Jun 11, 2015

கேடிகள்

புதியதாக ஒரு நண்பர் சிக்கியிருக்கிறார். கன்னடக்காரர். இயற்கை ஆர்வலர். என்னிடம் நண்பரானால் சிக்கியது மாதிரிதானே? இப்பொழுதெல்லாம் யாராவது சிக்கினால் பந்தாவுக்காக அயல் சினிமா பற்றி பேசத் தொடங்கிவிடுகிறேன். அப்படி பேசிக் கொண்டிருந்த போது ‘எரின் புருக்கோவிச் மாதிரியா?’ என்றார். என்னைவிடவும் அவருக்கு அறிவு அதிகம் என்று காட்டுகிறாராம். எதுக்கு வாயைக் கொடுத்தோம் என்றாகிவிட்டது. இதுவரை அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை. அவரேதான் சொன்னார். எரின் அமெரிக்கப் பெண்மணி. பசிபிக் கியாஸ் மற்றும் எலெக்ட்ரிக்(PGE) என்கிற கார்பேரேட் நிறுவனம் குரோமியத்தை சுற்றுச்சூழலில் கலக்கச் செய்து கொண்டிருந்ததாம். கலக்கினால் கூட தொலைகிறது- இது உடலக்கு மிக நல்லது என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமெல்லாம் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். மக்களும் நம்பியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்தப் பகுதியின் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் என யாராக இருந்தாலும் பணத்தைக் கொடுத்து வாயை அடைத்திருக்கிறார்கள். அப்படியொரு தில்லாலங்கடி நிறுவனத்துக்கு எதிராக வழக்கை நடத்தி பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாகப் பெற்றுக் கொடுத்தவர் எரின். இந்தப் பெண்மணிக்கு சட்ட அறிவெல்லாம் எதுவுமில்லை. அடுத்தவர்களின் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்த பிறகு போராட வேண்டும் என்று தான் பணியாற்றிக் கொண்டிருந்த வழக்கறிஞரின் மூலமாக போராடி வென்றவர். அவரைப் பற்றி ஒரு படம் வந்திருக்கிறது. சூழலியல் சார்ந்த படங்களைத் தேடினால் அந்தப் பட்டியலில் இந்தப் படம் இருக்கிறது. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்திருக்கிறார் என்பதற்காக பார்த்தேன். அதியற்புதமான படமாகத் தெரியவில்லை. ஆனால் தனிமனுஷியாக அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு எதிராக போராடிய பெண்ணின் உண்மைக் கதை என்பதால் அதற்கான மரியாதையுடன் பார்க்க வேண்டிய படம்.

இப்படி ஒன்றிரண்டு பெயர்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நம்மையும் சூழலியல் ஆர்வலர் என்று காட்டிக் கொள்ளலாம். யாருக்கும் தெரியப் போவதில்லைதான். ஆனால் சூழலியல் போன்ற விஷயங்களில் தொடர்ச்சியான கவனம் இருந்தால்தான் அதில் இருக்கும் அரசியல் புரியும். மேம்போக்காக இருந்தால் பிஜிஈ நிறுவனம் சொன்ன ‘குரோமியம் நல்லது’ என்பதைக் கூட சரிதான் என்று நம்பிக் கொண்டிருப்போம். இந்த கன்னட நண்பர் என்ன வகையறா என்று தெரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. 

சேகர் தத்தாத்ரியின் புலிகள் பற்றிய ஆவணப்படம் பற்றி பேசித்தான் சுய அறிமுகத்தையே ஆரம்பித்தார். ‘வாங்களேன்...ஒரு நாள் காடு மேடெல்லாம் சுத்திட்டு வரலாம்’ என்று கேட்டுவிட்டு அவர் சிலாகித்த அந்தப் ஆவணப் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஒரு சமயம் ஈரோட்டில் திரையிட்டார்கள். ‘புலியைக் காப்பாத்தறதுன்னா மலையில் இருக்கிறவங்ககிட்டதானே இந்தப் படத்தை காட்டணும்?’ நாமெல்லாமா வேட்டையாடப் போறோம்’ என்று நினைத்துக் கொண்டே பார்த்தேன். ஆனால் படத்தைப் பார்த்து முடித்த பிறகு ‘இது நல்ல விழிப்புணர்வூட்டக்கூடிய படம்’ என்று தோன்றியது. 

காட்டில் இருக்கிற நெல்லிக்காய்களை எல்லாம் மலைவாழ் மக்கள் பறித்துக் கொள்கிறார்கள். நெல்லிக்காயைத் தின்று வாழும் விலங்குகள் உணவில்லாமல் எங்கேயோ ஓடிவிடுகின்றன. அந்த விலங்குகளை உண்டு வாழும் புலிகள் உணவு கிடைக்காமல் தவித்துப் போகின்றன. இப்படித்தான் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் படத்தில் சொல்லியிருந்தார்கள். வாயடைத்துப் போனது நிஜம்தான். சூழலியலாளர்கள் என்றால் கேமிராவை கோக்குமாக்காக திருப்பி வெறும் நிழற்படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த என் பொடனியிலேயே அடித்தார்கள். எப்படியெல்லாம் லாஜிக் இருக்கிறது பாருங்கள்.

ஆனால் இந்த லாஜிக்குக்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது என்கிறார்கள். இப்படி எதையுமே கறுப்பு வெள்ளையாக நம்பிவிட வேண்டியதில்லை என்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வனத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களை விரட்டியடிப்பதற்கான பிரச்சார நெடி இருக்கிறது என்கிறார்கள். அதைப் பற்றி பேசுவதற்கு முன்பாக இந்த இடத்தில் ஒரு கேள்வி கேட்க வேண்டும்- காடுகளில் மனிதர்கள் வாழலாமா? அல்லது பழங்குடியினரையெல்லாம் சமவெளிகளுக்கு விரட்டிவிட்டு காடுகளை விலங்குகளுக்கு மட்டும் கொடுத்துவிட வேண்டுமா? 

முக்கால்வாசிப் பேர் இரண்டாவது ஆப்ஷனைத்தான் தேர்ந்தெடுப்போம். அப்படித்தான் நம்முடையை மூளையை ட்யூன் செய்து வைத்திருக்கிறார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காடு பற்றிய முழுமையான புரிதல் கிடையாது. பழங்குடியினர்தான் காட்டை அழிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் சாலைகளை அமைக்கிறோம். மின்கம்பங்களை நடுகிறோம். அதனால்தான் காட்டின் பரப்பளவு சுருங்குகிறது என்றெல்லாம் பல காரணங்களை அடுக்குவோம். சூழலியலாளர்கள் என்று நாம் நம்பக் கூடிய உல்லாஸ் காரந்த், சேகர் தத்தாத்ரி மாதிரியானவர்களும் அதைத்தான் வலியுறுத்துகிறார்கள். ‘மலைவாழ் மக்களை எல்லாம் கீழே அனுப்பிடணும் சார்...நாஸ்தி பண்ணுறாங்க’ என்பார்கள்.  இப்படியான தொடர்ந்த பிரச்சாரத்தின் காரணமாக காட்டு மனிதர்களுக்கு எதிராக அரசும் வனத்துறையும் கார்போரேட் நிறுவனங்களும் மேற்கொள்ளும் எந்தவிதமான நடவடிக்கையையும் நாம் ஆதரிப்போம். ‘அவர்களைத் துரத்தினால் காடு தப்பித்துவிடும்’ என்று அரசு எந்திரத்தின் கரங்களுக்கு வலுவூட்டுவோம். அதற்காகத்தான் புலிகளைப் பற்றிய படத்தை மதுரையிலும் சென்னையிலும் காட்டுகிறார்கள். காட்டில் வாழும் எளிய மனிதர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத்தான் இன்றைய கார்போரேட் சூழலியலாளர்கள் செய்கிறார்கள்.

சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆட்களின் செயல்களுக்குப் பின்னால் நிச்சயம் ஏதோவொரு அரசியல் இருக்கிறது. அவர்களுக்கு வருகிற நிதி ஆதாரங்கள் எங்கேயிருந்து வருகின்றன? எதற்காக இவர்களுக்கு அந்த அமைப்புகள் உதவுகின்றன? அப்படி நிதியுதவிக்கு பிரதியுபகாரமாக இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் தோண்டித் துருவிப் போனால் நாம் துளி கூட எதிர்பாராத பதில்கள் கிடைக்கின்றன.

இரா.முருகவேள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகமும் என்ற அந்தப் புத்தகம் முழுக்கவும் புலிகளை வைத்து நடத்தப்படும் அரசியலைத்தான் பேசுகிறார்.

