Jun 8, 2015

விண்ணுக்கோடி வர்ணம்

அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஒரு இசைப் பள்ளியைத் திறந்திருக்கிறார்கள். கடந்த நான்கைந்து நாட்களாக மடிக்கணினியில் ஏதோவொரு பிரச்சினை. அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தேன். கத்தியில்லாமல் சலூன் கடை திறந்த மாதிரிதான். வேலை எதுவுமில்லாமல் வெள்ளிக்கிழமையன்று என்ன செய்வதென்றே தெரியவில்லை. இசைப்பள்ளிக்குள் நுழைந்துவிட்டேன். ‘விசாரித்து வைத்துக் கொள்ளலாம்’ என்பதுதான் நோக்கம். இப்பொழுது இதுவொரு வியாதியாகிவிட்டது. எது கண்ணில்பட்டாலும் விசாரித்து வைத்துக் கொள்கிறேன். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் ப்ரண்ட்டன் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு விற்பனைக்கு இருப்பதாக எழுதி வைத்திருந்தார்கள். அந்தப் பகுதியில் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டால் மாதம் ஒரு லட்ச ரூபாய் கூட வாடகையாகக் கிடைக்கிறதாம். தலையை அடமானம் வைத்தாவது வாங்கிவிட வேண்டும் என்று விசாரிக்கச் சென்றிருந்தேன். மாதம் ஒரு லட்ச ரூபாய் வாடகை வந்தால் நான்கு தலையணையைக் காலுக்கு வைத்து தலைகீழாக தொங்கியபடியே இருபத்து நான்கு மணி நேரமும் கிடப்பேன். ஆனால் ஆட்டுக்கு வாலை அளந்து வைக்க வேண்டும் என்று ஆண்டவனுக்குத் தெரியாதா? அந்த அடுக்குமாடியின் செக்யூரிட்டி உள்ளேயே விடவில்லை. 

‘உங்க பட்ஜெட் என்ன?’ என்றார். 

எப்படியும் விலை அதிகமாகச் சொன்னால்தான் உள்ளே விடுவார் என்று ‘இரண்டு கோடி என்றால் யோசிக்கிறேன்’ என்றேன்.

‘நீங்க யோசிக்கவே வேண்டாம்’ என்றார். 

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ‘ஏன் சார்?’ என்றால் ‘ஏழே முக்கால் கோடி சொல்லிட்டு இருக்காரு..ஏற்கனவே ஏழேகால் வரைக்கும் கேட்டுட்டாங்க’ என்றார்.

‘அப்படீங்களா..யோசிச்சுட்டுச் சொல்லுறேன்’ என்று முடிப்பதற்குள் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். முயல் பிடிக்கிற நாயின் முகத்தைப் பார்த்தால் தெரியாதா என்ன? அவருக்குத் தெரிந்துவிட்டது.

இடம் என்ன விலைக்கு இடம் விற்கிறது? எந்த ஏரியாவில் என்ன வாடகைக்கு வீடு கிடைக்கும் என்றெல்லாம் தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இப்படியான தகவல்களால் நியூரான்கள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. ஓரிரு மாதங்களுக்கு முன்பாக விளம்பர ஏஜென்ஸிக்காரர்களிடம் ‘எம்.ஜி.சாலையில் விளம்பரத் தட்டி வைக்க எவ்வளவு கேட்பீர்கள்? ஆட்டோவில் பேனர் கட்டி விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு செலவாகும்’ என்றெல்லாம் கேட்டு வைத்திருந்தேன். ஃபோனில் கேட்டிருந்தாலாவது பரவாயில்லை. ஏதோவொரு காரியத்துக்காக சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த விளம்பர அலுவலகம் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்துவிட்டேன். இப்பொழுது வாரம் ஒரு முறையாவது ஃபோன் செய்துவிடுகிறான். ‘எப்போ சார் விளம்பரம் தருவீங்க?’ என்று கேட்டுவிட்டுத்தான் துண்டிக்கிறான். 'Ad agency- torture' என்ற பெயரில் அந்த நிறுவனத்தின் எண்ணை குறித்து வைத்துக் கொண்டு எடுப்பதேயில்லை.

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். அழகு நிலையங்கள், கஞ்சா பாய்ண்ட் வியாபாரம், சாலையோரம் நிற்கும் திருநங்கைகள் என சில விவகாரமான விவரங்களும் பட்டியலில் வந்துவிடும் என்பதால் சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாகக் கேள்வி கேட்பார்கள். சொன்னாலும் நம்பமாட்டார்கள். ‘யோவ் எனக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை’ என்று எவ்வளவு முறைதான் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வது? உள்ளங்கையில் ஓட்டை விழுவதுதான் மிச்சம். 

