Aug 12, 2015

பாம்பு

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக கர்நாடகாவில் ஓர் ஊரில்- பெயர் ஞாபகமில்லை- சிறுவன் ஒருவனை பாம்பு கடித்துவிட்டது. பத்து வயது கூட நிரம்பாத சிறுவன். துளி கூட பயமில்லாமல் அதன் வாலைப் பிடித்து இழுத்துச் சுருட்டி ஒரு மஞ்சள் பைக்குள் போட்ட பிறகுதான் வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னானாம். ‘அடப்பாவி’ என்று பதறிப் போனவர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். செவிலியர்களையும் மருத்துவர்களையும் கொஞ்சம் நேரம் பாம்பைக் காட்டி அலற விட்டவன் மருந்து கொடுத்துப் படுக்க வைத்த பிறகும் மஞ்சள் பையைத் தலை மேட்டிலேயே வைத்தபடி படுத்திருக்கிறான். ‘நான் தப்பிச்சாத்தான் இது தப்பிக்கணும்’ என்று பஞ்ச் டயலாக் அடித்தான் என்று அடுத்த நாள் செய்தித்தாள்களில் ப்ளாஷ் அடித்திருந்தார்கள்.

பாம்பு கடித்துவிட்டால் பயமில்லாமல் இருந்தால் போதும்.  தப்பித்துவிடலாம் என்பார்கள். ரோமுலஸ் விடேகர் எழுதிய ‘இந்தியப் பாம்புகள்’ என்றவொரு புத்தகமிருக்கிறது. இப்பொழுது அச்சில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆர்வமிருப்பவர்கள் நேஷனல் புக் ட்ரஸ்ட்டில் விசாரித்துப் பார்க்கலாம். 


அரசியல்வாதிகளைத் தவிர பெரும்பாலான இந்தியப் பாம்புகள் விஷமற்றவை என்பதுதான் உண்மை. நாகம், விரியன் (கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டைவிரியன் உள்ளிட்ட அத்தனை விரியன்களும்) ஆகிய மிக மிக சொற்பமான பாம்பு வகைகள்தான் நஞ்சு கொண்டவை. மற்றவை எல்லாம் பூச்சிகள் மாதிரிதான். கடித்தால் வலிக்கும். சாவு வராது. ஆனால் ‘செத்துப் போய்டுவோமோ’ என்கிற பயத்திலேயேதான் பாதிப் பேர்கள் சாகிறார்கள். இந்த பயத்தைப் போக்குவதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. ஒரு லோட்டா பிராந்தியை ஊற்றிவிட்டுவிட வேண்டும். மப்பு பயத்தை மறைத்துவிடுமாம். அதற்குள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுவிடலாம். நான் சொல்லவில்லை- அதையும் விடேகர்தான் சொல்லியிருக்கிறார்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் லம்பாடிகள் சிலர் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். காலி இடங்களில் டெண்ட் அடித்து குடியிருந்தபடியே கட்டிட வேலைகளுக்குச் சென்று வருபவர்கள். எங்கள் வீட்டு ஆழ்குழாய் கிணற்றில் அவ்வப்பொழுது சில குடங்கள் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு சொந்த ஊர் என்றெல்லாம் எதுவுமில்லை. நாடோடி வாழ்க்கைதான். 

சில மாதங்களாக பெங்களூரில் மழை. நல்ல மழை என்று சொல்ல முடியாவிட்டாலும் தினமும் மண் நனைந்துவிடுகிறது. அதனால் புதர் பெருகிவிட்டது. பாம்புகளும்தான். எங்கள் வீட்டுக்கு முன்பாக கூட ஒரு நீண்ட நாகத்தைப் பார்த்ததாகச் சில நாட்களுக்கு முன்பாகப் பதறினார்கள். நமக்கு பிரச்சினையில்லை. நிகழ்தகவு(Probability) மிகக் குறைவு. ஆனால் லம்பாடிகள் பாவம். டெண்ட்டுக்குள்ளேயே பாம்பு வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். மின்விளக்கு கூட இல்லாத டெண்ட்டுகள் அவை. இரவில் வழுவழுவென்று ஏதோ மேலே ஊரும் போதுதான் அது பாம்பு என்றே தெரியும். 