அதே புலிகள் ஆவணப்படத்தில் பழங்குடியினர் நெல்லிக்காய் பறிப்பதைப் பற்றித்தான் பேசுகிறார்களே தவிர காடுகளில் அமைக்கப்படும் மிகப்பெரிய அணைகளைப் பற்றியும், சுரங்கங்கள் பற்றியும், எகோ-ரிஸார்ட் எனப்படும் நட்சத்திர தங்கும்விடுதிகளைப் பற்றியும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் அமைக்கப்படும் தேயிலை, காபி எஸ்டேட்களைப் பற்றியும், ஆசிரமங்கள், தியான நிலையங்கள் பற்றியெல்லாம் எந்தக் குறிப்புமே இருப்பதில்லை. புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் என்ற பெயரில் காடுகளில் வாழும் மக்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கும் இந்த சூழலியலாளர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் கார்போரேட் நிறுவனங்களும் அதன் பிறகாக தாங்கள் அந்தச் சரணாலயங்களின் வழியாக அடிக்கப்போகும் வருமானக் கொள்ளைகளைப் பற்றி எதுவுமே பேசுவதில்லை.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்தியக் காடுகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. காலங்காலமாக பழங்குடியினரும் ஆதிவாசிகளும் வாழ்ந்து வந்த வனம் கடந்த சில ஆண்டுகள் வரைக்கும் கூட நன்றாகத்தான் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது முப்பது சதவீதமாக இருந்த வனப்பரப்பு இந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் பதினோரு சதவீதமாக குறைந்திருக்கிறது. வனத்தில் வாழும் மக்களா அழித்தார்கள்? பழியை அவர்கள் மீது போட்டுவிட்டு மற்றவர்கள் கொள்ளையடித்தார்கள். முதலாளிகளின் கைங்கர்யத்தைக் காட்டினார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியை எஸ்டேட்களாக மாற்றினார்கள். தனிநபர் காட்டேஜ்களாக்கினார்கள். அணைகளைக் கட்டினார்கள். இப்படித்தான் காட்டின் பரப்பு வெகு கணிசமாகக் குறைந்ததே தவிர காட்டில் வாழும் மக்களால் இல்லை. 

அமேசான் உள்ளிட்ட மிகப்பெரிய வனங்களில் எல்லாம் கார்போரேட்கள் கால் பதித்திருக்கிறார்கள். மிகப்பெரிய வருமானத்தை கொழிக்கிறார்கள். தங்களுக்கு குறுக்கில் நிற்கும் ஆதிவாசிகளையும் பழங்குடியினரையும் விரட்டியடிக்கிறார்கள். இந்த முதலாளிகளுக்கு ஒத்து ஊதுகிறார்கள் இந்த கார்போரேட் சூழலியலாளர்கள். இதுதான் உண்மை. இதுதான் பின்னணி. டீ ஷர்ட்டும் கழுத்தில் கேமிராவுமாக போஸ் கொடுக்கும் யாரையும் நம்பிவிட வேண்டியதில்லை. இங்கு துரும்பைத் தூக்கிப் போடுவதிலும் கூட ஓர் அரசியல் இருக்கிறது. தன்னை நல்லவன், ஆர்வலன் என்று சொல்லிக் கொள்கிற ஒவ்வொரு பெரிய மனிதனிடமும் கயமைத்தனமும் அரசியலும் சதியும் இருக்கிறது. அஜெண்டா வைத்திருக்கிறார்கள். வருமானத்திற்காகவும் புகழுக்காகவும் எவ்வளவு தலைகளை வேண்டுமானாலும் உருட்டுகிற வேகம் இருக்கிறது. பெரும்பாலும் எளிய மனிதர்களின் தலைகள்தான்.

கார்போரேட் வன வணிகம், கார்பன் ட்ரேடிங், எகோ டூரிஸ வலையமைவு என்று வனத்தின் பின்னணியில் கொழிக்கும் வருமானம் பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. தங்களின் வருமானத்திற்காக இந்த புவியையும் அதன் வனத்தையும் பூர்வகுடிகளையும் எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்துகிறார்கள் என்று வெளிப்படையாகவும் விரிவாகவும் பேச வேண்டியிருக்கிறது. பேசுவோம்.

