Nov 24, 2015

கல்லூரி கசமுசா

ஆனந்த் பொறியியல் கல்லூரி மாணவன். வசதியான குடும்பம்தான். அப்பாவும் அம்மாவும் வெளியூரில் இருக்கிறார்கள். இவனை விடுதியில் சேர்த்திருந்தார்கள். பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் கான்வெண்ட் படிப்பு. அதனால் பெண்களுடன் பழகுவதில் எந்த சங்கோஜமும் இல்லை. முதல் ஆண்டிலேயே நிறைய பெண்களுடன் பேசத் தொடங்கியிருந்தான். அது நிறையப் பேருக்கு பொறுக்கவில்லை. மீன் சிக்கட்டும் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனந்த் தனது லேப்டாப்பை விடுதி அறையிலேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்றிருந்தான். யதார்த்தமாக லேப்டாப்பின் கடவுச் சொல்லையும் அறை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறான். அதுதான் வினையாகிப் போய்விட்டது. 

லேப்டாப்பை துழாவியர்களுக்கு ஆனந்தின் அந்தரங்கமான படங்கள் கிடைத்திருக்கின்றன. இரண்டு பெண்களுடன் தனித்தனியாகப் படம் எடுத்து அவற்றை அதில் வைத்திருக்கிறான். அந்தப் பெண்கள் ஆனந்தின் வகுப்புத் தோழிகள். அறைத்தோழன் அந்தப் படங்களை தனது செல்போன்னுக்கு மாற்றி அவற்றை வாட்ஸப் வழியாக சில நண்பர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். கதை கந்தலாகிவிட்டது. சுழன்றடித்த அந்தப் படங்கள் கடைசியாக கல்லூரியின் முதல்வரின் செல்போனில் வந்து நின்றிருக்கிறது. படங்களை அனுப்பியவன் பெயர் எதுவும் குறிப்பிடாமல் அனுப்பியிருக்கலாம். ஆனால் ‘இன்னார் கல்லூரியில் இந்த மாணவர்களின் லட்சணத்தைப் பாருங்கள்’ என்று விலாவாரியான தகவல்களுடன் அனுப்பியிருக்கிறான். பொறியியல் கல்லூரி- அதுவும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் பெயர் கெட்டுப் போனால் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று பதறுவது வாடிக்கைதானே? உடனடியாக ஆனந்தையும் மற்ற இரண்டு பெண்களையும் அழைத்து அவர்களோடு சேர்த்து அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து மூன்று பேரையும் கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் செய்வதாகவும் அதற்கு காரணம் இதுதான் என்று படங்களையும் காட்டியிருக்கிறார்கள்.

பெற்றவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். படங்களை எடுத்த இவர்களுடன் சேர்த்து அதை வாட்ஸப்பில் அனுப்பியவனுக்கும் சேர்த்து கல்லூரி நிர்வாகத்தினர் தண்டனையளித்திருக்க வேண்டும். ம்ஹூம். அது நடக்கவில்லை. அவனை விட்டுவிட்டார்கள். அவன் இப்பொழுது வேறு யாருடைய லேப்டாப்பை தோண்டியெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை.

இந்த உலகத்திடம் எதையாவது தொடர்ந்து பகிர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் பலர் இருக்கிறார்கள். இழவு வீட்டில் கூட செஃல்பி எடுத்து அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். விபத்தில் ஒருவன் அடிபட்டுக் கிடந்தால் அவனது படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு எத்தனை லைக் விழும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் ஒரே பையன் இரண்டு பெண்களுடன் சல்லாபிக்கும் படம் கிடைத்தால் கையும் மனமும் சும்மா இருக்குமா? டிசியைக் கிழித்து தோரணம் கட்டிவிட்டான். 

இது ஒரு மனோவியாதி. 

