Aug 25, 2015

வெட்டுக் குத்து

இன்று பெங்களூரில் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுகின்றன. காங்கிரஸூம் பாஜகவும் வாக்குக்கு ஐநூறிலிருந்து ஆயிரம் வரை கொடுத்ததாகச் சொல்கிறார்கள். எங்கள் வீடு இருக்கும் பகுதியின் எம்.எல்.ஏ ரெட்டிகாரு. பா.ஜ.கவைச் சார்ந்தவர். சதீஷ் ரெட்டி. வேட்பாளர்களும் ரெட்டிகாருகள்தான். ரெட்டிகள் பெரும்பாலும் டப்பு நிறைந்த ரொட்டிகள் என்பதால் அள்ளி வீசியிருக்கிறார்கள். மற்ற பகுதிகளிலும் இதுதான் நிலவரம். ஆனால் சித்தராமையாவுக்கு இது கெளரவ பிரச்சினை. பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. மலையை புரட்டுவேன் சூரியனைக் கட்டுவேன் என்றெல்லாம் சொல்லி எடியூரப்பா வகையறாவை துரத்தியடித்தார். ஆனால் இப்பொழுது நிலைமை இன்னமும் மோசம். உருப்படியான ஒரு வளர்ச்சித் திட்டம் கூட இல்லை. 

எடியூரப்பா எகிறிக் குதித்துக் கொண்டிருக்கிறார். ‘இவங்களை நம்புனீங்களே...இப்போ பாருங்க’ என்கிறார். ஆனால் அவர் கட்சியின் நிலைமையும் கொஞ்சம் ஆட்டம்தான். அசோக்குமார் கடந்த பா.ஜ.க ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தார். செல்வாக்கான கை. மோடி கர்நாடகாவுக்குள் கால் வைக்கும் போதெல்லாம் இவர் கையில்தான் அத்தனையும் இருக்கும். இந்தத் தேர்தலுக்கும் கூட அவர்தான் பொறுப்பாளர். வேட்பாளர்கள் முழுவதும் அவருடைய ஆட்களாக இருக்கிறார்கள் என்று சலசலப்பு இருந்தது. இன்றைக்கு முடிவுகள் வந்தால் தெரிந்துவிடும். தேவகவுடாவின் ஐக்கிய ஜனதாதளம் மாநகராட்சியைக் கைபற்றாது என்றாலும் கணிசமான இடத்தை வெல்வார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.

பணம் இருந்தால் போட்டியும் இருக்கும் அல்லவா? நேற்று கண்கூடாக பார்க்க முடிந்தது. வெந்நீர் பை ஒன்று வாங்க வேண்டியிருந்தது. ப்ளாஸ்டிக் பை அது. வெந்நீரை ஊற்றி ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும். அப்பல்லோ மருந்துக்கடைக்குள் சென்று திரும்ப வருவதற்குள் மங்கமன்பாளையா சாலையின் இரண்டு பக்கமும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்திருந்தது. அந்தச் சாலை எப்பொழுதுமே நெரிசல் மிகுந்ததுதான். ஆம்புலன்ஸ் வந்து போனால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். அந்தச் சாலையில் இருக்கும் மருத்துவமனைக்குத்தான் பெரும்பாலான 108கள் வந்து நிற்கும். சாலையிலேயே வண்டியை நிறுத்தி இறக்கி ஏற்றுவார்கள். அதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகும். ஆனால் இது வித்தியாசமான நெரிசல். மருத்துவமனைக்கு எதிரில் பெருங்கூட்டம் சேர்ந்திருந்தது. வண்டியை இன்னும் சற்று ஓரமாக்கிய போது பெண்கள் கதறிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆண்கள் பயங்கரக் கோபத்துடன் இருந்தார்கள். ஆண்கள் என்பதைவிடவும் விடலைகள் என்று சொல்லாம். பதினைந்து பதினாறிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான ஆட்கள்.

காவல்துறையின் வாகனங்களும் வந்து சேர்ந்திருந்தன. கூட்டத்தை ஒதுக்கத் தொடங்கியிருந்தார்கள். இந்த இடத்தில் நிற்க வேண்டுமா கூடாதா என்று யோசனையாக இருந்தது. ஆனாலும் மருத்துவமனையின் வரவேற்பறைக்குள் நுழைந்துவிட்டேன். நீல நிறப் புடவையில் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் இருந்தார். ‘என்னாச்சு?’ என்றேன். பெங்களூரில் பெரும்பாலும் தமிழிலேயே பேச ஆரம்பிக்கலாம். அதுவும் ஆயா வேலை செய்பவர்கள், கட்டிட வேலைக்காரர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் போன்ற கீழ்மட்ட பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்க்காரர்களாகத்தான் இருப்பார்கள். 

‘வெட்டுக்குத்து சார்’ என்றார். 

