Aug 13, 2015

அற்புதம்

சார்லஸ் என்றவொரு மனிதர் இருக்கிறார். எந்த நாட்டில் வசிக்கிறார் என்று சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன். இன்று காலையில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘அறுபதாயிரம் அனுப்பியிருக்கிறேன்’. அவ்வளவுதான் மின்னஞ்சல். இது முதன்முறை இல்லை. ஒரு முறை நாற்பதாயிரம் ரூபாய் அனுப்பியிருந்தார். அடுத்ததாக எழுபதாயிரம். அதன் பிறகு ஒரு லட்சம். இப்பொழுது இந்தத் தொகை. ஒன்றிரண்டு தொகைகளை நான் மறந்தாலும் மறந்திருக்கக் கூடும். என்னுடைய நினைவிலிருக்கும் தொகை மட்டுமே கூட மூன்று லட்சத்தைத் தொடுகிறது. எட்டு மாதத்துக்குள் மூன்று லட்சம் ரூபாய்.

ஆச்சரியமாக இருக்கிறது. 

எவ்வளவுதான் சம்பாதிக்கட்டும்- கொடுப்பதற்கு மனம் வேண்டும் அல்லவா? சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாயை எடுப்பதற்குள் எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது. நூறு ரூபாய் வேண்டாம். பெட்ரோல் பங்க்கில் காற்றடிக்கும் பையனுக்கு பெங்களூரில் டிப்ஸ் கொடுப்பார்கள். இரண்டு ரூபாய்தான் கொடுப்பேன். சட்டைப்பையில் இரண்டு ரூபாய் இல்லாமல் ஐந்து ரூபாயாக இருந்தால் கொடுக்கமாட்டேன். முகத்தைக் கூட பார்க்காமல் வண்டியைக் கிளப்பிவிட்டு வந்துவிடுவேன். அப்பேர்ப்பட்ட எனக்கு இதெல்லாம் நெகிழ்ச்சியாகத்தானே இருக்கும்? இதுவரை நேரில் பார்த்ததில்லை; ஃபோனில் பேசியதாகக் கூட ஞாபகமில்லை. அவரிடமிருந்து வந்திருக்கும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை மொத்தமே நான்கைந்துக்குள்தான் இருக்கும். 

ஏதோவொரு நம்பிக்கையினால்தானே இதெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது? 

சார்லஸ் மட்டும் நன்கொடையாளர் இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாதாமாதம் பணத்தை அனுப்பிவிட்டு அது குறித்து எந்தத் தகவலும் அனுப்பாதவர்கள் ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களின் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கை கவனித்துப் பார்த்தால் தெரியும். சில பெயர்கள் திரும்பத் திரும்ப வரும். அவர்களில் பெரும்பாலானவர்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பு கொண்டதில்லை. ஆனாலும் அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

இதெல்லாம்தான் நல்ல காரியங்களைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

இன்று கூட அறக்கட்டளையின் இரண்டு காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று மதன்குமார் என்கிற தலித் மாணவனது கல்லூரிக் கட்டணம். நாமக்கல்லைச் சார்ந்த மாணவன். அப்பா தினக்கூலி. ‘என்ன வேலைக்கு போவார்?’ என்றால் ‘கிடைக்கிற வேலைக்கு போவார்’ என்கிறான். மதன் இப்பொழுது டான்செட் தேர்வெழுதி கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.ஈ படிப்பில் சேரவிருக்கிறான். வங்கிக் கடன் கிடைக்கவில்லை. ‘முடிஞ்சா பாருங்க சார்...இல்லைன்னா ஏதாச்சும் வேலை தேடுகிறேன்’ என்றான். நல்ல கல்லூரி. நல்ல படிப்பு. ‘கல்லூரிக்கான பணத்தை அறக்கட்டளையிலிருந்து அனுப்பி வைத்துவிடலாம். விடுதிச் செலவை நீங்கள் சமாளித்துக் கொள்ளுங்கள்’ என்று பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு மாணவன் சுரேஷ் கண்ணன். உடலில் சிறு ஊனம் இருக்கிறது. ஒரே மகன். அம்மாவையும் மகனையும் விட்டுவிட்டு அப்பா வேறு யாருடனோ சென்றுவிட்டார். அம்மாதான் கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். ‘பெரிய படிப்பெல்லாம் படிக்க வசதியில்லை. ஐடிஐ படிச்சா எப்படியாவது வேலைக்கு போய்விடுவேன்’ என்றான். புஞ்சை புளியம்பட்டியில் இருக்கும் விழுதுகள் என்ற தன்னார்வ அமைப்பினர்தான் சுரேஷை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ஒரு வருடத்திற்கான தொகை பனிரெண்டாயிரம் ரூபாய். பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மீதம் இரண்டாயிரத்தை அவர்கள் அட்வான்ஸாக கல்லூரியில் கட்டி வைத்திருக்கிறார்கள்.

