Nov 25, 2015

துளிகள்

இங்கிலாந்தில் சில குடும்பத்தினர் இணைந்து community அமைப்பாகச் செயல்படுகிறார்களாம். ஒவ்வொரு வருடமும் பணம் சேர்த்து ஏதேனும் அமைப்புக்கு உதவுகிறார்கள். இந்த வருடப் பணத்தை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் ஒரு பங்கு- தோராயமாக இருபத்தைந்தாயிரம் நிசப்தம் அறக்கட்டளைக்கு வரும் போலிருக்கிறது. நேற்று அழைத்து விவரங்களைக் கேட்டிருந்தார்கள். இதைச் சொல்வதற்கு ஒரு காரணமிருக்கிறது. விகடனின் அறம் செய விரும்பு வழியாக வரக் கூடிய ஒரு லட்சத்தை சில பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கலாம் என்ற யோசனை இருந்தது. சில பள்ளிகளின் பட்டியலும் தயாராக இருக்கிறது. பள்ளிகளைப் பொறுத்த வரைக்கும் நாமாகச் சென்று ‘உங்களுக்கு என்ன தேவை’ என்று மட்டும் கேட்கவே கூடாது. அதைப் போன்ற மடத்தனம் எதுவுமேயில்லை. பல தலைமையாசிரியர்களுக்கு நம் கண்களுக்குத் தெரியாத கொம்பு முளைத்திருக்கிறது. மதிக்கவே மாட்டார்கள். மதிக்காவிட்டாலும் தொலைகிறது. குத்தினாலும் குத்திவிடுவார்கள். தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்பில்லாமல் பள்ளிகளுக்கு எதையும் செய்ய முடியாது என்பதால் அந்தத் தலைமையாசிரியருக்குப் பதிலாக புதிதாக யாரேனும் வரட்டும் என்று காத்திருப்பதுதான் உசிதம். 

அதுவே சிறப்பாக இயங்கும் தலைமையாசிரியராக இருப்பின் தாராளமாகச் செய்யலாம். செய்கிற காரியம் மாணவர்களுக்கு பயனுடையதாக அமையும். அப்படியான தலைமையாசிரியர்களைக் கொண்ட பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதுதான் சவாலான காரியம். அறம் செய விரும்பு வழியாக வரக் கூடிய ஒரு லட்ச ரூபாயை பள்ளிகளுக்கு கொடுக்க விரும்புகிறேன். தங்களுக்குத் தெரிந்த பள்ளிகளில் தேவைகள்- அத்தியாவசியத் தேவைகள் இருப்பின் - ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். சரியான பள்ளியாக இருப்பின் பரிந்துரை செய்துவிடலாம். தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் பயனாளிகளைப் பற்றி விகடன் குழுமத்திடம் பரிந்துரை செய்ய வேண்டும். இறுதி முடிவை விகடனும் லாரன்ஸூம்தான் எடுப்பார்கள். 

கொங்கர்பாளையம் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இல்லை. திறந்தவெளியில் வைத்துத்தான் சமையல் செய்கிறார்கள். காற்றடித்தால் மொத்த மண்ணும் சத்துணவுச் சாம்பாருக்குள் வந்து விழுவதாகச் சொன்னார்கள். கூரையுடன் கூடிய தடுப்பு அமைத்துத் தர முடியுமா என்று கேட்டிருந்தார்கள். இருபதாயிரம் வரைக்கும் செலவு பிடிக்கும் போல் தெரிகிறது. அந்தப் பள்ளியை அறம் செய விரும்பு பட்டியலில் சேர்த்திருதேன். இப்பொழுது அதில் ஒரு மாற்றம். இங்கிலாந்துக்காரர்கள் கொடுக்கும் பணத்தை மொத்தமாக இந்தப் பள்ளிக்கு கொடுத்துவிடலாம். கூரை அமைத்தது போக மீதப் பணம் இருந்தால் அதையும் அந்தப் பள்ளியின் நூலகத்திற்கு என்று ஒதுக்கிவிடலாம். இந்தப் பள்ளிக்கான நல்ல காரியத்தை இங்கிலாந்துக்காரர்கள் செய்ததாக இருக்கட்டும். யார் செய்தால் என்ன? நல்லது நடந்தால் சரிதான்.

