Aug 25, 2015

மீன் குஞ்சு

தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்து மாமாங்கம் ஆகிவிட்டது. ஷோபனா ரவியும், ஃபாத்திமா பாபுவும், சந்தியா ராஜகோபாலும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் பார்த்தது. ஆண்களின் பெயரை விட்டுவிட்டால் விவகாரம் ஆகிவிடும் என்பதால் வரதராஜனையும் சேர்த்துக் கொள்ளலாம். கோப்பெருந்தேவி போன்றவர்கள் வந்த போது பார்வை சன் டிவி பக்கம் நகர்ந்துவிட்டது. இப்பொழுதும் தூர்தர்ஷனில் செய்தி பார்க்கும் ஆட்கள் இருக்கிறார்கள். தூர்தர்ஷன்காரர்களும் அலட்டல் இல்லாமல் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அருள்மொழி என்ற செய்தி வாசிப்பாளர் செய்தி வாசிக்கும் தொனியிலேயே ‘வணக்கம்’ என்று ஃபோனில் அழைத்து பேசிய போதுதான் தெரியும் அவரும் தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளர் என்று.

அருள்மொழி நீச்சல் வீராங்கனை. திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு நீச்சல் பயிற்சிக்குப் பிறகு இப்பொழுது தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கிறார். அவர் நரேந்திரனைப் பற்றிச் சொல்வதற்காக அழைத்திருந்தார். நரேந்திரன் மீனவக் குடும்பத்தில் பிறந்தவர். திருவல்லிக்கேணியருகில் மீனவக் குப்பத்தில் வசிக்கிறார்கள். அப்பா கடலில் மீன் பிடிக்கிறார். சொந்தப்படகு எதுவுமில்லை. மீன் பிடிக்கச் சென்று கூலி வாங்கிக் கொள்கிறார்.  

மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா என்ன? நரேந்திரன் நீச்சலில் கில்லாடி. 

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் நரேந்திரனும் ஒரு போட்டியாளர். டிரயத்லானில் கலந்து கொண்டிருக்கிறார். ஒன்றரை கிலோ மீட்டர் நீச்சல், நாற்பது கிலோமீட்டர் சைக்கிள் மற்றும் பத்து கிலோ மீட்டர் ஓட்டம் என மூன்று திறமைகளைக் காட்ட வேண்டும். நரேந்திரனுக்கு நீச்சல் பிரச்சினையில்லை- தூள் கிளப்பியிருக்கிறார். ஒன்றரைக் கிலோமீட்டரை 27 நிமிடங்களில் கடந்திருக்கிறார். அதில் அவர்தான் முதலிடம். ஆனால் சைக்கிள் காலை வாரிவிட்டிருக்கிறது. போதிய பயிற்சி இல்லை என்பதுதான் காரணம். இத்தகைய போட்டிகளுக்கென பயிற்சி செய்வதற்காக பிரத்யேகமான மிதிவண்டிகள் இருக்கின்றனவாம். ஆனால் விலை அதிகம்.

‘பயிற்சி செய்வதற்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர முடியுமா?’ என்பதைக் கேட்பதற்காகத்தான் அருள்மொழி அழைத்திருந்தார். தேசிய விளையாட்டுப் போட்டியில்தான் நரேந்திரனை அருள்மொழி சந்தித்திருக்கிறார். சைக்கிளின் விலை கிட்டத்தட்ட லட்ச ரூபாய் ஆகும் போலிருக்கிறது. உடனடியாக எந்த பதிலையும் சொல்லவில்லை. அருள்மொழியின் நண்பர்கள் வழியாக பதினைந்தாயிரம் திரட்டியிருக்கிறார்கள். சில அமைப்புகளிடமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பலன் இல்லை போலிருக்கிறது. இன்னும் எப்படியும் எண்பதாயிரம் ரூபாய் வரைக்கும் தேவைப்படுகிறது.

நரேந்திரனிடம் பேசிய போது அவர் நீச்சல் குளத்தில் இருந்தார். வெகு அமைதியாக பேசினார். சென்னையில் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை அலசிய போது 52 பேர் கலந்து கொண்ட போட்டியில் நரேந்திரன் பதினாறாவதாக இருந்தார். அவருக்கு இருபது வயதாகிறது. வாய்ப்பும் ஊக்கமும் இருப்பின் அவரால் உயரங்களைத் தொட முடியும் எனத் தோன்றுகிறது. 

அருள்மொழியிடம் மிதிவண்டிகளின் விலைப்பட்டியலை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறேன். நிசப்தம் அறக்கட்டளை வழியாக கல்வி மற்றும் மருத்துவ ரீதியிலான உதவிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்றாலும் இது போன்ற சில விதிவிலக்குகளுக்கு உதவலாம் என்று தோன்றுகிறது. 

நரேந்திரனின் குடும்பப் பின்னணி உள்ளிட்ட காரணங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த உதவியைச் செய்யலாம். இன்னமும் தொகை குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. அவருடைய வங்கிக் கணக்கைக் கொடுத்திருந்தார்கள். அப்படி வேண்டாம். எந்த நிறுவனத்திடம் மிதி வண்டி வாங்குகிறார்களோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக பணத்தைக் கட்டிவிடலாம். மீனவக் குடும்பத்திலிருந்து ஒரு மாணவர் தேசிய விளையாட்டுப் போட்டி அளவிற்குச் சென்றிருக்கிறார். அது அவருடைய சொந்த முயற்சி. நாம் உதவினால் அவர் வென்றுவிடக் கூடும். அது நம்முடைய முயற்சி.

நரேந்திரனுக்கு உதவுவதாக இருந்தாலும் சரி, இந்த உதவி குறித்தான எந்தவிதமான கருத்துக்கள் இருந்தாலும் சரி - vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளவும். 

இன்றைய மற்றொரு பதிவு: வெட்டுக் குத்து

1 எதிர் சப்தங்கள்: