Dec 5, 2015

என்ன தயக்கம்?

இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும் இந்தக் கணம் வரைக்கும் ஒன்பது லட்ச ரூபாய் வந்திருக்கிறது. பணம் வந்து கொண்டேயிருக்கிறது. அம்மாவும் மனைவியும்தான் பயப்படுகிறார்கள். இவ்வளவு பெரிய பொறுப்பு தேவையா என்று கேட்கிறார்கள். அவர்களது பயம் நியாயமானதுதான். மிகப் பெரிய பொறுப்பு இது. 

கார்டூனிஸ்ட் பாலா, ஜெகன், உமா மகேஸ்வரன், இளங்கோ கிருஷ்ணன் என ஏகப்பட்ட நண்பர்கள் நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக்கணக்கைக் கொடுத்து பணத்தை அனுப்பச் சொல்லி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தகவல்கள் பல நூறு பேரால் பகிரப்பட்டிருக்கின்றன. இதுநாள் வரையிலும் நிசப்தம் தளத்தை வாசித்து அதன் வழியாக என்னைப் பற்றியும் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றியும் முழுமையாகப் புரிந்தவர்கள்தான் பணம் அனுப்பினார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. என்னைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர்கள் கூட நம்பி அனுப்புகிறார்கள். அவர்களுக்கு வெவ்வேறு கேள்விகள் எழக் கூடும். சந்தேங்களை எழுப்பக் கூடும். அந்த பயமும் தயக்கமும்தான் அம்மாவுக்கும் மனைவிக்கும். அது பிரச்சினையில்லை. அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைத்துவிடலாம். கணக்கு வழக்கில் வெளிப்படையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லை என்று நம்புகிறேன்.

நிசப்தம் அறக்கட்டளை மூலமாக ஆயிரம் குடும்பங்களுக்கு சமையல் செய்வதற்கான பொருட்கள் வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு நிவாரணப் பெட்டியிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, புளி என ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்களுக்கு சமையல் செய்வதற்கான பொருட்கள் வைக்கப்படவிருக்கின்றன.

அரிசி
5 கி.கி
து.பருப்பு
1 கி.கி
புளி
100 கிராம்
சர்க்கரை
1/2 கி.கி
உப்பு
1 பாக்கெட்
கோதுமை மாவு
1 கி.கி
வெள்ளை ரவை
1/2 கி.கி
3 ரோசஸ்
100 கிராம்
நரசுஸ்
100 கிராம்
.மிளகாய்
100 கிராம்
.எண்ணெய்
1 லிட்டர்
தே.எண்ணெய்
200 மி.லி
லைஃப்பாய் சோப்
2
ரின் சோப்
2
ஷாம்பு பாக்கெட்
5
மஞ்சள் தூள்
50 கிராம்
மிளகாய் பொடி
1 பாக்கெட்
சாம்பார் பொடி
1 பாக்கெட்
ரசப் பொடி
1 பாக்கெட்
மல்லித் தூள்
1 பாக்கெட்
ரெடிமிக்ஸ் பவுடர்
1 பாக்கெட்
கொசுவர்த்தி
10
மெழுகுவர்த்தி
1 பாக்கெட்
சானிடரி நாப்கின்
1 பாக்கெட்- சிறியது
தீப்பெட்டி
1 பாக்கெட்
colgate பேஸ்ட்
1
ப்ரஷ்
3
ப்ளீச்சிங் பவுடர்
1 பாக்கெட்
வட சட்டி
1
கரண்டி
1
பக்கெட்
1
கடைசி மூன்று பொருட்களும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. அதே போல கடலூருக்கு மட்டும் மண்ணெண்ணெய் அடுப்புகள் வழங்குவது குறித்த யோசனையும் இருக்கிறது.

இந்தப் பொருட்களை எங்கே வாங்குவது என்கிற விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெங்களூரின் பெரும் கடைகளில் விசாரித்த வரையில் அரிசி என்றால் அப்படியே மூட்டையாகத்தான் தர முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதை நாம்தான் ஐந்தைந்து கிலோவாக பிரித்துப் பொட்டலம் கட்ட வேண்டும். அதே போலத்தான் பருப்பு, சர்க்கரை என எல்லாமும். இந்தப் பொருட்களை குவித்து வைப்பதற்கான இடமும் பொட்டலங்களாகக் கட்டுவதற்கு அனுபவமிக்க ஆட்களும் கிடைப்பது பெங்களூரில் அவ்வளவு சுலபமில்லை.

