May 5, 2015

கடை விரிக்கப்படும் அந்தரங்கங்கள்

சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த பெண்ணொருத்தியை இரண்டு ஆண்கள் சேர்ந்து வறுத்தெடுக்கும் ஒரு ஆடியோவைக் கேட்க நேர்ந்தது. அவள் ஒரு பையனைக் காதலித்திருக்கிறாள். அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு இன்னொருவனோடு சுற்றத் தொடங்கியிருக்கிறாள். இரண்டு பையன்களும் சேர்ந்து அவளை மிரட்டுகிறார்கள். ‘என் கூட மூணு தடவ படுத்த...அப்போ தெரியலயா?’ என்று முதல் காதலன் கேட்கிறான். அவளுடைய வாயிலிருந்தே ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்கான கேள்வி அது. அவள் மறுப்பதும் இல்லை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அந்த உரையாடலை பதிவு செய்து வாட்ஸப்பில் அனுப்பி வைத்துவிட்டார்கள். பிறகு யூடியூப்பில் ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் பரவிவிட்டது.

சென்ற வாரத்தில் சத்தியமங்கலத்தில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ஒரு மாணவன் இரண்டு மாணவிகளோடு படம் எடுத்திருக்கிறான். எசகுபிசகான படங்கள். யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. வாட்ஸப்பில் பரவிவிட்டது. மூன்று பேரையும் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டதாகச் சொன்னார்கள். பிரச்சினை முடிந்துவிடுமா என்ன? இப்படியான உதாரணங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் தீராது. இணையத்தில் அந்தரங்கமான உரையாடல்களைத் தேடிப் பார்த்தால் தெரியும்- கொட்டிக் கிடக்கின்றன. அந்தரங்கம் என்று அவற்றைச் சொல்ல முடியாது. பாலியல் வடிகட்டிகள் அவை. திருப்தி செய்யப்படாத தனது பாலியல் இச்சைகள் இந்தப் பேச்சுகளின் வழியாக மட்டுப்படுவதாக மனம் நம்பத் தொடங்குகிறது. இணையம் நமக்கு வழங்கியிருக்கும் சுதந்திரத்தின் சாத்தியங்களை முயன்று பார்ப்பது இயல்பானதுதான். ஆனால் அது ஏன் இப்படி பரப்பப்படுகிறது? ஒரு பெண் மற்றும் ஆணோடு அந்த விவகாரம் முடிந்துவிடுவதில்லை. அதன் வலியும் சங்கடங்களும் அவர்களின் குடும்பங்களுக்கும்தான் கடத்தப்படுகிறது. 

இத்தகைய ஆடியோக்களையும் வீடியோக்களையும் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது வேறொருவரோ வெளியிட்டவுடன் பரப்புகிற வேலையை இந்த உலகம் கையில் எடுத்துக் கொள்கிறது. இத்தகையை விவகாரங்கள் இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் பகிரப்படுகின்றன. அதுவும் நடிகையின் பெயர் அந்த விவகாரத்தில் இருந்தால் கேட்கவே தேவையில்லை. த்ரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராதிகா ஆப்தேவில் ஆரம்பித்து சிம்பு மிரட்டுகிற ஆடியோ வரைக்கும் கணக்கு வழக்கே இல்லை. பிரபலங்களுக்கு மன உளைச்சல் இருக்கும்தான் என்றாலும் ‘ச்சே ச்சே...அது நாங்களே இல்லை’ என்று சொல்லிவிடுகிறார்கள். அதன் பிறகு இந்த உலகமும் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் திருச்சிப் பெண்ணும், சத்தியமங்கலக் கல்லூரி மாணவியும் இன்னும் பல்லாயிரக்கணக்கான சாமானியர்களும் இந்த பாதிப்புகளிலிருந்து வெளியில் வருவது சாத்தியமேயில்லை. அவர்களின் எதிர்காலத்தை சிதைத்து வீசிவிட்டுப் போய்விடுகின்றன அந்த ஒன்றரை நிமிட பதிவுகள்.

இணையத்தின் வழியாக உருவாகும் வெர்ச்சுவல் களமானது மனித மனத்தின் இயல்புத் தன்மையோடு சடுகுடு ஆடத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தச் சமூகம் பார்த்திராத விசித்திரமான மனிதர்களையும் அந்த மனிதர்களின் வக்கிரங்களையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். சமூக ஊடகங்களை கோழியின் காலில் கட்டப்பட்ட சிறுகத்தி என்று சொல்லலாம். அது நம் ஆழ்மன ஆசைகளையும் வக்கிரங்களையும் கிளறிக் கொண்டேயிருக்கின்றன.  இங்கு யாருக்கும் எந்தவிதமான மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நம் அடையாளம் தெரிந்துவிடும் என்கிற பயம் இல்லை. அடுத்தவர்களின் அடிப்படைச் சுதந்திரத்தைக் கூட மதிக்கத் தேவையில்லை. முகத்தை மறைத்துக் கொண்டு சர்வசாதாரணமாக இன்னொரு மனிதனின் மீது கத்தியை வீசும் கூலிப்படையின் மனநிலைதான் இணையத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. ஏதாவதொரு ஒரு நிழற்படம் கிடைத்தால் போதும்- பகிரத் தொடங்குகிறார்கள். அந்தரங்கமான உரையாடல் கிடைத்தால் அதையும் பகிர்ந்து குதூகலிக்கிறோம். வீடியோ கிடைத்தால் சொல்லவே தேவையில்லை. இதுவொரு போதை. இன்னொரு மனிதனைக் கிழித்துக் காயப்படுத்தும் போதும் அவனது அந்தரங்கத்தைக் குதறித் தொங்கவிடும் போதும் அவனும் அவனது குடும்பமும் என்னவிதமான சிக்கல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் ஆளாவார்கள் என்று யோசிப்பதேயில்லை. நம்முடைய தேவையெல்லாம் அந்த சொற்ப நேர அல்ப சந்தோஷம்தான். அடுத்தவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?

