Aug 24, 2015

தஞ்சாவூர்க்காரர்

எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஓர் அடையாளம் இருந்தது. வெளியூர்காரர்கள் யாராவது வந்தால் ‘கடைவீடு’ ‘தவைதார் வீடு’ என்று பெயர் சொல்லிக் கேட்பார்கள். பெயருக்கான காரணம் எதுவும் தெரியாது. பெயர்- அவ்வளவுதான். வீடுகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருந்த இருபத்தைந்தாண்டுகளுக்கு முந்தைய நிலைமை இது. இப்பொழுது பெரும்பாலான வீடுகளின் அடையாளங்கள் அழிந்து போய்விட்டன. வீடுகளை நான்காகவும் எட்டாகவும் பிரித்து குறுக்குச் சுவர்களை வைத்து வாடகைக்கு விடும் வீடுகளாகவும் முன்புறமாக இரும்பு ஷட்டர்களைப் போட்டு கடைகளாகவும் மாற்றிய பிறகு வீடுகள் வெறும் நம்பர்களாக மாறிவிட்டன.

வீடுகளுக்கு அப்படியென்றால் தனிமனிதர்களுக்கு வேறு மாதிரி. தன்னோடு பணியாற்றியவர்களுக்கு அவர்களது ஊர்ப் பெயரை வைத்து அப்பா பெயர் வைத்திருப்பார். ‘தஞ்சாவூர்க்காரர்’ ‘ஓலப்பாளையத்துக்காரர்’ ‘முருகம்பாளையத்துக்காரர்’ என்று எல்லாருடைய பெயரும் ‘காரரில்’ முடியும். அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றதால் பள்ளி இல்லாத நாட்களில் எங்களை அவர்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அம்மா கிராம நிர்வாக அலுவலர். பணிக்காலம் முழுவதும் கிராமங்களிலேயே இருந்தார். அவரோடு சென்றால் யாராவது வாய்க்காலுக்கும் வரப்புகளுக்கும் அழைத்துச் சென்று விளையாட வைப்பார்கள். இத்தகைய இடங்களுக்குத் திருட்டுத்தனமாகச் சென்றால்தான் சுவாரசியம். மேற்பார்வையாளர்கள் இருந்தால் படு மொக்கையாக இருக்கும். ‘அங்கே சுழல் இருக்கும். இங்கே ஆழமாக இருக்கும்...பாம்பு இருக்கும்’ என்று கடிவாளத்தை இழுத்துக் கொண்டேயிருப்பார்கள். 

அப்பாவின் அலுவலகத்தில் அப்படியில்லை. காலையில் பத்து மணிக்கு சாப்பாட்டு பையை தனது இடத்தில் வைத்து கையெழுத்திட்டால் பதினொன்றேகாலுக்கு டீக்கடைக்கு அழைத்துச் சென்று பால் வாங்கித் தருவார். பஜ்ஜியும் வடையும் சைட் டிஷ். திரும்ப வந்து கண்ணாடியை சரி செய்து கொண்டு தனது வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பாக காகிதமும் பேனாவும் கொடுத்துவிடுவார். எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கலாம். அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக நகர்ந்து கொண்டிருப்பவர்களில் யாராவது வந்து பேச்சுக் கொடுப்பார்கள். பொழுது போய்விடும். எதைக் கிறுக்கி வைத்திருந்தாலும் உச்சுக் கொட்டி பாராட்டுவதற்கு ஒரு மனிதர் இருப்பார். மாலை ஐந்து மணிக்கு வீட்டை நோக்கி வெளியேறும் போது எனக்குத் தலையில் இரண்டு கொம்பு முளைத்திருக்கும்.