இதைச் சொல்லிவிட்டு இன்னொரு விஷயத்தைச் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. சார்லஸ் மீண்டும் அறுபதாயிரம் அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவ்வப்போது ஐம்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு லட்சம் என்று அனுப்பக் கூடிய மனிதர். பல லட்சங்களைக் கொடுத்திருக்கிறார். அவர் அனுப்பிய பணத்தையும் சேர்த்து இப்பொழுது அறக்கட்டளையின் கணக்கில் கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய் இருக்கிறது.  இன்னமும் இரண்டு பயனாளிகளுக்கு காசோலை அனுப்ப வேண்டிய வேலை பாக்கியிருக்கிறது. ஏற்கனவே விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்குத் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்திலேயே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் ரொம்பவும் தாமதமாகிவிட்டது. 

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. ஹெபாட்டிட்டிஸ் சி வைரஸ். வைரஸ் ஈரலை பாதித்திருக்கிறது. பெங்களூரில் மருத்துவர்கள் நாம் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காகச் சென்றிருந்தோம். அப்பா உள்ளே இருந்தார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தேன். ஸ்கேன் முடித்துவிட்டு அறிக்கை வரும் வரைக்கும் காத்திருந்தோம். அப்பாவின் முகம் வாடியிருந்தது. அறிக்கை வந்தவுடன் கண்ணாடியை சரி செய்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். அறிக்கையை படித்துக் கொண்டிருக்கும் போது அப்பா என்னிடம், ‘எல்லாத்துலேயும் பிரச்சினையா?’ என்றார். ‘எதுக்கு கேட்கறீங்க?’ என்றேன். ஸ்கேன் செய்த மருத்துவர் அவரிடம் அப்படிச் சொல்லியிருக்கிறார். ‘உங்களுக்கு எல்லா உறுப்பிலேயும் பிரச்சினை’ என்று. அப்படியே பிரச்சினை இருந்தாலும் எழுபது வயதை நெருங்கும் முதியவரிடம் இப்படியா முகத்தில் அறைவது போலச் சொல்வார்கள். சொல்ல வேண்டும் என விரும்பியிருந்தால் என்னை அழைத்துச் சொல்லியிருக்கலாம். அறிவுகெட்டவர்கள்.

அப்பாவுக்கு பயம் வந்துவிட்டது. தனக்கு வருகிற கூடிய விபரீதக் கனவுகளையெல்லாம் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கும் பயம். எந்திரத்தைப் போலத்தான் உடலும். எந்தப் பாகத்திலும் பிரச்சினையில்லாத வரைக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஏதேனும் சிறு பாகம் குதர்க்கம் செய்தால் கூட மொத்த இயக்கமும் திணறிவிடுகிறது. ஆனால் மருத்துவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இயந்திரத்தைப் பார்ப்பதைப் போல மனிதர்களைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் எதற்கு? அதை வருங்காலத்தில் கம்யூட்டர் செய்துவிடக் கூடும். நோய்மை பீடித்திருப்பவர்களுக்கு மருந்துகளைவிடவும் வார்த்தைகள்தான் மிக அவசியம். மருத்துவத்தைவிடவும் மனோதரியத்தை ஊட்டுவதுதான் தேவையாக இருக்கிறது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூட போதும். பெங்களூரில் பெரும்பாலான மருத்துவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடிவதில்லை. ஊருக்கே சென்று அங்கிருக்கும் மருத்துவமனையில் பார்த்துவிடலாம் என்று கோயமுத்தூர் அழைத்துச் சென்றிருந்தேன். சிங்காநல்லூரில் வி.ஜி.எம் என்ற மருத்துவமனையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மட்டும் பார்க்கிறார்கள். Gastorentrology. லட்சுமி பிரபா என்ற மருத்துவர் முதலில் பேசினார். பரிசோதனை முடிவுகளை எல்லாம் பார்த்துவிட்டு ‘ஒண்ணுமில்லைங்கப்பா...பார்த்துக்கலாம் விடுங்கப்பா’ என்றார். அப்பாவுக்கு பாதித் தெம்பு திரும்பக் கிடைத்துவிட்டது போலிருந்தது. ஈரலில் பிரச்சினை இருக்கிறதுதான். ஆனால் அவரிடம் தைரியமூட்டி பேசி அனுப்பியிருக்கிறார்கள். வயதானவர்களுக்கு அந்தத் தைரியம் அவசியம்.