எதனால் இப்படியொரு மனநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று யோசித்தால் மிகச் சுவாரஸியமான இடத்துக்கு நம்மைக் கொண்டு போய் நிறுத்தும். இந்த அவசர உலகத்தில் திண்ணைகளில் அமர்ந்து பேசும் கிசுகிசுக்கள் இல்லை. கல்யாண வீடுகளில் ஆற அமர ஊர்க்கதைகளைப் பேசும் நிலைமை இல்லை. டீக்கடைகளிலும் சலூன்களிலும் நாட்டு நடப்புகளைப் பேசுவதில்லை. குடும்பத்திலேயே கூட சக மனிதரிடம் மனம் விட்டுப் பேசி எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும்? பேருந்திலும் ரயிலிலும் சகபயணிகளிடம் பேசுகிறோமோ? இறுகிப் போய்க் கிடக்கிறோம். எந்நேரமும். எல்லாவற்றிலும் அவசரம். ஓடிக் கொண்டேயிருக்கிறோம். இடைப்பட்ட நேரத்தில் எல்லாம் கணினித் திரையும் மொபைல் திரையும் தோள் கொடுக்கின்றன. அடுத்தவர்களிடம் வாயைத் திறந்து பேசாத விவகாரங்களையெல்லாம் இந்தத் திரைகளின் வழியாக பேசுவதற்கு எத்தனிக்கிறோம். எங்கேயோ இருக்கும் ஒரு முகம் தெரியாத மனிதனின் வழியாக நமக்கு அடுத்தவனின் கிசுகிசுக்களும் அந்தரங்கங்களும் வந்து சேர்கின்றன. அதை இன்னொரு முகம் தெரியாத மனிதனுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து ஆனந்தம் அடைகிறோம். இது ஒருவிதமான வடிகால். அதனால்தான் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் இறுகிய மனித மனத்தின் அவுட்-லெட் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

இணையத்தில் இன்னொரு வசதியும் இருக்கிறது. அடுத்தவர்களின் அந்தரங்களைப் பார்த்தும் குதூகலிக்கும் நம் ஆழ்மன வக்கிரத்தை வேறு யாருக்கும் காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வெகு கமுக்கமாக பார்த்து அனுபவித்துவிட்டு வெளியுலகில் நல்லவனாகவே வேஷம் கட்டிக் கொள்ளலாம். இப்படி இணையம் உருவாக்கித் தரும் கட்டுப்பாடற்ற சுதந்திரமும், சமூகத்தில் சக மனிதரோடு பகிர்ந்து கொள்ளத் தயங்கும் விவகாரங்களையெல்லாம் இணையத்தில் யாரிடம் வேண்டுமானாலும் எந்த யோசனையுமில்லாமல் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புகளும் மனிதர்களைத் தறிகெட்டு ஓட வைக்கின்றன. பக்கத்து வீட்டுக்காரர்களிடம், குடும்பத்தாரிடம் என யாரிடமும் பேசாமல் கெட்டிப் பட்டுக் கிடக்கும் இந்த மனதை ட்விட்டரும், ஃபேஸ்புக்கும், கூகிள் ப்ளஸ்ஸும் கிளறிவிட்டுக் கொண்டேயிருக்கின்றன. நம்மாழ்வார் சொல்வார்- ‘ட்ராக்டர்களைப் பார்த்தால் உழுவது போலத்தான் தெரியும் ஆனால் அவை உழுவதில்லை மேல்மட்ட மண்ணை மட்டும் கிளறிவிடுகின்றன ஆனால் ட்ராக்டரின் எடையைத் தாங்கமாட்டாமல் அடியில் இருக்கும் மண் மேலும் மேலும் கெட்டிப்பட்டுப் போகிறது’ என்று. அப்படித்தான் சமூக ஊடகங்களும். இப்போதைக்கு வேண்டுமானால் சக மனிதர்களிடம் கிடைக்காத உறவை இந்தச் சமூக ஊடகங்கள் நமக்கு உருவாக்கித் தருவதைப் போன்ற பிம்பம் இருக்கலாம். ஆனால் நம்மை மேலும் மேலும் இறுகச் செய்து மனிதத்தைக் கூறு போட்டு வீசும் வேலையைத்தான் படுவேகமாகச் செய்து கொண்டிருக்கின்றன.

(மே 06, 2015 வரைக்குமான ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் வாட்ஸப் வக்கிரங்கள் என்ற கட்டுரையில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களின் சற்றே விரிவான வடிவம்)