Jun 1, 2015

வேர்ப்புள்ள

அப்பாவின் அப்பத்தாயா வள்ளியாம்பாளையத்துக்காரர். அப்பத்தாயா என்றால் தந்தை வழிப்பாட்டி. எங்கள் ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது அந்த ஊர். அந்தக்காலத்தில் சிம்ரன், நயன்தாரா என்று பெயர் வைத்திருக்கப் போகிறார்கள்? பலனாயாள் என்று வைத்திருக்கிறார்கள். மாணிக்கத்துக்கு மும்பையில் இன்னொரு பெயர் இருந்தது போல பலனாயாளுக்கும் இன்னொரு பெயர் உண்டு. வேர்ப்புள்ள. வேர் மாதிரி ஒல்லியாக இருப்பாராம். அதனால் இந்தப் பெயர். ஆள்தான் ஒல்லி. ஆனால் வேர்ப்புள்ள சாதாரணமான ஆள் இல்லை. படு லோலாயம் செய்கிற வகையறா. 

கட்டிக் கொடுத்த ஊரில் வேர்ப்புள்ளையின் குறும்புகள் படு பிரசித்தம் ஆகியிருக்கின்றன. யாராக இருந்தாலும் தயங்காமல் சேட்டையைக் காட்டிவிடுவார் என்பதால் அவரைப் பார்த்து சற்று பயந்தும் கூட இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. பலனாயாளின் குறும்புகளைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து பார்த்திருக்க வேண்டும் என்னும் ஆசை தோன்றும்படியான குறும்புகள் அவை.

அப்படித்தான் ஒரு சமயம் வள்ளியாம்பாளையத்தில் வேர்ப்புள்ளையின் சொந்தக்காரர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. தகவல் வந்திருக்கிறது. இது நடந்து எழுபது அல்லது எண்பதாண்டுகள் ஆகியிருக்கும். அந்தக் காலத்தில் செல்போனா? வாட்ஸப்பா? சந்தைக்குச் செல்பவர்கள் அல்லது வேறு சோலியாக ஊரைத் தாண்டியவர்கள் வேர்ப்புள்ளையின் வீட்டுக்கு வந்து தகவலைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த நோயாளி ஜீவனைப் போய் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று வேர்ப்புள்ள துடித்திருக்கிறார். ஆனால் தனியாகச் செல்வதெல்லாம் அந்தக் காலத்தில் சாத்தியமில்லாத காரியம். மைலுக்கு ஒரு வீடுதான் இருந்திருக்கும். ஆளரவம் என்பதே அதிசயம்தான். போதாக்குறைக்கு பெண்கள் பதக்கம் தொங்கட்டானெல்லாம் அணிந்திருப்பார்கள். போகிற வழியில் திருடன் எவனாவது குறுக்காட்டிவிடுவான் என்று வீட்டிலும் அனுப்ப தயங்கியிருப்பார்கள். துணைக்கு ஆள் இருந்தால் செளகரியமாக இருக்கும். யாரைப் பிடிப்பது?  அதே வள்ளியாம்பாளையத்திலிருந்து எங்கள் ஊருக்கு கட்டிக் கொடுப்பட்டிருந்த வள்ளியமாள் என்கிற இன்னொரு ஆயாவின் வீட்டிற்கு ஓடியிருக்கிறார். இருவரும் ஆத்மார்த்த ஸ்நேகிதிகள்.

அந்த ஆயா பழைய சோற்றைக் குடித்துவிட்டு மதியானம் கண்ணயர்ந்திருக்கிறது. ‘ஊர்ல சொந்தக்கார மனுஷனுக்கு என்னவோ நோவு வந்துருச்சாமா...வந்தீன்னா ஒருக்கா போய் பார்த்துட்டு பொழுது சாயறதுக்குள்ள வந்துடலாம்’ என்று வேர்ப்புள்ள கேட்டிருக்கிறார். அன்றைய தினத்தில் வள்ளியமாயாவுக்கு ஊருக்குச் செல்லுகிற மனநிலை எதுவும் இல்ல. நெட்டி முறித்தபடி ‘இன்னோரு நாளைக்கு போய்க்கலாம்..எனக்கே தலையை நோவுது’ என்று வேர்ப்புள்ளையிடம் மறுத்துவிட்டார். வேர்ப்புள்ளைக்கு மனமே கேட்கவில்லை. என்னதான் கேட்டாலும் அந்த வள்ளியமாயா கிளம்புவதாகத் தெரியவில்லை.

