Aug 11, 2015

அனுஷ்காவின் வீடு

‘நீங்க ரொம்ப சீரியஸான ஆளா?’ - இப்படித்தான் அந்த நண்பர் கேட்டார். ரிச்மண்ட் சாலைக்கு பக்கத்தில்தான் அவருடைய அலுவலகமும் இருக்கிறது. பெங்களூரின் முக்கியமான இடத்தில் அலுவலகம் இருப்பதில் ஒரு செளகரியம். அவ்வப்போது நண்பர்கள் வந்துவிடுகிறார்கள். அலுவலகத்திலிருந்து கம்பி நீட்டி வந்திருப்பவர்களோடு ஒன்றிரண்டு மணி நேரங்கள் பேசிவிட்டு திரும்ப வந்து கமுக்கமாக அமர்ந்து கொள்கிறேன். காபி டேவுக்கு அழைத்துச் சென்றால் ஒரு காபியை நூறு ரூபாய்க்கு விற்கிறான் கம்மனாட்டிப் பயல். இருநூறு ரூபாய் தண்டம். 

‘உன்னைப் பார்க்க வர்றவங்களுக்கு நூறு ரூபாய் கூட செலவு செய்யமாட்டியாடா கஞ்சப்பயலே’ என்று மனசுக்குள்ளிருந்து யாரோ கத்தத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல சால்ஜாப்பு வைத்திருக்கிறேன். ரோட்டோர டீக்கடைக்காரருக்கு ஐந்நூறு ரூபாய் கூடக் கொடுக்கலாம். ஆனால் கே.எஃப்.சி, காபி டே மாதிரியான கார்போரேட் களவாணிகளுக்கு சல்லிப்பைசா கூடத் தர மாட்டேன் என்று வீர வசனம் பேசி டிரினிட்டி சர்ச்சுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறேன். நல்லவேளையாக ஜீஸஸ் காணிக்கை எதுவும் கேட்பதில்லை. பார்க்க வருகிறவர்களும் ‘அடேயப்பா இவன் பெரிய கொள்கைவாதியா இருப்பான் போலிருக்கே’ என்று நம்பிக் கொள்கிறார்கள்.

அப்படி அழைத்துச் சென்று அமர வைத்த போதுதான் அப்படிக் கேட்டார். 

‘நீங்க தப்பா புரிஞ்சு வெச்சிருக்கீங்க’ என்றேன். நம்மை நாம் புரிந்து வைத்திருப்பதைவிடவும் பல சமயங்களில் அடுத்தவர்கள் சரியாகப் புரிந்து வைத்திருப்பார்கள். அலுவலகத்தில் என்னை யாருமே சேர்த்துக் கொள்வதில்லை. ‘இவன் சரியான கிறுக்குப்பயல்’ என்று அவர்கள் நினைக்கக் கூடும். அவர்களிடம் இதைக் கேட்கவா முடியும்? 

அது போகட்டும். இவரிடம் நம்மை நிரூபித்தாக வேண்டும். 

‘செம ஜாலியான ஆளுங்க’ என்றேன். 

‘எப்படிச் சொல்லுறீங்க?’ என்றார். நம்மைப் பலி கொடுப்பதற்கென்றே இப்படியானவர்கள் வந்து வாய்க்கிறார்கள். அவரிடம் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது. அவரிடம் சொன்னேன். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்தக் கதையிலும் அனுஷ்காதான் நாயகி. அதே கதையை உங்களிடமும் சொன்னால் நேற்றும் அனுஷ்கா இன்றும் அனுஷ்காவா என நீங்கள் அலறக் கூடும். இருந்தாலும் பெங்களூரில் வேறு யார் இருக்கிறார்கள்? சரோஜாதேவி இருக்கிறார். கன்னடத்து பைங்கிளி. 

