Jul 14, 2015

நீ என்ன சாதி?

ஒரு சாதியை விமர்சிக்கும் போது அந்தச் சாதி என்னவிதமான துன்பங்களை அனுபவிக்கிறது என்று புரிந்து கொண்டு எழுத வேண்டும். கொங்கு வட்டாரத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கவுண்டர்களாகத்தான் இருக்க முடியும். அது  தெரியுமா? எங்களுக்கென்று சாதிச் சங்கங்கள் இல்லையென்றால் தலித்துகள் என்று நீங்கள் தூக்கிப் பிடிக்கிறவர்கள் எங்கள் தலை மீதுதான் ஏறுவார்கள். ‘கவுண்டனை வெட்டுவோம்; கவுண்டச்சியை கட்டுவோம்’ என்கிறவர்களின் சத்தம் உங்கள் காதுகளில் விழாதது ஆச்சரியம். ஆனால் கவுண்டர்களின் சாதி வெறி உங்களுக்குத் தெரிகிறது. உங்களின் சாதியை வெளிப்படையாக அறிவித்துவிட்டு சாதியை விமர்சியுங்கள். உங்களின் நோக்கம் அப்பொழுது தெளிவாகும்.

குமரன் பழனிசாமி.

நண்பருக்கு வணக்கம்,

விமர்சனத்தை வைப்பதற்கு முன்பாக உனது சாதியைச் சொல்லிவிட்டு விமர்சனத்தைச் செய் என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.  

ஒரு சாதிய இயக்கத்தை விமர்சிப்பதால் இன்னொரு சாதிய இயக்கத்தை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அத்தனை சாதிய இயக்கங்களின் மீதும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது- பல நூறு ஆண்டுகளாக கொங்கு நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொங்கு வேளாளர் போன்ற ஆதிக்க சாதிக்கே தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சாதிய இயக்கங்கள் அவசியமாக இருக்கின்றன என கொடி உயர்த்தும் போது இத்தனை ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த தலித்துகள் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு அவர்களுக்கும் சாதிய இயக்கங்களின் தேவை இருக்கிறது என்பதனை எப்படி மறுக்க முடியும்?

தலித்திய இயக்கங்களுக்கான தேவை அன்றும் இருந்தது. இன்னமும் இருக்கிறது. அந்தத் தேவை சமூக மற்றும் அரசியல் பூர்வமானது. கிராமப்புற தலித்துகள் தலை நிமிர்வதற்கான முதல் அடியை தலித்திய இயக்கத்தினர் எடுத்து வைத்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பற்றி பொதுவெளியில் பேசினார்கள். ஆனால் அரசியல் ஆதாயங்களும், கட்டப்பஞ்சாயத்து வழியாகக் கிடைத்த பெரும் பணமும், தாம் மட்டுமே தலித்துகளின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் அவர்களின் திசையை மாற்றத் தொடங்கின. அடிப்படையான பிரச்சினைகளைக் களைவதை விட்டுவிட்டு மிரட்டல் அரசியலைத் தொடங்கினார்கள். வாக்கு அரசியலின் பக்கமாக நகர்ந்தார்கள். ஆதிக்க சக்தியை எதிர்க்க வேண்டும் என்று களமிறங்கியவர்கள் தங்களை ஆதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ளும் போக்கை கையில் எடுத்தார்கள். அதுதான் துரதிர்ஷ்டம்.

தலித்திய இயக்கங்கள் ஒரு பக்கம் திசை மாறின என்றால் இன்னொரு பக்கம் ஆதிக்க சாதியினர் பதறத் தொடங்கினார்கள். ‘அவர்களிடமிருந்து எங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே சாதிய இயக்கங்களை ஆதரிக்கிறோம்’ என்பதில் முழுமையான உண்மையில்லை. இதுவரை தாம் செலுத்தி வந்த ஆதிக்கமும் அதிகாரமும் தங்கள் கண்களின் முன்னால் சிதைவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நேற்று வரை ‘சாமி சாமி’ என்று அழைத்தவன் இன்று பைக்கில் செல்கிறான். பேருந்து நிறுத்தத்தில் நம் முன்னால் சிகரெட் பிடிக்கிறான். டீக்கடையில் சரிக்கு சரியாக அமர்கிறான் என்கிற ஆண்டான் - அடிமை மனநிலை உருவாக்கும் பதற்றம்தான் முக்கியமான காரணம். அந்த பதற்றம் ஆழ்மனதில் துடிக்கிறது. கோகுல்ராஜ் தண்டவாளத்தில் கிடப்பதை நியாயப்படுத்துவதும்; ‘அவர்கள் மட்டும் சரியா?’ என்று கேட்பதும் அந்தப் பதற்றத்தின் நீட்சிதான்.

