Aug 11, 2015

தண்ணீர்

தமிழகத்தின் வறண்ட பிரதேசங்களைப் பட்டியலிட்டால் நிச்சயமாக அதில் நம்பியூரும் இடம் பிடித்துவிடும். கொங்கு நாட்டின் பழங்கால வரலாறுகளில் இடம்பெற்றிருந்த ஊர். இப்பொழுது அந்த ஊரும் சுற்றுப்புறமும் கிட்டத்தட்ட பாலைவனமாகிவிட்டன. நிலத்தடி நீர் மட்டும்தான் ஒரே நம்பிக்கை. அதுவும் ஆயிரம் அடிகளைத் தொட்டுவிட்டது. போர்வெல் வண்டியைக் கொண்டு வந்து பொத்தல் போட்டால் வெறும் புகைதான் எழும்புகிறது. ஒரு சில விவசாயிகளின் ஆழ்குழாய்க் கிணறுகள் மட்டும் தாக்குப் பிடிக்கின்றன. சென்ற ஆண்டு நிலவிய கடும் வறட்சியின் காரணமாக தாக்குப்பிடித்தவைகளில் பெரும்பாலானவை தங்களது கதையை முடித்துக் கொண்டன. வறட்சியின் கோரத் தாண்டவத்தை கடந்த கோடையில் பார்க்க முடிந்தது. ஆடு மாடுகளுக்கு குடிக்கத் தண்ணீர் கிடைப்பதில்லை என்று விற்றுவிட்டு வெறும் கையை பிசைந்து கொண்டிருந்தார்கள். தென்னை மரங்கள் முதலில் கருகிப் போக பனைமரங்களே கூட மொட்டை மொட்டையாக நின்றன.

‘ஊருல மழை பெஞ்சுதுங்களா?’ என்று கேட்பதற்கே சங்கடமாக இருக்கும். என்ன பதிலைச் சொல்வார்கள்? ஒரு சொட்டு மழையில்லை.

‘எப்படியாச்சும் படிச்சு இந்த ஊரை விட்டுட்டு போயிடட்டும்’ என்று பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை குருட்டுவாக்கில் பொறியியல் கல்லூரிகளில் தள்ளுவதற்கு இதுதான் அடிப்படைக் காரணம். வங்கிக் கடன் கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றாலும் காட்டை அடமானம் வைத்தாவது வெளியில் தள்ளிவிட வேண்டும் என கடும் பிரயத்தனப்படுகிறார்கள். இன்னும் ஒன்றிரண்டு தலைமுறை இந்தப் பகுதிகளில் விவசாயமிருந்தால் பெரிய விஷயம் என்கிறார்கள். இப்பொழுதே பெரும்பாலான நிலம் பாலையாகவும் தரிசாகவும் ஆகிவிட்டது.

வெறும் அணைக்கட்டுகள் மட்டுமே எல்லாவற்றையும் மாற்றிவிடாது. நீர் மேலாண்மை என்பது வேறு; அணைகளை மட்டும் கட்டுவது என்பது வேறு. இந்த நாட்டிலேயே எந்த மாநிலத்தில் விவசாயிகள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? மஹாராஷ்டிரா. அங்குதான் 1845 அணைக்கட்டுகள் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் மொத்த அணைக்கட்டுகளின் எண்ணிக்கை 5171. சதவீதக் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட முப்பத்தைந்து சதவீத அணைக்கட்டுகளைக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில்தான் மிக அதிகமான விவசாயிகளின் தற்கொலைகள் நடைபெறுகின்றன. அதனால் அணைக்கட்டுகள் இருந்தால் வளம் கொழித்துவிடும் என்றெல்லாம் அர்த்தமில்லை. இருக்கிற வளங்களைச் சரியாகப் பயன்படுத்தச் சொல்லித் தருகிற ஆள் வேண்டும். ராஜேந்திரா சிங் மாதிரி.

ராஜேந்திரா சிங் ராஜஸ்தானைச் சார்ந்தவர். இந்தியாவின் நீர் மனிதர் என்று அழைக்கப்படுவர். அடிப்படையில் சிங் ஒரு மருத்துவர். கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் தனது சொந்த ஊரில் முதியவர்களுக்கு மருத்துவமும் குழந்தைகளுக்கு படிப்பும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது வந்த ஒரு பெரியவர் ‘ராஜேந்திரா இந்த ஊருக்கு நீ சொல்லித் தர்ற படிப்பை விடவும், நீ பார்க்கிற வைத்தியத்தை விடவும் தண்ணி ரொம்ப அவசியம்...அது இல்லைன்னா இந்த ஊரே காணாம போயிடும்’ என்று திசை மாற்றியிருக்கிறார். அப்பொழுது ராஜேந்திரா சிங்குக்கு தண்ணீர் பற்றிய எந்த அறிவும் இல்லை. ஆனால் பெரியவர் சொன்ன விஷயம்தான் இந்தியாவின் நீர் மனிதராக அவரை மாற்றியிருக்கிறது. தண்ணீர் மேலாண்மை பற்றியத் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்குகிறார். ஜோஹாத் எனப்படும் நீர் தேக்கத் தொட்டிகளை உள்ளூர் மனிதர்களை வைத்துக் கட்ட ஆரம்பிக்கிறார். அவர் உருவாக்கிய தருண் பாரத் சங்கம் என்ற அமைப்பு கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் நீர்த் தேக்கத் தொட்டிகளைக் கட்டி முடித்தது. ‘அங்கங்கு பெய்கிற மழை அங்கங்கேயே சேகரிக்கப்பட வேண்டும்’ என்பதுதான் கான்செப்ட். நிலத்தை விட்டு ஓடிவிட்டால் தண்ணீர் நமக்கு சொந்தமில்லை என்றாகிவிடும். 

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வாரில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் கிராமங்களைக் காப்பாற்றியிருக்கிறார். ஐந்து நதிகளை உயிர்ப்பித்திருக்கிறார். நிஜமாகவே ஐந்து நதிகள். அதனால்தான் அவருக்கு மகஸாஸே, ஸ்டாக்ஹோம் நீர் விருது போன்ற சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

திரு. ராஜேந்திரா சிங் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதே நம்பியூருக்கு வந்திருந்தார். கோபிச்செட்டிபாளையத்தில் பவானி நதி பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு இருக்கிறது. மருத்துவர் சத்தியசுந்தரி தலைவராக இருக்கிறார். இதுவொரு முக்கியமான அமைப்பு. ஒரு காலத்தில் விஸ்கோஸ் ஆலையிலிருந்து கழிவுநீரை அப்படியே ஆற்றில் இறக்கினார்கள். லட்சக்கணக்கான மீன்கள் செத்தொழிந்தன. பவானி குடிநீர் குடிப்பதற்கே பயன்படாது என்ற சூழல் உருவானது. இந்த அமைப்பு போராடத் தொடங்கியது. நீதிமன்றங்கள், போராட்டங்கள், வழக்குகள் என்றெல்லாம் இழுத்த பிறகு கழிவு நீரை பவானி ஆற்றில் விடாமல் நிலத்தில் இறக்கினார்கள். நிலத்தடி நீர் நாசமானது. பயிர்கள் கருகின. மீண்டும் களமாடி அந்த ஆலையை மூடச் செய்தார்கள். சத்தியசுந்தரி டாக்டருக்கு இருக்கும் சொத்துக்கும் செல்வாக்குக்கும் தனது ஓய்வுகாலத்தை அற்புதமாகக் கழிக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல், பவானி நதி என்று வருத்திக் கொண்டிருக்கிறார். அவரது பவானி நதி பாதுகாப்புக் குழுதான் ராஜேந்திரா சிங்கை நம்பியூருக்கு அழைத்து வந்திருந்தது.