நம்மூரில்தான் பாம்புகளைப் பற்றிய புனைகதைகள் அதிகம் அல்லவா? கொம்பேறி மூக்கன் பாம்பு கொத்திவிட்டு, தான் கொத்தியவனின் பிணம் எரிக்கப்படுவதை மரத்தின் மீது நின்று வேடிக்கை பார்க்கும் என்கிற கதையை எங்கள் ஊரில் சொல்வார்கள். அதே போல, கண்கொத்திப் பாம்பு கண்ணிலேயே போடும் என்பார்கள். ஆனால் இவற்றில் எதுவுமே உண்மையில்லை. அத்தனையும் புனைகதைகள். லம்பாடிகளுக்கு இந்தக் கதையெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை.

எந்தப் பாம்பாக இருந்தாலும் அடித்துக் கொன்று தீ வைத்து எரித்துவிட்டுத்தான் அடுத்த வேலை. தீ வைத்து எரிப்பது ஒரு வகையில் நல்லதுதான். பாம்பை அடித்துக் கொல்லும் போது அதன் பின்புறத்திலிருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்த திரவம்தான் எதிர்பாலின பாம்பை மேற்படி சமாச்சாரத்துக்கு அழைக்கும் சிக்னல். அப்படியே போட்டுவிட்டால் ‘யாரோ கூப்பிடுறாங்க’ என்று அக்கம்பக்கத்து பாம்புகள் மோப்பம் பிடித்தபடியே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் அந்தக் காலத்திலிருந்தே எரித்துவிடுகிறார்கள். 

முந்தாநாள் லம்பாடிகள் டெண்ட்டில் வாழும் ஒரு மனிதரை பாம்பு கடித்துவிட்டது. பொதுவாக பாம்புகள் மழை ஈரத்தில் துடிப்பானவை. சில வகைப் பாம்புகள் இரவிலும் சில வகைப் பாம்புகள் பகலிலும் துடிப்பாக இருக்குமாம். இவரை வீசிய பாம்பு இரவுப் பாம்பு. என்ன வகைப் பாம்பு என்றெல்லாம் தெரியவில்லை. வீசிவிட்டுப் போய்விட்டது. ஒரு சிறுமி அவசர அவசரமாக வந்து கதவைத் தட்டினாள். மணி ஒன்பது இருக்கும். கதவைப் பூட்டியிருந்தோம். ‘கைபடாத தண்ணீர் ஒரு குடம் வேண்டும்’ என்றாள். கைபடாத தண்ணீர் என்றால் போர்வெல்லை திறந்துவிடச் சொல்கிறாள். என்னவென்று விசாரிப்பதற்குள் பெரியவர் ஒருவர் பின்னாலேயே வந்தார். காரணத்தைச் சொல்லிவிட்டு ‘மந்திரிக்க வேண்டும்’ என்றார். 

திக்கென்றாகிவிட்டது. 

‘முதல்ல ஆஸ்பத்திரிக்கு போலாம் கிளம்புங்க’ என்றேன். அவர் எந்த ஆரவாரமுமில்லாமல் மறுத்தார். பக்கத்து வீட்டுக்காரரிடம் தகவல் சொல்லிவிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு கடிபட்டவர் இருந்த இடத்துக்குச் சென்றோம். பக்கத்து வீட்டுக்காரர் வயதானவர். அப்பாவை விட வயது அதிகம். ‘இவங்களுக்கு தெரியும்...நீங்க டென்ஷன் ஆகாதீங்க’ என்றார். பத்துப் புள்ளதாச்சிக்கு ஒரு புள்ளதாச்சி வைத்தியம் சொன்ன கதையாக இடையில் புகுந்து நாம் உளறக் கூடாது என்ற நினைப்பு இருந்தாலும் பாம்பு என்கிற பயம் இருந்தது. ஏமாந்தால் கடிபட்டவரின் கதையே முடிந்துவிடும். நாங்கள் அருகில் சென்ற போது கடிபட்டவரை வீதி விளக்குக்கு இடம் மாற்றியிருந்தார்கள். அவரும் முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டிக் கொள்ளவில்லை. எங்களைப் பார்த்துச் சிரித்தார். லம்பாடிகள் குழாமில் ஒரு கிழவனாரும் இருந்தார். கடிவாயைப் பார்த்துவிட்டு ‘தடிப்புமில்ல...வீக்கமுமில்ல...’ என்று ஆராய்ச்சி செய்துவிட்டு ‘தண்ணீர் மந்திரிச்சா போதும்’ என்ற முடிவுக்கு வந்தவர் அவர்தான்.

சிறுமி தண்ணீரைக் கொண்டு வந்ததும் கிழக்கு திசை நோக்கி நின்று சாமியைக் கும்பிட்டுவிட்டு நீரை எடுத்து கடிவாயைக் கழுவிவிட்டார். கொஞ்சம் தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். அவ்வளவுதான். மந்திரம் முடிந்தது. விடேகர் தன் புத்தகத்தில் இவற்றையெல்லாம் மூட நம்பிக்கை என்று எழுதியிருப்பார். ஆனால் அவரே ஒரு விஷயத்தையும் சொல்லியிருப்பார். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பாம்புகள் விஷமில்லாதவை என்பதால் முக்கால்வாசி நேரங்களில் மந்திரவாதிகள் வென்றுவிடுகிறார்கள் என்று. மந்திர தந்திரம் முடிந்தவுடன் அவர்கள் தங்களது குடில்களுக்குள் சென்றுவிட்டார்கள்.

விஷமுறிவு மருந்து எதுவுமே கொடுக்காமல் ஒருவன் கதையை முடிக்கப் போகிறார்களோ என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருந்தால் விஷ முறிவு மருந்தைக் கொடுத்திருப்பார்கள். பாம்புக்கான விஷ முறி மருந்தை இப்பொழுது எப்படித் தயாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் பாம்பு விஷத்தை நீர்த்துப் போகச் செய்து அதைக் குதிரைக்கு ஏற்றிவிடுவார்களாம். தன் உடலில் செலுத்தப்பட்டிருக்கும் விஷத்துக்கு எதிர் மருந்தை குதிரையின் உடல் தானாகவே உற்பத்தி செய்யும். விஷ முறிவு திரவம் குதிரையின் உடலில் உற்பத்தி செய்யப்பட்டவுடன் குதிரையின் ரத்தத்திலிருந்து விஷத்தைப் பிரித்தெடுப்பார்களாம். ப்ளூ க்ராஸ்காரர்கள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில் இது சாத்தியம். இப்பொழுதும் இதே முறைதானா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம். விக்கிப்பீடியாக்காரர்கள் இன்னமும் கூட இதே முறைதான் என்கிறார்கள்.

அடுத்த நாள் காலையில் விடிந்தும் விடியாமலும் லம்பாடிகளின் குடிசைப்பகுதிக்குச் சென்ற போது வழக்கம்போலவே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால் கடிபட்டவனுக்கு எதுவும் ஆகவில்லை. அந்தக் கிழவனாரைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது. அவருக்கு கன்னடம் அவ்வளவாக பேசத் தெரியவில்லை. நானும் அதே அரைகுறை கன்னடக்காரன்தான். ‘எப்படி...தப்பிச்சுட்டான் பார்த்தீங்களா?’ என்று சிரித்துவிட்டுச் சொன்னார். ‘எப்படி சாத்தியம்?’ என்றேன். கடிவாயைப் பார்த்தாலே என்ன பாம்பு கடித்திருக்கிறது என்று சொல்லிவிட முடியும் என்றார். காலங்காலமாக ஊர் ஊராகத் திரிகிறார்கள். அதில் வந்த அனுபவம். விஷமில்லாத பாம்பு என்று தெரிந்தால் கடி வாங்கியவர்களுக்கு பயத்தை நீக்கினாலே போதும் என்று விடேகர் சொன்னதை அச்சு பிசகாமல் சொன்னார். ‘நாகமா இருந்திருந்தா ஆஸ்பத்திரி தூக்கிட்டுப் போயிருப்போம்’ என்றார்.