அப்படியான அலுவலகத்தில் தஞ்சாவூர்க்காரரை மறக்க முடியாது. அப்பாவுடன் ஈரோடு அலுவலகத்தில் இருந்தார். ஒரு நாள் கையில் இரண்டு ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்து ‘இது நல்ல நோட்டா?’ என்றார். கிழியாமல் இருந்தது. . ஆமாம் என்றேன். ஆனால் அது கள்ள நோட்டு. நடுவில் கம்பி இல்லை. கள்ள நோட்டு என்ற சமாச்சாரம் இருப்பது அப்பொழுதுதான் தெரியும். அன்றைய நாளில் பேச வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ரூபாய் நோட்டு பற்றியே பேசிக் கொண்டிருந்தார். ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம், ரூபாய் தாளில் உள்ள மொழிகள் என்று பணத்தின் ஏகப்பட்ட கதவுகள் திறந்த தினம் அன்று. இன்னொரு சமயம் சில்லரைக் காசுகளைக் கொட்டி எண்ணச் சொல்லியிருந்தார். ஐந்து காசுகளும் பத்துக்காசுகளுமாக குவிந்து கிடந்த அவற்றை எண்ணி முடிப்பதற்குள் தாவு தீர்ந்து போனது. காசுகளுக்கு denomination போடக் கற்றுக் கொடுத்தார். குறுக்கெழுத்துப் போட்டி, விடுகதைகள் என்று ஒவ்வொரு நாளையும் முழுமையாக அவர் ஆக்கிரமிக்கச் செய்துவிடுவார். இண்டர்நெட்டும் செல்போன் விளையாட்டுகளும் போகோ சேனலும் இல்லாத அந்தக் காலத்தில் தஞ்சாவூர்க்காரர் போன்றவர்கள் மூளையைக் குறுகுறுக்கச் செய்தார்கள் என்றால் மிகையில்லை. 

தஞ்சாவூர்க்காரர் இப்பொழுது உயிரோடில்லை. சமீபத்தில் இறந்து போனார்.

என்னுடைய பொறியியல் படிப்பின் கலந்தாய்வுக்கு அப்பாவும் நானும் அவரும்தான் சென்றிருந்தோம். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு. அதிகாலையிலேயே சென்னையில் இருந்த அவரது உறவினர் வீட்டின் கதவைத் தட்டினோம். எங்களுக்கு அப்பொழுது சென்னையில் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. அதுவுமில்லாமல் கவுன்சிலிங், ரயில் பயணம் என்பதெல்லாம் கூட அதிசயமான விவகாரங்கள். அப்பாவுக்கு ஆஸ்துமா தொந்தரவும் உண்டு. தஞ்சாவூர்க்காரர் விடுப்பு எடுத்துக் கொண்டு எங்களுடன் வந்திருந்தார். சென்னையில் இருந்த அவரது உறவுக்காரர் வீட்டில் இரண்டு மூன்று பேர்கள் இருந்தார்கள். அவர்களிடமெல்லாம் முகம் பார்த்துக் கூட பேச முடியாத கூச்சம் எனக்கு. தலையைக் குனிந்தபடியே இருந்தேன். கொத்துக்கறியும் இட்லியும் சமைத்திருந்தார்கள். வாழ்நாளில் முதன் முதலாக உண்ட கொத்துக் கறி என்பதால் அதன் சுவை இன்னமும் அடிநாக்கில் ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற பிரமை இருக்கிறது. 

அடுத்தவர்களின் முகம் பார்த்து பேசுவதுதான் பிரச்சினையே தவிர மற்ற தில்லாலங்கடி வேலைகளைச் செய்பவனாகத்தான் இருந்தேன். கலந்தாய்வில் விரும்பிய கல்லூரி, படிப்பு கிடைத்திருந்தது. ஊருக்கு கிளம்பியிருந்தோம். தொடரூர்தி நிலையத்தில் காத்திருந்த போது ஈரோட்டு வண்டி வருவதற்கு இன்னமும் நேரம் இருந்தது. மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம். அதே சந்தோஷத்தில் ரயில்வே ஸ்டேஷனின் ஓரத்தில் இருந்த புத்தகக் கடையில் வழுவழுப்பான வண்ண அட்டையில் நடிகைகள் மார்பகப் பிளவு தெரிய இருந்த புத்தகங்களில் இரண்டை உருவி சட்டைக்குள் திணித்துக் கொண்டேன். சற்று திகிலாகத்தான் இருந்தது. ஆனால் செளகரியத்திற்காக ராணியோ என்னவோ- நீண்ட வடிவிலான புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டேன். தொடரூர்தியில் எனக்கு மேல் பெர்த். அப்பாவுக்கும் தஞ்சாவூர்காரருக்கும் கீழ் பெர்த்.