ராஜேந்திரா சிங் சிரித்துக் கொண்டே பேசினார். தங்களது ஊரை எப்படி மாற்றினோம் என்பது பற்றியெல்லாம் விவரித்தார். ஆனால் முழுமையாக பயனளித்த பேச்சு என்று சொல்ல முடியாது. நம்பியூருக்கும் ஆல்வாருக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. ஆல்வாரில் செயல்படுத்தியதை அப்படியே தமிழகத்திலும் செயல்படுத்த முடியாது. தனது பேச்சில் திரு. சிங் அவர்கள் பவானி ஆற்றை மீண்டும் உயிர்பிப்போம் என்றார். நல்ல விஷயம்தான். ஆனால் பவானி ஆற்றை உயிர்ப்பித்தால் அந்த ஆறுக்கு வடக்கில் இருக்கும் விவசாயிக்குத்தான் பலன் அதிகம். பவானி ஆறுக்கு தெற்கில் இருக்கும் நம்பியூர்காரர்களுக்கு பத்து பைசா பிரயோஜனம் இருக்காது. ராஜேந்திரா சிங் மனப்பூர்வமாகத்தான் பேசினார். ஆனால் அவருக்கு இந்த ஊரின் புவியியல் அமைப்பு பற்றிய முழுமையான புரிதல் இல்லை. அதனால் அவர் பேசியது முழுமையான பயன் தந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் அவரை வேறு மாதிரி பயன்படுத்தியிருக்க முடியும். சரியான கேள்விகளைக் கேட்டிருக்கலாம். அவர் பேசி முடித்த பிறகு கேள்வி கேட்கவும் வாய்ப்பளித்தார்கள். யாரும் சரியான கேள்வியைக் கேட்கவில்லை. சில ஆசிரியர்களும் உள்ளூர்வாசிகளும் தங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை பிரஸ்தாபிக்க கண்ட கண்ட கேள்வியைக் கேட்டதாகத் தோன்றியது. ‘ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வருவதற்கான வழிவகைகள் என்ன?’ என்பதை ஒருவர் கேட்டுவிட்டு வெற்றிப்புன்னகையுடன் இருக்கையில் அமர்ந்தார். இப்படியாக அரங்குக்கும் பேச்சாளருக்கும் சம்பந்தமேயில்லாத கேள்விகள்.

ராஜேந்திரா சிங் வருகிறார் என்றவுடன் அவிநாசி மருத்துவமனையிலிருந்து தலை தெறிக்க நம்பியூருக்கு ஓடியிருந்தேன். அவரது பேச்சு ஏதாவதொருவிதத்தில் நமக்கு உந்துசக்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையிருந்தது. அந்தத் திருமணமண்டபத்தில் நிறைய விவசாயிகள் அதே நினைப்புடன் அமர்ந்திருந்தார்கள். ஆனால் இவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்ததும் தலை வலிக்கத் தொடங்கியிருந்தது. இனி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்று எழுந்து வந்துவிட்டேன். 

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ராஜேந்திரா சிங் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தன. அவரைப் பற்றிய சில ஆவணப்படங்களும் யூடியூப்பில் கிடைக்கின்றன. நேரம் கிடைக்கும் போது தேடிப் பார்க்கலாம். வறண்டு போன ஒவ்வொரு ஊர்களுக்கும் ராஜேந்திரா சிங் போன்ற மனிதர்கள் அவசியம். ஊருக்கு ஒருவர் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒருவராவது வேண்டும். அந்தந்தப் பகுதிகளின் நீர் வரத்து, புவியியல் அமைப்பு தெரிந்தவர்களால்தான் அந்தந்த ஊருக்கேற்ற நீர் மேலாண்மையைச் செயல்படுத்த முடியும். முழு நேரப் பணியாக இதைச் செய்ய வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும் போது இத்தகைய பணிகளில் கவனத்தைச் செலுத்தலாம். அப்படியான ஆர்வலர்களுக்கு ராஜேந்திரா சிங் ஒரு உந்துசக்தி. ரோல் மாடல். இவர்களைப் போன்றவர்களால்தான் அடுத்த தலைமுறைக்கு இயற்கையின் வளங்களைக் கொண்டு சேர்க்க முடியும். அரசாங்கத்தை நம்பியிருந்தால் பெரிய பலன் இல்லை. காலங்காலமாக காவிரியையும் கங்கையையும் இணைக்கிறோம் என்று கவர்ச்சிகரமான கதைளை விட்டுக் கொண்டேயிருப்பார்கள். இரண்டு வரப்புகளைக் கூட வெட்ட மாட்டார்கள். 

