Aug 18, 2015

கொலை

ஒரு கொலை நடக்கும். அந்தக் கொலையை யார் செய்திருப்பார்கள் என்று கண்டுபிடிப்பதற்காக யாராவது கிளம்புவார்கள். எவ்வளவு கதாபாத்திரங்கள் உள்ளே வர முடியுமோ அவ்வளவு கதாபாத்திரங்கள் உள்ளே வந்து போவார்கள். ‘இவனா இருக்குமா?’ ‘அவளா இருக்குமா?’ என்று ஒவ்வொருவரையும் சந்தேகப்படுவோம். கடைசியில் சம்பந்தமேயில்லாத ஒரு ஆள்தான் அந்தக் காரியத்தைச் செய்திருப்பான் என்று கதை முடியும். 

இதுவரை வெளியான பெரும்பாலான க்ரைம் நாவல்கள் அல்லது திரைக்கதைகள் இப்படித்தான் அமைந்திருக்கின்றன. இதை எவ்வளவு சுவாரஸியமாகக் காட்டுகிறார்கள் என்பதில்தான் அந்தக் குறிப்பிட்ட படைப்பு வெற்றியடைகிறது. சொதப்பும் போது பார்வையாளர்கள் தூக்கி வீசிவிடுகிறார்கள். 2014 ஆம் ஆண்டு வெளியான மார்ஷ்லேண்ட்(Marshland) முதல் ரகம். வெற்றியடைந்த படம். அதனால் சுவாரஸியமான படம் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.1980 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயினில் இரட்டைக் கொலை நடக்கிறது. கொல்லப்பட்டவர்கள் இள வயது சகோதரிகள். மிகக் குரூரமாக சித்ரவதை செய்யப்பட்டும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டும் பிணமாக நீர் நிலைகளில் வீசப்பட்டுக் கிடக்கிறார்கள். கொலையின் மூலகர்த்தாக்களைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையிலிருந்து இருவர் களமிறங்குகிறார்கள். துப்பறிதல் ஆரம்பமாகிறது. படம் நெடுகவும் ஒவ்வொரு ஆளாக விசாரணை வட்டத்துக்குள் கொண்டு வருகிறார்கள். 

கதையின் பின்னணனியில் 1980களில் ஸ்பெயினில் மலிந்து கிடந்த ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றை இழையோடச் செய்திருக்கிறார்கள். அது தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறுதான். 1939ல் தொடங்கி 1975 வரை முப்பத்தைந்து ஆண்டுகள் ஸ்பெயினை ஒரே சர்வாதிகாரிதான் ஆட்சி செய்தார் என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாத விஷயம். அந்த சர்வாதிகாரியின் பெயர் ஃப்ராங்கோ. ராணுவத்தில் பணியாற்றியவர். அடிப்படைவாதி என்பதால் ஆரம்பத்தில் ஹிட்லரின் ஜெர்மனியாலும் முசோலினியின் இத்தாலியாலும் ஆதரிக்கப்பட்டவர். உள்நாட்டில் பெரும் கலவரம் தொடங்கியது. கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்டவர்கள் ஃப்ராங்கோவுக்கு எதிராக போராடினார்கள். கடைசியில் ஃப்ராங்கோதான் வென்றார். அதன் பிறகு அவர் இறக்கும் வரை யாராலும் அசைக்கவே முடியவில்லை. 

ஃப்ராங்கோவை அசைக்க முடியாததற்கு ஒரு முக்கியமான காரணமிருக்கிறது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட்களை எதிர்த்த மிக முக்கியமான தலைவராக ஃப்ராங்கோ இருந்தார். முதலாளித்துவ அமெரிக்காவுக்கும் கம்யூனிஸ ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்து வந்த காலம் அது. ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்கிற தத்துவத்தின்படி அமெரிக்கா ஃப்ராங்கோவை ஆதரிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளையை யாரால் சீண்ட முடியும்? அதனால் ஃப்ராங்கோ ராஜாவாகவே வலம் வந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் இரண்டிலிருந்து நான்கு லட்சம் மக்களாவது கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்கிறார்கள். மிக மோசமான சர்வாதிகாரிதான் என்றாலும் அமெரிக்கா பின்னணியில் இருந்ததாலோ என்னவோ அவரைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் உலக ஊடகத்தில் வெளிச்சமாக்கப்படவேயில்லை.

1975ல் ஃப்ராங்கோ இறந்த பிறகும் கூட ஸ்பெயினில் தொழிலாளர்களுக்கான ஊதியம் மிகக் குறைவாக இருந்தது. 1980 ஆம் ஆண்டு மக்களாட்சி வ்வேலை கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன. நல்ல வேலை, நல்ல சம்பளம் உள்ளிட்டவற்றைத் தேடும் பெண்களை கொலைகாரன் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதுதான் மார்ஷ்லேண்ட் படத்தின் பின்னணி. வெறும் கிரைம் த்ரில்லராகவே இந்தப் படத்தை ரசிக்க முடியும் என்றாலும் இந்த வரலாற்று பின்னணியைத் தெரிந்து கொண்டு பார்க்கும் போது வசனங்கள் மற்றும் கதை நகர்வின் வேறு பரிமாணங்கள் நமக்கு புரியும்.