‘சரோஜாதேவிகிட்ட ஒரு இண்டர்வியு நடத்தணும்ய்யா’ என்று நண்பர் ஒருவரிடம் கேட்ட போது ‘நான் எம்.ஜி.ஆருக்கே ஹீரோயின் தெரியுமா?’ என்றுதான் பைங்கிளி பேச்சையே ஆரம்பிக்கிறதாம். ‘உங்களால அவங்ககிட்ட பேச முடியாது’ என்று சொல்லிவிட்டார். அதனால்தான் அனுஷ்கா. இதுவும் ஒரு பத்திரிக்கைக்குத்தான். ஆன்லைன் பத்திரிக்கை. ‘நாங்க அட்ரஸ் வாங்கித் தர்றோம். நீங்க அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி பேசினாப் போதும்’ என்றார்கள். கேள்வி கேட்டு பதில் வாங்கி அனுப்பினால் அவர்கள் பிரசுரித்துக் கொள்வார்கள். 

‘நான் ரொம்ப பிஸி...ஆனா உங்களுக்காக செய்யறேன்’ என்று பந்தாவாகச் சொல்லிவிட்டாலும் எப்பொழுது முகவரி வந்து சேரும் என்று காத்திருக்கத் தொடங்கியிருந்தேன். கேட்டவர்கள் அதோடு சரி. திரும்பிக் கூட பார்க்கவில்லை. இப்படித்தான் இந்த உலகம். சொறிந்துவிட்டுவிட்டு சும்மா இருந்துவிடும். நாம்தான் அரிப்பைத் தாங்க முடியாமல் தவிக்க வேண்டும். அவர்களிடம் திரும்பவும் எப்படிக் கேட்பதென்று தெரியவில்லை. நாமாகவே முகவரியைக் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தேன்.

இடையில் வந்த நண்பர் ஆராய்ச்சியைக் கேள்விப்பட்டு ‘இவ்வளவுதானா?’ என்று அடுத்த பத்து நிமிடங்களில் முகவரியை அனுப்பி வைத்திருந்தார். தூள் டக்கர்.  

‘எப்படி புடிச்சீங்க?’ என்றேன்.

‘அதெல்லாம் எங்களுக்குத் தண்ணி பட்ட பாடு பாஸ்...ஆல் த பெஸ்ட்’ என்றார்.

அனுஷ்காவின் வீடு இந்திரா நகரில்தான் இருக்கிறதாம். அதுவும் சின்மயா மிஷன் ரோடு. அந்தச் சாலையில் நூற்றுக்கணக்கான தடவை பயணித்திருப்பேன். ஆனால் இங்குதான் அவர் வீடு இருக்கிறது என்பது தெரியாது. இதுதான் விதி என்பது. எது எப்பொழுது நடக்க வேண்டுமோ அது அப்பொழுதுதான் நடக்கும்.

காலண்டரில் நல்ல நாளாக பார்த்து முடிவு செய்து கொண்டேன். அன்றைய ராசி பலனில் ஆக்கம் என்றிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக இருப்பதிலேயே சல்லிசான சலூனாகப் பார்த்து நூறு ரூபாய் கொடுத்து முகத்தைக் கறண்டு வைத்திருந்தேன். அழுக்கை எல்லாம் நீக்கிவிட்டால் பளிச்சென்றாகிவிடும் என்று சலூன் கடைக்காரர் சொல்லியிருந்தார். நம்பி முகத்தைக் கொடுத்தேன். சுரண்டு சுரண்டென்று சுரண்டித் தள்ளிவிட்டார். மீசையைக் கத்தரித்து முடியை முன்னால் இழுத்து சொட்டையை மறைத்து என்று அழிச்சாட்டியம்தான். First impression is the best impression.

அலுவலகத்தில் அனுமதி கோரிவிட்டு காலை பத்து மணிக்கே கிளம்பியிருந்தேன். எத்தனை சினிமாக்காரர்களின் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன்! செக்யூரிட்டி மனப்பாடமாகச் சொல்வார். ‘ஷூட்டிங் போயிருக்காங்க...பத்து நாள் ஆகும்’. மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றாலும் இதைத்தான் சொல்வார்கள். வாய்ப்பே இல்லாத டப்பா நடிகராக இருந்தாலும் இதைத்தான் சொல்வார்கள். அப்படித்தான் அனுஷ்கா வீட்டிலும் சொல்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படிச் சொன்னாலும் பரவாயில்லை. வீட்டைக் கண்டுபிடித்துவிட்டால் போதும். அலுவலகத்திலிருந்து பைக்கை முறுக்கினால் பதினைந்து நிமிடங்கள்தான். ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் பிடித்துவிடலாம்.

