Dec 2, 2015

நான் ஒரு...

ஐந்து வயது இருக்கும் போது முதன் முதலாக சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்கள். சுமார் பதினைந்து பேர் கொண்ட குழு அது. எல்லோரும் ஒரே ஊர்க்காரர்கள். தாய்மாமன் ஒவ்வொரு வருடமும் சாஸ்தாவை தரிசிக்கச் செல்வார் என்பதால் என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். கிளம்பியவுடன் எனக்கு கடும் காய்ச்சல் வந்துவிட்டது. பயணம் முழுவதும் பினாத்திக் கொண்டேயிருந்ததாகச் சொன்னார்கள். இரவில் பம்பை நதிக் கரையில் வண்டியை நிறுத்திவிட்டு எல்லோரும் தூங்கியிருக்கிறார்கள். கதவைத் திறந்து கீழே இறங்கி ஓடிவிட்டேன். எப்பொழுது ஓடினேன் என்றெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. வெகு நேரம் கழித்து யாரோ பார்த்திருக்கிறார்கள். பொடியனைக் காணவில்லை என்று பதறியடித்து பதினைந்து பேரும் இறங்கிச் சல்லடை போட்டிருக்கிறார்கள். செல்போன் எதுவும் இல்லாத காலம். கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரம் தேடினார்களாம். மழை பெய்து கொண்டிருக்கிறது. இருட்டு. அப்பொழுது தேடியவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. கடைசியில் எங்கேயோ பிடித்து இழுத்து வந்திருக்கிறார்கள்.

இப்பொழுது நினைத்தாலும் பயங்கர சந்தேகம் ஒன்று வந்துவிடும். ஒருவேளை அவர்கள் அழைத்து வந்த குழந்தைக்கு பதிலாக என்னைப் பிடித்து இழுத்து வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது அல்லவா? இதை எங்கள் அம்மாவிடம் கேட்டால் படு டென்ஷனாகிவிடுவார். ‘நான் உங்க பையன்தான்னு எப்படி உறுதியா நம்புறீங்க?’ என்று கேட்டு ஒரு சமயம் செமத்தியாக வாங்கிக் கட்டியிருக்கிறேன். அதோடு விடவில்லை. ‘எது எப்படியோ அவன் எங்கேயோ போகட்டும். நான் சரியான இடத்துக்கு வந்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் முகத்தைப் பார்ப்பேன். அவர் உறுதியாகத்தான் இருப்பார். எப்படியாவது சிறு சலனத்தை உருவாக்கிவிட முடியுமா என்கிற முயற்சிதான். அவரிடம் ஒரே பதில்தான் இருக்கிறது. ‘ஆண்டவன் இருக்கிறான். அவனுக்குத் தெரியும்’.

நேற்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் போது எதற்காக பேருந்து மாற்றி மாற்றி பயணிக்க விரும்புகிறாய் என்று? புத்தகங்கள் வழியாகவும் இணையத்தின் வழியாகவும் கற்றுக் கொள்வதைவிடவும் மனிதர்களின் வழியாக- புதிய மனிதர்களின் வழியாக நாம் நிறையக் கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். வீட்டிற்கு வரும் சொந்தக்காரர்களிடம் அதிமகாகப் பேசுவதில்லை. அவர்களிடமும் ஒரு தயக்கம் இருக்கும். நம்மிடமும் ஒரு தயக்கம் இருக்கும். ‘இதை எல்லாம் இவன்கிட்ட பேச வேண்டியதில்லை’ என்று அவர்கள் நினைக்கக் கூடும் அல்லது ‘இவன் உளறுவாயனா இருக்கிறான்’ என்று நம்மைப் பற்றி முடிவு செய்து கொள்ளக் கூடும். எதற்கு வம்பு? ஆனால் புதிய மனிதர்களிடம் அப்படியில்லை. அந்தக் கணத்திற்கான உறவு அது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். எதை வேண்டுமானாலும் பகிர்ந்து சுமையை இறக்கிவிட்டு நகர்ந்து போய்விடலாம். இப்படியான பகிர்வுகள் இந்த உலகம் பற்றிய வேறொரு புரிதலை நமக்கு உருவாக்குகின்றன. உலகின் இன்னொரு பரிமாணத்தை நமக்குக் காட்டுகின்றன. இப்படி நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதோவொன்று இருப்பதாக உறுதியாக நம்பலாம்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ஒரு நாள் சென்னை செல்வதற்காக ஓசூரிலிருந்து பேருந்து பிடித்திருந்தேன். நள்ளிரவு தாண்டிய பிறகு காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் வண்டி நின்றது. ஒரேயொரு தேநீர்க்கடையைத் தவிர வேறு எதுவுமில்லை. கடையில் டீ மாஸ்டர் மட்டும் இருந்தார். பயணிகள் தேநீர் பருகினார்கள். பேருந்து கிளம்பிய போது நடத்துநரிடம் அடுத்த பேருந்தில் வருகிறேன் என்று சொன்ன போது வித்தியாசமாகப் பார்த்தார். திடீரென்று எடுத்த முடிவுதான் அது. அந்த டீக்கடையில் அமர வேண்டும் என்பதற்காகவே அப்படிச் சொல்லி பேருந்தைத் தவறவிட்டேன். பேருந்து கிளம்பிய பிறகு அங்கு யாருமே இல்லை. சில தெரு நாய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைந்து கொண்டிருந்தன. பக்கத்திலிருந்த சைக்கிள் ஸ்டேண்டில் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். பிரதான சாலையில் அவ்வப்போது வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன.