உதாரணமாக இரண்டு விசாரணை அதிகாரிகளில் ஒருவர் தான் சந்தேகிக்கப்படும் நபரை அடிப்பார். அதைத் தடுக்கும் இன்னொரு விசாரணை அதிகாரி ‘முன்ன மாதிரி இல்லை’ என்பார். அவர் முன்பு மாதிரி என்று குறிப்பிடுவது ஃப்ராங்கோவின் சர்வாதிகார ஆட்சிக்காலத்தை. அந்தக் காலமாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் அடித்து உதைக்கலாம் என்ற அர்த்தத்தில்- இப்படி படம் முழுக்கவும் நிறையக் காட்சிகளையும் வசனங்களையும் சுட்டிக் காட்ட முடியும். 

இறந்து போன பெண்களின் பெற்றோர்கள், அவர்களுடைய காதலன், அவனுடைய இன்னொரு காதலி, வீட்டை வாடகைக்கு விடப்படும் பெண், இந்தச் செய்திகளைச் சேகரிக்க முயலும் பத்திரிக்கையாளர் என்று நிறைய பாத்திரங்கள் இருந்தாலும் த்ரில்லர் கதைகளில் காணப்படும் அதீதமான பில்ட் அப்புகள் இல்லை என்பதே இந்தப் படத்தின் மிக முக்கியமான பலம். கதை சொல்லும் நேர்த்தி, நடிகர்களின் அலட்டல் இல்லாத நடிப்பு உள்ளிட்டவை ஸ்பெயினின் முக்கியமான திரைப்படங்கள் வரிசயில் மார்ஷ்லேண்டைச் சேர்த்துவிடும் என நம்பலாம். அலட்டல் இல்லாத நடிப்பு என்று குறிப்பிடுவது துப்பறியும் அதிகாரிகளின் நடிப்பை. நாயக பிம்பம் எதுவுமில்லாத மிகையற்ற நடிப்பு. படம் முழுக்கவும் அவர்களின் முகம் வந்து கொண்டேயிருந்தாலும் சலிப்புத் தட்டுவதில்லை. விசாரணை அதிகாரிகளில் மூத்தவர் ப்ராங்கோவின் ஆட்சிக்காலத்தில் ரகசிய போலீஸாக இருந்தவர். ஒரு காலத்தில் சித்ரவதைகளைச் செய்தவர். விசாரணை நடத்தும் போது கை நீட்டத் தயங்காதவர். முரட்டு ஆள். இன்னொரு அதிகாரி இளைஞர். ஸ்பெயினில் துளிர்விட்டிருக்கும் ஜனநாயகத்தின் ஆதரவாளர். இவர்கள் இரண்டு பேருக்குமான முரண்களை எந்தத் துருத்தலும் இல்லாமல் கதையோடு இணைத்திருக்கிறார்கள். 

படத்தின் கதை, வசனம் என்பதெல்லாம் ஒரு பக்கம் என்றால் படத்தின் ஒளிப்பதிவும் இசையும் பிரமாதப்படுத்தியிருக்கின்றன. அதிலும் ஒளிப்பதிவு அற்புதம். மங்கிய வெளிச்சம், ஏரியல் ஷாட் என்று சொல்லப்படுகிற உயரத்திலிருந்து காட்டப்படும் காட்சிகள் என்பன இந்தப்படத்தை மிகச் சிறந்த படைப்பாக மாற்றிவிடுகின்றன. இரைச்சல் இல்லாத இசையைக் கோர்த்து காட்சிகளை இன்னமும் வலுவாக்கியிருக்கிறார்கள். 

மார்ஷ்லேண்ட் படத்தை க்ரைம் த்ரில்லர் வரிசை உலகப் படங்களின் பட்டியலில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். த்ரில்லர் கதைகளில் ஆர்வமிருப்பவர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம். சினிமாவைக் கற்றுக் கொள்ள விரும்புவர்கள் தவிர்க்கக் கூடாத படம்.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//வீட்டை வாடகைக்கு விடப்படும் பெண்//

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு விமர்சனம். படம் நன்றாக இருக்கும் போல தெரிகின்றது...பார்க்கத் தூண்டும் விமர்சனம்..பகிர்வுக்கு மிக்க நன்றி

Krishna said...

நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேன் படத்த பத்தியும் எழுதுங்க பாஸ்

Rajan said...

The Green Mile பாருங்கள்.
கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்!

ஆர். அபிலாஷ் said...

நன்றாய எழுதி உள்ளீர்கள் மணி :)