Jun 4, 2015

பிகினி

சில வருடங்களுக்கு முன்பாக ஆஸ்டின் நகரத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐடிக்காரன் அமெரிக்கா சென்று வந்தால்தான் மரியாதை என்று நம்பிக் கொண்டிருந்ததால் அதிபயங்கரமான சந்தோஷத்தில் இருந்த காலம் அது. டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது. பதினைந்து நாட்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த மாதிரி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பகல் முழுவதும் உள்ளூர் ஆட்களோடு சுற்ற வேண்டும் என்பதும் இரவில் எங்கே செல்கிறேன், எப்பொழுது அறைக்குத் திரும்புகிறேன் என்பதெல்லாம் யாருக்குமே தெரியக் கூடாது என்பதும் என்னுடைய சதுரங்க வேட்டை விதிகளில் முக்கியமானவை. பக்கத்தில் இருப்பவனுக்குத் தெரியாமல் தகிடுதத்தங்களைச் செய்வதில்தான் அலாதி இன்பம் இருக்கிறது. இரவு நேர கேளிக்கை விடுதிகள், நள்ளிரவுக் குடி மனைகள், நடன விடுதிகள் என்று முடிந்த வரை சுற்றிவிடுவது வழக்கம். ஒரேயொரு கட்டுபாடுதான் - செலவு குறைவாகச் செய்ய வேண்டும். ஸ்டிரிப் க்ளப்புக்கு நுழைவுக்கட்டணமாக பத்து டாலர்கள்தான் வாங்கினார்கள். நம்மூர் கணக்குப்படி தோராயமாக ஐந்நூறு ரூபாய். இப்படி சமாளிக்கக் கூடிய அளவான தொகையாக இருக்க வேண்டும். பிறிதொரு சமயத்தில் உணவைக் குறைத்து செலவை சமன்படுத்திக் கொள்வேன். டிப்ஸ், பெப்ஸி, கோக் என்று எந்தச் செலவுமில்லாமல் வாயைத் திறந்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மார்க்கமாகத்தான் பார்ப்பார்கள். பார்த்துவிட்டுப் போகட்டும். இவர்களிடமெல்லாம் பந்தா காட்டி அவர்கள் வீட்டுப் பெண்ணையா திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்? கண்டு கொள்ளவே கூடாது. 

அப்படி ஆஸ்டின் நகரத்துக்குச் சென்றிருந்த சமயத்தில் அலுவலக நண்பர் வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் வட இந்தியர். அமெரிக்காவிலேயே பல வருடங்களாக இருக்கும் இந்தியக் குடும்பம். ஒரு நாள் மதிய உணவுக்காக வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். நான்கைந்து இந்தியர்களும் ஒன்றிரண்டு அமெரிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ‘இந்த மனுஷன் வீட்டுக்குச் செல்வதற்கு கார் வாடகை அழ வேண்டுமா’ என்று உள்ளுக்குள் வியர்த்துக் கொண்டிருந்தது- நல்லவேளையாக ஒரு அமெரிக்கர் ஹோட்டலுக்கு வந்து அழைத்துக் கொண்டார். பிரம்மாண்டமான  வீடு அது. பெரிய தோட்டத்தில் நடு நாயகமாக வீடு இருந்தது. சில நிமிடங்கள் மட்டும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். பிறகு வீட்டின் பின்புறமாக இருக்கும் நீச்சல் குளம் அருகில் அழைத்துச் சென்றுவிட்டார். அந்தச் சூழலே அவருடைய வாழ்க்கையின் சொகுசைக் காட்டியது. மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தார். மகன் வெளியூரில் இருப்பதாகச் சொன்னவர் மகளை தனது செல்போனில் அழைத்தார். அவளும் வெளியில் இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் வீட்டிற்குள்தான் இருந்திருக்கிறாள். ‘ஐம்பது பைசா செலவாகிவிடும்’ என்று மனைவிக்கு கூட மிஸ்டு கால் கொடுக்கும் எனக்கு இதெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இவர்தான் இரண்டு மூன்று முறை அழைக்கிறாரே தவிர அவள் வருவதாகவே தெரியவில்லை. அவருடைய மனைவி சென்றார். அப்பொழுதும் வரவில்லை. பிறகு இவரே சென்றார். சில நிமிடங்களில் வந்தவர் ‘அவள் வந்துவிடுவாள்’ என்று சொல்லிவிட்டு எங்களைச் சாப்பிட ஆரம்பிக்கச் சொன்னார். 