அப்பாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை, ஆய்வகங்கள், பயணம் என்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தேன். அதனால்தான் அவர்களுக்கு காசோலை அனுப்பவதில் தாமதம். சில மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பாததற்கும் தொலைபேசி அழைப்புகளின் போது சரியாகப் பேசாததற்கும் இதுதான் காரணம். தவறாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். 

அது இருக்கட்டும்.

கடந்த வாரத்தில் மீனவக் குடும்பத்தை சார்ந்த மாணவன் நரேந்திரனுக்கு நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் சைக்கிள் வாங்கித் தரப்பட்டிருக்கிறது. வறுமையான குடும்பம். என்றாலும் தேசிய அளவிலான ட்ரயத்லான் போட்டியில் ஓட்டத்திலும் நீச்சலிலும் கலக்கியிருக்கிறான். ஆனால் சைக்கிளிங்கில் கோட்டை விட்டுவிட்டான். சரியான பயிற்சி இல்லாததுதான் காரணம் என்று தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் அருள்மொழி பேசினார். அருள்மொழியும் நீச்சல் வீராங்கனைதான். நரேந்திரனுக்கு மிதிவண்டி வாங்குவதற்காக ஐம்பதாயிரம் நாம் கொடுக்க மீதத் தொகை பதினைந்தாயிரத்துச் சொச்சத்தை அவர்கள் நண்பர்கள் வழியாக தயார் செய்திருக்கிறார்கள். சைக்கிளின் விலை அறுபத்து ஆறாயிரம் ரூபாய். அவனிடம் இன்னமும் பேசவில்லை. பேசாவிட்டால் என்ன? அவன் ஜெயித்தால் சரி.

6 எதிர் சப்தங்கள்:

இளைய நிலா said...

சிறுதுளிகள் பெரு வெள்ளமாக வேண்டும் உங்கள் மனதைப் போல

சேக்காளி said...

//பேசாவிட்டால் என்ன? அவன் ஜெயித்தால் சரி//
இதுதாம்யா நீ

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தங்களின் சேவைகளை அவ்வப்போது படித்து வருகின்றேன்...
தொடரட்டும், பாராட்டுகள்!

நல்ல செயல்களை, தாமதப் படுத்தாமல் உடன் முடிக்க வேண்டும்
என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

pradeep said...

மணிகண்டன்,விஜிம் ..மருத்துவமனை அருமையானை மருத்தவமை வயிற்று சமபந்தமான பிரச்சனைகளுக்கு.தலைமை மருத்தவமரை முடிந்த அளவு சந்திக்க முயறிசி செய்யுங்கள்.அவரின் பெயர் திரு.மோகன் பிரசாத். அருமையான மனிதர்.விரைவல் உங்கள் தந்தை பூரண குணமடைவார்.கவலைபட வேண்டாம்.

krish said...

தங்கள் தந்தையார் விரைவில் பூரண குணமடைய, இறைவனை
பிரார்த்திக்கின்றேன்.

Vinoth Subramanian said...

I wish let your father get well soon. I like Mr. Charles. Let his generosity continue. Let your service too!!!