இதனால்தான் தங்களுக்கென்று சாதிய சங்கங்கள் தேவை என்று வலுவாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை வைத்துத்தான் சாதித் தலைவர்கள் கொழுத்த லாபம் சம்பாதிக்கிறார்கள். இந்தவொரு  கட்டமைப்பைத் தவறாக புரிந்து கொண்ட இளந்தாரிகள் தங்களின் மூதாதையர்கள் தாழ்த்தப்பட்டவர்களிடம் செலுத்திய ஆதிக்கத்தை தாங்களும் செலுத்த வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்காக தங்களை சாதிய உணர்வுடன் வலுவாக பிணைத்துக் கொள்கிறார்கள். பிணைப்பும் துவேஷமும்தான் பெருகுமே தவிர இனி வரும் காலத்தில் சாதிய ரீதியிலான அடக்குமுறைகள் சாத்தியமேயில்லை என்ற உண்மையை அவர்களின் மனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இயலாமையில் தங்களை ஆண்ட வம்சம் என்று பறை சாற்றிக் கொள்கிறார்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது தங்களின் வன்மத்தைக் காட்டுகிறார்கள்.

பண்பாட்டை மீட்பது என்பதற்கும் தங்களின் அநீதி நிறைந்த பழைய அதிகாரத்தை மீட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இங்கு நடந்து கொண்டிருப்பது பண்பாட்டு மீட்டுருவாக்கம் இல்லை. சாதிய அடக்குமுறை மீட்டுருவாக்கத்திற்கான முயற்சி. இது தவறான போக்கு மட்டுமில்லை மிக அபாயகரமான போக்கும் கூட. அவர்கள் கத்தியை எடுக்கிறார்கள் அதனால் நானும் கத்தியை எடுக்கிறேன் என்று இவர்களும், அவர்கள்தான் அரிவாளைத் தூக்கினார்கள் அதனால் நானும் தூக்குகிறேன் என்று இவர்களும் துள்ளுவது எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த குருட்டாம்போக்கிலான வேகம் ஆபத்து நிறைந்தது. யாருக்குமே பலனளிக்காத வன்ம விளையாட்டு இது. மனிதத்தை புதைத்துவிட்டு வெறும் சாதிய ஆதிக்கத்தைத் குறிக்கோளாகக் கொண்டும் நகர்ந்து கொண்டிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த போக்கை கடுமையாக விமர்சிக்க அந்தந்த சாதிகளுக்குள்ளிலிருந்தே குரல்கள் எழ வேண்டும். அதைத் துளியாவது என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சொல்லிவிட்டேன்.

என்னுடைய நோக்கம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

தொடர்புடைய பதிவு: கொங்கும் சாதியும்

18 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

I disagree with your opinion Mani. I have been following your blog for the fast two years and read all of your blogs. I like all your posts, opinion, comments and thoughts, except the caste related posts.
Your caste related posts are targeting Gounder caste only. Can you point me one or few posts which talk about other caste? What is your opinion on Dharmapuri caste related incident between Dalit and "Vanniuar"?
If you watch carefully you can notice worst things happening each and every caste. I agree with some of points from Kumaran Palanisamy, especially "கவுண்டச்சியை கட்டுவோம்". This is happening in most of the Gounder living areas, I have seen incidents like this.
Since I am a follower of blog, my general suggestion is that please avoid any caste related posts. You can write so many posts without touching this subject. When you write about caste, whether it is good or bad the readers will take it personally if it points to their caste.
We can argue like everyone should come out of the caste mentality but it is a long way to go. But for this moment you can avoid the "caste" subject and bring smile into our face with other subjects.
Hope you can understand.
Thanks
Kumar Kannan.

Anonymous said...

ha ha ha, Now the reader is dictating what to write.

ஊரான் said...

