Jun 9, 2015

பார்த்து செய்யுங்க

இரண்டு கேள்விகள் கேட்கிறேன். பதில் தெரிகிறதா என்று பாருங்கள்-

1. ரயில் வண்டியின் ஓட்டுநரை எப்படி அழைப்பார்கள்?
2. இந்தியாவில் எந்த நகரத்துக்கு முதன் முதலாக மின்சாரம் வந்தது?

இதையெல்லாம் கேட்பதனால் என்னை பெங்களூரின் மாவட்ட ஆட்சியர் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். நேற்று மாலை ஒரு மலையாளியின் கடையில்- தள்ளுவண்டிக்கடைதான் - என்றாலும் மூன்று பேர் வேலை செய்கிறார்கள். அந்தக் கடையை அரை மணி நேரம் அமர்ந்து பார்த்தால் மலைத்து போய்விட வேண்டும். அத்தனை டீயும் ,காபியும், எலுமிச்சை தேநீரும் விற்கிறார்கள்.  செவ்வாய் கிரகத்துக்கே போனாலும் கூட நாயர் டீக்கடை இருக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்? அப்பேர்ப்பட்டவர்கள் பெங்களூரில் இருக்கமாட்டார்களா? அந்தக் கடையில் ஒரு எலுமிச்சம் டீயை வாங்கிக் கொண்டு அருகிலிருக்கும் நாகலிங்க மரத்தடியில் அமர்ந்திருந்த போது சிவப்பு டீஷர்ட் அணிந்திருந்த பையன் வேக வேகமாக ஓடி வந்தான். ரெட் எஃப்.எம்மில் வேலை செய்கிறானாம். மைக்கை வாய்க்கு முன்பாக நீட்டி முதல் கேள்வியைக் கேட்டான்.

‘ரயில் எஞ்சினை ஓட்டுபவரை எஞ்சின் டிரைவர் என்பார்கள்’ என்றேன். 

‘மிதிவண்டியை ஓட்டுபவரை மிதிவண்டி டிரைவர் என்பீர்களா?’ என்று கேட்டுவிட்டு வேகமாக இன்னொருவரிடம் ஓடிவிட்டான்.

‘போடா....அந்த ஆண்டவனே என் பக்கம்’ என்று நினைத்துக் கொண்டேன். அப்படித்தான் போலிருக்கிறது. அவனுக்கு பின்னாலேயே இன்னொரு பெண். அந்த ஆண்டவன்தான் அனுப்பியிருக்க வேண்டும். அவளும் கண்ணில் தென்பட்டவர்களிடமெல்லாம் வரிசையாக கேள்வி கேட்டுக் கொண்டே வந்தாள். பெண் வந்து கேள்வி கேட்கும் போது தவறான பதிலைச் சொல்ல முடியுமா? அதுவும் ஜீன்ஸ் அணிந்த சிவந்த பெங்களூர் பெண். நெற்றியில் சரிந்திருந்த மூன்றே முக்கால் முடியையும் சரி செய்துவிட்டு, கீழே இறங்கியிருந்த கண்ணாடியை தூக்கிவிட்டு கண்ட கண்ட சாமியையும் வேண்டிக் கொண்டேன். ஆனால் பிரயோஜனமில்லை. அத்தனை சாமிகளும் அவளைத்தான் சைட் அடித்திருப்பார்கள் போலிருக்கிறது. எனக்கு எதிராக சதி செய்துவிட்டார்கள். இரண்டாவது கேள்வியை அவள்தான் கேட்டாள். 

அறிவுப்பூர்வமாக கண்களை மூடி யோசித்து ‘மும்பை’ என்றேன். 

எதுவுமே சொல்லாமல் அடுத்த ஆளுக்கு நகர்ந்துவிட்டாள். அடுத்தவன் எந்த சாமியை எல்லாம் கும்பிட்டுக் கொண்டிருந்தானோ தெரியவில்லை. ‘எச்சூச்சுமீ...பதில் சரியா?’ என்றதற்கு ‘கூகிள் இட்’ என்கிறாள். அது எனக்குத் தெரியாதா? வந்து பதில்களைத் தேடினால் இரண்டுமே தவறான பதில். இப்படித்தான்- அழகான பெண்கள் கேள்வி கேட்கும் போதெல்லாம் கோட்டைவிட்டுவிடுகிறேன். இப்படியெல்லாம் திடீரென்று வருவார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?

மூன்றாவது படிக்கும் போது தம்பியின் ஆசிரியை வரச் சொல்லியிருந்தார். அழகான டீச்சர் அவர். அழைத்தவர் இலவச பேருந்து பாஸ் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான விவரங்களைக் கேட்டார். அப்பொழுது அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார். வாழ் நாளிலேயே அழகான இளம்பெண் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி பாராட்டு வாங்கிய ஒரே தருணம் அதுதான். அதன் பிறகு தருணங்களும் வாய்ப்பதில்லை. வாய்த்த தருணங்களிலும் ஜெயித்ததில்லை. 

