Nov 20, 2015

ஜெயலலிதா

ஊர்ப்பக்கத்தில் ஒரு கிராமப்புற தொடக்கப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருக்கிறார்கள். ‘பள்ளிக்கு கட்டிடங்களே இல்லை...ஏதாவது உதவ முடியுமா?’ என்றார்கள். விசாரித்த வரையில் அந்தப் பள்ளிக்கு மட்டும் மத்திய அரசின் நிதி ஒரு கோடியே இருபது லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொகை இருந்தால் சொந்தமாக இடம் வாங்கி புதிய பள்ளிக்கூடத்தையே கட்டிவிடலாம். பள்ளிக்கும் இடம் பிரச்சினை இல்லை- ஏக்கர் கணக்கில் சொந்த இடம் இருக்கிறது. கட்டிடங்கள் மட்டும்தான் தேவை. சர்க்கரையை வைத்துக் கொண்டு இலுப்பைப் பூவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. பணமாகத் தர மாட்டார்கள். மாநில பொதுப்பணித்துறைதான் கட்டிட வேலைகளை முடித்துத் தர வேண்டும் என்பதால் மாநில அரசுதான் இதை முன்னெடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு கோடி தமிழக பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த ஆனந்தவிகடனின் கட்டுரையை வாசித்த போதுதான் திக்கென்றிருந்தது. புரட்சித்தலைவியை மந்திரி தந்திரி தொடரில் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

கட்டுரை வந்த காரணத்தினால் இந்த வார ஆனந்தவிகடனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அள்ளியெடுத்துச் சென்று விட்டார்களாம். விகடனை எரித்துவிட்டால் எல்லாவற்றையும் நம்புகிறார்கள் போலிருக்கிறது. இன்னொருபக்கம் இணையத்தில் இயங்கும் அதிமுக விசுவாசிகள் விகடன் குழுமத்தை திமுக வாங்கிவிட்டதாகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் பேச முடியுமே தவிர கட்டுரையின் எந்தத் தகவலையும் அவர்களால் மறுக்க முடியாது. வரிக்கு வரி நிதர்சனத்தைத்தான் எழுதியிருக்கிறார்கள். மேலே சொன்ன பள்ளி உதாரணம் என்பது சாம்பிள்தான். தமிழகத்தின் எல்லாவிதமான அவலங்களுக்கும் செயல்படாத அம்மாவின் ஆட்சி காரணமாக இருக்கிறது என்பதை விலாவாரியாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

கட்டுரையை சவுக்கு தளத்தில் வலையேற்றியிருக்கிறார்கள்.

திருப்பூரில் விசாரித்தால் மின்வெட்டினால் முடங்கிப் போன நெசவுத் தொழில் இன்னமும் எழவில்லை என்கிறார்கள். தொழில் முடக்கத்துக்கு பஞ்சு விலை ஏற்றத்திலிருந்து எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் மின்வெட்டு மிகப்பெரிய காரணம். முதலமைச்சர் அறிவித்தபடி தமிழகம் மின்மிகை மாநிலமாகிவிட்டதா? இன்னமும் கடனுக்குத்தான் தனியாரிடம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் ப்யூன் வேலையைக் கூட லட்சக்கணக்கில் விலை பேசி விற்கிறார்கள். அரசு அலுவலகத்தில் கார் டிரைவர் வேலைக்குச் செல்லவதாக இருந்தால் கூட ஐந்து லட்ச ரூபாயைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான்கரை ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. இலவசம் என்று அள்ளி வழங்கிய கிரைண்டர்களும் மிக்ஸிகளும் எத்தனை பேர் வீடுகளில் இன்னமும் பழுதில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன? ஆரம்பத்தில் வாங்கியவர்கள் பாக்கியசாலிகள். பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. ஆடுகளும் மாடுகளும் எத்தனை பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன? எல்லாமே புதுப் பொண்ணு கதைதான். அறிவித்தார்கள். விழா நடத்தினார்கள். கொடுத்தார்கள். கைவிட்டார்கள்.

எந்தக் குறையைச் சொன்னாலும் கடந்த திமுக ஆட்சியின் நீட்சி என்கிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பல்லவியைப் பாடலாம் அல்லது மூன்றாண்டுகளுக்குக் கூட பாடலாம். நான்கரை ஆண்டு முடிந்த பிறகும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் எதற்காக ஆட்சிக்கு வந்தீர்கள் என்று மக்கள் கேட்பார்களா இல்லையா? ஆட்சி முடியும் தருணத்தில் வெள்ளம் வந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ‘கடந்த ஆட்சியின் குறைகள்தான் இது’ என்றால் கடந்த நான்கரை ஆண்டுகளாக குறைகளை நிவர்த்திக்காமல் நீங்கள் வசூல் மட்டும்தான் செய்தீர்களா என்று கேட்கத் தோன்றுமா இல்லையா?