ஒரு பெண் டாஸ்மாக்கிற்குள் நுழைந்தால் அதை படம் எடுத்து வெளியிடுகிறார்கள். ஒரு மாணவன் குடித்திருந்தால் அதை படமாக்கி சமூக ஊடகங்களில் வைரல் ஆக்குகிறார்கள். யாராவது முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ கிடைத்தால் பரபரப்பாக்குகிறார்கள். ஒரு பெண்ணின் ஆடை விலகிய படங்கள் என்றால் அது இணையத்திலும் செல்போனிலும் பற்றி எரிகிறது. இங்கு யார்தான் தவறைச் செய்யவில்லை? ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு தவறு இருக்கத்தான் செய்கிறது. ஒரே வித்தியாசம் நம்முடைய தவறுகள் வீடியோவாக மாற்றப்படவில்லை. அவர்களுடைய தவறுகள் வீடியோக்களாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவுதான். அப்படி யாராவது சிக்கிக் கொள்ளும் போது அவற்றை தெரிந்த எண்களுக்கு எல்லாம் சகட்டுமேனிக்கு அனுப்பி வைத்து புளகாங்கிதம் அடைவதைப் போன்ற சிறுமைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இத்தகைய செயல்களைச் செய்யும் போது அந்த வீடியோவில் இருப்பவரின் குடும்பம் படப் போகும் வேதனையை ஒரு வினாடி யோசித்துப் பார்த்தாலும் கூட அடுத்தவர்களுக்கு அனுப்பி வைக்க நமக்கு மனம் வராது. ஒரு பெண் குடித்திருப்பதாக ஒரு வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பெண்ணின் குழந்தைகள் பார்த்தால் காலகாலத்துக்கும் மறக்கமாட்டார்கள். ஒரு மாணவன் தன்னுடைய காதலியுடன் காதல் மொழி பேசுவது பதிவு செய்யப்பட்டு அவை பரப்பட்டிருந்தன. இரண்டு பேரின் பெயர், ஊர் உள்ளிட்ட அத்தனை தகவல்களும் அந்த சம்பாஷணையில் இடம் பெற்றிருக்கின்றன. பெற்றவர்கள் அந்த ஆடியோவைக் கேட்க நேரும் போது எவ்வளவு துடித்துப் போவார்கள்?

சில வருடங்களுக்கு முன்பாக பிரிட்டிஷ் இளவரசி டயானா தனது காதலனுடன் இருக்கும் படத்தை எடுப்பதற்காக சிலர் துரத்திய போதுதான் விபத்து நடந்து சின்னாபின்னமாகிக் போனார். இந்தச் சம்பவம் இருபது வருடங்கள் ஆகப் போகிறது. அப்பொழுதெல்லாம் செலிபிரிட்டிகளுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருந்தது. யாராவது கண்காணித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. சாதாரண மனிதனைச் சுற்றிலும் கூட எப்பொழுதும் நூற்றுக்கணக்கான  கண்கள் விழித்திருந்து கண்காணித்தபடியே இருக்கின்றன என்பதுதான் சூழலாக இருக்கிறது. எந்த இடத்தில் பிசகினாலும் கூட நாறடித்துவிடுவார்கள். தனிமை, அந்தரங்கம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. 

எட்டு மெகாபிக்சல் கேமிராவுடன் கூடிய செல்போன் நான்காயிரம் ரூபாய்க்குக் கூட கிடைக்கிறது. யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் படம் எடுக்க முடிகிறது. யார் பேசுவதை வேண்டுமானாலும் ஒலிப்பதிவு செய்ய முடிகிறது. பேருந்துகளிலும் ரயில்களிலும் கோவில்களிலும் சர்வசாதாரணமாக அடுத்தவர்களின் அசைவுகளை பதிவு செய்கிறார்கள். அதை மனம் போன போக்கில் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள். சாதாரண மனிதனுக்கென்று இருந்த இயல்பான வாழ்க்கையை அடித்து புரட்டிப் போட்டிருக்கிறது இந்த செல்போனும் தொழில்நுட்பமும். 

ஆனந்தும் அந்த இரண்டு பெண்களும் செய்தததைச் சரி என்று வாதிடவில்லை. தவறுதான். ஆனால் தவறு அவர்கள் பக்கம் மட்டுமில்லை. செல்போனில் படம் எடுப்பதற்கு முன்பாக அந்தப் பெண்கள் ஒரு விநாடி யோசித்திருக்கலாம். அதை லேப்டாப்பில் சேகரித்து வைப்பதற்கு முன்பாக ஆனந்த் ஒரு முறை யோசித்திருக்கலாம். அதைப் பகிர்வதற்கு முன்பாக அறைத்தோழன் யோசித்திருக்கலாம். எல்லாவற்றிலும் அவசரம். ஆனந்துக்கு பிரச்சினையில்லை. பெரிய இடம். ‘இதெல்லாம் வயசுக் கோளாறு’ என்று அழைத்துச் சென்றுவிட்டார்கள். மற்றொரு பெண்ணுக்கும் கூட பிரச்சினையில்லை. அவள் என்.ஆர்.ஐ. அப்பா துபாயில் இருக்கிறார். இந்தக் கல்லூரி இல்லையென்றால் ஒரு பெரிய நோட்டாகக் கொடுத்து இன்னொரு கல்லூரியில் இடம் வாங்கிவிடுவார்கள். பிரச்சினையெல்லாம் இன்னொரு பெண்ணுக்குத்தான். அவளுடைய அப்பா அருகில் இருக்கும் ஊரில் ஒரு விவசாயி. நடுத்தரக் குடும்பம். மகளின் விவகாரம் ஊர் முழுக்கவும் பரவிவிட்டது. சிலர் துக்கம் விசாரிக்கிறார்கள். பலர் கமுக்கமாக சிரிக்கிறார்கள். தாங்கிக் கொள்ள முடியவில்லை. நெல்லுக்கு அடிப்பதற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு கதையை முடித்துக் கொண்டார். அப்பனின் பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்தபடி ‘எல்லாம் உன்னாலதான்’ என்று யாரோ அழுதிருக்கிறார்கள். நான்கு அடி கயிற்றில் தனது கதையையும் முடித்துக் கொண்டாள் அந்தப் பெண். அம்மா மட்டும் அநாதையாகி நிற்கிறார்.

