May 5, 2015

புனிதத் திருடர்கள்

ஒரு மனிதர் சிறுகதை, விமர்சனம் என்று எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய எழுத்து நன்றாக இருக்கும். அவரிடம் ஒரு கெட்ட பழக்கம்- குடி அதிகம். குடும்பத்தைக் கண்டுகொள்வதில்லை என்பார்கள். அவரும் அதை வெளிப்படையாக புலம்பி எழுதியதைப் படித்திருக்கிறேன். திடீரென்று உச்சந்தலையில் இடி இறங்கியதைப் போல தனக்கு ஞானம் வந்து திருந்திவிட்டதாக அறிவித்தார். நம்மூரில்தான் திருந்திவிட்டதாகச் சொன்னால் நம்பிவிடுவார்களே! பரிதாபம் வேறு வந்துவிடும். ‘அட நல்லவனாயிட்டானப்பா’ என்று வலியச் சென்று பேசியிருக்கிறார்கள். பழைய இரும்புக் கடை ஆரம்பித்து பிழைத்துக் கொள்ள்வதாகவும் அதற்கு கடன் தர முடியுமா என்று கேட்டிருக்கிறார். நண்பர் ஒருவர் லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். அதோடு சரி. காணாத நாய் கருவாட்டைக் கண்ட மாதிரி ஒரு லட்ச ரூபாயைத் தூக்கிக் கொண்டு பதுங்கிவிட்டார். அடுத்த நாளிலிருந்து இணையப்பக்கமே வருவதில்லை. விசாரித்தால் அண்டர்வேர் தெரிய போதையில் கிடப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குடிகாரர் இன்னமும் வேறு யாராவது தலையில் அம்மியை வைத்து அரைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

சொம்பும் போச்சுடா கோயிந்தாதான்.

இன்னொரு மனிதர். அவர் பெண்ணிய சூறாவளியின் கணவர். இப்பொழுது தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். சில வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊர்க்காரர் ஒருவரிடம் ஐந்தாறு லட்சங்களை வாங்கியிருக்கிறார். இருவரும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். பணத்தை வாங்கிய போதே தேதி குறிப்பிடப்படாத காசோலைகளையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ‘நான் சொன்னவுடன் வங்கியில் செலுத்தி பணத்தை வாங்கிக் கொள்ளலாம்’ என்றாராம். ‘எவ்வளவு தங்கமான மனுஷன்’ என்று இவரும் நம்பி வாங்கி வைத்துக் கொண்டார். ஃபேஸ்புக், ஜிமெயில் என எல்லாவற்றிலும் ஆன்லைனில் இருக்கிறார். ஆனால் பணத்தைக் கேட்டால் பதில் சொல்வதேயில்லை. எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துப் பார்க்க முடியும்? நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகிவிட்டது. காசோலையை வங்கியில் போட்டிருக்கிறார். ‘யோவ் அவன் அக்கவுண்ட்டையே க்ளோஸ் பண்ணிட்டான்’ என்று வங்கிக்காரர்கள் பொடனியிலேயே அடித்திருக்கிறார்கள். 

‘வக்கீல் நோட்டீஸ் அனுப்புங்களேன்’ என்றேன். 

‘என்னையப் பார்த்தா உங்களுக்கு காமெடியனா தெரியுதா?...எந்த அட்ரஸூக்கு அனுப்பறது? எங்க இருக்கான்னே தெரியாமத் தேடிட்டு இருக்கேன்’ என்கிறார். நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை. இப்படித்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நட்பு, நம்பிக்கை என்கிறார்கள். ஆதாயம் கிடைத்தவுடன் எந்த தயவுதாட்சண்யமும் இல்லாமல் கம்பி நீட்டிவிடுகிறார்கள். இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க முடியாமல் அல்லாடுபவர்களைத் தெரியும். ஒரே வாரத்தில் கொடுத்துவிடுவதாகச் சொல்லித்தான் வாங்குகிறார்கள். ஆனால் ‘அண்ணா நாளைக்கு கொடுத்துடுறேன்’ என்று சொல்லிச் சொல்லியே சாவடிக்கிறார்களாம். 

இந்தக் காலத்தில் பணம் பிரதானமேயில்லை. எப்படியாவது சம்பாதித்துவிடலாம். அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அடுத்தவர்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் வழியாக உருவாகும் தொடர்புகளும்தான் முக்கியம். இதை நிறையப்பேர் புரிந்து கொள்வதேயில்லை. பணத்தைக் கண்ணில் பார்த்துவிட்டால் போதும்- எல்லாவற்றையும் சிதைத்துவிடுகிறார்கள். நம்பிக்கையாவது, விளக்கெண்ணையாவது. 