நினைத்தது சரியாகப் போய்விட்டது. தேர்தல் பிரச்சினைதான். எதிர்கோஷ்டியினருடனான சண்டையில் கழுத்திலேயே வீசிவிட்டார்கள். விபத்து என்று சொல்லித்தான் தூக்கி வந்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் அத்தனை பேரும் மருத்துவமனைக்குள் உள்ளே நுழைய முயற்சித்திருக்கிறார்கள். ‘ஐசியூவில் சேர்த்தாச்சு...வெளியே நில்லுங்க’ என்று சொன்னால் ஐசியூவுக்குள் ஒரு பெருங்கூட்டம் நுழைய முயற்சித்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகள்தான் சுளையன்கூட்டம் ஆயிற்றே! கமுக்கமாக காவல்துறைக்குத் தகவல் சொல்லிவிட்டார்கள். ‘இது சீரியஸ் கேஸ். வேற மருத்துவமனைக்கு கொண்டு போய்டுங்க’ என்றும் சொல்லிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தைக் கட்டிக் கொண்டு மாரடிப்பது லேசுப்பட்ட காரியமில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும். வேறு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் தயாராக நிற்கவும் அதைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்து கொள்ளவும்தான் அந்தச் சாலையில் அவ்வளவு நெரிசல்.

‘கேடி பசங்க’ என்றார் அந்த நீலப்புடவை பெண்மணி. 

கழுத்தில் வெட்டுக்காயம் ஆழமாக விழுந்திருக்கிறது. சக்கர வண்டியில் வைத்து வேகமாக உருட்டிக் கொண்டு வந்து ஏற்றினார்கள். ‘அய்யோ எம்புள்ளைக்கு என்னாச்சு’ என்று தமிழிலும் வெட்டியவர்களை கன்னடத்திலுமாக ஒரு பெண் திட்டிக் கொண்டிருந்தார். அநேகமாக வெட்டுப்பட்டவனின் அம்மாவாக இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் விரையவும் இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் பின்னாலேயே வேகம் எடுத்தன. மழை பெய்து ஓய்ந்த அமைதி வந்து சேர்ந்திருந்தது.

தேர்தல்கள் என்பது வெறும் வாக்கு எண்ணிக்கையாக மட்டும் இருப்பதில்லை. அதுவொரு ப்ரஸ்டீஜ். எவ்வளவு வயதானாலும் நாற்காலியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும் உடல்நிலை எவ்வளவு மோசமானாலும் அடுத்தவன் தலையெடுத்துவிடக் கூடாது எனக் கங்கணம் கட்டுவதும் அதனால்தான். பதவி இருக்கும் வரைக்கும்தான் பவர். அது இல்லையென்றால் சல்லிப்பயல் கூட மதிப்பதில்லை. தனக்குக் கீழாக இருந்தவன் மாவட்டச் செயலாளர் ஆகும் போது தயக்கமே இல்லாமல் குறுகிக் கும்பிடுவது அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் சாத்தியம். தனக்கு மேலாக இருந்தவன் தன்னிடம் பம்முவதைப் பார்ப்பது என்பது அலாதி சுவைமிக்கது. அந்தச் சுவையை ஒரு முறை ருசித்துவிட்டவன் திரும்பத் திரும்ப ருசிக்க விரும்புகிறான். அதனால்தான் கவுன்சிலர் பதவி என்றாலும் கூட கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள்.

ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுக்கிறார்கள் என்றால் எவ்வளவு தொகையை திரும்ப எடுப்பார்கள்? அதுவும் கவுன்சிலர் பதவிக்கு. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. இந்தப் பணத்துக்காகவும், அல்லக்கையாக ஒட்டிக் கொள்ளவும், தன்னுடைய தலைவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் விடலைகள் கத்தியையும் தடியையும் எடுக்கிறார்கள். இன்றைக்கு அல்லக்கை நாளைக்கு பெருங்கை என்பது அவர்களின் கனவாக இருக்கிறது. இத்தகைய கனவுகளோடு திரியும் ஆயிரக்கணக்கான நகர இளைஞர்களில் யாரோ சிலர் மட்டும் மேலே வருகிறார்கள். மற்றவர்கள் இப்படியே திரிந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

‘அவம் பொண்டாட்டியைப் பார்த்தியா சார்? இப்போத்தான் கல்யாணம் ஆகியிருக்குமாட்ட இருக்குது’ என்றார் நீலப் பெண்மணி. 

நான் அந்தப் பெண்ணை கவனித்திருக்கவில்லை. ஆனால் ஒன்று- செத்தாலும் இப்படிக் கெத்தாக சாக வேண்டும் என்கிற ஆசையை இத்தகைய வெட்டுக் குத்துக்கள் உருவாக்கிவிடுகின்றனவோ என்று தோன்றுகிறது. எவ்வளவு கூட்டம்? எவ்வளவு கதறல்கள்? இன்னொரு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கவும் நீல நிறப் பெண்மணி பரபரப்பானார். சக்கர வண்டியைத் தயார் செய்து கொண்டு வந்து சாலையில் நின்றார். இதுவும் விபத்து கேஸ்தான். ஒரு முதியவர். சாலையைக் கடக்கும் போது வண்டியில் அடிபட்டிருக்கிறார். 108ல் தூக்கிப் போட்டு வந்திருந்தார்கள். கால்கள் மட்டும் வீங்கியிருந்தன. மற்றபடி அடி எதுவும் தெரியவில்லை. அவருக்கு ஞாபகம் இருந்தது. அவருடைய பை ஒன்றை தலைமாட்டிலேயே வைத்திருந்தார்கள். சக்கர வண்டியை உருட்டும் போது சுற்றும் முற்றும் பார்த்தபடியே உள்ளே சென்றார். தனக்காக யாராவது வந்திருக்கிறார்களா என்று அவரது கண்கள் தேடியிருக்கக் கூடும். ஆனால் யாரும் வந்திருக்கவில்லை.

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

என்னதான் செய்ய?