‘இவ சந்தைக்கு கூப்ட்டா கூடையைத் தூக்கிட்டு போறேன்..வாய்க்காலுக்கு போலாம்ன்னா சரின்னுட்டு போறேன்...கலத முண்ட...இப்போ ஊருக்கு வான்னா வர மாட்டீங்குறா’ என்று கடுப்பானவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் வள்ளியம்மாளின் அருகில் அமர்ந்து கொண்டார். வள்ளியம்மாளும் திருட்டு ஆயாதான். ‘தல நோவுதுன்னு சொல்லிட்டோம்..நெசமாச் சொல்லுறேனான்னு கண்டுபுடிக்கிறதுக்கு வேண்டி பக்கத்தால வந்து உக்காந்துட்டா.. என்ன ஆனாலும் சரி கண்ணைத் தொறந்துடக் கூடாது’ என்று கண்களை மூடிக் கொண்டு படுத்துவிட்டார். அவர் நினைத்தது போலவே வள்ளியம்மாளின் தலையைத் தடவிய வேர்ப்புள்ள மெதுவாகக் காதுத் தொங்கட்டானைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். அந்தக் காலத்தில் பெரிய தொங்கட்டானாக போட்டு கம்மல் ஓட்டை பெரியதாக இருக்கும் அல்லவா? வள்ளியம்மாளுக்கும் கம்மல் ஓட்டை பெரியதாக இருந்திருக்கிறது. வேர்ப்புள்ள கமுக்கமாக அந்த ஓட்டையில் ஒரு பூட்டை மாட்டி சாவியை எடுத்துக் கொண்டார். தான் மிகச் சிறப்பாக நடிப்பதான நம்பிக்கையில் வள்ளியம்மாளும் கண்களையே திறக்காமல் படுத்திருக்கிறார். 

‘சரி நீ படுத்துக்க’ என்று சொல்லிவிட்டு ‘வப்பானோளி...என்ரகிட்டயேவா’ என்று சாவியை எடுத்துக் கொண்டு வேர்ப்புள்ள வீட்டுக்கு வந்துவிட்டார். காதில் பாரம் அதிகரிப்பதைத் தெரிந்து கொண்ட வள்ளியம்மாள் தடவிப் பார்க்கவும் காதில் பூட்டுத் தொங்கியிருக்கிறது. வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் தோட்டங்காட்டுக்கு போயிருக்கிறார்கள். யாராவது வரும் வரைக்கும் வெளியிலும் போக முடியாது. பூட்டுதான் காதில் தொங்குகிறதே! கதவை எப்படிப் பூட்ட முடியும்? பண்ணையத்தாள்கள் யாரிடமாவது சொல்லி வேர்ப்புள்ளை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்தான். ஆனால் விவகாரம் வெளியில் தெரிந்தால் ஊருக்குள் மானம் போய்விடும். ஒரு பக்கம் பூட்டு காது மடலை இழுக்கிறது. இன்னொரு பக்கம் எப்படி சாவியை வாங்குவது என்று மண்டைக்குள் யோசனை ஓடுகிறது.

வீட்டுக்குள்ளேயே கறுவிக் கொண்டு அமர்ந்துவிட்டார். பொழுது சாய்கிற சமயத்தில் வீட்டுக்கு யாரோ வரவும் நடந்த விவகாரங்களை எல்லாம் சொல்லிவிட்டு தலையில் முக்காடு போட்டபடி வேர்ப்புள்ளையைத் தேடிக் கிளம்பியிருக்கிறார். மாலை நேரம் என்பதால் வாசல் தெளித்துவிட்டு பெண்கள் வீதிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘எவளோ எப்படியோ போகட்டும்’ என்று அந்தக் கால பெண்மணிகள் சாதாரணமாக விடுவார்களா? ஆளாளுக்கு கேள்வி கேட்டிருக்கிறார்கள். வள்ளியம்மாளும் என்ன என்னவோ சொல்லிச் சமாளித்து வேர்ப்புள்ளையின் வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

இதோடு முடிந்திருந்தால் பெரிய ட்விஸ்ட் இல்லை. 

வேர்ப்புள்ளதான் லோலாயம் பிடித்தவராயிற்றே. ‘அட ஆமா..பூட்டிட்டு வந்தேன்..அப்புறம் அதை மறந்தே போய்ட்டேன்..இரு தேடிப்பார்க்கிறேன்’ என்று அப்படியும் இப்படியும் வீட்டுக்குள் அலைந்தவர் ‘வள்ளிக்கா...சாவி எங்கேயோ கீழ உழுந்துருச்சாட்டிருக்குது...வர்றியா போய் தேடிப்பார்க்கலாம்’ என்று அழைத்திருக்கிறார். 

‘இப்படியே எப்படி வேர்ப்புள்ள ஊருக்குள்ள வர்றது?’ என்று வள்ளியமாயா கேட்கவும் 

‘முக்காட்ட போட்டுட்டே வா...இந்நேரத்துல நான் மட்டும் எப்படி தனியா போய் தேடுறது’ என்று கொக்கி போட்டிருக்கிறார். 

வள்ளியம்மாளுக்கு வேறு வழியில்லை. சாவியைக் கண்டுபிடித்தாக வேண்டும். வீதி விளக்குகள் இல்லாத காலம் என்பதால் கை விளக்கு ஒன்றை ஏந்திக் கொண்டு தேடியிருக்கிறார்கள். போகிற வருகிறவர்களிடமெல்லாம் ‘மாப்பிள்ளை இவர்தான்..ஆனா சட்டை என்னுடையது’ என்பது மாதிரியாக- அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ - ‘இவ காதுல பூட்டை மாட்டி சாவியைத் தொலைச்சுட்டேன்..அதான் தேடிட்டு இருக்கோம்’ என்று வம்படியாகச் சொல்லியிருக்கிறார். 

