May 4, 2015

பொம்பளச்சட்டி

ரங்கசாமி என்றொருவர் இருந்தார். இன்னமும்தான் இருக்கிறார். லுங்கியை பாவாடை மாதிரி அணிவதுதான் அவருடைய காஸ்ட்யூம். சட்டையணிந்து அதன் மீதாக துண்டை குறுக்குவாக்காக மாராப்பு போல இழுத்துவிட்டுக் கொள்வார். நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருக்கும் ரங்கசாமி கைகளை ஆட்டி வீசி பெண்களைப் போலவே நடப்பார். பெண்களைப் போலவே பேசுவார். தண்ணீர்க்குழாய்களில் பெண்களோடு சரிக்குச் சரியாக சண்டைக் கட்டுவார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ரங்கசாமியை நக்கலடிக்கத் தொடங்கிவிட்டோம். பொம்பளச்சட்டி என்றோ பொட்டை என்றோ அவரது காதில் விழும்படி கத்திவிட்டு ஓடிவிடுவது எங்களுக்கு விளையாட்டாக இருந்தது. அவர் அதையெல்லாம் எப்படி எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. நாக்கை வெளியில் நீட்டி மிரட்டிக் காட்டுவார். இன்னமும் ஊருக்குள் அப்படியேதான் திரிகிறார். சில குடிகாரர்களிடம் பாலியல் அடிமையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சில வீடுகளில் சமையல் செய்து பிழைப்பை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள். சரியாகத் தெரியவில்லை.

ரங்கசாமியைப் போலவே சிறுவயதிலிருந்தே பெண்களுக்குரிய உணர்வுகளின் காரணமாக ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் சமூகத்தின் ஏளனத்தில் சிக்கித் திணறக் கூடிய இத்தகைய மனிதர்களை சர்வசாதாரணமாக கேளிக்கைப் பொருளாக்கிவிடுவார்கள். அவர்களின் வலி, காதல் என்பதையெல்லாம் போகிற போக்கில் காலடியில் போட்டு மிதித்துவிட்டு நடப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கும் இதயம் இருக்கும் அல்லவா? அவர்களுக்கும்தான் கண்ணீர் வரும். இதையெல்லாம் பேச்சுவாக்கில் சொல்வதைக் காட்டிலும் கதையாகச் சொல்ல வேண்டும். அப்பொழுது வலி தெரியும். கி.ராஜநாராயணன் அதைத்தான் செய்திருக்கிறார். அவருடைய கோமதி கதையை ஒரு முறை வாசிக்க வேண்டும். 

கோமதியின் பெற்றோருக்கு அடுத்தடுத்து ஏழு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. எட்டாவதாக கோமதி பிறந்தவுடன் அவனையும் பெண் என்று நினைத்து கோமதி என்ற பெயரை வைத்துவிடுகிறார்கள். அதன் பிறகு கோமதி பெண்ணாகவே வளர்கிறான். பெண்களுடன்தான் விளையாடுகிறான். ஆண்களைத் தவிர்க்கிறான். கிட்டத்தட்ட பெண்ணாகவே மாறிவிடுகிறான். சமையலில் அவன் கைப்பக்குவம் யாருக்கும் வராது என்பதால் விசேஷகாலங்களில் அவனுக்கு டிமாண்ட் அதிகம். ஒரு திருமணத்தில் அவனை ரகுபதி நாயக்கர் என்கிற பணக்காரரின் வீட்டுப் பெண்மணி சந்தித்து தங்கள் வீட்டு சமையல் வேலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். அந்த வீட்டில் பெண்களோடு பெண்களாக கோமதி வாழ்கிறான். அந்தச் சமயத்தில் அவனுக்கு வரக்கூடிய காதல் அதை அவன் மறைத்து வைக்கும் தன்மை, கோமதியின் காதலையும் அன்பையும் உதாசீனப்படுத்தும் ஆண் என்று கதை நகர்கிறது.

தமிழில் திருநங்கைகள் குறித்து எழுதப்பட்ட முதல் சிறுகதை இது என்ற குறிப்பை வாசித்தேன். 1960களில் எழுதப்பட்ட கதை இது. அந்தக் காலகட்டத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை இல்லை. இளம்பிராயத்தில் தான் ஆணா பெண்ணா என்று எழுகிற குழப்பமானது உடல் மற்றும் மனோவியல் சிக்கல் என்று புரிந்து கொள்கிற சமூகம் இல்லை. பெரும்பாலும் குடும்பத்தினர் அடிப்பார்கள், சித்ரவதை செய்வார்கள் என்றால் மற்றவர்கள் அவமானப்படுத்துவார்கள். இந்த ஒரு சூழலில் தனது பாலின அடையாளச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளும் கோமதியைத் தத்ரூபமாகச் சித்திரமாக்கியிருக்கிறார் கி.ரா. இரண்டாவது வரியிலேயே கதை தொடங்கிவிடுகிறது. அதன் பிறகு மெல்ல மெல்ல கோமதி என்கிற பாத்திரம் வலுப்பெறுகிறது. அந்தப் பாத்திரத்தை மற்றவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அவர்களது எதிர்வினைகளை கோமதி எப்படி எதிர்கொள்கிறான் என்று கதை நீளும் போது அவன் மீது பரிதாபம் உருவாகிறது. 

விதவைகள், திருநங்கைகள் போன்ற பாத்திரங்களை உருவாக்கும் போது அந்த பாத்திரங்களின் மீது பரிதாபத்தை உருவாக்குவது ஓர் எழுத்தாளன் செய்யக் கூடிய இயல்பான செயல்தான். பார்வையாளனை வெகுஜனப் புத்தியிலிருந்து சற்று நகர்த்தி பாத்திரத்தை கவனிக்கச் செய்தால் அந்தப் பரிதாபம் உருவாகிவிடும். இத்தகைய எழுத்துக்களை ‘வெறும் செண்டிமெண்ட்’ என்று சொல்லிவிடலாம். இப்படியான செண்டிமெண்டல் விஷயங்களை ஏகப்பட்ட அரிதாரங்களுடன் சொல்லும் போதுதான் ‘இது இலக்கியமே இல்லை’ என்ற பேச்சு எழுகிறது. இந்த எழுத்துக்கள் மேம்போக்கான மனித உணர்ச்சிகளின் மீது கீறல் போட்டுவிட்டுச் செல்கின்றன என்று சொல்லிவிடுவார்கள்.

அப்படியென்றால் செண்டிமெண்ட்டலான விஷயத்தை ஆழமாகச் சொல்லக் கூடிய இலக்கியத்துக்கு ஒரு உதாரணத்தைக் காட்டுங்கள் என்று கேட்டால் கோமதியைச் சுட்டிக்காட்டலாம். துருத்தல்கள் எதுவும் இல்லாமல், அதீதமான வர்ணிப்புகள் இல்லாமல் துல்லியமாகக் கதையைச் சொல்லியிருக்கிறார் கி.ரா.