Dec 1, 2015

மூன்றாம் நதி- விளையாட்டு 1

மூன்றாம் நதி தலைப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது. எந்நூற்று எண்பத்து நான்கு வாக்குகளில் மூன்றாம் நதிக்கு கிட்டத்தட்ட எழுபது சதவீத வாக்குகள். பதிப்பாளருக்கு அந்தர்வாகினிதான் பிடித்திருந்தது. ‘எப்படிங்க கள்ள ஓட்டு போடுறது?’ என்று என்னிடமே கேட்கிறார். டெபாசிட் காலியானவர்களை கோல்மால் செய்து வெல்ல வைப்பது ஜனநாயகத்தை புரட்டிப் போட்டு அடிப்பது போலாகிவிடும் என்று வீர வசனம் பேசினேன். ‘ஓட்டுக்கு காசு கொடுக்கட்டுமா?’ என்கிறார். அதுவும் ஜனநாயகத்தின் அங்கம் என்பது அவரது வாதம். ஆனால் இதெல்லாம் வெட்டி பந்தா. புத்தகம் வெளியிடுவதற்கே கடன் வாங்கி சேவை புரிந்து கொண்டிருக்கும் புனிதர்கள் அவர்கள். காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறார்களாம். சிரிப்பு வந்துவிட்டது.

இனி மூன்றாம் நதி என்கிற பெயரை ஏ, பி, சி செண்டர்களில் பிரபலப்படுத்தி, கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் நடத்தி, ப்ளாக் மார்க்கெட்டில் விற்கிற ரேஞ்சுக்கு கொண்டு போக வேண்டியதுதான் என்று பீலா விடலாம்தான். அந்தப் பக்கமாகச் சென்று சிரிப்பீர்கள் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் சென்னையைத் தாண்டி புத்தகம் வெளியே போவதில்லை. லிண்ட்சே லோஹனுக்கும் அதுதான் நேர்ந்தது. மசால் தோசையின் விதியும் அப்படித்தான். ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள். புத்தகக் கண்காட்சியில் கணிசமாக விற்கிறார்கள். மிச்சமிருப்பதை டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து விற்று சோலியை முடித்துக் கொள்கிறார்கள். ‘இப்படி சென்னையில் மட்டும் விற்பனை செஞ்சீங்கன்னா சேலம் திருநெல்வேலி தேனின்னு நான் போனா யாரு தாரை தப்பட்டை அடிச்சு வரவேற்பாங்க’ என்று கேட்டால் முறைக்கிறார்கள். அதற்கு மேல் கேட்டால் முஷ்டியை மடக்கி முகத்தை வீங்கச் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. பொட்டி தட்டுகிற பையனுக்கு இவ்வளவு அறிவா என்று பொறாமைப்படுகிறார்கள். கிராதகர்கள். 

சரி போகட்டும். 2016 இல் முதலமைச்சராகி இவர்களை எல்லாம் தேசத் துரோக வழக்கில் கைது செய்யலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன்.

மூன்றாம் நதி நாவலுக்காக இதுவரை ஐந்தாயிரம் ரூபாய் வந்திருக்கிறது. சரவணபாபு ஆயிரம் ரூபாய். வெங்கடாசலம் பழனிசாமி இரண்டாயிரம் ரூபாய் மற்றும் பாண்டியராஜன் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் ஐம்பது பிரதிகள். இந்த ஐம்பது பிரதிகளை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்துக் கொள்ள அனுமதி தந்திருக்கிறார்கள். என்னையும் கை தூக்கிவிடும் அப்பிராணி இதயங்கள். ஐம்பது பிரதிகளை யாருக்கு அனுப்புவது? ஒவ்வொரு பத்து பிரதிக்கும் ஒரு விளையாட்டு நடத்தலாம். இதைப் போட்டி என்றெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. விளையாட்டுதான். முதல் விளையாட்டாக நாவல் பற்றிய குறிப்பு. மூன்றாம் நதி நாவல் அல்லவா? அதனால் நாவல் பற்றிய குறிப்புதான் முதல் விளையாட்டு.

இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறவர்கள் தாங்கள் வாசித்ததில் பிடித்தமான நாவல் ஒன்றைப் பற்றிய குறிப்பை எழுதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். vaamanikandan@gmail.com. எந்த வரையறையும் இல்லை. எவ்வளவு சொற்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆங்கிலத்தில் கூட இருக்கலாம். ஆனால் தங்கிலீஷில் இருக்கக் கூடாது. அவ்வளவுதான். தங்கிலீஷில் இருந்தால் அதை தமிழில் மாற்றுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. நாளை(02/12/2015) மதியம் இந்திய நேரப்படி பனிரெண்டு மணி வரைக்கும் குறிப்புகளை அனுப்பி வைக்கலாம். அவற்றிலிருந்து பத்து சிறந்த குறிப்புகளை எழுதியவர்களுக்கு தலா ஒரு பிரதி அனுப்பி வைக்கப்படும். பத்து சிறந்த குறிப்புகளை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதுவும் ஜனநாயக முறைப்படிதான். முதல் சுற்றுத் தேர்வை மட்டும் நான் செய்துவிடுகிறேன். இரண்டாவது சுற்றுத் தேர்வுக்கு நிசப்தம் வலைப்பதிவில் சர்வே நடத்திவிடலாம். நாளை காலையில் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் நிசப்தத்தில் வலையேற்றம் செய்யப்படும். வாசகர்கள் வாக்களிக்கலாம். முடிவை வெள்ளிக்கிழமையன்று அறிவித்துவிட்டு அடுத்த விளையாட்டை வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கலாம்.

இப்போதைக்கு ஐம்பது பிரதிகளுக்கு ஸ்பான்ஸர்கள் இருக்கிறார்கள். வேறு இரண்டு பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் ஆளுக்கு பத்து பிரதிகளுக்கான பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள். உலகம் என்னை நம்புகிறது என்று சொன்னால் என் மனைவி கூட நம்புவதில்லை. இதெல்லாம்தான் எனக்கான அத்தாட்சிகள். பணம் வந்தால் நடத்திக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். முதல் விளையாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் பத்துப் பேருக்கும் நாவல் வெளியாகும் தினத்திலேயே தூதஞ்சலில் அனுப்பி வைத்துவிடலாம். 

இது ஒருவகையில் ஜாலியான போட்டி. அதே சமயம் மற்றவர்களுக்கும் புதுப்புது நாவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறேன்.

தமிழ் நாவல்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள், ஆங்கில நாவல்கள் பற்றிய குறிப்புகளாக இருக்கட்டும். ஸ்பானிஷ் நாவலை வாசித்தேன் என்று ப்ரெஞ்ச் நாவலை வாசித்தேன் என்று அனுப்பி வைத்தால் அதை அப்படியே மோருஆன்லைனுக்கு மடை மாற்றம் செய்துவிடுவேன். கண்டபடி திட்டி அவர் பதிவு எழுதினால் நிசப்தம் நிர்வாகம் ஜவாப்தாரி ஆகாது.

இன்றைய மற்றொரு பதிவு: குடித்தால் மட்டும்?

5 எதிர் சப்தங்கள்:

Unknown said...

சமீபத்தில் படித்த நாவலில் மிகவும் பிடித்தது மாதொருபாகன்.கதையும் கதைகளமும் மிகவும் அருமை.ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதர்க்கெல்லாம் தன் எழுத்துக்கள் மூலமாக எதிர் பதில் கூற முடியும் என்பதற்கு அவருக்கு கிடைத்த சாமன்வய பாசை சம்மன் விருது ஒர் எடுத்துக்காட்டு. நன்றி பெருமாள்முருகன் அவர்கட்கு.

Unknown said...

"ஸ்பானிஷ் நாவலை வாசித்தேன் என்று ப்ரெஞ்ச் நாவலை வாசித்தேன் என்று அனுப்பி வைத்தால் அதை அப்படியே மோருஆன்லைனுக்கு மடை மாற்றம் செய்துவிடுவேன். கண்டபடி திட்டி அவர் பதிவு எழுதினால் நிசப்தம் நிர்வாகம் ஜவாப்தாரி ஆகாது" Super lol

viswa said...

Why can't you include short stories also so that unfortunate souls like me can scribble something?
Vishwa

Vaa.Manikandan said...

மூன்றாம் நதி நாவல் என்பதால் நாவல் என்று யோசித்தேன். முயற்சி செய்து பாருங்கள் :)

Venkatesan said...

விஷ்வாவின் கருத்தை வழிமொழிகிறேன். நாவல்கள் நீளமானவை என்பதால் சிறுகதைகள் மட்டும் படிக்கும் அப்பிராணிகளும் இருக்கிறோம்.