அதே மாதிரிதான் வெள்ளிக்கிழமை இசைப்பள்ளிக்குள் நுழைந்திருந்தேன். பிரபல பாடகரின் இசைப்பள்ளி அது.  வெகு நாட்களாகவே இசையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையுண்டு ‘விண்ணுக்கோடி வர்ணம்’ என்று கசாப்புக் கத்தியை வைத்து ஆர்மோனியப் பெட்டியை வெட்டியே தீர வேண்டும் என்கிற சங்கல்பம் எதுவும் இல்லையென்றாலும் சங்கீதத்தின் அடிப்படையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

‘எனக்கு ச, ரி, க, ம வெல்லாம் தெரியாது..ஆனா தினமும் ஒரு மணி நேரம் வருகிறேன்’ என்றேன்.

அந்தப் பையனுக்கு என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. என்னைப் பார்த்து ‘ஒரு பாட்டு பாடுங்க’ என்றான்.

அதிர்ச்சியடைந்தவனாக ‘சார் எனக்கு பாடவெல்லாம் தெரியாது....தெரிந்து கொள்ளத்தான் வந்திருக்கிறேன்’ என்றாலும் விடுவதாகத் தெரியவில்லை. 

‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்ல...உங்க டெப்த் என்னன்னு தெரிஞ்சாத்தானே அதுக்கு தகுந்த மாதிரி ஐடியா சொல்ல முடியும்?’ என்றான். என்ன டெப்தோ கருமமோ-

அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை என்பதால் இருக்கிற தைரியத்தையெல்லாம் புரட்டி ஒரு பாடலை பாடிவிட்டேன். எட்டாம் வகுப்பிலிருந்தே ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்’ பாடல் மனப்பாடமாகத் தெரியும். அந்த வயதில் கூடச் சுற்றிய அத்தனை பேருக்கும் ஒரு பாடலாவது தெரிகிறது என்பதால் நாம் சோடை போய்விடக் கூடாது என்று பாட்டு புத்தகம் வைத்து மனனம் செய்த பாடல் அது. 

‘அட்டகாசம் சார்...நாளைக்கு வந்துடுங்க..’ என்றான்.

நிச்சயமாக பொய்தான் சொல்லியிருக்கிறான்.

‘ஃபீஸ் டீட்டெயில்ஸ் எல்லாம்?’ என்று இழுத்தேன்.

‘வாங்க பேசிக்கலாம்’ என்று விவரம் எதுவும் சொல்லவில்லை.

‘எந்த நேரத்தில் வர வேண்டும்?’ என்று கேட்டிருந்தேன்.

‘எப்போ வேணும்ன்னா வாங்க’ என்றான்.

சனிக்கிழமை காலையில் எழுந்து தலைக்கு குளித்து நாக்கை சுத்தம் செய்து ‘சரஸ்வதி தேவி...இன்னைக்கு நாக்கு வெகு சுத்தமாக இருக்கிறது...வந்து உக்காந்துக்க’ என்று வேண்டுவது கூட பெரிய காரியமில்லை. வீட்டில் நம்ப வைப்பதற்குள் படும்பாடு இருக்கிறதே! தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. ‘இவனுக்கு என்ன பைத்தியமா? திடீர்ன்னு பாட்டு பாட போறானாமா’ என்று அம்மா ஆரம்பித்து வைக்க ஆளாளுக்கு ஓட்டத் தொடங்கிவிட்டார்கள். கல்லடிகளைத் தாங்கினால்தான் கலைவாணியின் அருள் கிடைக்கும் என்பதால் அத்தனையையும் பொறுத்துக் கொண்டேன். பத்து மணிக்கெல்லாம் இசைப்பள்ளிக்கு வந்தாகிவிட்டது. பத்தரை ஆகியும் திறப்பதாகத் தெரியவில்லை. எத்தனை நேரம்தான் பொறுத்திருப்பது? கட்டிடத்தின் காவலாளியிடம் கேட்ட போது ‘திங்கட்கிழமையிலிருந்துதான் க்ளாஸ் ஆரம்பிக்குது’ என்றார்.

‘இன்னைக்கு வரச் சொன்னாங்களே’ என்றேன்.

‘யாரு?’

‘நேத்து ஒருத்தர் உள்ள இருந்தாருங்க..மத்தியானம் ரெண்டு மணி சுமாருக்கு’

‘நேத்து யாருமே இல்லையே...’ என்று யோசித்தவர் திடீர் ஞானோதயம் வந்தவராக ‘தம்பி....அவர் பெயிண்டிங் காண்ட்ராக்டர்...வேலை முடிஞ்சுது..சாமானமெல்லாம் எடுத்துட்டு போக வந்திருந்தாரு’

பொடிப்பொடியாக நொறுங்கிப் போனேன். இந்த ஊரில் பெயிண்டர், கட்டிட மேஸ்திரி, சாஃப்ட்வேர் இஞ்சினியர் என யாருக்குமே வித்தியாசம் இருப்பதில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஆங்கிலம் பேசத் தெரிகிறது. வகை தொகையில்லாமல் சிக்கிக் கொள்கிறேன். சனிக்கிழமையதுவுமாக கொஞ்ச நேரம் சேர்த்துத் தூங்கியிருக்கலாம். தூக்கம் போனது கூட கவலையில்லை. வீட்டில் என்ன பதில் சொல்வது? கப்பன் பூங்காவில் சுற்றிவிட்டு மதியவாக்கில் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று காற்று வாங்கச் சென்றுவிட்டேன். அந்த பெயிண்டரை இன்னொரு முறை பார்த்துவிட வேண்டும் என்று கடுகடுப்பாக இருந்தது. பார்த்து மட்டும் என்ன செய்ய முடியும்? ஓங்கிக் குத்துவிடவா முடியும்? Body Mass Index பார்த்தால் 19. underweight. இந்த லட்சணத்தில் அவனை நூறு தடவை பார்த்தாலும் எதுவும் செய்ய முடியாது. 

இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று உடம்பை ஏற்றியாக வேண்டும் அல்லது திறந்த வீட்டில் எதுவோ நுழைந்தது போல கண்ணில் படும் இடங்களிலெல்லாம் நுழைந்து விசாரணை நடத்தக் கூடாது. இரண்டாவது காரியம் கஷ்டம். நாவடக்கம் இல்லாதவனாகப் பிறந்து தொலைந்துவிட்டேன். அதனால் உடம்பைத்தான் ஏற்றப் போகிறேன். இன்று மாலை போகிற வழியில் தென்படுகிற ஜிம்மிலெல்லாம் விசாரிக்க முடிவெடுத்திருக்கிறேன்.

ஜெய் ஆஞ்சநேயா!

14 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

எலக்கிய ரவுடி ன்னு தான் பட்டம் குடுத்துருக்கோம்ல. அப்புறம் எதுக்கு இசைரவுடி ஆவணும்னு ஆச?

ரெங்கராஜன் said...

பிரமாதம் போங்க. சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்திருச்சு. என்னா எழுத்து நடை. வாழ்த்துக்கள் மணி.

Kumar said...

யப்பா, சிரிச்சு, சிரிச்சு கண்ல தண்ணியெல்லாம் வந்திரிச்சு. மணி, எனக்கு ஒரு டவுட் என்னென்னா, பெயிண்ட் பண்ண தெரியுமான்னு தெரிஞ்சுக்க விரும்பினவன் எதுக்கு பாட்டு பாட சொன்னன்னு தான் தெரியல .. :)

surivasu said...

//கல்லடிகளைத் தாங்கினால்தான் கலைவாணியின் அருள் கிடைக்கும் என்பதால் அத்தனையையும் பொறுத்துக் கொண்டேன்.//
செம. அதெல்லாம் அப்படியே வரணும்ல

Vinoth Subramanian said...

Sema comedy sir. Jim ku porathellam okaythan. bodyoda sernthu pocketayum trim panniduvanga pathukkonga.

ilavalhariharan said...

நல்ல காமெடி தான் மணி...நின்னுக்கோடி வர்ணம் என்றிருக்க வேண்டும்....பரவாயில்லை ஆ...ரம்பம் தானே....நல்லாத்தான் சிரிப்பு வநாதது.....இளவல் ஹரிஹரன், மதுரை.

Vaa.Manikandan said...

நின்னுக்கோடி வர்ணம் இல்லை...நின்னுக்கோரி வர்ணம் :) அது கூட சரியாகத் தெரியாது என்பதை குறிப்பாக உணர்த்துவதுதான் தலைப்பின் நோக்கம்.

Unknown said...

வெகு இயல்பான மொழிநடை…!
சூப்பர்

Saravanan Sekar said...

ஹா ஹா ... ஆபிஸ் டென்ஷன், மண்டை காய்ச்சல் எல்லாம் போயிடுச்சு மணி அண்ணா .. இந்த பதிவை படிச்சதும்... கலக்கல்..

ஜிம் போகும்போது - இரு பாலருக்கும் வருகிற ஜிம் ட்ரை பண்ணுங்க.. உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல.. இருந்தாலும் ஒரு நினைவூட்டல் ...

செ. அன்புச்செல்வன் said...

<>விண்ணுக்கோடி என்றவுடன் சற்று திகைத்தேன். உங்கள் பின்னூட்டத்தில் நோக்கம் அறிந்து மகிழ்வாய் இருந்தது...ஒவ்வொரு வரியும் சிரிப்போடுகிறது...பாராட்டுகள்...<>

D. Chandramouli said...

Excellent comedy. Can't stop laughing! If Vadivelu had been around, he could have made the scenes a roaring repeat in every TV channel.

பிரதீபா said...

:))))))

வட்டத்திற்குள் நிலா said...

இதை சாப்பிடும்போது வாசிப்பேனா, சிரிச்சி சிரிச்சி புரைஎரிபோய், இருமல் வந்து பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கும் தெரிஞ்சி போச்சி, நான் தனியே வாசிச்சி சிரிப்பேன் என்று ............ பிரமாதம்

வட்டத்திற்குள் நிலா said...

இதை சாப்பிடும்போது வாசிப்பேனா, சிரிச்சி சிரிச்சி புரைஎரிபோய், இருமல் வந்து பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கும் தெரிஞ்சி போச்சி, நான் தனியே வாசிச்சி சிரிப்பேன் என்று ............ பிரமாதம்