நீண்ட வடிவிலான புத்தகத்தைப் படிப்பது போன்ற பாவ்லாவில் தில்லாலங்கடி புத்தகத்தை அதற்குள் வைத்திருந்தேன். ரயிலோடு சேர்ந்து நடிகைகளும் குலுங்கிக் கொண்டிருந்தார்கள். எவனோ ஒரு மண்டையன் விளக்கை அணைக்கச் சொன்னான். விடிந்தால் ஊர் வந்துவிடும். அதற்குள் முடித்தாக வேண்டும். எல்லோரும் தூங்கிவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு கழிவறைக்குள் சென்று படித்து முடித்து தூக்கி வீசிய போது அசகாய சூரனாகியிருந்தேன். விடியும் போது ஈரோட்டை நெருங்கியிருந்தோம். தஞ்சாவூர்க்காரர் சிகரெட் ஒன்றை எடுத்துக் கொண்டு படியில் நின்றார். கல்லூரி, படிப்பு என எல்லாவற்றையும் பற்றி பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று ‘நைட் படிச்ச புக் நல்லா இருந்துச்சா?’ என்றார். தொண்டைக்குள் என்னவோ வந்து அடைத்துக் கொண்டது.

‘தப்பில்ல’ என்று சிரித்தவர் ‘மத்ததுல கோட்டை விட்டுடாத’ என்றார். 

இவருக்கு எப்படித் தெரிந்தது என்று படுகுழப்பமாக இருந்தது. ஒருவேளை அப்பாவுக்கும் தெரிந்திருக்குமோ என்று தயக்கமாகவும் இருந்தது. தஞ்சாவூர்க்காரர் வெகு இயல்பாக இருந்தது போலத்தான் தோன்றியது. ஆனால் அவரது முகத்தை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. அதன் பிறகு அவரைப் பார்த்து பேசுவதற்கு சங்கடமாகவே இருந்தது. அவரைத் திரும்பவும் பார்த்ததாக ஞாபகமும் இல்லை. 

அப்பாவுக்கு அந்தக் காலத்திலேயே சொட்டை விழுந்திருந்தது. என்னைப் போலவே. தன்னுடைய முப்பதுகளிலேயே முடியை இழந்திருந்தார். ‘தஞ்சாவூர்காரர்..தஞ்சாவூர்காரர்ன்னே சொல்லிட்டு இருங்க...அவனவனுக்கு அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு பேர் வெச்சிருப்பாங்க...பேர் சொல்லிக் கூப்பிடலைன்னா சொட்டைத் தலைன்னு நான் கூப்பிடுவேன்’என்றார். அப்பாவும் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரும் அப்பாவை சொட்டைத்தலை என்று அழைத்ததாக ஞாபகம் இல்லை. 

சென்ற வாரத்தில் ஒரு திருமண நிகழ்வின் போது தஞ்சாவூர்காரர் இறந்து போன விஷயம் தெரிந்தது. அப்பாவிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். சொல்லிவிட்டு ‘இன்னமும் நான் தஞ்சாவூர்காரர்ன்னுதான் சொல்லுறேன்’ என்றார். அவரை யாரும் சொட்டைத் தலை என்று சொல்வதில்லை. ஆனால் திருமணத்தில் ஒரு சிறுவன் மகியிடம் ‘வேஷ்டி கட்டிட்டு இருக்கிற சொட்டை அங்கிள்தானே உங்கப்பா’ என்று  கேட்டானாம். 

இதுவரைக்கும் முப்பது தடவையாவது மகி என்னிடம் சொல்லிக் காட்டிவிட்டான்.

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இதுவரைக்கும் முப்பது தடவையாவது மகி என்னிடம் சொல்லிக் காட்டிவிட்டான்.//
விடுங்க மணி. இதுக்கெல்லாம் மிஸ்டு கால் குடுத்து இன்னொரு தடவ மொதல்லேருந்தா ஆரம்பிக்க முடியும்.