10 எதிர் சப்தங்கள்:

Mahesh said...

பெரியவர்ஓட ஒரு வார்த்தை ராஜேந்திரா சிங்கை எவ்வல்வு தூரம் யோசிக்க வெச்சு அதில் வெற்றியும் கண்டிருப்பதை பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கு.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த பதிவு எழுதிய உங்களுக்கும்:)


நம்மலோட அடிப்படை தேவைகலை மரந்துவிட்டு எங்கோ/எதையோ சாதிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இவரைப் போன்ற மணிதர்கள் வெலிச்சத்திர்க்கு வர வேண்டும்.
அப்படியான பட்டியலில் ஒருத்தர் இந்த.


அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி

www.rasanai.blogspot.com said...

dear mani and other blog readers

if possible pl read "Oru vannathupoochiyin marana sasanam" -- superb book on water management by tamil civilization. it will definitely give some basic intro and info/insight/awareness on this issue. not to be missed one.

just sharing the info. thanks # appadiyo englishla prasthabichachu

anbudan
sundar g chennai

Anonymous said...

Manikandan,
நீங்கள் கேள்விகள் கேட்டிருக்கலாமோ?

Vaa.Manikandan said...

கேள்வி கேட்க வேண்டுமென்றுதான் நினைத்தேன். ‘நீங்கள் பேசியது ப்ராக்டிக்கலாக இந்த ஊருக்கு பயன்படுமா என்று தெரியவில்லை’ என்று ஆரம்பிக்க விரும்பினேன். இரண்டு காரணங்களுக்காக கேட்கவில்லை. அது விவசாயிகளுக்கான கருத்தரங்கு. கருத்தரங்கு அமைப்பாளர்களும் திரும்பத் திரும்ப ‘விவசாயிகளுக்கு வாய்ப்பளியுங்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை நாம் ஆக்கிரமிக்கக் கூடாது என்று நினைத்தேன். இன்னொரு காரணம் திரும்பத் திரும்ப விவசாயிகள் இல்லாதவர்களே வந்து மைக்கை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பேண்ட் சட்டை அணிந்தவனாக அவர்களுடன் மல்லுக்கட்டுவதில் விருப்பமில்லை.

”தளிர் சுரேஷ்” said...

ராஜேந்திர சிங் பற்றி நானும் சிறிது கேள்விப்பட்டு இருக்கிறேன்! தமிழகத்துக்கு அவரது சேவை தேவைதான்! ஆனால் நீங்கள் சொன்னமாதிரி தடம் மாறினால் உபயோகமின்றி போய்விடும். இப்படி தடம் மாறி போகையில் நம்மால் ஆன எதிர்ப்பை காட்ட வேண்டும்.எழுந்து வந்தது சரியாகத் தோன்றவில்லை! நன்றி!

சேக்காளி said...

ராஜேந்திர சிங், சத்திய சுந்தரி பற்றி அமைதியான சூழலில் யோசித்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

R.Anbu said...

தஞ்சாவுரில் கூட ஒருத்தர்(பெயர் நினைவில்லை) தண்ணீர் சேமித்துக் கொண்டிருப்பதாக படித்தேன் அவரைப் பற்றியும் பதிவிடலாமே

Itsdifferent said...

http://www.badriseshadri.in/2012/01/blog-post_3735.html
http://www.badriseshadri.in/2012/01/2_23.html

manjoorraja said...

மணி, நீங்களே ஏன் இந்த பிரச்சினையை தீர்க்க நம்பியூர் மக்களுடன் சேர்ந்து முயற்சி எடுக்கக் கூடாது. உங்களால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Vinoth Subramanian said...

Wonderful and inspirational post sir. You are talking about the very basic need of our country.