சார்லஸைப் பற்றியும் பிற நன்கொடையாளர்களைப் பற்றியும் எழுதுவதற்கு குறிப்பிட்ட காரணம் என்று எதுவுமில்லை. அறக்கட்டளை என்பதன் மொத்த பலமும் இத்தகையவர்கள்தான். இந்தச் செயல்பாடுகளின் அத்தனை கிரெடிட்டும் இத்தகையவர்களுக்குத்தான் சேர வேண்டும் என மனப்பூர்வமாக விரும்புகிறேன். முகத்தை வெளியில் காட்ட விரும்பாத இத்தகைய நல்லவர்களைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரிய வேண்டும். நல்ல காரியங்களைச் செய்யத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறோம். ஆனால் கால்களை நிலத்தில் வைப்பதில்லை. துணிந்து வைத்துவிட்டால் போதும். தாங்கிப்பிடித்துக் கொள்ள ஆயிரமாயிரம் பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும். 

உலகம் முழுக்கவும் சுயநலமிகளால் நிரம்பியிருக்கிறது என்று யாராவது பேசும் போது இத்தகைய மனிதர்களைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த உலகம் நல்லவர்களாலும் ஆகியிருக்கிறது. அடுத்தவர்களைப் பற்றியும் யோசிக்கும் இவர்கள்தான் பாஸிட்டிவ் எனர்ஜியைப் பரப்புகிறார்கள். சகல இடங்களிலும் நிரம்பியிருக்கும் பொறாமை, வன்மம், எரிச்சல், கோபம் என்கிற அத்தனை எதிர்மறையான விஷயங்களையும் தாண்டி இந்த உலகத்தில் வெளிச்சம் இருக்கிறது என்பதற்கு இத்தகைய மனிதர்கள்தான் உதாரணம். 

உலகின் தீமைகளையும் தீயவர்களையும் பற்றி யாரோ பேசிவிட்டுப் போகட்டும். ஆனால் உலகம் அற்புதமானது; மனிதர்கள் உன்னதமானவர்கள் என்று மனப்பூர்வமாக நம்புவோம். இந்த வாழ்க்கையை அழகுபடுத்த வண்ணமயமான அந்த நம்பிக்கை மிக அவசியமானது. 

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

மீண்டும் மழை ஞாபகம்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

பிறர் நலனுக்காக இய்றகை உங்களை தேர்வு செய்து இருக்கிறது சார்.

”தளிர் சுரேஷ்” said...

உங்களின் அறக்கட்டளைக்கு என்னால் இயன்ற சிறுதொகை அனுப்ப நினைத்தும் தள்ளிக்கொண்டே போகிறது! சார்லஸ் போன்றவர்களுடன் என்னை ஒப்பிடுகையில் வெட்கமாக இருக்கிறது.

Vinoth Subramanian said...

Great man Mr. Charles!!!

ADMIN said...

//உலகம் முழுக்கவும் சுயநலமிகளால் நிரம்பியிருக்கிறது என்று யாராவது பேசும் போது இத்தகைய மனிதர்களைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த உலகம் நல்லவர்களாலும் ஆகியிருக்கிறது. அடுத்தவர்களைப் பற்றியும் யோசிக்கும் இவர்கள்தான் பாஸிட்டிவ் எனர்ஜியைப் பரப்புகிறார்கள். சகல இடங்களிலும் நிரம்பியிருக்கும் பொறாமை, வன்மம், எரிச்சல், கோபம் என்கிற அத்தனை எதிர்மறையான விஷயங்களையும் தாண்டி இந்த உலகத்தில் வெளிச்சம் இருக்கிறது என்பதற்கு இத்தகைய மனிதர்கள்தான் உதாரணம்.
//

உண்மை.