அவர் சொன்னது போலவே சில நிமிடங்களில் அந்தப் பெண் வந்தாள். முகத்தில் கடுகு பொரிந்து கொண்டிருந்தது. ஏதோ கடுமையாகத் திட்டியிருப்பார் போலிருக்கிறது. எல்லோருக்கும் ‘ஹாய்’ சொன்னவள் திரும்பிச் செல்ல முயன்றாள். இவர் விட்டிருக்கலாம். நம்முடைய கலாச்சாரத்தை காப்பதாக நினைத்து எல்லோருக்கும் உணவு பரிமாறச் சொன்னார். அவளுக்கு பயங்கரக் கடுப்பு. ‘போக வேண்டும்’ என்றாள். இவர் முறைக்கத் தொடங்கியிருந்தார். ‘என்னடா இது! நம்மை வைத்துக் கொண்டு அக்கப்போர் செய்கிறார்களே’ என்று நாங்களாகவே பரிமாறிக் கொள்ளத் தொடங்கிய போது அவள் அருகில் சென்று எதையோ கிசுகிசுத்தார். எதுவுமே சொல்லாமல் வீட்டிற்குள் சென்றவள் அடுத்த சில நிமிடங்களில் பிகினியில் வந்தாள். எனக்கு வாய் பிளந்துவிட்டது. குளிக்கப் போகிறாளாம். உண்மையில் குளிப்பது அவளுடைய நோக்கமில்லை. தன் தந்தைக்கு பாடம் கற்பிக்க விரும்புகிறாள். இந்தியாவிலிருந்து வருபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் என் முகத்தைப் பார்த்தாவது முடிவு செய்திருக்க வேண்டும்-   ‘இவன் எப்படியும் வெறித்தனமா பார்ப்பான்...அப்பன்காரன் கடுப்பாவன்’ - அவள் நினைத்தது போலவே என் பார்வை அலைமோதிக் கொண்டிருந்தது. அப்பனுக்காக வேறு எங்கேயாவது பார்ப்பதா அல்லது மகளைப் பார்ப்பதா என்று உள்ளுக்குள் ஒரே கலவரம். என்னைப் போலவேதான் உடன் வந்திருந்த இரண்டு ஆந்திராக்காரர்களும் யோசித்திருக்கக் கூடும். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். எதுவுமே தெரியாதது போல முகத்தை வைத்துக் கொள்ள அவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது. ‘எப்பொழுது சாப்பிட்டு முடிப்போம்’ என்று அவசர அவசரமாக சாப்பிட வேண்டியிருந்தது.

அவளுடைய அப்பாவுக்குத்தான் தர்மசங்கடம். அவ்வப்போது எங்களைப் பார்க்கிறார். சகஜமாக இருப்பது போலத் திணறுகிறார். அவரால் இந்திய வேரை விட்டுவிட முடியவில்லை. வீட்டிற்கு யாராவது வரும்போதாவது தன்னை முழுமையான இந்தியனாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார். வட இந்திய பாரம்பரிய உடையை அணிந்திருந்தார், நமஸ்தே சொல்லி வரவேற்றார். அதே போலவே விருந்தோம்பல், குடும்பம் என்று தன்னுடைய இந்தியத்தனமான அபிலாசைகளை வெளிக்காட்ட விரும்புகிறார். ஆனால் அந்தப் பெண் அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்தவள். அவளுக்கு அவளுடைய தேவைகளும் சந்தோஷங்களும்தான் முக்கியமானவையாக இருக்கின்றன. அதில் அப்பனே கூட குறுக்கே வந்தாலும் அவனை எப்படி மூக்கை அறுத்து காலி செய்ய முடியுமென திட்டமிட்டு நிறைவேற்றுகிறாள். அந்தச் சூழலே சிதைந்து போய்விட்டது. விருந்துக்கு வந்திருந்த அமெரிக்கர்கள் சகஜமாகத்தான் இருந்தார்கள். எங்களால்தான் இருக்க முடியவில்லை.