‘நீதான் குற்றவாளி’ என்று யாரையுமே உறுதியாகச் சொல்ல முடியாத சம்பவங்களின் கோர்வை இது. ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. விவகாரம் வெளியில் வந்தவுடன் கல்லூரி நிர்வாகத்தினராவது யோசனை செய்து முடிவு எடுத்திருக்கலாம். பெற்றவர்களை அழைத்து முகத்தில் அறைந்தாற் போல சொல்லாமல் விட்டிருக்கலாம். ஒவ்வொன்றும் சரிபடுத்தவே முடியாத தவறுகளாகிப் போயின. irreversible mistakes. 

(எந்தக் கல்லூரி என்று சிலருக்குத் தெரிந்திருக்கக் கூடும். குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடரின் ஒரு கட்டுரை)

5 எதிர் சப்தங்கள்:

Selva said...

"ஒரு வினாடி யோசித்துப் பார்த்தாலும் கூட அடுத்தவர்களுக்கு அனுப்பி வைக்க நமக்கு மனம் வராது"_True boss... Peoples more busy to wait for that 1 sec and i think it becomes a disease forwards forwards everywhere.Recent rains in chennai also makes more panic situations because of rumour.So sad to hear about that girls family .

சேக்காளி said...

//நெல்லுக்கு அடிப்பதற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு கதையை முடித்துக் கொண்டார். அப்பனின் பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்தபடி ‘எல்லாம் உன்னாலதான்’ என்று யாரோ அழுதிருக்கிறார்கள். நான்கு அடி கயிற்றில் தனது கதையையும் முடித்துக் கொண்டாள் அந்தப் பெண்//
மானத்திற்கு அஞ்சி வாழ்ந்த குடும்பம் அது. அவள் தான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.கிழிந்து போனது சேலைதானே.

Anonymous said...

"சாதாரண மனிதனுக்கென்று இருந்த இயல்பான வாழ்க்கையை அடித்து புரட்டிப் போட்டிருக்கிறது இந்த செல்போனும் தொழில்நுட்பமும்.

தனிமை, அந்தரங்கம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு மனோவியாதி. "

ஆம் அண்ணா.... நிதர்சனமான உண்மை.
நாம் எங்கே செல்கிறோம் என்று யாருக்கும் புரியாத,
புரிய முயற்சி கூட செய்ய முடியாத வேகத்தில் சென்றுகொன்றுகிறோம்.
இதன் விளைவை அவனவன் அனுபவிக்கும் போது தான் இதன் வலியும்,விரியமும் விளங்கும்.
அதுவரை இது தொடரும்....
காரணம் இது ஒரு மனோவியாதி

இரா.கதிர்வேல் said...

இன்று காலை உங்கள் தொடரை படிப்போம் என ரிப்போர்டர் வாங்கி புரட்டிப் பார்த்தேன். உங்கள் தொடரை காணவில்லையே சார். அதனால் வாங்கவில்லை. ஒரு வேளை அவசரமாக புரட்டிப் பார்த்ததில் கண்ணில் படவில்லையோ?

Anonymous said...

ஒரு தவறை தவறு என்று உணர்வது அது தவறென்று மற்றவர்கள் உணர்த்தும்போதுதான் சாத்தியம்...

நீங்கள் கூட ஒரு நடிகையை பற்றி புரணி பேசினீர்கள்...தவறென்று உணரவில்லையே...?

கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு எப்படி சாத்தியமாகும்?