விட்டீர்கள்....பாராட்டுக்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மின்சாரமும் இணைய இணைப்பும் இல்லாத நிலையில் வேலூர் சிவசக்தி மூலம் தங்களின் நிவாரணப் பணி சேவைகளை அறிந்து கொண்டேன். பாராட்டுக்கள் மணிகண்டன். தற்போதைய சூழலில் உதவுவதில் உள்ள சிரமங்கள் கொஞ்சமல்ல. அதையும் மீறி உதவும் எண்ணம் குறையாமல் இருக்கும் மனிதர்களை அடையாளம் காட்டிய வகையில் இந்த மழைக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

அன்புடன் அருண் said...

உங்களோட பரந்த மனசுக்கும், உங்களுக்கு உதவுகிற நண்பர்கள் மற்றும் உங்கள் வாசகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!

எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் குடும்பத்திற்கு பெரிய நன்றி. ஏனெனில் அவர்களுடைய முதல் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமென தோன்றவில்லை!

Ponchandar said...

வாழ்த்துகள் .... பாராட்டுக்கள்......மணிகண்டன் ! ! சீரிய பணி ! ! ...மென் மேலும் சிறக்கட்டும்

Umabathy said...

Sir u r doing a great and wonderful job. You are not an ordinary man brother.

SENTHIL BLR said...

Great Job Manikandan.