சிலர் சிரித்துவிட்டு போயிருக்கிறார்கள். சிலர் மண்டியைப் போட்டு இட்டேரி முழுவதும் தேடி உதவியிருக்கிறார்கள். அரை மணி நேரம் தேடிவிட்டு ‘அட இரு...அரிசி மொடாவுக்குள்ள வெச்சேன்..இப்போத்தான் ஞாபகம் வருது’ என்று அழைத்துச் சென்று எடுத்துத் தந்தாராம். ஆனால் ஊர் முழுவதும் இந்த விவகாரம் பிரபலமாகிவிட்டது. அதன் பிறகு வள்ளியம்மாளுக்கு பூட்டுக்கார ஆயா என்று பெயர் வந்துவிட்டது. இவ்வளவு பெரிய விவகாரத்தினாலும் கூட இருவரும் சண்டை எதுவும் பிடித்துக் கொள்ளவில்லை. விளையாட்டாக எடுத்துக் கொண்டு கடைசி வரைக்கும் அதே நட்போடுதான் இருந்திருக்கிறார்கள். விகல்பமில்லாத சேட்டைகள். இப்படியெல்லாம் இந்தக் காலத்தில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மூக்குக்கு மேலாக கோபம் வருகிறது. எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு எல்லாவற்றையும் சிக்கலாக்கி வைத்திருக்கிறோம். ஆண் இதைத்தான் செய்ய வேண்டும். பெண் இதைத்தான் செய்ய வேண்டும். இந்த வயதில் இதையெல்லாம்தான் செய்ய வேண்டும் என ஏகப்பட்ட செயற்கையான கட்டுப்பாடுகள். 

அடுத்தவர்களுக்கு பாதிப்பில்லாமல், மனம் நோகாமல், விளையாட்டுத்தனமாக எவ்வளவு குறும்புகளை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறேன். வேர்ப்புள்ள என்னுடைய பாட்டி. அந்த வேர்ப்புள்ளையின் ஜீன் ஒன்றாவது எனக்கும் வந்திருக்கும் அல்லவா? இதுவரையிலான என்னுடைய குறும்புகள், நகைச்சுவை, சேட்டைகள் அவரிடமிருந்தும் வந்து சேர்ந்த துளியாக இருக்கக் கூடும். இதில் வெட்கப்படவும் மறைக்கவும் எதுவும் இல்லை. ‘அதை எழுத வேண்டாம் இதை எழுத வேண்டாம்’ என்றெல்லாம் யாராவது சொல்லும் போது ஏன் அப்படி வடிகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நாம் என்னவாக இருக்கிறோமோ அதை அப்படியே வெளியில் காட்டிவிடுவது என்பது மிகப்பெரிய சுதந்திரம். Being Myself!

புனிதமானவனாகவும், ஒழுக்க சீலனாகவும், யோக்கியசிகாமணியாகவும் காட்டிக் கொண்டு எதைச் சாதிக்கப் போகிறோம்? குறும்புகளும், விளையாட்டுகளும், எதிர்பால் ஈர்ப்பும், காமமும், பிழைப்பதற்கான எத்தனங்களும் வெகு இயல்பான விஷயங்கள். அதையெல்லாம் மறைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மறைத்து வைத்தது ஒரு சமயத்தில் வெளியே தெரியும் போதுதான் அதுவரையிலும் கட்டி எழுப்பிய நம்முடைய பிம்பம் சிதைந்து சமூகத்தின் முன்னால் நாசக்கேடாகிப் போகிறோம். கடந்த காலத்தில் செய்ததையும் நிகழ்காலத்தில் செய்வதையும் எந்தக்காலத்திலும் ஒத்துக் கொள்கிற நேர்மையும் தைரியமும் இருந்தால் போதும். அந்த தைரியத்தையும் நேர்மையையும் நோக்கித்தான் நகர வேண்டும். அதன்பிறகு எவ்வளவு பெரிய நல்ல காரியங்களையும் புன்னகைத்தபடியே செய்யலாம்.

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

ஓ அப்ப நீங்க "வேர்ப்பேரன்"

சேக்காளி said...

//அந்த வேர்ப்புள்ளையின் ஜீன் ஒன்றாவது எனக்கும் வந்திருக்கும் அல்லவா? இதுவரையிலான என்னுடைய குறும்புகள், நகைச்சுவை, சேட்டைகள் அவரிடமிருந்தும் வந்து சேர்ந்த துளியாக இருக்கக் கூடும்.//
வேலி தாண்டும் கிளைகளை வெட்டி எறிகிறீர்களே
மண்ணிற்குள் நழுவும் வேர்களை என்ன செய்வீர்கள்?
என்ற அர்த்தத்தில் ஒரு கவிதை (கவிக்கோ எழுதியதென நினைக்கிறேன்) ஞாபகத்தில் வந்து செல்கிறது.