சமீபத்தில் நடந்த இன்னொரு விவகாரம் இது- சற்று பெரிய விவகாரமும் கூட. இலக்கியத்தைத் தூக்கி நிறுத்துவதாகச் சொல்லும் ஒரு மனிதர் ஒரு பெண்ணிடமிருந்து ஏழு லட்ச ரூபாயை வாங்கியிருக்கிறார். இலக்கியத்துக்கு விடிய விடிய சேவை செய்வதால் என்னுடைய குடும்பத்தை இழக்கிறேன். கைக்காசையெல்லாம் தொலைக்கிறேன் என்று அவ்வப்போது புலம்புகிற மனிதர் அவர். இந்தப் பெண்ணிடமிருந்து பணத்தை வாங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது கேட்டால் தரமுடியாது என்கிறாராம். மீறிப் பேசினால் ‘உனக்கும் எனக்கும் தொடர்பு இருந்ததாக வெளியில் சொல்லிவிடுவேன்’ என்று மிரட்டுகிறாராம். ‘அப்படியெல்லாம் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை’ என்று அந்தப் பெண் அழுகிறார். என்னதான் கதறினாலும் இந்த உலகம் நம்பவா போகிறது? ‘ஒருவேளை இருந்திருக்கும்’ என்பார்கள்.  எவ்வளவு அசிங்கம் பிடித்த காரியம் இது? சிலரை வைத்து பஞ்சாயத்தும் பேசியிருக்கிறார்கள். ‘அவள் அன்பளிப்பாகத்தான் தந்தாள். இப்பொழுது திருப்பிக் கேட்டால் எப்படித் தர முடியும்? கடனாகத்தான் கொடுத்தேன் என்று நிரூபிக்கச் சொல்லுங்கள்’ என்கிறாராம். அதிர்ச்சியில் வாயடைத்துப் போய்விட்டது. அன்பளிப்பாக ஏழு லட்சமா? பிரியங்கா சோப்ரா வந்து கேட்டால் கூட நூற்றுபத்து ரூபாய்க்கு மலர்கொத்து வாங்கித் தருவதோடு நின்று கொள்ளும் என்னைப் போன்ற கஞ்சப்பயல்களுக்கு இதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத தொகை.

‘நீங்க எதுக்கு கொடுத்தீங்க?’ என்று அந்தப் பெண்ணிடம் கேட்டால் ‘எழுதவே முடியல...படிக்கவே முடியல’ என்றெல்லாம் அந்த மனிதர் வருந்தினாராம். அதனால் கொடுத்தாராம். ஒருத்தன் எழுதவில்லையென்றாலும் படிக்க முடியவில்லையென்றாலும் குடியொன்றும் மூழ்கிப் போய்விடாது. எவ்வளவு பெரிய எழுத்தாளனாக இருந்தாலும் தான் எழுதப் போவதில்லை என்று பேனாவை மூடி வைத்தால் ஒரு வாசகனும் தீக்குளிக்கப் போவதில்லை. அப்புறம் எதற்குக் கொடுத்தார்? ‘அவன் கஷ்டப்படுவதாகச் சொன்னபோது கடனாகத்தான் கொடுத்தேன்....இப்பொழுது ஏமாற்றுகிறான்’ என்கிறார்.

இதுவரை அந்த மனிதரிடம் இது குறித்துக் கேட்கவில்லை. என்னவென்று போய்க் கேட்பது. உள்ளுக்குள் எத்தனையோ கச்சடாக்கள் இருக்கக் கூடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் தரப்பு நியாயம் என்றிருக்கும். அதை அவர் அடுக்குவார். நமக்கு எதுக்கு வம்பும் வழக்கும்? ஆனால் பணப்பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது உண்மை. வாங்கியவன் தர முடியாது என்கிறான். கொடுத்தவன் போராடிக் கொண்டிருக்கிறான். இதையெல்லாம் வெளிப்படையாக எழுதவும் முடிவதில்லை. கிசுகிசு பாணியில் எழுதுவதற்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் எழுதிவிட வேண்டும். திரும்பிய பக்கமெல்லாம் இப்படியான செய்திகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. நாம் சம்பாதிக்கிற ஒற்றை பைசா கூட சுலபமாகக் கிடைப்பதில்லை. கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கிறோம். அதை ஏன் கண்ட ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இழந்துவிட்டு வருந்த வேண்டும்? சற்றேனும் விழிப்பாக இருந்து கொள்ளலாம்.

இங்கு யாரையும் நம்ப வேண்டியதில்லை. சினிமாக்காரன், எழுத்தாளன், பதிப்பாளன், கவிஞன், புண்ணாக்கு என்கிற எந்த அடையாளத்துக்கு இங்கு புனிதத் தன்மையில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சங்கை அறுக்கிறார்கள். ஏமாறும் போதெல்லாம் முகத்தில் உமிழ்ந்துவிட்டுப் போகிறார்கள். அவன் துப்பிவிட்டு போனபிறகு துப்பிவிட்டான் என்று குதித்து என்ன பிரயோஜனம். துப்பினால் குத்திவிடுவான் என்று துப்புவதற்கு முன்பாக அவனுக்குத் தெரிய வேண்டும். அப்புறம் துப்புவானா?