Jun 3, 2015

எதுக்கு சுமை?

கோவாவில் சரக்கு சீப் என்று திலீபன் சொன்னார். ஏற்கனவே சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் திலீபன் இரண்டு பாட்டில்களோடு பெங்களூர் வந்து இறங்கியிருந்தார். ‘எதுக்கு கோவா போனீங்க?’ என்ற போது ‘சும்மாதாங்க சரக்கடிக்கலாம்ன்னு’ என்று அதிரச் செய்துவிட்டார். குடிப்பதை மட்டும் காரணமாக வைத்துக் கொண்டு கோவா செல்வார்களா? 

அதைக் குடிப்பது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வாழ்க்கையை அனுபவிக்கிறார். மாதத்தில் இரண்டு நாட்கள் அப்படித்தானாம். சம்பளம் வந்தவுடன் ஊருக்கு அனுப்ப வேண்டிய பணத்தை அனுப்பிவிட்டு இப்படி ஏதாவதொரு ஊருக்குச் சென்று வருகிறார். குடிப்பதையும் தாண்டி அந்த ஊரையும் மண்ணையும் தெரிந்து கொள்கிறார். திலீபனுக்கு இன்னமும் திருமணமாகவில்லை என்பதால் உள்துறை அமைச்சர் இல்லாத பிரதமர். இஷ்டத்துக்குச் சுற்றுகிறார். நல்ல வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டேன். 

நாகர்கோவில், பாண்டிச்சேரி என்று தனியாகத்தான் சுற்றுகிறார். தோளில் ஒற்றைப் பை. வேறு எந்தச் சுமையும் இல்லை. இருநூறு ரூபாய்க்கு அறை கிடைத்தாலும் தங்கிக் கொள்கிறார். கால் நீட்ட ஒரு இடம் இருந்தால் போதும் வேறு எந்த வசதியும் அவசியமில்லை. ‘கூட யாரையாச்சும் கூட்டிட்டு போனா சுதந்திரம் போயிடும்’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். நம்முடன் யாராவது வந்தால் ரோட்டுக்கடையில் கிடைப்பதைச் சாப்பிடுவதற்கும் படு மோசமான விடுதியில் தலையைச் சாய்ப்பதற்கும் தயக்கமாக இருக்கும். தனியாக இருந்தால் காலையில் பத்து மணிக்கு பதிலாக பதினோரு மணிக்குக் கூட எழலாம். ஆனால் கூட யாராவது இருக்கும் போது அந்த இடத்தில் ஒரு ஒழுங்கு வந்துவிடும். திட்டமிட வேண்டியிருக்கும். திட்டமிட்டபடி நடக்க வேண்டியிருக்கும். சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிப் போய்விடும். 

கோவாவில் இருந்து திலீபன் வந்ததும் கோபிகாந்த்தின் ஞாபகம் வந்தது. ஹைதராபாத்தில் கோபிகாந்த்தும் நானும் ஒன்றாகப் பணி புரிந்தோம். என்னைவிட வயது மூத்தவர். அப்பொழுது அவருக்கு திருமணமாகியிருந்தது. ஆனால் குடும்பம் கோவாவில் இருந்தது. அவருக்கு ஊர்ப் பாசம் அதிகம். ‘எங்களோட ஊருக்கு போய்டணும்’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். ‘போயிட வேண்டியதுதானே?’ என்று கேட்டால் ‘புவாவுக்கு வழி?’ என்பார். பத்து வருடங்களுக்கு முன்பாக கோவாவில் மென் பொருள் நிறுவனங்கள் அதிகம் இல்லை. அதனால் திரவியம் தேடுவதற்காக தெலுங்குதேசத்தில் டேரா அடித்திருந்தார். அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லோரையும் விட்டுவிட்டு தனியாக சோறாக்கித் தின்று சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் மனிதனின் வழக்கமான புலம்பல்தான். திரைப்படம், ரெஸ்டாரண்ட் என்று எந்தச் செலவும் செய்யாத மனிதன். அப்பொழுது நிறுவனத்திலிருந்து மாதம் ஆயிரத்து நூறு ரூபாய்க்கு சுடக்ஸோ பாஸ் தருவார்கள். வார இறுதியில் ஹைதராபாத் பிரியாணியாக விழுங்கி அவற்றை நான் தீர்ப்பேன். ஆனால் கோபி அவற்றைச் சேகரித்து வைத்து ஊருக்குச் செல்லும் போது மளிகைச் சாமான்கள் வாங்கி பெட்டி கட்டி எடுத்துச் செல்வார். ‘வாங்குற சம்பளமே சொற்பம்...இப்படி கிடைக்கிற பாஸையும் வீணாக்க முடியாதுல்ல’ என்று காரணம் சொல்வார். அந்தச் சமயத்தில் கோவாவில் மளிகைக்கடைகளில் சுடக்ஸோ பாஸ் வாங்கிக் கொள்ள மாட்டார்களாம்.

வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரி சென்று கொண்டிருப்பதில்லை அல்லவா?