உயர் சாதி மனப்பான்மையில் - வெறியில் உள்ளவர்களுக்கு ஒரு கோரிக்கை: சாதியைக்காட்டி காதலை எதிர்க்காதீர்கள். ஊர்க் கோவிலுக்குள் தீண்டப்படாதவர்களையும் அனுமதியுங்கள். தனிச்சுடுகாட்டை ஒழித்துவிட்டு பொது சுடுகாட்டை ஏற்படுத்துங்கள். வாடகைக்கு வீடு கேட்டு வரும் போது சாதியைக் கேட்காதீர்கள்.கோவில்களில் தீண்டப்படாதவர்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குங்கள். தீண்டப்படாதவர்கள் நல்ல உடை உடுத்தினால், பைக் -கார் வாங்கினால், புது வீடு கட்டினால், நகை அணிந்தால் பொறாமைப்படாதீர்கள். சக மனிதன் முன்னேறுகிறானே என மகிழ்ச்சியோடு வாழ்த்துங்கள். உங்களைப் போன்றே தீண்டப்படாதவர்களும் இடஒதுக்கீட்டின் மூலம் கல்லூரிகளில் சேர்ந்தாலோ, வேலையில் சேர்ந்தாலோ பொறாமைப்படாதீர்கள். நீங்கள் இடஒதுக்கீட்டின் மூலம் பலன் அடையும்போது தீண்டப்படாதவர்கள் பொறாமைப்படுவதில்லையே. மொத்தத்தில் தீண்டப்படாதவர்கள் மீதான உங்களது தீண்டாமையை மனதிலிருந்து தூக்கி எறியுங்கள். அவனை சக மனிதனாக நடத்துங்கள். வன் கொடுமை உள்ளிட்ட தீண்டத்தகாதவர்களுக்கான எந்தச்சட்டமும் தேவைப்படாது. நீங்களும் "அஞ்சி அஞ்சி" வாழத் தேவையில்லை. செய்வீர்களா?

Anonymous said...

I am with you Manikandan. I have seen these things several times in my native place. Whatever you have said is 100% true. Youngsters in rural and small towns are getting drowned in Caste. Not sure where this is going to go.

Kumar Kannan - Manikandan may have quoted some recent incidents. But those are true incidents.

Bala

சேக்காளி said...

எந்த ஒரு மூலவரை விமர்சித்தாலும் அந்த மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பார்கள்.ஆனால் அதெற்கெல்லாம் காரணமான கடவுளை விமர்சித்தால்????????????????
அதே போன்று சாதி பெயர்களை எடுத்து விட்டு மேல்சாதி கீழ்சாதி என்று குறிப்பிடுங்கள்.
"பீ ய மிதிச்சிட்டேன்" என்பவனை கீழ்த்தரமாகவும், "ஆய் யை மிதித்து விட்டேன்" என்பவனை கௌரவமாகவும் பார்க்கும் சமூகத்தில் வாழ்கிறோம்.அசிங்கத்தை மிதித்த காரணத்தினால் யாரும் காலை வெட்ட வில்லையே என யோசிக்க மாட்டோம் நாம். நாய்களல்ல சிங்கங்கள் என்றால் பெருமை கொள்ளும் மக்கள்("மக்கள்"அடிக்கோடிடப்படுகிறது) வாழும் சமூகம் நம்முடையது.வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும்.

Selva said...

"கவுண்டச்சியை கட்டுவோம்" - அதென்ன அவ்வளவு சுலபமாக கவுண்டச்சி பெண்ணை மயக்கி திருமணம் செய்ய முடியுமா? பெண்கள் அவ்வளவு எளிதாக விழுந்து விடுவார்களா என்ன? மற்றவர்களை உசுப்பேற்ற என்ன வேண்டுமானாலும் பேசலாம். நடை முறையில் என்ன நடக்கிறது? இதுவரை பணத்துக்காக, உடல் சுகத்துக்காக பெண்களை ஏமாற்றியதுதான் நடந்துள்ளது. இந்த காரணங்கள் சாதிக்குள்ளும் நடக்கிறதே .

Anonymous said...

Mani Anna,

It's important you write about caste. We're in a period of turbulence of caste based beliefs. A modern/educated mind is in dilemma whether to believe caste based behaviour when they form perspectives about people.

There is certain proud about our culture, our forefathers, our language and richness of our nation in soft aspects of life. On the other hand, we have the history of caste based oppression as a major shame on ourselves.

It's important to retain our pride of our identity without caste. I see you and identify with you as a person who understands and respects our values but not stupid superiority or inferiority beliefs based on caste. Please never express your caste. Please ignore people who see everyone through caste filter.

As we're in turbulent state, these reactions are common. On this issue, your statement of 'ஆதிக்க சக்தியை எதிர்க்க வேண்டும் என்று களமிறங்கியவர்கள் தங்களை ஆதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ளும் போக்கை கையில் எடுத்தார்கள். அதுதான் துரதிர்ஷ்டம்' is the similar opinion many share.


All the best and continue to share your thoughts. :)

Anonymous said...