கோபிச்செட்டிபாளையத்தில் பழக்கமான கடையில் அத்தனை பொருட்களையும் தனித்தனி பொட்டலங்களாக்கி அவற்றைப் பெட்டியில் கட்டி- ஆயிரம் பெட்டிகளைத் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் கடலூருக்கும் சென்னைக்கும் தனித்தனியாக லாரி பிடிக்க வேண்டும். ஒரு பெட்டி பத்து கிலோ எடையாவது வரக் கூடும். சென்னைக்கு அறுநூறு பெட்டிகள் என்றால் ஆறு டன் எடை. டெம்போ போதாது என்கிறார்கள். லாரிதான் தேவை. 

வேறு சில வழிவகைகளை யோசித்த போது எழுத்தாளர் உமாநாத் தனது ஆரணி வீட்டில் பொருட்களை மொத்தமாக வாங்கிப் பிரித்துக் கட்டலாம் என்றார். ஆரணியைவிடவும் அச்சிறுப்பாக்கம் பொருத்தமானதாகத் தெரிந்தது. அங்கிருந்து கடலூருக்கு தொண்ணூறு கிலோமீட்டர். சென்னையும் கிட்டத்தட்ட அதே தூரம்தான். அச்சிறுப்பாக்கத்தில் வசிக்கும் ஜெயராஜ் கடைகளில் விசாரித்துவிட்டு எல்லாவற்றையும் பொட்டலங்களாக வாங்கி வந்துவிடுவதாகச் சொன்னார். அரிசி ஐந்து கிலோ பொட்டலம், பருப்பு ஒரு கிலோ பொட்டலம் என நம் தேவைக்கேற்றபடியான பொட்டலங்கள். அவற்றை அட்டைப்பெட்டியில் வைத்துக் கட்டுவதுதான் நம் வேலை. அதைச் செய்வதற்கும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு பள்ளிக் கூடத்தில் அனுமதி வாங்கியிருக்கிறார். அங்கு பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அச்சிறுபாக்கத்திலிருந்து பொருட்களை அனுப்பி வைப்பதற்கான வாகன ஏற்பாடுகளையும் செய்வதற்கான விசாரணைகளில் ஜெயராஜ் இறங்கியிருக்கிறார். 

இன்றிரவு அச்சிறுபாக்கம் கிளம்புகிறேன். நாளை காலையில் வியாபாரிகளிடம் ஒரு முறை பேசிவிட்டு பொருட்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடுவதுதான் திட்டம். தேவைப்படுமாயின் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அங்கேயே தங்கியிருந்து நிவாரணப் பொருட்களை பெட்டிகளில் கட்டும் வேலையை முடித்துவிடுகிறோம். திட்டமிட்டபடி வார இறுதிக்குள் பொருட்கள் கடலூரிலும் சென்னையிலும் விநியோகிக்கப்படும்.

நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்வதற்கான இடங்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை சில நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடலூரில் கண்டராதித்தன் கிராமங்களைத் தேர்ந்தெடுக்கிறார். துணை ஆட்சியரிடம் உதவி கோருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் பிரச்சினை எதுவும் இருக்க வாய்ப்பில்லை. சென்னையில்தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பொருட்களை வாங்குகிற வேலை முடிந்தவுடன் முழுக் கவனத்தையும் அதில் செலுத்திவிடலாம்.

அறக்கட்டளையின் கணக்குக்கு பணம் வரும் வேகத்தைப் பார்த்தால் இன்னமும் பல லட்சங்கள் வரக் கூடும். இப்பொழுது நாம் செய்து கொண்டிருக்கு வேலை முதற்கட்டமானது. இப்போதைக்கு பத்து லட்ச ரூபாய் முதற்கட்ட நிவாரணப் பொருட்களுக்காகக் ஒதுக்கப்படுகிறது. எப்படியும் ஐந்தாறு லட்சம் வரைக்குமாவது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு உதவுவதற்காகத் ஒதுக்கலாம். நிலைமை ஓரளவு சீரடைந்த பிறகு அந்தப் பகுதி மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், காலணி போன்றவை வாங்கித் தருவதை இரண்டாம் கட்ட நிவாரணப் பணியாக செய்து தரலாம்.