அந்தச் சமயத்தில் மனோகர் பாரிக்கர் கோவாவில் முதலமைச்சராக இருந்தார். 2005 ஆம் ஆண்டில் அவருடைய அரசாங்கம் மைனாரிட்டியாகத்தான் இருந்தது. சில எம்.எல்.ஏக்கள் கம்பி நீட்டியிருந்தார்கள். இருந்தபோதிலும் பல இடங்களிலும் பாரிக்கர் பேசும் போது ‘கோவாவில் ஐடி துறையை வளர்ச்சியடையச் செய்வோம்’ என்று பேசியிருந்தார். அது கோபிகாந்த்துக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. எப்படியும் தன் சொந்த மண்ணில் வேலையைத் தேடிவிடலாம் என்கிற நம்பிக்கை கொடுத்திருந்த உற்சாகம் அது. மனோகர் பாரிக்கர் ஐஐடியில் படித்தவர் என்பதும் கோபியின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருந்தது. அந்த ஆண்டு ஊருக்குச் செல்வதற்கான எத்தனிப்பில் இருந்தவரிடம் அப்பொழுது அவருடைய மேனஜராக இருந்த ஜேம்ஸ் அழைத்து ‘அங்க கம்பெனி வந்து..அவங்க ஆள் எடுக்க ஆரம்பிச்சு..அதுல போய் சேருவதற்கு பதிலா..நீயே ஒரு கம்பெனி ஆரம்பிச்சுடலாம்ல’ என்று கேட்டிருக்கிறார்.

அது ஒரு சிறு பொறிதான். ஆனால் பற்றிக் கொண்டது. ஊரில் பெட்டியை இறக்கிய அடுத்த நாளே மனோகர் பாரிக்கரைச் சந்தித்துப் பேசினார். அவரைச் சந்திப்பது ஒன்றும் பெரிய சிரமமான காரியமில்லையாம். கேட்டவுடன் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். தொடரூர்தியில் போகும் போதே முதல்வரிடம் என்ன பேச வேண்டும் என்பதற்கான் குறிப்புகளைத் தயார் செய்திருக்கிறார். முதல்வர் அரை மணி நேரம் ஒதுக்கிக் கொடுக்கவும் அந்த அரை மணி நேரத்தில் கோவாவில் e-governance க்கு தன்னால் என்னவெல்லாம் உதவ முடியும் என்று பேசியிருக்கிறார். கோபி ஏற்கனவே கன்ஸல்டண்ட்டாக இருந்தவர். அதன் காரணமாகவோ என்னவோ அடுத்தவர்களை பேச்சில் மடக்கும் வித்தை தெரிந்தவர் என்பது பலம் சேர்த்திருக்கிறது. பாரிக்கருக்கும் பிடித்துப் போய்விட்டது. நிறுவனம் தொடங்குவதற்கான இடம், அனுமதி போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தவர் அரசாங்கத்தின் இரண்டு ப்ராஜக்ட்களையும் கொடுத்துவிட்டார்.

கோபி அதுவரையிலும் செய்த வேலைக்கும் பாரிக்கர் கொடுத்த ப்ராஜக்ட்டுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் அதற்காக அசரவில்லை. கோவாவில் இருக்கும் பொறியியல் கல்லூரி வழியாக அந்த வேலை தெரிந்த ஆட்களைப் பிடித்து வேலையை முடித்துவிட்டார். இடையில் ஒரு முறை ஹைதராபாத் வந்து பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துச் செல்வதற்கு முன்பாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார். கார்போரேட்காரர்கள் சாதாரணமாகக் காலில் விழ மாட்டார்கள். ஆனால் கோபி ஜேம்ஸின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். ஜேம்ஸூக்கு அது பெரிய சந்தோஷம். எல்லோரும் கோபியை பேசச் சொன்னார்கள். 

‘என்னால ஜெயிக்க முடியுமான்னு தெரியல...ஆனா ஜெயிச்சுடுவேன்னு நம்பிக்கையிருக்கு...வாய்ப்புகள் நம்மைத் தேடி வரணும்ன்னு பார்த்துட்டு இருக்க வேண்டியதில்லை....எங்கேயாவது நமக்கான வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சா துணிஞ்சு கதவைத் தட்டிடணும்..திறந்தா அதிர்ஷ்டம்..இல்லைன்னா அடுத்த கதவுக்கு போய்டலாம்...சரியா பேசறேனா?’ என்று அரை போதையில் கேட்டது இன்னமும் ஞாபகமிருக்கிறது. திலீபன் சென்ற பிறகு கோபிக்கு மின்னஞ்சல் அனுப்பி எண் வாங்கிப் பேசினேன். இப்பொழுது நிறுவனத்தில் நூற்றியெழுபது பேர்கள் வேலை செய்கிறார்களாம்.

‘வெளிநாட்டு ப்ராஜக்ட் ஏதாச்சும் செய்யறீங்களா?’ என்றேன்.