எங்கள் ஊரில் ‘கோபி தொகுதிக்கு எழுநூற்று ஐம்பது கோடி வாரி வழங்கிய அம்மாவுக்கு கோட்டானு கோட்டி நன்றிகள்’ என்று குறைந்தது பத்து கோடி ரூபாய்க்காவது பேனர் வைத்திருக்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் புன்னகைத்து அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் கருணைத் தாய். அரசு மருத்துவமனை அப்படியேதான் இருக்கிறது. அரசுப்பள்ளிகளும் அப்படியேதான் இருக்கின்றன. சாலைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கும் மொத்தத் தொகையும் வந்து சேர்ந்துவிட்டதா? இருநூறு கோடி ரூபாய் வந்திருந்தாலும் கூட ஊர் ஜொலி ஜொலித்திருக்கும். வெறும் அறிவிப்புகளும் காணொளித் திறப்புகள் மட்டும்தான் இத்தனை ஆண்டுகாலத்தில் நடந்திருக்கின்றன.

அவதூறு வழக்குகளும் கைதுகளும்தான் அரசாங்கத்தின் செயல்பாடு. மிரட்டி மிரட்டியே நாட்களை நகர்த்திவிட்டார்கள்.  மற்றவர்களையும் பயப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களும் பயந்துதான் கிடந்தார்கள். முதலமைச்சர் வேண்டாம்- எத்தனை அமைச்சர்கள் தைரியமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்கள்? தங்களது துறையின் செயல்பாடுகளை வெளிப்படையாக பேசுவதற்கு எது தடையாக இருந்தது? எதைப் பேசுவதற்கும் பயந்து நடங்கினார்கள். அப்புறம் எதற்கு இத்தனை அமைச்சர்கள்?

முடங்கிக் கிடந்த அரசாங்கத்தையும் டாஸ்மாக்கில் தத்தளித்த தமிழகத்தையும் விகடன் ஒரு ஸ்நாப் ஷாட் அடித்திருக்கிறது.

 மனசாட்சியே இல்லாமல் பல நூறு கோடி ரூபாயை இலக்கு வைத்து ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.  தேர்தலுக்கு இன்னமும் ஆறு மாதம் கூட இல்லை. மந்தத் தன்மை துளி கூட மாறவில்லை. எல்லாவற்றையும் பணம் சரி செய்துவிடும் என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது. இவற்றையெல்லாம்தான் விகடன் கட்டுரை புள்ளிவிவரங்ளோடு விளாசியிருக்கிறது. தமிழகத்தின் கடன் சுமையான இரண்டரை லட்சம் கோடி ரூபாயில் ஆரம்பித்து பந்தாடப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை கோகோ கோலாவுக்கு முகவராகச் செயல்பட்ட அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வரை அத்தனை விவரங்களையும் சேகரித்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்காக விகடனைப் பாராட்டியே தீர வேண்டும். தீவிரமான உழைப்பினால் மட்டுமே இது சாத்தியம். 

விகடனுக்கு வாழ்த்துக்கள். 

8 எதிர் சப்தங்கள்:

Sathya said...

Hope Kishore will share this article also in Facebook...

ADMIN said...

உள்ளது உள்ளபடி...கூறியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை. விகடனுக்கும் வாழ்த்துகள்...!!!!

”தளிர் சுரேஷ்” said...

இன்று விகடன் கடைகளில் நிறைய கிடைக்கிறது! அந்த கட்டுரையை படித்தேன்! ஒவ்வொரு வரிகளும் உண்மையை புடம்போட்டுக் கூறுகின்றது. திமுக குழுமமே வாங்கியிருந்தாலும் கூட உண்மை என்றும் பொய்யாகாது. மீண்டும் 91 திரும்பிவிட்டதோ என்று எண்ணம் தோன்றுமளவுக்கு ஆட்சியின் அவலங்கள்!

Unknown said...

கி கே சாமி... முகநூல்லில் திமுக Vs அதிமுக பொங்கல் வைத்து கொண்டு இருகிறார்.

அன்பே சிவம் said...

அருமையான, ஆழ்ந்து யோசிக்க வேண்டிய பதிவு தங்கள் கேள்விகளில் இருக்கும் உண்மை என்னை கழட்டி அடித்ததாக உணர்கிறேன், சம் 'மந்த' ப்பட்டவர்கள் இனியாவது! சிந்திப்பார்களா?

வலிப்போக்கன் said...

மனசாட்சியே இல்லாமல் பல நூறு கோடி ரூபாயை இலக்கு வைத்து ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிற அரசாங்கம்தான்..மாநில நிர்வாகத்தை விமர்சித்துப் பாடினார் என்று பாடகர் கோவனை காவலில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்து இருக்கிறது...

Anonymous said...

OK LET US ADMIT THAT JAYA HAS ERRED IN CERTAIN ASPECTS. THERE ARE
MANY PROS AND CONS AGAINST AIADMK. BUT WHO WILL BE THE ALTERNATIVE
DMK? DOES IT HAVE A GOOD TRACK RECORD ? LET US NOT FORGET THE
BETRAYAL THEY HAVE DONE TO SO MANY SRILANKAN TAMILS. THEIR CORRUPTION
IS NOW WORLD FAMOUS. ONE FAMILY RULING THE STATE. THEIR OPPORTUNISTIC
POLICIES AND CHANGING COLORS EVERY NOW AND THEN AND ITS LEADER ALWAYS
THINKS ABOUT HIS FAMILY MEMBERS BEFORE EVERYBODY ELSE. I THINK
WE HAVE TO THINK TWICE BEFORE VOTING IN 2016.

Joshva said...

விகடனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் , பகிர்வுக்கு நன்றி.
Joshva