Dec 4, 2015

கடலூர் சென்னை- விவரங்கள்

பணம் பிரச்சினையே இருக்காது என்று எழுதும் போதே தெரியும். வெள்ள நிவாரணத்துக்கு உதவுவதாக எழுதிய பிறகு ரூபாய் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பணம் வந்திருக்கிறது. இன்னமும் சில பரிமாற்றங்கள் அறக்கட்டளையின் கணக்குக்கு வந்து சேரவில்லை. எப்படியும் ஐந்து லட்ச ரூபாய்க்கு குறையாது. அறக்கட்டளையிலிருந்து ஒரு தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கணிசமான தொகைக்கு நம்மால் உதவ முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.‘ஏன் கடலூரை கவனிக்கவில்லை?’ என்று சிலர் கேட்டிருந்தார்கள். காரணத்தை வெளிப்படையாக எழுத வேண்டாம் என்று யோசிக்கிறேன். அதை வெளிப்படையாக எழுதினால் கடலூருக்கு பொருள் அனுப்புகிறவர்கள் தயங்குவார்கள் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் சொல்லிவிடுவது நல்லது என்று தோன்றுகிறது. அரசாங்கத்தின் பார்வைக்குச் செல்லக் கூடும். கடலூருக்குச் செல்லும் பல நிவாரண வண்டிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக நண்பர்கள் சொல்கிறார்கள். அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டி விநியோகம் செய்யச் சொல்கிறார்கள் என்றும் பொருட்களைத் தாங்கள் சொல்லும் இடங்களில்தான் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகச் சொன்னார்கள். எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. ஆனால் யாரோ எங்கேயோ இருந்து சம்பாதித்த பணத்தை இவர்களிடம் கொடுத்தால் சரியான பயனாளிகளைச் சேர்ந்துவிடும் என்று நம்மை நம்பிக் கொடுக்கிறார்கள். நமக்கும் இத்தகைய செயல்களில் அனுபவம் கிடையாது- அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றுதான் கடலூரைச் சேர்க்கவில்லை. 

நேற்று நண்பர் சுரேஷ் பேசினார். அவர் கடலூரின் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகச் சொன்னார். அவர் வழியாக கடலூருக்கு ஒரு பகுதியை அனுப்பிவிடலாம் என்று தோன்றுகிறது. நான்கில் மூன்று பங்கு தொகையைச் சென்னைக்கும், நான்கில் ஒரு பங்கு தொகையைக் கடலூருக்கும் ஒதுக்கிவிடலாம். அப்படியானால் இன்னொரு நடைமுறைச் சிக்கல் வருகிறது. சென்னைக்குத் தனியாக வண்டி பிடிக்க வேண்டும். கடலூருக்குத் தனியாக வண்டி பிடிக்க வேண்டும். இரண்டு வாடகை. அந்த வாடகைத் தொகையில் இன்னமும் சில குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கிவிட முடியும்.

இதற்கு வேறு என்ன வழி?

வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற ஏதாவதொரு ஊரில் நல்ல மனிதர் ஒருவரைப் பிடித்து அவர் வழியாக நல்ல கடை ஒன்றைக் கண்டுபிடிக்கலாம். நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்கிற பட்டியலை அந்தக் கடையில் கொடுத்துவிடலாம். அவர்கள் அடுக்கும் போது தன்னார்வலர்களில் சிலர் அந்த ஊருக்குச் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்- நான் செல்கிறேன். பெட்டிகளில் ஒரு பகுதியை கடலூருக்கும் இன்னொரு பகுதியைச் சென்னைக்கும் அனுப்பிவிடலாம். 

இப்படிச் செய்வதால் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. அரிசி, பருப்பு, பொடிகள் என்று பொருட்களாக யாராவது வழங்க விரும்பினால் அவற்றை என்ன செய்வது என்கிற குழப்பம் இருக்கிறது. அது குறித்து யோசிக்க வேண்டும்.

சென்னையில் வசிக்கும் சில நண்பர்களுடன் பேச முடிந்தது. பல நிவாரண முகாம்களில் உதவிகள் குவிந்து கொண்டிருப்பதாகவும், ஒரு முறை நிவாரணப் பொருட்களை வாங்கிக் கொள்பவர்கள் யாருமே மற்றவர்களுக்கும் கொடுக்கச் சொல்லிக் ஒதுங்கிக் கொள்வதில்லை என்றும் வருந்தினார். மனித மனம் அப்படித்தான் இருக்கும். அது குறித்து வருந்த வேண்டியதில்லை. நம்முடையை கடமையைச் சரியாகச் செய்வோம்.

‘ஏன் உடனடியாகச் செய்யாமல் ஒரு வார கால அவகாசம்’ என்று கேட்பவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அனுபவம் எதுவுமில்லாமல் உடனடியாக பதறியடித்துச் செய்யும் உதவிகள் வீணாகப் போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரியான பயனாளிகளை அடைகின்றனவா என்பது பற்றி நம்மால் உறுதியான முடிவுக்கு வர முடிவதில்லை. ஒரு வாரம் என்பது நமக்கான அவகாசம். திட்டமிட்டுச் செய்யலாம். பணம் எப்பொழுதும் பிரச்சினையே இல்லை- செயலாக்குவதுதான் பிரச்சினை. ஒரு வாரம் தாமதம் என்றாலும் பரவாயில்லை- நம்முடைய உதவியில் தொண்ணூறு சதவீதம் சரியான ஆட்களை அடையும்படி பார்த்துக் கொள்ள முடியும்.