நண்பர் அனுப்பியிருந்த வீட்டு எண்ணை அரை மணி நேரமாவது தேடியிருப்பேன். முந்தின எண்ணும் இருக்கிறது பிந்தின எண்ணும் இருக்கிறது. அனுஷ்காவின் வீட்டு எண்ணை மட்டும் காணவில்லை. அந்த இடத்தில் ஒரு வங்கிதான் செயல்படுகிறது. ஒரு வீடு- அதை வங்கியாக மாற்றியிருக்கிறார்கள். வீட்டின் மேற்புறத்தில் இன்னொரு அலுவலகம். குழப்பமாக இருந்தது. செக்யூரிட்டியிடம் ‘இது அனுஷ்கா வீடா?’ என்று கேட்டால் கோக்குமாக்காக முறைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கெல்லாம் ஆபந்பாந்தவர்கள் இருக்கிறார்கள். தள்ளுவண்டி சலவைக்காரர்கள். அந்தந்த ஏரியாக்களில் அவர்களுக்குத் தெரியாத வீடே இருக்காது. ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் செளந்தர்யாவின் வீட்டைக் கண்டுபிடிக்க ஒரு சலவைக்காரர்தான் உதவினார். ஆனால் அப்பொழுது செளந்தர்யா இறந்திருந்தார். அவர் குடியிருந்த வீட்டில் ஒரு மெஸ் நடந்து கொண்டிருந்தது. 

பெங்களூரின் தள்ளுவண்டி சலவைக்காரர்களில் முக்கால்வாசி ஆட்கள் தமிழர்கள்தான். அருகில் சென்று ‘அண்ணா இங்க அனுஷ்கா வீடு எது?’ என்றேன்.

‘இந்த வூடுதான்’ என்று காட்டினார். 

‘இன்னமும் இங்கயா இருக்காங்க?’ என்றேன்.

‘அதான் பேங்க் நடக்குதே தெரிலயா?’ என்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரே தொடர்ந்தார். ‘ஒரு காலத்துல இங்கதான் யோகா க்ளாஸ் நடத்திட்டு இருந்தாங்க..’

‘இப்பவும் வீடு அவங்க பேர்லதான் இருக்கா?’ -இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது. ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு ‘தெரியாது’ என்றார். அவருக்கு எப்படித் தெரியும்?

ஒரு இடைவெளி கொடுத்துவிட்டு ‘ஆனா இந்த வழியாத்தானே அனுஷ்கா நடந்து போயிருப்பாங்க?’ என்றேன். அவருக்கு வந்த கோபத்தில் குப்புறத் தள்ளிவிட்டு முதுகில் தேய்த்தாலும் தேய்த்துவிடுவார் போலிருந்தது. இனி அங்கே நிற்பது உசிதமில்லை. அனுஷ்கா நடந்த பாதையெங்கும் குளிர்காற்று சில்லிட்டுக் கொண்டிருந்தது. பெங்களூரில் எப்பொழுதுமே அப்படித்தான் என்றாலும் அதுவொரு ஸ்பெஷல் சில்லிடல்.

முகவரி அனுப்பியிருந்த நண்பரை கண்டபடி சபித்துவிட்டு வந்து சரோஜாதேவியின் முகவரியைத் தேடத் தொடங்கியிருக்கிறேன். அவர் ராஜராஜேஸ்வரி நகரில்தான் இருக்கிறாராம்.

இன்றைய மற்றொரு பதிவு தண்ணீர்

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//மீசையைக் கத்தரித்து முடியை முன்னால் இழுத்து சொட்டையை மறைத்து என்று அழிச்சாட்டியம்தான்//
எல்லாம் வீணாய் போச்சே.

Color Pencil said...

Lol.. very funny... You resumed to Bangalore?? Amma & Appa eppadi irukkaanga?? completely recovered from injuries??

Vinoth Subramanian said...

ivarum baathikka pattu irukkaru. vidunga sir... anushka illana hansika!!!