‘இந்த வேலையை முடிச்சு கொடுத்தாவே போதும்..நோ ப்ரஷர்.....சனி,ஞாயிறு எனக்குன்னு முழுமையா கிடைக்குது...சாயந்திரம் ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு போயிடறோம்..எங்க கம்பெனில அத்தனை பேரும்..அப்புறம் எதுக்கு வெளிநாட்டு ப்ராஜக்ட்’ என்றார்.

கேட்க சந்தோஷமாக இருந்தது. இன்னமும் சலனமில்லாத அதே மனநிலையில்தான் இருக்கிறார். சம்பாதித்துக் குவிக்க வேண்டும் என்கிற வெறியில்லாமல் பேசுகிறர். அழகான ஊர். நல்ல குடும்பம். அமைதியான வாழ்க்கை. இதைத் தாண்டி வேறு என்ன வேண்டும்? இன்றைக்கு இருப்பதைவிட நாளைக்கு ஒரு படி மேலே இருந்தால் போதும் என்று நினைத்தால் பிரச்சினையே இல்லை. இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் நாளைக்கு நூறு படிகள் தாண்டியிருக்க வேண்டும் என்கிற அதீத ஆசைதான் அத்தனை அழுத்தத்தையும் நம் மீது இறக்கி வைத்துவிடுகிறது. இல்லையா?

15 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Articles like this helps us a tonic to boost our self confidence.Hope 1000 more gopi arises after reading this .

Unknown said...

Very inspiring article.

Uma said...

கொஞ்ச நாட்களுக்குப் பின் இன்றுதான் நிசப்தம் திறந்தேன். வழக்கம் போலவே ஆர்வம் பற்றிக்கொண்டது. Talking Tom ன் energy potion போல.

Pandiaraj Jebarathinam said...

ஆரம்ப வரிகள் வறுமையின் நிறம் சிவப்பு திலீபனை நினைவுபடுத்தியது... கோவை கோபிநாத்தும் திலீபனும் தன்னம்பிக்கையின் அடுத்த கதவு..

சேக்காளி said...

Swami said...

Parikar waas(is) way ahead of the so called Aam Admi. Though i have seen many photos circulating about the humble way he conducts - good to know that he is like that only.

Inspiring article .

Selva said...

நீங்க தண்ணி அடிபீங்களா ? உங்கள் அந்தரங்கத்தில் நுழைவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் வெளிப்படையாய் பேசுவதால் இந்த கேள்வி.

Vaa.Manikandan said...

குடிப்பதில்லை. புகை பிடிப்பதில்லை. இரண்டையும் ஓரிரண்டு முறை முயற்சித்திருக்கிறேன்!பிடிக்காமல் விட்டுவிட்டேன்.

Vinoth Subramanian said...

"இன்றைக்கு இருப்பதைவிட நாளைக்கு ஒரு படி மேலே இருந்தால் போதும் என்று நினைத்தால் பிரச்சினையே இல்லை. இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் நாளைக்கு நூறு படிகள் தாண்டியிருக்க வேண்டும் என்கிற அதீத ஆசைதான் அத்தனை அழுத்தத்தையும் நம் மீது இறக்கி வைத்துவிடுகிறது. இல்லையா?" Yes sir. You are 200% right. Very inspirational sir. My special respect to you for not drinking and smoking.

கார்த்திக் சரவணன் said...

நண்பர் சம்பாதிக்கிறார், நிம்மதியான வாழ்க்கையையும் வாழ்கிறார்... தனக்கென அதிக அழுத்தம் கொடுப்பதில்லை... :)

Sidtharth said...

/*இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் நாளைக்கு நூறு படிகள் தாண்டியிருக்க வேண்டும் என்கிற அதீத ஆசைதான் அத்தனை அழுத்தத்தையும் நம் மீது இறக்கி வைத்துவிடுகிறது. இல்லையா?*/
Mani,
I disagree with this. We would not have got Google, Amazon, Apple, Microsoft and many other innovative companies if they had taken this stand :-). Ofcourse, it is very subjective though.

Selva said...

நம்ம கட்சிதான் நீங்க.
மதித்து பதில் சொன்னதுக்கு நன்றி.

Shankar said...

very inspiring article, as usual.
The catch word is "Enough"
If one realises that he is happy and contended, nobody, can ever debate it. You do not have to live for others. This is what brings peer pressure.
I can say is with an authority, as I have practised it. I retired at 48th year after doing own engineering manufacturing business.At one stage I terribly felt bored of the drudgery and called it quits. I had made some reasonable investments to care of the minimum needs of life.

I am happy senior citizen today.

Unknown said...

Really an interesting and inspirational post.

சேக்காளி said...

//Pandiaraj Jebarathinam said...
ஆரம்ப வரிகள் வறுமையின் நிறம் சிவப்பு திலீபனை நினைவுபடுத்தியது... கோவை கோபிநாத்தும் திலீபனும் தன்னம்பிக்கையின் அடுத்த கதவு..
June 3, 2015 at 3:30 PM//
"கோவா கோபிகாந்த்"
தானே சரி