டீக்கடைக்காரர் ‘ஏன் போகலை?’ என்றார். 

‘சென்னையில் நான்கு மணிக்கு எனக்கு எந்த வேலையும் இல்லை. கொஞ்சம் நேரம் கழித்துச் செல்கிறேன். ஏழு மணிவாக்கில் சென்றால் சிரமம் இல்லை’ என்றேன். 

அதன் பிறகு அவரிடம் பேசுவதற்கு எனக்கும் என்னிடம் பேசுவதற்கு அவருக்கும் ஏகப்பட்ட சங்கதிகள் இருந்தன. இரவுகள் மனிதர்களின் மனநிலையை புரட்டிப் போடுகின்றன. ரகசியத் திறப்புகளையெல்லாம் அவை உடைத்துவிடுகின்றன. குடும்பம் குழந்தை என சகலத்தையும் பகிர்ந்து கொண்டார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு ‘அடுத்தவன் பாவம்ன்னு நினைக்கிறதுக்கு மனுஷங்க இருக்காங்க...ஆனா அந்தப் பாவப்பட்ட மனுஷனுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிக்க ஆளுங்க இல்லை..அப்படி நினைக்கிறாம் பாருங்க..அவன் நல்லா இருப்பான்’ என்றார். அது உண்மையிலேயே வெகு அர்த்தம் பொதிந்த வாக்கியமாகத் தெரிந்தது. அப்படித்தானே இருக்கிறோம்? நம்மைவிட கீழே இருக்கும் மனிதர்களைப் பார்த்து நம்மில் பெரும்பாலானவர்கள் பரிதாபப்படுகிறோம். ஆனால் அதற்கு மேல் யோசிப்பதில்லை. ‘நமக்கே ஆயிரம் வேலை இருக்கு’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

அதன் பிறகு எத்தனை முறை அந்த வழியாகச் சென்ற போதும் அந்த மனிதரைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் சொன்ன இந்த ஒரு வாக்கியம் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. இப்படியான வாக்கியங்களும் சம்பாஷணைகளும் ஞானத்தைக் கொடுத்து நம்மை புத்தனாக்கிவிடுவதில்லை. ஆனால் நம்முடைய இன்றைய நிலையிலிருந்து பக்குவத்தை நோக்கி இன்னும் ஒரு படி நகரலாம். என்னிடமிருக்கும் வன்மத்தையும் வஞ்சகத்தையும் பொறாமையையும் இத்தகைய சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கழுவி விடக் கூடும் என்று நம்புகிறேன். இத்தகைய எளிய மனிதர்களின் வழியாகவே உலகின் ஜன்னல்கள் திறக்கின்றன. நம்முடைய மனிதத்தை இவர்கள்தான் தட்டியெழுப்புகிறார்கள். இதையெல்லாம் முயற்சித்துப் பார்க்கும் வரைக்கும் நமக்குத் தெரிவதில்லை.