I am in complete agreement with you Manikandan. I am from the same region and seen the changes. In the eighties and early nineties, though people were proud about their caste, they were not explicit in expressing. But today we see a dangerous trend.

Bala Vaidyanathan

chisa said...

Mani.. you well said, still people are not matured and matured people do not want to talk about it. I am not saying you are a scapegoat for the issue, that is your choice, I 100% agree with your article.

Saravanan Sekar said...

அந்த தாடி கார தாத்தா வோட தடி சுழன்று நாட்கள் ஆகிவிட்டதால், ஆண்ட வம்சம், நாங்க அப்பிடி இப்பிடி னு ஆட்டம் போடற அடி வருடிகள் கூட்டம் அதிகம் ஆகி விட்டது. இது எல்லா சாதிக்கும் பொருந்தும்... பணமும் அதிகாரமும் அதிகம் இருக்கிற சாதிக்கு இந்த மாதிரி கூட்டம் அதிகம் இருப்பது ஒன்றும் வியப்பில்லையே ... சுதந்திர போரட்ட வீரர்கள் தியாகிகளை கூட சாதி அடையாளத் தோடு அணுகுவது என இவர்களது டெக்னிக் குகள் ஏராளம் ...

Anonymous said...

Its money mani sir, any caste is acceptable to all if he/she is positioned well and wealthy. The trick is wealth. Wealthy dalit dislike to call himself so.
we all are rouges in our inner self.

Packirisamy N said...

ஊரான் கருத்துக்கள் அருமை!

Anonymous said...

The first comment is so funny. He is saying that the writer should write only light matters which can give him pleasure. He seems so innocent and don’t know what he is saying. The writer did not write any dreams and not supporting one side, He clearly reflecting, what is going on in the society in terms of cast. "கவுண்டச்சியை கட்டுவோம்" how they insult their own women, are your women illiterate and cheap in such a way to go with any one leaving your cast and culture behind.

Anonymous said...

அந்தந்த சாதிகளுக்குள்ளிலிருந்தே குரல்கள் எழ வேண்டும். அதைத் துளியாவது என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சொல்லிவிட்டேன்.
நீங்கள் என்ன ஜாதி என்பதை இவ்வளவு சூட்சுமமாக சொல்ல ஒரு திறமை வேண்டும்.

Anonymous said...

மணி....நானும் உங்களைப் போல ஒரு கவுண்டன் தான்! நீங்க எழுதுவது மிகவும் சரிதான். நான் கவுண்டன் என்பதற்கு அடையாளம்....நான் ஓதாளர் குலத்தைச் சேர்ந்தவன்! சமீப காலங்களில் சாதி அடையாளம் என்பது ஒரு பெருமையாக ஆகிக் கொண்டுள்ளது. சாதியை எல்லோரும் தூக்கிப் பிடிப்பதால் நானும் பிடிக்கிறேன் என்கிறார்கள். நான் சாதி மறுப்பு செய்கிறேன்...எல்லாரும் செய்யுங்கள் பார்ப்போம்!

சேக்காளி said...

//நான் சாதி மறுப்பு செய்கிறேன்//
வாழ்த்துக்கள்.

Shankar said...

Dear Mr Mani,

You have now entered troubled waters. Do not react. only respond. No matter to which caste you belong, nobody has the right to question it.
You are intelligent, knowledgeable and more important good intentioned.When you speak your mind, there will be many who will get agitated. Moreso, when you speak facts about the the particular community. You hit the nail right on its head.A few decades back, the Brahmin community faced this flak. Now that community had moved farther, sans any association, to the next level by enhancing their studies and learning other crafts, and to some extent by migrating to other states, or even countries.If you notice there you will observe that from their conservative shell, they have moved to the other end of the spectrum. In most inter-caste marriages that is happening in major towns the girl is more often than not is from that community only. The tolerance has grown so far.The same has to be emulated by other communities which are now paranoid.
At the same time, we as members of the contemporary society, also have to bear the cross for our elders, who, knowingly or otherwise caused heartburn and difficulties to the downtrodden.
In time, which is a wonderful healer, the coming generations will grow out of it. That is if the politicians stop meddling with these matters.

Unknown said...

தமிழனின் சாதி வெறி என்று ஒழிகின்றதோ அன்று தமிழன் உண்மையில் இவ்வுலகில் தலை நிமர்ந்து வாழ்வான்... சாதி வெறி நீங்காவிடின் தமிழனின் அழிவுக்கு ஆணிவேர்...இன்று இந்துக்கள் மதமாறுவதற்கு காரணமே இந்த மனித நேயத்திற்கு எதிரான சாதி வெறியே...