முதல் இருபத்து மூன்று பரிமாற்ற விவரங்களை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். வரிசை எண் 111 - குழந்தை கிருஷ்ணாவின் மாதாந்திர பராமரிப்பு செலவுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணா பற்றிய விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.

நிவாரணப் பணி சம்பந்தமான அனைத்து செயல்களையும் நிசப்தத்தில் தொடர்ந்து பதிவு செய்யவிருக்கிறேன். வேறு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தகவல்கள் தேவைப்படுமாயின் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளவும். 

மின்னஞ்சல்களும் அலைபேசி அழைப்புகளும் ஓய்வில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன. பெரிய பொறுப்புதான். ஆனால் மிகத் தெளிவாக இருக்கிறேன். எந்த அழுத்தமும் இல்லாமல் இதைச் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏகப்பட்ட நண்பர்களும் முகம் தெரியாத அன்பர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். அப்புறம் என்ன தயக்கம்?

13 எதிர் சப்தங்கள்:

சரவணன் சேகர் said...

உங்களுடைய வெளிப்படையான அணுகுமுறையினால் உங்கள் மீதான மற்றவர்களின் நம்பிக்கை பெருகியிருக்கிறது. அவர்கள் தங்கள் நண்பர்களிடம் இதை பற்றிசொல்லி உதவ சொல்றாங்க.. தயக்கமோ பயமோ வேண்டாம் அண்ணா .. நாங்கள் துணை நிற்போம்

சேக்காளி said...

எந்த விதமான பங்களிப்பும் இன்றி வாழ்த்த வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும்,
//பெரிய பொறுப்புதான். ஆனால் மிகத் தெளிவாக இருக்கிறேன். எந்த அழுத்தமும் இல்லாமல் இதைச் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது//
இந்த நம்பிக்கையை வாழ்த்தியே ஆக வேண்டும். அதுவும் மனப்பூர்வமாக.
வாழ்த்துக்கள் மணி.

எம்.ஞானசேகரன் said...

நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நான் தமிழ்நாட்டில் இருந்தால் என்னாலான உதவியை உடலுழைப்பைச் செய்திருப்பேன்.

Kannan said...

Go for it, there are so many people have put faith in you.

Wishing you all the best.

Kannan

om said...

Super work friends. Please please provide drinking water along with them

Anonymous said...

Mani Sir,

You are really great!
You are very transparent and honest due to which the funds are getting raised.
Please get the things going. We are always there with you.

அன்பே சிவம் said...

இதுவும் ஒருவகையான வலிதான்
பிரசவ வலி வந்த பின்
பெற்றெடுக்கும் குழந்தையை பார்த்து
தாயின் கண்களில் வரும் கண்ணீர்
வலியால் வருவது அல்ல!...

அது..

இத்தனை
வலிகளை எதிர்கொண்டு பின்
பெற்ற குழந்தையை கண்ட ஆனந்தத்தில் வருவது....

நிற்க...

அந்த
ஆனந்த வலி எனக்கு
இப்போதே
ஆரம்பித்து விட்டது...

அன்பே சிவம்,

Unknown said...

உங்களது முயற்சியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

ராஜா

Anonymous said...

Mani அவர்களுக்கு!
உங்கள் நம்பிக்கை வெற்றி பெற பிராத்திக்கிறன்.
நல்ல மனிதர்கள் குழுவாக உதவும் போது உங்கள் பலம் உங்களை வழி நடத்தும்.
உஷா

Vinoth Subramanian said...

Good sir. I will try to support this from my side financially.

கிருஷ்ணா ஜெராக்ஸ் said...

எந்த விதமான பங்களிப்பும் இன்றி வாழ்த்த வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும்,
//பெரிய பொறுப்புதான். ஆனால் மிகத் தெளிவாக இருக்கிறேன். எந்த அழுத்தமும் இல்லாமல் இதைச் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது//
இந்த நம்பிக்கையை வாழ்த்தியே ஆக வேண்டும். அதுவும் மனப்பூர்வமாக.
வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

@கிருஷ்ணா ஜெராக்ஸ்

babygirl said...

Is there any plan to build houses for the people who lost their houses during flood?