கிளம்பி வரும் போது இந்தியர்களுடன் ஒட்டிக் கொண்டேன். வழி நெடுகிலும் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு கலாச்சாரங்கள் மோதிக் கொள்கின்றன என்றார்கள். ‘இந்தியாவிலேயே கல்யாணம் செஞ்சு அங்கேயே குழந்தையை வளர்க்க வேண்டும்’ என்று ஆளாளுக்கு உறுதியெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் சொல்வது மிகச் சரி என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்தியாவும் அப்படியேவா இருக்கிறது? எவ்வளவு மாறிவிட்டது? 

சமீபத்தில் ஒரு விவகாரம். பெங்களூர் சம்பவம்தான். மகனுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்துவிட்டது. அப்பா ஐடியில் இருக்கிறார். பையன் கல்லூரியில் படிக்கிறான். இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த பையன். நல்ல வசதி. இதுவரைக்கும் படித்த கல்வி நிறுவனங்கள் அனைத்துமே ஹை-க்ளாஸ். பையனுடைய மனநிலையும் அப்படித்தானே இருக்கும்? 

அப்பாவுக்கும் மகனுக்குமிடையே பிரச்சினை. கண்ட நேரத்தில் வீட்டுக்கு வருகிறான் போகிறான் என்று திட்டியிருக்கிறார். அவன் கேட்பதாகவே இல்லை. ஒரு கட்டத்தில் ‘இனிமேல் வீட்டுக்கு வராத’ என்று மிரட்டியிருக்கிறார். சென்ற தலைமுறையில் அப்பா இப்படிச் சொன்னால் பயப்படுவோம். இல்லையா? குறைந்தபட்சம் நம்முடைய தவறுகள் எதுவும் பெரியவர்களுக்குத் தெரியாது என்று நம்பிக் கொண்டிருப்போம். அவர்களும் தெரிந்தாலும் தெரியாதவாறு காட்டிக் கொள்வார்கள். இந்த இலைமறை காய்மறைதான் பந்தம் அறுபடாமல் காத்துக் கொண்டிருந்தது. அதனால் எவ்வளவுதான் சேட்டை செய்தாலும் அவ்வளவு சீக்கிரமாக வீட்டை விட்டு வெளியேறச் சொல்ல மாட்டார்கள். அப்படியே சொன்னாலும் நமக்கு பயம் வந்துவிடும்.  ஆனால் இப்பொழுது அப்படியில்லை. பயப்படவேண்டிய சூழல் இல்லை. எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற அமெரிக்க விட்டோத்தி மனநிலைக்கு அடுத்த தலைமுறை நகர்ந்து கொண்டிருக்கிறது. நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அந்தப் பையன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். மூன்று மாதங்களாகிவிட்டன. KFC கடையில் பகுதி நேர வேலை செய்கிறானாம். மாதம் பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறான் போலிருக்கிறது. Paying Guest ஆக ஒரு விடுதியில் தங்கியிருக்கிறான். ஆறாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓரளவு வசதியான பி.ஜி கிடைத்துவிடுகிறது. சாப்பாடு, பைக், குடி என்றாலும் கூட மிச்சமிருக்கும் நான்காயிரம் ரூபாய் சரியாக இருக்கும். அவனுடைய அம்மாதான் வருத்தத்தில் இருக்கிறார். அப்பாவுக்கும் வருத்தம்தான். ஆனாலும் கார்போரேட்காரர் அல்லவா? முகத்தை இறுக்கமாக்கி காட்டி ‘போனா போகட்டும்’ என்கிறார்.