அவர் சரியாகத்தான் இருக்கிறார். நான் தான் குழம்பிவிட்டேன்.

‘இவங்களுக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது...நான் சொல்லுறதை நம்புறாங்க....என் மந்திரத்தை நம்புறாங்க...உங்களை மாதிரி நிறையப் படிச்சவங்கதான் ரொம்பக் குழப்பிக்கிறீங்க...’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ‘நிறையப் படித்தால் குழப்பம் வராது. என்னை மாதிரி அரைகுறையாகப் படித்தால்தான் குழப்பம் வரும்’ என்றேன். அவரும் சிரித்துவிட்டார்.

8 எதிர் சப்தங்கள்:

Siva said...

Nanru.....

Bonda Mani said...

கொம்பேறி மூக்கன் பாம்பு கொத்திவிட்டு தான் கொத்தியவனின் பிணம் எரிக்கப்படுவதை மரத்து மீது நின்று வேடிக்கை பார்க்கும் //
"இது கதை தான்."

கண்கொத்திப் பாம்பு கண்ணிலேயே போடும் என்பார்கள்.//
"இது உண்மை. விஷத்தை துப்புகிற பாம்புகள் உள்ளன. நம் கண்ணில் ரத்த நாளங்கள் வெளியில் தெரிவது போல் உள்ளன. அவ்வாறு துப்பும் விஷம் கண்ணில் பட்டால் கடித்தது போல தான். யோசிச்சு பாருங்க கையில் கடித்தால், கையை கட்டி விஷம் தலைக்கு ஏறாமல் தடுக்கலாம். கண்ணில் விஷம் பட்டால் கண்ணை பிடுங்கியா போட முடியும் ? கண்ணாடி போட்டு இருந்தா மட்டும் எஸ்கேப் .."
https://www.youtube.com/watch?v=ThKlHVmBpzg

ADMIN said...

ஏதோ அவர் நேரம் பிழைத்து கொண்டார். பாம்பு கடிபட்ட ஒருவருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதே முறையான செயல்.

Saravanan Sekar said...

அனுபவ அறிவு அப்படின்றது இது தான் போல...
"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் " ... பலருக்கும் மரண பயமே நோயின் காரணியாக இருந்துவிடுகிறது என்பது இந்த நிகழ்வில் இருந்து கண்கூடு ...
ரோமுல்ஸ் விடேகர் - குறித்த அறிமுகத்திற்கும் நன்றி மணி அண்ணா ...

Kannan said...

// ‘நிறையப் படித்தால் குழப்பம் வராது. என்னை மாதிரி அரைகுறையாகப் படித்தால்தான் குழப்பம் வரும்’ // - உங்களுக்கு கம்பெனி கொடுக்க எங்களை போல் பலர் இருக்கிறோம்.

Vinoth Subramanian said...

// இந்த பயத்தைப் போக்குவதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. ஒரு லோட்டா பிராந்தியை ஊற்றிவிட்டுவிட வேண்டும்.// enakku pidikkathe!! any other option? Very informative sir. That too about that vitegar (ரோமுல்ஸ் விடேகர் ). I will search him now.

Vinoth Subramanian said...

//அரசியல்வாதிகளைத் தவிர பெரும்பாலான இந்தியப் பாம்புகள் விஷமற்றவை என்பதுதான் உண்மை.// Powerful truth. But, no remedy at all. Am I not correct?

சேக்காளி said...

//படிச்சவங்கதான் ரொம்பக் குழப்பிக்கிறீங்க..//
மணி(கண்டன்) அந்த மணி(சத்தம்)கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.