மற்ற பெண்களை விடுங்கள். தாலி கட்டிய மனைவியின் கேள்விகளுக்காவது பதில் சொல்ல முடிகிறதா? ஒன்றாம் தேதியன்று எட்டாயிரம் ரூபாய் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இப்பொழுது ஏன் ஆறாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என்று கேட்கிறாள். பெட்ரோல் அடித்தேன்; பையனுக்கு பென்சில் பாக்ஸ் வாங்கினேன் என்று என்னதான் சொன்னாலும் கணக்கு சரியாக வராமல் ஒரே அக்கப்போராகிவிட்டது. இரண்டு தடவை ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கிறேன். ஆனால் என்ன செலவு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நினைப்பை இங்க வெச்சுட்டு சுத்துனாத்தானே ஞாபகம் இருக்கும்’ என்கிறாள். அவள் சொல்வதும் சரிதான். நினைப்பு என்ன குதிரையா? மாடா? கயிறு போட்டு கட்டி வைக்க. யாராவது நடந்து போனால் போதும். வால் பிடித்துக் கொண்டே ஓடிவிடுகிறது. இந்த ஊரில் ஒருத்தர் இரண்டு பேரா நடந்து போகிறார்கள்? சாரிசாரியாக போகிறார்கள். சுடிதார் சுடிதாராகவும், ஜீன்ஸ் ஜீன்ஸாகவும் கூடத்தான் போகிறார்கள். ஓடுகிற நினைப்பை இழுத்துக் கொண்டு வருவதற்குள் நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்.

நல்லவேளையாக இன்று காலையில் எதுவுமே கேட்கவில்லை. இவன் எந்தக்காலத்திலும் திருந்தமாட்டான் என்று நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது.  ‘நீ இளம்பெண்ணாக இருப்பதற்குள் ஒரு முறையாவது சரியான பதில்களைச் சொல்லி பாராட்டு வாங்கிவிடுகிறேன்’ என்று மனதுக்குள் உறுதியெடுத்திருக்கிறேன். வேறு இளம்பெண்களிடம்தான் பாராட்டு வாங்க முடிவதில்லை. இவளிடமாவது வாங்கி விட வேண்டும். பார்க்கலாம்.

அதெல்லாம் இருக்கட்டும்.

வியாழக்கிழமை வலையேற்றப்பட்ட தினமணி கட்டுரையை எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை. பிரச்சினை என்னவென்றால் மாமனார் இந்த தினமணி கட்டுரைகளை தொடர்ந்து வாசித்துவிடுகிறார் போலிருக்கிறது. நாசூக்காக ‘இதையெல்லாம் யாராச்சும் படிக்கிறாங்களா?’ என்கிறார். ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை. கேட்கத்தானே செய்வார்? அவரிடமெல்லாம் சரணடைய முடியாது. ‘லட்சக்கணக்கில் வாசிக்கிறார்கள்’ என்று அடித்துவிட்டிருக்கிறேன். எப்படியும் நம்பியிருக்க மாட்டார். ஆனாலும் விடக் கூடாது. 

நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் அல்லவா? ஏதாவது பார்த்து செய்யுங்க!

இன்று எழுதப்பட்ட மற்றொரு கட்டுரை: தி.மு.க

9 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

//அவரிடமெல்லாம் சரணடைய முடியாது// No need. I've just read that. A peace of information through movie and you have found it. Nice!

Shankar said...

Hi,
Never knew you wrote at the Dinamani too. read the article. Good. You have a way of connecting the anectodes. remembering it is one thing and inserting it aptly another.
regards
Shankar

ilavalhariharan said...

அந்த இரு கேள்விகளுக்கும பதில் சொல்லவேயில்லையே....சொல்லிடுங்க....பாவம் பயபுள்ளைங்க பொழச்சிக்கட்டும்
இளவல் ஹரிஹரன்

Jaikumar said...

1. Loco driver
2. "Pengal"uru.

Vidaikal sariya?

Sundar Kannan said...

1. LOCO Pilot
2. CalCutta

Muralidharan said...

If any one ask questions like this, first ask some question where he / she can't answer it
இது எப்படி இருக்கு ;)

சேக்காளி said...

//மூன்றாவது படிக்கும் போது தம்பியின் ஆசிரியை வரச் சொல்லியிருந்தார். அழகான டீச்சர் அவர்.//
மூணாங்கிளாசு படிக்கும் போதே ஆரம்பிச்சாச்சா.அப்ப சரி.

சேக்காளி said...

மகாநதி படத்துல சுகன்யாவோட அப்பா பேரு என்ன? ன்னு நீங்க திருப்பி கேட்டுருக்கணும்.

Anonymous said...

தாலி கட்டிய மனைவியின் கேள்விகளுக்காவது பதில் சொல்ல முடிகிறதா? ஒன்றாம் தேதியன்று எட்டாயிரம் ரூபாய் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இப்பொழுது ஏன் ஆறாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என்று கேட்கிறாள். பெட்ரோல் அடித்தேன்; பையனுக்கு பென்சில் பாக்ஸ் வாங்கினேன் என்று என்னதான் சொன்னாலும் கணக்கு சரியாக வராமல் ஒரே அக்கப்போராகிவிட்டது. இரண்டு தடவை ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கிறேன். ஆனால் என்ன செலவு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நினைப்பை இங்க வெச்சுட்டு சுத்துனாத்தானே ஞாபகம் இருக்கும்’ என்கிறாள். அவள் சொல்வதும் சரிதான். நினைப்பு என்ன குதிரையா? மாடா? கயிறு போட்டு கட்டி வைக்க. யாராவது நடந்து போனால் போதும். வால் பிடித்துக் கொண்டே ஓடிவிடுகிறது. இந்த ஊரில் ஒருத்தர் இரண்டு பேரா நடந்து போகிறார்கள்? சாரிசாரியாக போகிறார்கள். சுடிதார் சுடிதாராகவும், ஜீன்ஸ் ஜீன்ஸாகவும் கூடத்தான் போகிறார்கள். ஓடுகிற நினைப்பை இழுத்துக் கொண்டு வருவதற்குள் நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்.

exactly mr.mani....