நம்முடைய தலைமுறை எப்படியிருந்ததோ அதே மாதிரிதான் நம் அடுத்த தலைமுறை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எல்லாவற்றிலும் அவர்களுக்கு நம்மிடம் ஒரு பயம் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அப்பொழுது இருந்த சூழல் வேறு. குடிப்பதற்கும் தம் அடிப்பதற்கும் எதிர்பாலினரோடு சுற்றுவதற்கும் இவ்வளவு வசதிகளும் வாய்ப்புகளும் இல்லை. இப்பொழுது அப்படியில்லை. எல்லாமே கிடைக்கின்றன. வெகு விரைவாகவே எல்லாவற்றையும் அடைந்துவிடுகிறார்கள்- அதுவும் மிக எளிமையாக. தடையற்ற சுதந்திரம் என்பதன் முழுமையான பொருளைத் தெரிந்து கொண்ட இளந்தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் நம் தாத்தாவும் அப்பாவும் மிரட்டிய மாதிரியே சாட்டையைக் காட்டினால் சர்வசாதாரணமாகத் தாண்டிவிடுகிறார்கள். சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் சந்தித்த சவால்களை விட பன்மடங்கு சிக்கல்கள் நம் தலைமுறை பெற்றோர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் பக்குவமாகக் கையாளுவதற்காக நம்மைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறோமா என்பதுதான் கேள்வி. சற்றே பிசகினாலும் குஞ்சுகள் பறந்துவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உருவாகியிருக்கின்றன. ஏனெனில் அவர்களின் சிறகுகளுக்கு நம்முடைய கூண்டுகளைவிட வலிமை அதிகம். 

7 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

Yes sir. India is changing in fact almost changed. It is difficult to survive with good people here after I think. They do whatever they want to do and say 'this is my freedom.' Not only guys, even girls are ready to go out of their houses. importing all sorts of bad cultural behaviours from foreign countries and completely rejecting good qualities like punctuality, hard work, respect, and so on. If people are ready to leave their parents, then think about their spouses. Believe it or not, it is not guys, even girls drink along with their fathers. It shows that they wrongly understood the word "Women empowerment." In the future, I think, mother's and father's day will be there. But whom will they wish? Western people like our culture and we madly started following theirs without having the knowledge of it. It is not that I am against any culture. But, I wonder, if it goes like this, In india, who will respect relationship?

D. Chandramouli said...

Both your write up as also Vinoth's comments are spot on. It is a big dilemma as to how to deal with grown up kids. The changes in family life are mind-boggling and we are unable to cope up with the mental stress and pressures. Our generation, it seems, has to re-invent and accept, rather than resist, our children's behavior, moods, lack of respect and what not. So sad that we have reached this level in our relationship with our own kids.

Muralidharan said...

Here you described about the Problem. What is the clear solution for this? How to solve without any trouble for next generation?

I'm also in Bengaluru and noticed lot of misbehaving culture. Everything because of missing self discipline and surplus money movement. How we can teach the better environment for our future generation? we have to define the steps.

I hope, let you post an another blog with the solution for the problem.

Mahalingam said...

Yes.Whoever migrated from India to USA,they like to follow the Indian culture but the child who grown up there is in struggling to follow up our culture.
They are likely to adopt with american culture but this kind of issues happens always.

? said...

நல்ல காலம், எங்கே இந்தியப் பையனும் அப்பாவுக்கு பாடம் கற்பிக்க 'பிகினியில் வந்து விட்டிருப்பானோ' என அதிர்ச்சியிலேயே படித்தேன். இன்னும் அமெரிக்கா அளவுக்கு இந்திய குழந்தைகள் மாறிவிடவில்லை என்பது ஒரு ஆறுதல்தானே!

Anonymous said...

It was that father's mistake who tries to give 'artificial' Indian look and immaturely forces his daughter to do so. Culture cannot be taught in a single day. Its a lifestyle. I think Mani's writing also portray this secretly. I hate this artificial fomalities rather than accepting that girl as western broughtup.

Its not only hard work, time management to learn from them. In fact I see them as rubbish things to learn from western culture which will make you to fit into the 'dump' corporate culture. We can also consider something like giving freedom to individual i.e. Individualism

Anonymous said...

It was that father's mistake who tries to give 'artificial' Indian look and immaturely forces his daughter to do so. Culture cannot be taught in a single day. Its a lifestyle. I think Mani's writing also portray this secretly. I hate this artificial fomalities rather than accepting that girl as western broughtup.

Its not only hard work, time management to learn from them. In fact I see them as rubbish things to learn from western culture which will make you to fit into the 'dump' corporate culture. We can also consider something like giving freedom to individual i.e. Individualism