‘அரிசி, பருப்பு, ஸ்டவ் எல்லாம் கொடுத்தால் அவர்கள் சமையல் செய்யப் போகிறார்களா?’ என்று ஒருவர் கேட்டார். மிக அதிகமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் இருப்பவர்களால் செய்ய முடியாது. ஆனால் அதற்கடுத்த நிலையில்- குடிசைகள் அடித்துச் செல்லப்படாமல் ஆனால் பொருட்களை இழந்த குடிசைப்பகுதிகளும் நிறைய இருக்கின்றன. ஒரு வாரத்தில் அந்த மக்கள் தங்களது குடிசைகளுக்குத் திரும்பிவிடக் கூடும். அவர்களுக்கு நிவாரணப்பணிகள் சென்று சேரும் என்று சொல்ல முடியாது. நாம் அவர்களுக்கு உதவலாம். பாதிக்கப்பட்டு கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட எளிய மனிதர்கள் அவர்கள். இத்தகைய பகுதிகள் குறித்து சென்னை மற்றும் கடலூர் நண்பர்களிடம் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். 

நேற்றிலிருந்து இதுவரைக்கும் குறைந்தபட்சம் நூறு அலைபேசி அழைப்புகளாவது வந்திருக்கும். தங்களால் எந்தவிதத்தில் உதவ முடியும் என்று கேட்கிற அத்தனை பேரும் இந்த செயல்பாட்டில் பங்குபெறலாம். 
  • சென்னை, கடலூர்- இரண்டு ஊர்களுக்கும் பொதுவான ஊரில் இருப்பவர்கள் நல்ல கடையொன்றைத் தேர்ந்தெடுத்து உதவுங்கள். கடைக்காரருக்கு ஐந்து லட்ச ரூபாய் என்பது பெரிய ஆர்டர். அதற்கேற்ற தரமான பொருட்களை, ஏமாற்றாமல் கொடுப்பவராக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
  • அந்தக் கடையிலிருந்து பொருட்கள் கடலூருக்கும் சென்னைக்கும் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கடைக்காரர் செய்து கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். அதையும் விசாரியுங்கள்.
  • நிவாரணப்பொருட்கள் அடங்கிய பெட்டியுடன் ஒரு மண்ணெணெய் ஸ்டவ் ஒன்றையும் கொடுக்கும் திட்டமிருக்கிறது. பல நூறு ஸ்டவ்களைக் கொடுக்கும் விற்பனையாளர் அல்லது விநியோகிப்பாளரைப் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்த விதத்தில் உதவலாம்.
  • சென்னை, கடலூரில் சரியான குடிசைப்பகுதியைக் கண்டுபிடிக்க உதவலாம். 
இப்படி எந்தவிதத்திலும் உதவலாம். Its a cumulative effort. All are welcome!

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

அத்தியாவசிய மருந்துகள், சானிடரி நாப்கின்ஸ் இதையும் நிவாரண பொருள்களோடு சேர்த்துக்குங்க நண்பரே......

Unknown said...

திரு மணிகண்டன்,நான் அடுத்து இணைத்துள்ள mobile numberல் மோகன் என்பவர் போர்வைகளை ஹோல்சேல் ரேட்ல120 ரூபாய்க்கு தரதா சொல்லிருக்காங்க.நீங்க குடுக்கறதா இருந்தா check பணிகோங்க,நான் எனது facebookல் வந்த message வெச்சி உங்களுக்கு அனுப்புகிறேன்.நன்றி.

mohan : +9188833-22133.

Unknown said...

Hi,

I stay in Bangalore. If you want any volunteer I can join with you. Please let me know. my number: 9886559613

Sasikumar said...

https://m.facebook.com/story.php?story_fbid=918422254860642&id=100000786292216#
தேயிலை
சர்க்கரை அல்லது சீனி 
காப்பித்தூள் 
உலர் பால் மா
பிஸ்கட்
மெழுகுதிரி..
தீப்பெட்டி அல்லது லைட்டர் 
பற்பொடி

அடுத்த பையில்
அரிசி
பருப்பு
இன்னும் சில மசாலா சாம்பார் பொருட்கள்
எண்ணெய்
சோப்
வலி மாத்திரை முடியுமானால்
நாப்கின்ஸ்கள் அனைத்து பெண்களுக்கும்
பம்பஸ் குழந்தைகள் இருப்போருக்கும்
பாய்
போர்வை
துணி மணிகள் முக்கியம் குழந்தைகளும் வயதானவர்களும் பயன் படும் கனமான துணிகளை சேகரியுங்கள்.

@Ganshere said...

i think the trust can help https://www.facebook.com/anupamarnold/posts/10153743040680883 ASAP

@Ganshere said...

மஞ்சளையும் சேத்துக்கலான் சேத்துப்புண்ணுக்கு பயன்படும் check with ur mom she might be knowing better

Saravanan PK said...

Am also staying in Bangalore ready to join as volunteer please let me know, my mobile: 9632077102