9 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

இங்கு நடக்கும் எல்லா விசயங்களுக்குப் பின்னாலும் நீங்கள் சொல்லுவது மாதிரி ஒரு அரசியலோ அல்லது ஒரு தொழிலதிபரோ நிழலாய் இருப்பதும் உண்மை அதற்கு ஊடகங்களை பயன்படுத்தி தவறுகளுக்கு நவீனத்துவம் பெறுவதுவும் உண்மைதான் ( இன்றைய பல ஊடகங்களின் ஒட்டு மொத்த ஷேர் தனியார் வசம் )ஆனால் யோகா தினம் கொண்டாடினால் ஒட்டுமொத்தமாய் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிவினையாற்றுவது என்பதுவும் அதற்கு விருப்பமில்லாதவர்கள் கடலில் குதிக்கலாம் என்ற அபத்த வாதமும் தொடரும் வரை வாதங்களும் விவாதங்களும் தொடரலம் விசயம் மட்டும் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கலாம்

www.rasanai.blogspot.com said...

dear mani
கார்போரேட் வன வணிகம், கார்பன் ட்ரேடிங், எகோ டூரிஸ வலையமைவு என்று வனத்தின் பின்னணியில் கொழிக்கும் வருமானம் பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. தங்களின் வருமானத்திற்காக இந்த புவியையும் அதன் வனத்தையும் பூர்வகுடிகளையும் எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்துகிறார்கள் என்று வெளிப்படையாகவும் விரிவாகவும் பேச வேண்டியிருக்கிறது. பேசுவோம். # yes, true indeed and a good topic for discussion and propagate.
i had been to wildlife census and nature related activities, and i strongly believe that "ONLY the corporates ie., mining. dam construction, eco resorts, plantation estates etc., are to be drove away from the forest and not the aborigines". a lot of hidden politics is undergoing there and may explode one day. pl try to find out the "Gudalur Lobby" for the last 20 years or so --(recent tiger killing is because of that lobby) , and valparai tea estates...... Aborignies are actually the watchmen of the forest and because of their illiteracy and non-availability of other basic amenities, so-called "City- Hygeine" etc., paves way for the corporates to propagate and picturise aborigines in a negative way. will write in detail later. sorry. thanks for a nice write up
anbudan
sundar g

Vinoth Subramanian said...

Wonderful post sir! Everyone tries to get benefit out of other's plight.

Anonymous said...

very googd

முனைவர் அ.கோவிந்தராஜூ said...

Yes, we have to revisit our approach

Unknown said...

Dear மணி,
வணக்கம்,உங்கள் நிசப்தம் தளத்தை சில மாதங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன்.இங்கு அனைத்திலும் வியாபாரம்,பணம் புழங்குகிறது.மக்களுக்காக சிலர் போராட பலர் அதை பயன்படுத்தியும்,விமர்சித்தும் வருகிறார்கள்.இந்த பூமியில் கடைசியாக தோன்றியிருக்கிறது கருதப்படும் மனிதன் தன் வெறிக்கு பிற மிருகங்களை பலியிடுகிறான்.மனிதன் இல்லாமல் மற்ற அணைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ்ந்துவிடும்.ஆனால் மனிதர்களான நாம் பிற உயிர்களை சார்ந்தே வாழ முடியும்.சில/பலரது வெறி சங்கிலி தொடராக அனைவரையும்/அணைத்து உயிர்களையும் பாதிக்கிறது,ஆனால் அந்த சிலரை அனைவரது கண்முன்னால் வலரவிட்டோம்.இன்று .......
மனிதனாக பிறந்து அணைத்தையும் வேடிக்கை பார்ப்பதற்கு வெட்கமும்,அவமானமும் கொள்கிறேன்.
மன்னிக்கவும் நண்பர்களே!

Anonymous said...

இந்த மாதிரி போலி சூழலியலாளர்ளை நெருக்கி கேள்வி கேட்டால், அப்புறம் எப்படி பாசு இந்த பழங்குடியினரை முன்னேற்றி நம்மைப் போல நாகரிமாக வாழ வைப்பது என்று நம்மைக் கேட்பார்கள். மலை காடுகளை வெட்டி என்ன தனிமங்கள் கிடைத்தாலும் ஏற்றுமதி செய்து அரசியல்வாதியும் கார்பரெட்டுகளும் காசு பார்க்க எல்லா தகிடு தத்தமும் செய்வார்கள். கேட்டால் அப்பதான் இந்தியா வளர்ச்சி அடைந்து வல்லரசாக முடியும் என்று நம் வாயை அடைப்பார்கள்.

செந்தில்குமார் said...

Hi,

I found this article.

செந்திலான் said...

I just referred this discussion link to Shekar's youtuble channel. Let him answer.. wait and see