அதனால்தான் பயணங்களின் போது செல்போனில் குடி புகுபவர்களைப் பார்ப்பதற்கு அயற்சியாக இருக்கிறது. செல்போனும், ஃபேஸ்புக்கும் எப்பொழுதுமேதான் நம்மோடு இருக்கின்றன. அதை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் பயணங்களின் போது நாம் கவனிக்காமல் தவிர்க்கும் முகங்களும் காது கொடுக்காமல் தவறவிடும் சொற்களும் வாகனத்தின் ஜன்னலுக்கு வெளியில் தாண்டிச் செல்லும் மனிதர்களும் எந்தக் காலத்திலும் திரும்ப வராதவர்கள். ஆனால் வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருபவை அந்த முகங்களும் சொற்களும்தான். 

முதலில் எதற்கு சபரிமலை பற்றி ஆரம்பித்தேன் என்று கேள்வி எழக் கூடும் அல்லவா? எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எதையாவது நம்புவோம் என்கிற கட்சியைச் சார்ந்தவன் நான். அம்மனோ அய்யப்பனோ கை தூக்கிவிட்டுவிடுவார்கள் என்கிற நம்பிக்கை ஆறுதலாக இருக்கிறது. அப்படியே அவர்கள் கைதூக்கிவிடாவிட்டாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. நடப்பதுதான் நடக்கும். ஆனால் கஷ்டகாலத்தில் அந்த நம்பிக்கை பற்றுக் கோலாக இருக்கிறது. அதற்காகவேனும் கடவுளை நம்புகிறேன். அதனால் என்னுடைய செல்போனில் ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ தவிர வேறு எந்தப் பாடலும் இல்லை. சங்கடமாக இருக்கும் போது மட்டும் அந்தப் பாடலை ஒலிக்கவிடுவேன். செல்போன் என்றால் செங்கல்போன். நான்காவது மாடியிலிருந்து கீழே போட்டாலும் உடையாது. தொடுதிரையெல்லாம் இல்லாமல் பேசுவதற்காக மட்டும் வைத்திருக்கிறேன். அதிகபட்சமாக மெசேஜ் அனுப்பலாம். ஒரு குறுஞ்செய்திக்கு நாற்பத்தொன்பது பைசா ஆகிறது என்பதால் எப்பொழுதாவது வேணிக்கு மட்டும் அனுப்புவேன். அதுவும் அவள் கோபமாக இருக்கும் போது ரொமாண்டிக்காக அனுப்புவதாக நினைத்து எதையாவது அனுப்பி அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதால் இப்பொழுது அவளுக்கும் அனுப்புவதில்லை. எடுத்து பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுவிட்டு பேருந்து ஏறினால் அடுத்தவர்களிடம் பேசுவது தவிர வேறு எந்தப் பொழுது போக்கும் எனக்கு இல்லை.

செங்கல்போனில் இன்னொரு பாடலும் வைத்திருக்கிறேன். சந்திரபாபுவின் பாடல். என்ன பாடல் என்று சொன்னால் நீங்களும் என்னை அப்படியே நினைத்துக் கொள்வீர்கள். அதனால் அதைச் சொல்ல முடியாது. சந்தோஷமாக இருக்கும் போது மட்டும் அதைக் கேட்பேன்.

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//என்ன பாடல் என்று சொன்னால் நீங்களும் என்னை அப்படியே நினைத்துக் கொள்வீர்கள்//
உங்களை வெற்றி பெற்ற மனிதனாக நினைக்கிறீர்களா?
அல்லது
புத்திசாலி மனிதனாக நினைக்கிறீர்களா?

சபரி நாதன் said...

எனக்கும் சிறு வயதில் சபரி மலை - பம்பையில் (10 வயதில்) தொலைந்த அனுபவம் இருக்கிறது. தொலைந்தாலும் தெளிவாக எங்களது பேருந்து நின்ற இடத்திற்கு சென்றுவிட்டேன். ஆனால் என்னை தேடிச்சென்ற சிலரை தொலைத்து இரவெல்லாம் அவர்களைத்தேடி அலைந்தார்கள்!

Anonymous said...

naanoru - nu start agum..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆமாம்....
"நானொரு..." சந்தோஷமான நேரங்களில் கேட்கும் பாடலா?

Ponchandar said...

நானொரு .........ங்க ! ! நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க ! !

senthil said...

பாடல் இதுதானா...

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...